சிறு தெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள்(பகுதி - 2)



திருநெல்லேவி மேலப்பாட்டம் ஆயிரங்காவு அய்யன் (ஆரியங்காவு) சாஸ்தா கோயிலோடு தொடர்புடைய ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீநல்லமாடன் கோயில், ஸ்ரீவீரண்ண சாமி கோயில்  ஆகிய மூன்று கோயில்கள் கூட்டத்தினரும் ஒன்று சேர்ந்தே கோயில் நிகழ்வுகளை தொடர்வது வழக்கம். இதில்  நல்லமாடன் கோயிலில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ஸ்ரீகாமாட்சியம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஸ்ரீவரதராஜப்பெருமாளையும்,ஸ்ரீஏகாம்பர நாதரையும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். காஞ்சி ஸ்ரீவரதராசப்பெருமாளின் "ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்" கூறியபடி ஸ்ரீகன்னி காளியானவள் ஸரஸ்வதியால் ப்ரும்மாவின் யாகத்தை சீர்குலைக்க ஏவிவிடப்பட்டவளாக யூகிக்க வேண்டியிருக்கிறது.
ப்ரும்மாவின் யாகத்தை நிலைகுலைக்க எண்ணிய
ஸரஸ்வதி பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய
அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த
அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி
அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார்.



அதனால் அட்டபுயக்கரத்தோன்
ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8
கைகளுடன் எட்டுவிதமான ஆயுதங்கள் கொண்டு காளியின் ஆங்காரத்தை அடக்கினார்.  (அட்டபுயகரபெருமாள்
வலப்புறம் உள்ள 4 கரங்களில் சக்கரம்,
வாள், மலர், அம்பு, ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில்
சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார்) பெருமாளுக்கு கட்டுப்பட்ட கன்னி ஸ்ரீபத்திரகாளியின்
மதுரைக்கோயிலில் இன்றும்  வரதராஜருக்கே  முதல் மரியாதை, முதல் தளுகை, முதன்மை நிலையென வைத்து வழிபாடு செய்கின்றனர். இன்றும் இக்கோயில் பங்காளி கூட்டத்தினர் திருமாலின் பல பெயர்களில் ஒன்றையேயே ஆண் குழந்தைக்கும், பத்திரகாளி அல்லது அம்பாளின் பல பெயர்களில் ஒன்றையே பெண் குழந்தைக்கும் வைக்கும் நடைமுறை மரபை பின்பற்றுகின்றனர்.








இங்கு வைதீக நெறியாளர்களின் ஸ்ரீவரதராஜப்பெருமாள், ஸ்ரீஏகாம்பரநாதர்,ஸ்ரீசோலைமலைச்சாமி (கள்ளழகர்) ஆகிய பெருந்தெய்வங்கள் பூடம்(பீடம்) வடிவிலும் சித்திர ரூபமாகவும் வழிபடப்படுகின்றனர். ஆனால் ஸ்ரீபத்திர காளியம்மன் சிலா ரூபத்திலும், சித்திர ரூபத்திலும், பூடமாகவும் வழிபாடு செய்யப்படுகிறாள். சிலா ரூப அம்மனின் வலப்புறம் கணேசரும், காலடியில் சப்தகன்னியரும் உள்ளனர். சிறுதெய்வ வழிபாட்டிற்கான மற்றைய தெய்வங்கள் சித்திரம் மற்றும் பூடம் ஆகிய வடிவங்களில் வழிபடப்படுகின்றனர். காஞ்சி ஸ்ரீவரதராஜரின் சித்திரத்தில் திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான "கதாயுதம்" இடதுகரத்தில் இல்லை. கீழிரு திருக்கரங்கள் அபய,வரத ஹஸ்தத்துடன் உள்ளவாறு சித்திரக்காரர் சித்திரம் தவறாக தீட்டியுள்ளார்.
மேலிரு திருக்கரங்கள் சரியான ஆயுதங்களுடனும், தென்கலை திருமண்காப்புடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.(காஞ்சி வரதர் ஆலயத்தில் வடகலை "  U " வடிவ திருமண்காப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. ப்ருத்வீ (மண்) லிங்கமாகிய காஞ்சி ஏகாம்பரநாதரையே பிடி மண்ணாக கொண்டு வந்து வழிபடுவது ஆச்சர்யமே!. மதுரை ஆலவாய் சோமசுந்தரேஸ்வரர் போல அஷ்டதிக் கஜங்கள் கொண்ட  இந்திர விமானத்தில் காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் சித்திர ரூபமாக உள்ளார். இது சித்திரக்காரரின் சிந்தனையாக தெரிகிறது. திருக்கச்சியேகம்பத் தலம் பற்றி அறிந்தால் இங்கு என்ன விமானம் என்று அறியலாம். 










