ஶ்ரீகோதா சதுஸ்லோகியும், ஶ்ரீராமாநுஜ சதுஸ்லோகியும்
ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம:
🔶 ஸ்வாமி அனந்தாழ்வான் வைபவம் 🔶
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||
ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||
🔶 ஸ்வாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான். இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். (அனந்தாண்பிள்ளை
அனந்தாசாரியர், அனந்த சூரி என்ற திருநாமங்களிலும் அறியப்பட்டார்.)
அனந்தார்யர் வைஷ்ணவ நெறியில் ஞான ஈர்ப்பு ஏற்பட்டு, தாம் பிறந்த ஊரிலிருந்து , ஶ்ரீவைஷ்ணவ ராஜதானியான திருவரங்கத்தில் உபயவிபூதியையும் ஆட்சி செய்யும் ஸ்வாமி இராமாநுஜரை ஆஶ்ரயித்தார்.
ஸ்வாமி இராமாநுஜர் திருவரங்கத்தில் அன்றாடம் மாலை நேரத்தில் "திருவாய்மொழி விரிவுரை" நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் “ஒழிவில் காலமெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பதிகத்தின் ஆழ்பொருளை விவரித்து வரும்போது, “சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் வண்ணனே” என்ற பாசுரப் பகுதியில் மிக உள்ளம் ஈடுபட்டுப் பரவசராயிருந்தார்.
அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவேங்கடமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததை அறிந்த ராமாநுஜர், தம்முடைய திரு முன்னர் அமர்ந்து பாசுர விரிவுரை கேட்ட சிஷ்யர்களை நோக்கித் திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி, "திருநந்தவனம்" உண்டாக்கித் திருவேங்கடமுடைய பெருமானுக்குப் பிரீதியாக மலர்மாலைகளைக் கட்டி அணிவித்து என்று திருவேங்கடமலை கைங்கர்யத்தினை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, "அனந்தார்யா" என்னும் அனந்தாழ்வான் தான் திருமலை சென்று கைங்கர்யம் செய்ய ஒப்புக் கொண்டார்.
அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு புஷ்பவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு "ராமானுஜர் "என்ற பெயர் சூட்டினார். அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, "அனந்தாழ்வான்" என்ற திருநாமமும் பெற்றார்.
🔷🔶 அனந்தாழ்வான், தனது ஆச்சார்யன் பகவத் ராமனுஜரின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமலை சென்று புஷ்ப கைங்கர்யம் செய்ய புறப்பட்டார். அவரே மண்வெட்டியும் கடப்பாரையும் கொண்டு ஏரியும் மலர்கள் தோட்டமும் நிர்மாணிக்க விழைந்தார். உதவிக்கு அவருடைய கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அமைத்துக்கொண்டார்.
ஒரு நாள், திருமலை வேங்கடவேனே ஒரு சிறுவன் வடிவு எடுத்துக்கொண்டு அனந்தாழ்வானிடம் உதவி செய்ய முன்வந்தார். அனந்தாழ்வான் மறுக்க, அந்த சிறுவன் அனந்தாழ்வானின் துணைவியாருக்கு உதவினார்.
இதை அறிந்துகொண்ட ஆழ்வான், அந்த சிறுவனின் கையிலிருந்த கடப்பாறையை பிடுங்கிக்கொண்டு சிறுவனை துரத்த ஆரம்பித்தார்.
சிறுவன் கோயிலுக்குள் ஓட, ஆழ்வான் கையிலிருந்த கடப்பாறையை அந்த சிறுவனின் மேல் எறிந்தார். அது, அந்த சிறுவனின் முகவாயில் பட்டு,ரத்தம் கொட்டிற்று. சிறுவன் காணாமல் போகவே, அவனை தேடிக்கொண்டு ஆழ்வான் கோயிலுக்குள் சென்றார்.
அங்கே, திருமலையானின் முகவாயில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. (அதை மறைக்கத்தான், இன்றும், திருமலை பெருமாளின் முகவாயில் "பச்சை கற்பூரம்" வைத்து இருக்கிறார்கள்.)
(மேலும், திருமலை பெருமாளையே காயப்படுத்திய அந்த "கடப்பாரை"யை இன்றும் திருமலை கோயிலின் இராஜகோபுரத்தின் (வடக்கு) உட்பகுதியில் மாட்டி வைத்துள்ளார்கள்.)
