கோதையின் கீதை (பகுதி - 31)
🔹🔸 சிற்பக்கலைக்கூடம் 🔹🔸 கிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீஆண்டாள் கோயிலின் முதல் மண்டபமாகிய கொட்டகை போல கல்லாலே கட்டப்பட்ட பந்தல் அமைப்புடைய பந்தல் மண்டபம், மற்றும் திருமலை நாயக்கரின் அத்தையும், இரகுவீரமுத்து விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் மகளுமான சிங்கம்மாள் கட்டிய குறடு உள்ளது. இவர் பெயரால் சிங்கம்மாள்புரம் தெரு (சிங்கமாடத்தெரு) என்னும் அக்கிரகாரமும் இவ்வூரில் உள்ளது. "சிங்கம்மாள் குறடு" என்னும் மண்டபம் தாண்டி, பங்குனி உத்திர திருக்கல்யாண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் உட்புற உச்சியில் இராமாயணக்கதை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஆண்டு தோறும் பங்குனிமாதம், ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸவம் நடைபெறுகிறது. இக்கோவிலிலூள்ள தூண்கள் மிகவும் பெரியவை. ஒவ்வொரு தூணும் சிற்பக் கலை வல்லுநர்கள் கண்டுவியக்கும் மகிமை வாய்ந்த சிறந்த வேலைப்பாடுகள் உடையது. வேணுகோபாலன், இராமன், இலட்சுமணன், கார்த்தவீரியார்ச்சுனன், கர்ணன், ஜலந்தரன், மன்மதன், அயோமுகி என்னும் அரக்கி, ரிஷிகள், ரிஷிபத்னிகள், காண்டீபன், குகப்பெருமான், சந்நியாசி வேடத்தில் அர்ச்சுனன், ஊர்த்துவமுக...