                              மற்றுமொரு ஆச்சர்யம்  இந்த தெய்வக்கூட்டங்களில் 17-18 ம் நூற்றாண்டில்  வாழ்ந்த தேசிங்கு ராஜாவும்  சிறு தெய்வமாக உள்ளார்.
                   
           ராஜா தேசிங்கு வரலாறு

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாகஇருந்தவர் ராஜா தேசிங்கு ,இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புறபாடல்களும், கதைகளும் உண்டு.

மராத்தியர்கள் சிவாஜி தலைமையின்கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம்என படை எடுத்து தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே வீரசிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனாலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும்படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படையைக் கைப்பற்றியது, போரில்தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் நாம் அறிய வேண்டிய தேசிங்கு ராஜா. (Raja Desingh or Raja Tej Singh was a king of the Bundela Rajput who ruled Gingee in 1714 CE. Wikipedia
Born: Bundelkhand
Died: 3 October 1714, Gingee)
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டுகுதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒருவாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம்கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்குராஜாவின் தெய்வம், எந்தவேலைச் செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச் சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.
செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்குராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குலதெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்றுபோருக்குச் செல்ல வேண்டாம். நாளைசெல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலைபின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத்திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பியநிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின்சமாதியும் "படைத்தளபதி முஹம்மதுகான்" சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை "நீலவேணி" குதிரையின் சமாதியும் இருக்கிறது.
இராஜா தேசிங்கு பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் வாழ்ந்தவராக தெரிகிறது. இதன் மூலம் இந்த காஞ்சி பத்திரகாளியம்மன் கோயில் இடைச்சமூக கூட்டத்தோடு வந்த செஞ்சி வாழ் இடையர்கள் மூலம் தேசிங்கு ராஜா பிடிமண் தெய்வமாக மதுரைக்கு வந்துள்ளது தெரிகிறது. 18ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் இக்கூட்டத்தினர் மதுரை வந்திருக்கலாம்.


யானை மீது அம்பாரியில் சவாரி செய்யும் இராஜா தேசிங்கு  சித்திரம் அருகே குதிரையில்  பட்டாணி ராவுத்தர் உள்ளார். இவருக்கும் காளியம்மனைப் போலவே சித்திரம், சிலை, பூடம் என்று மூன்று வடிவங்களிலும் உள்ளார். அநேகமாக தேசிங்கு ராஜாவின்  படைத்தளபதி முஹம்மது கான் தான் இந்த "பட்டாணி ராவுத்தர்" இருக்கலாம்.


முக்தி நகர் ஏழில் முக்கியமானதும், "நகரேஷு காஞ்சி"( நகரத்தில் சிறந்தது) என்று காளிதாசனால் சிறப்பிக்கப்பட்டதுமான காஞ்சிபுரத்தில் தடுக்கி விழுந்தால் பல கோயில்கள் உள்ளன. இதில் பிரதானமானது என்றால்  வரதராஜப்பெருமாள், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் ஆகியோரின் கோயில்களே ஆகும். தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும்  மூன்று கோயில்கள் பெருமைகள் பாடப்பட்டுள்ளன. தென் பாண்டி நாட்டின் திருமாலிருஞ்சோலை அழகரும் இந்த பெருமைகளுக்கு சளைத்தவரல்ல. இப்பேற்பட்ட பற்பல பெருமைகளைக் கொண்ட நான்கு பெருந்தெய்வங்களும் இங்கு சிறு தெய்வங்களோடு இணைத்து வழிபடப்படுவது ஆச்சர்யமான ஒன்றே!





மதுரையில் இந்த பத்திரகாளியம்மன் கோயில் களரி கும்பிட்டு 60 வருடங்களுக்கு மேலாகின்றன. ஈசான்ய மூலையில் கௌலி (பல்லி) திரு உத்தரவு தருவதற்காக இக்கோயில் பங்காளி கூட்டத்தினர் காத்திருக்கின்றனர். நல்லதே நடக்க ஸ்ரீவரதராஜன் அருள்புரிவாராக!