பிறகு சிறுவனாய் வந்தது திருவேங்கடவன் என அறிந்த அனந்தாழ்வான் திருமாலின் தாடையில் வந்த ரத்தத்தை விலக்ஷணமான அடியார்களின் பாததூளி கொண்டு நிறுத்தினார் என்பர்.
🔷🔶 வேறொரு நாளில், இவரின் நந்தவனத்தில், ஸ்ரீஅலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது, ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் ஜோடிகள் தன் நந்தவனத்தில் புகுந்து, பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க, பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே பிணையாக சிறைப்படுத்தினார். பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சியவருக்கு, முன்னிரவில் தானே தன் மனையாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் 'மாமனார்" என அன்றிலிருந்து கூறப்பட்டார்.
🔷🔶 ஒரு நாள் அனந்தாழ்வாருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார். அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார். “ஏதாவது தொலைத்து விட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.
“இல்லை. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.
ஆண்டாள் வாழ்ந்த காலம் என்ன?, அனந்தாழ்வார் வாழ்ந்த காலம் என்ன? பக்திக்கு பிரேமம்தான் முக்கியம். காலம் கடந்த பக்தி!
அனந்தாழ்வார் நம் அன்னை கோதை ஸ்ரீஆண்டாள் மீது "கோதா சதுஸ்லோகி"
இயற்றியுள்ளார். அனந்தாழ்வான் திருமலையில் உள்ள நந்தவனத்து மகிழ மரத்தடியில், ஓர் "திருவாடிப்பூரத்தன்று" பரமபதித்தார் என குருபரம்பரைக் கதை கூறுகிறது.
🔷🔶 ஶ்ரீஅனந்தாழ்வான் இயற்றிய நூல்கள்:−
கோதா சதுஸ்லோகி - கோதை ஆண்டாள் மீது இயற்றப்பட்டது.
ராமானுஜ சதுஸ்லோகி - ஆசாரியனாகிய ‘உடையவர்’ மீது இயற்றப்பட்டது.
வேங்கடேச இதிஹாச மாலை - திருவேங்கடவன் மீது இயற்றப்பட்டது.
🔷🔶 தமிழில் தன் ஆச்சாரியனாகிய இராமானுசர் மீது இவர் இயற்றிய தமிழ்ப்பாடல்:
ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமானுச முநிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்த
பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமி அருளிச் செய்த
"||: ஸ்ரீ கோதா சதுஸ்லோகி :||"
🔷🔶 ஸ்ரீ அனந்தாழ்வான் தனியன் 🔷🔶
சக்ரே கோதா சதுஶ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம் |
ஸ்ரீ வேங்கடேஶ சத்பக்தம் தம நந்தகுரும் பஜே ||
[ வேதப்பொருள்களைத் தன்னுள் கொண்ட "கோதா சதுஸ்லோகி" என்னும் துதியை அருளிச்செய்த குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன் ]
🔶 (ஸ்லோகம் 1)
நித்யா பூஷா நிகம ஶிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா: கசவிலு லிதை: காமுகோ மால்ய ரத்நை: |
ஸூக்த்யா யஸ்யா: ஶ்ருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
ஸைஷா தேவீ ஸகல ஜனனீ ஸிஞ்சதாம் மாமபாங்கை: ||
🔷 [ [ எந்த நாச்சியாரது இணையற்ற மேலான அருளிச்செயலானது (திருப்பாவை) வேதத்தின் உச்சியான வேதாந்தத்திற்கு நித்யபூஷணமாய் ஆகிறதோ, எந்த நாச்சியாரது காதலன் (பரந்தாமன்) அவள் குழலினின்று களைந்த அழகிய பூமாலையில் மிக்க ஆசையுடையவனாயுள்ளானோ, எந்த நாச்சியாரின் ச்ருதிகள் போன்ற போன்ற மங்களமான திருவாக்கிலே பூமி நல்லவிடிவாகிறதோ அப்படிப்பட்ட லோகமாதாவான இந்த கோதா நாச்சியார் அடியேனைத் தமது கடாக்ஷமாகிற அமுத மழையால் நனையச்செய்ய வேண்டும். ]
🔶 (ஸ்லோகம் 2)
மாதா சேத் துலஸீ பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹாந்
ப்ராத சேத் யதி ஶேகர ப்ரியதம ஸ்ரீரங்க தாமா யதி |
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தன்யேன ஸம்வர்த்திதா:
கோதா தேவி கதம் த்வம் அந்யஸூலபா ஸாதாரணா ஸ்ரீரஸி ||
🔷 [ ஶ்ரீகோதா தேவியே! உனது தாய் துளசிச் செடியாகும். உனது தந்தை ஆழ்வாராகிய ஶ்ரீவிஷ்ணுசித்தர் ஆவார். உனது அண்ணனோ யதிராஜராகிய ஶ்ரீராமாநுஜர் ஆவார். உனக்கு மிகவும் பிரியமானவர் ஶ்ரீரங்கநாதர் ஆவார். உனது பிள்ளைகள் உனது வாய் சொல் (ஶ்ரீகோதை அன்னையின் பாசுரங்கள்) அமுதத்தையே முலைப் பாலாக பருகி வளர்ந்த ஞானவான்கள். அன்னையே! நீ எங்ஙனம் சாமான்யமான ஜனங்களுக்கு கிட்ட தகுந்த நிதியாக ஆவாய்? ]