ஸ்ரீகாஞ்சி வரதராஜப்பெருமாளின் ஸ்தலபுராணமான ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்
Link:-
http://shribalasubiksharam.blogspot.com/2018/08/blog-post_25.html?m=1




     அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
     E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

  1. தேசிங்கு ராஜா பற்றிய விக்கிபீடியா தகவல்

    The Mughal Empire defeated the Maratha Empire at Gingee in February 1698.

    In return for military services,the Mughal Emperor Aurangzeb, granted a mansab rank of 2,500 and jagir land grant of 12 lakhs (1,200,000) to Raja Swarup Singh, a Bundela Rajput chieftain, along with the kiladari (Fort Commandership) of Gingee in 1700 AD. Raja Swarup Singh died of old age in 1714 AD. Differing accounts have the Nawab of Arcot, Saadatullah Khan I somewhat recalictrant to the Mughal Empire. and the terms of the grant from Aurangzeb were disputed, nevertheless a debt was claimed after Aurangzeb's death ... a debt that the Raja refused to pay, eventually the arrears of payments due amounted to 70 lakhs rupees (7 million), and being a defaulter for ten years; the Nawab of Arcot reported this matter to the Mughal Emperor at the time, Bahadur Shah I at Delhi. Hearing about the death of his father, Desingh, the newly married son of Raja Swarup Singh, started for Gingee from Bundelkhand, his ancestral home.
    Traditional plays and ballads are sung in and around Gingee about the gallantry displayed by Desingh at the young age of 22, against the more powerful Nawab Sadatulla Khan of Arcot in a struggle that was unmatched from the outset (Desingh’s army consisted of only 350 horses and 500 troopers, while the Nawab’s army had 8,000 horsemen and 10,000 sepoys). Desingh eventually died in battle and his small army was defeated. His young wife committed Sati on his funeral pyre. However, the fortress of Gingee lost its pre-eminent position and political importance within a few years of the extinction of the Rajput rule.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  2. ஏகாம்பரர் கோயில் ஸ்தல புராணம்

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  3. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.

    இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

    இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  4. காமாட்சியம்மன் கோயில் ஸ்தல வரலாறு

    புராண காலத்தில் பண்டகாசுரன் என்னும் அரக்கனை சிறுமி வடிவத்தில் தோன்றி சம்ஹாரம் செய்து பின், காமாட்சி அன்னையாக பிரத்தியட்சம் தரும் ஆலயம் இது. அம்பிகை, சிறுமியின் வடிவத்தைத் தாங்கி பண்டகாசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை இன்றைக்கும் சொல்கிறது, ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விஜயஸ்தம்பம்.

    காமாட்சியின் கோபக் கனலை தணிக்கவே இந்தக் கோயிலில் ஆதி சங்கரரால்  சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்துக்கே அபிஷேகம், வழிபாடு அர்ச்சனை எல்லாம் நடைபெறுகின்றன என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.


    இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  5. தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. `கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

    காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

    கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

    கருவறையில், அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.

    காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  6. ஏகாம்பரர் கோயில்

    திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.

    ஸ்தலவிருட்சம்:
    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  7. சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் (Tej Singh) ஆவார். இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாக அவருடைய "நீலவானி" என்னும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு மஹ்மூத் கான் என்ற நண்பர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் உதவினார். நவாப்பின் 85,000 குதிரைவீரர்களை கொண்ட படையை எதிர்த்து தேசிங்கின் 350 குதிரைவீரர்கள் கொண்ட படை போரிட்டது. 22 வயதேயான தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டு அவனது குறுகிய கால ஆட்சி வீழ்ந்தது. ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் புதிதாய் திருமணமான மனைவி ராணிபாய் உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆர்க்காட்டு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு அருகில் உண்டாக்கினார்.

    ReplyDelete
  8. ஸ்ரீபத்திர காளியம்மன் எனும் எட்டுக்கை அம்மன் கரங்களினாலேயே காரணப் பெயர் பெற்று விளங்குகிறாள். இது அன்னையின் அழகிய திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் "வட திசையை" நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே இந்த அன்னை எட்டுக்கை அம்மன் எனும் ஸ்ரீபத்திரகாளியம்மன்.
    இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , இந்த எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
    மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
    அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.
    ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் இராமகிருஷ்ண பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.

    வீரத்தின் அடையாளமாக அன்னை உத்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர நுணுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் E.P.I. இராமசுப்பிரமணியன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)