🔶 (ஸ்லோகம் 3)
கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிரஸூ நார்ப்பணம் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிஶம் ஸ்ரீதந்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||
🔷 [ கல்பத்தின் ஆதியில் பகவானால் உலகில்லோர்கள் யாவருடைய உஜ்ஜீவனத்தை மனதிற் கொண்டு தன்னையேத்திப் பாடுதல், ஆச்ரயித்தல், பூவிட்டு அர்ச்சித்தல் சொல்லப்பட்டது கேட்ட பூமிப் பிராட்டி இவற்றை உலக மக்கள் யாவரும் எப்போதும் அறியும்படி செய்வதற்காக ஶ்ரீவில்லிபுத்தூரிலே பரம வைதிகரான ஶ்ரீவிஷ்ணு சித்தரான பெரியாழ்வார் திருமகளாக வந்து பிறந்த பரம உதாரகுணமுடைய ஶ்ரீகோதா தேவியை நமஸ்கரிக்கிறேன்.]
🔶 (ஸ்லோகம் 4)
ஆகூதஸ்ய பரிஷ்க்ரியாம் அநுபமாம் ஆசேஸநம் சக்ஷூஷோ:
ஆனந்தஸ்ய பரம்பராம் அநுகுணாம் ஆராம ஶைலேஶிது: |
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத ஸமேதிதாத்ம விபதாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||
🔷 [ சோலைமலை மணாளனுடைய அபிப்ராயம் நிறைந்த செயல்களுக்கு இணையற்ற அழகூட்டு மவளாயும், காணும் கண்களுக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டுபண்ணுமவளாணும், அவனுக்கு எவ்விதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்த வெள்ளமூட்டும்படி, அவன் நன்மார்பின் மேலும், சுடர்முடி மேலும், தான் சூடிக்களைந்த கஸ்தூரி, பூமாலைகளின்
பெருகும் நன்மணத்தினால், அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்யும் கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்.]
{குறிப்பு:− திருமாலிருஞ்சோலை, திருவேங்கட மலை என இரண்டையும் "ஆராமசைலம்"
என்றும் கூறுவர்}
🔶
(திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ கோதா சதுஸ்லோகி
முற்றிற்று) 🔶
🔷🔶 ||: ஸ்ரீ ராமாநுஜ சதுஸ்லோகி :|| 🔷🔶
🔶 (ஸ்லோகம் 1)
அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் ||
🔷 [ ஶ்ரீஉடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ஸ்லோகம் 2)
புவி நோ விமதாம்ஸ்த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ்ஸமேதாந் |
ஷகலீகுருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||
🔷 [(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த "வேதாந்த சங்க்ரஹம்" தேவரீர் அருளிச் செய்ததால் தேவரீர் திருவேங்கடமா மலையுச்சியில் பல்லாண்டுகள் வெற்றித்திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ஸ்லோகம் 3)
ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயாssலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதா: ஸ்வத ஏவ பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||
🔷 [ ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின் உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் "நித்யஸ்ரீ" யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ஸ்லோகம் 4)
ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||
🔷 [(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!) மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே! பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே! உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே! யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ! ]
🔷🔶 🔷🔶
ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந்நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||
🔷🔶 🔷🔶
🔷[ பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி யை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு யதிராசருடைய திருவடிகளில் பரமபக்தி உண்டாகும். ]
|| இதி ஶ்ரீ ராமாநுஜ சது: ஷ்லோகீம் சம்பூர்ணம்||
🔶(திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஶ்ரீ ராமாநுஜ சது: ஷ்லோகீ முற்றிற்று) 🔶
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.
Comments
Post a Comment