நாச்சியார் (மோஹினி) திருக்கோலம்





நாச்சியார் (மோகினி) திருக்கோலம்

மோகினி அலங்காரம், காணக் கண் கோடி வேண்டும்! அழகுக்கு அழகு, அறிவுக்கு அறிவு. தவ வலிமையில் சிறந்த  மகாயோகீஸ்வரனான சிவபெருமானையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக பேரழகு!

"ஹே! பரந்தாமா!ஸ்ரீகிருஷ்ணா!
உன் சௌந்தர்யமும் உன் லாவண்யமும் இப்படி போட்டி போட்டால், பக்தர்களாகிய எங்கள் பாடு என்னவாகும்?
என் சிந்தையை கொள்ளை கொள்கிறது  உன் அழகு. உன் திருமுடி அழகைச் ஸேவிப்பேனா? இல்லை உன் திருவடி அழகைச் ஸேவிப்பேனா?
நீ அழகு தான். இருந்தாலும், எம் அய்யனே! நீ நாச்சியார் திருக்கோலம் சாற்றிக்கொள்ளும் அழகோ அழகு. அந்த அழகை ஸேவிக்கும் பாக்கியம் வேண்டி நிற்கிறேன். அடுத்து நாச்சியார் திருக்கோலம் ஸேவிக்கும் பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் அடியேனுக்கு
என்பதை தவிர வேறு ஒரு வேண்டுதலும்  இல்லை" என்றவாறே நம் நினைவுகள் இருக்க வேண்டும்.
சரி! மோஹினி அவதாரம் பற்றி முதலில் அறிவோம்.

மோஹினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோஹினி) என்பது இந்து(சனாதன தர்மம்) சமயக்கடவுள் ஸ்ரீமஹாவிஷ்ணு எடுத்த பெண் அவதாரமாகும். மோஹினி என்ற பெயருக்கு மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடையவள் என்று பொருள்.
மோஹினி அவதாரம் பற்றி ஸ்ரீமத் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் குறிப்பு உள்ளது. திருப்பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனுடருடன் இணைந்து தாருகாவன ரிஷிகளின் ஆணவம் அழிக்கவும், பஸ்மாசுரனை அழிக்கவும் எனப் பல முறை விஷ்ணு, மோஹினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மோஹினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு ஐயப்பன் (ஹரிஹரசுதன்) என்ற குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அறியப்படுகிறது. கிருஷ்ணர், மகாபாரதத்தில் கூறப்படும் அரவான் என்பவரின் வரத்தை நிறைவேற்ற மோஹினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து கொண்டதாகவும் நாட்டுப்புற வழக்கில் கூறப்படுகிறது.
மோஹினி அவதார ஸ்தலம்:
திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது.

பெருமாள் மோஹினி அவதாரம் எடுத்த தலம். மோஹினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

(ஸ்ரீமோஹன சேத்திர மாஹாத்ம்யம்)
ஸ்தல புராணம்:
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோஹினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோகனவூர் என்றிருந்து பின்பு "திருமோகூர்" என்று அழைக்கப்படுகிறது.

மேலும் கோவா மாநிலம், மர்டேல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமங்கேஷ் என்ற கோயிலில், மோஹினி அவதாரத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

மோஹினி அலங்கார தத்துவம்:
தன்னை தரிசிக்க வருபவர்கள் மம மாயா துரத்யமா எனப்படும் தன்னுடைய மாயையைக் கடப்பது சவாலானது. அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்றிலும் பெண்ணாசையை ஒழிப்பதுதான் மிகவும் கடினம். ஏனென்றால் ஒரு ஜீவன் சரீரம் எடுக்க ஆரம்பித்த காலம் முதலே பெண்ணாசை இருந்து வருகிறது.

பூலோக வைகுண்டமாகிய ஸ்ரீரங்கத்திலே பகல்பத்து உத்ஸவம்
ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல்பத்தின் கடைசி நாளில் நம்பெருமாள் மோஹினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பூண்டிருக்கும் மோஹினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தை இழக்க நேரிட்டது. ஆகையால், பக்தர்களும் (பக்தர்கள்) மாயையில் மயங்காமல் நம்பெருமாளை பின்தொடர்ந்து சென்றால் சொர்க்கவாசலை (பரமபதவாசல்) அடையலாம் என்ற கருத்தை கூறுவது தான் மோஹினி அலங்காரத்தின் சிறப்பு.  ஸ்ரீரங்கம் மட்டுமல்லாது அனைத்து வைணவ திருத்தலங்களிலும் பகல்பத்து பத்தாம் நாள் மோஹினி திருக்கோலம் உண்டு. மேலும்
ப்ரம்மோத்ஸவ விழாக்களிலும் மோஹினி திருக்கோலம்  வைணவ திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

• பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்டவர் பராசர பட்டர் என்ற சிறந்த வைணவ ஆச்சார்யார். வைணவ குருபரம்பரை ஏடுகள் பராசரரைப்பற்றி நிறையவே சொல்லுகின்றன.

ஸ்ரீரங்கநாயகியார் மீது பெரும் பற்றுடையவர் பட்டர். நம்பெருமாளைக் காட்டிலும் நாச்சியாரிடத்திலேயே பெரும் அன்புடையவர் பட்டர். 

ஒரு முறை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தைச் சாற்றிக்கொண்டு பட்டரிடம் தான் ரங்கநாயகியைப் போல் இருக்கிறேனா? என்று கேட்க பட்டர் எல்லாம் பொருத்தமாக உள்ளன. எங்கள் ரங்கநாயகியை விட அழகுதான்; ஆனால், ரங்கநாயகியின் திருக்கண்களில் ஒளிரும் தயையும், ஒளியும் தங்கள் திருக்கண்களில் காணோம்,’ என பதிலளித்தாராம்  பராசரபட்டர்.












.திருப்பதி,காஞ்சி வரதராசர் கோயில்,மேல்கோட்டை,அழகர் கோயில், ராஜமன்னார்குடி,திருக்குடந்தை,திருவள்ளூர் ஆகிய திருத்தலங்களில் மோஹினி திருக்கோலம் சிறப்பாக நடைபெறும். இவ்வரிசையில் மதுரை வடக்கு மாசி வீதி ஸ்ரீஜயந்தி 3ம் நாள் உத்ஸவத்தில் நடைபெறும் நாச்சியார் (மோஹினி) திருக்கோலம் சிறப்பு  வாய்ந்தது.

 (குறிப்பு:கடந்த நூற்றாண்டுகளில் தமிழகத்தில்  பதிப்பாகும்
பல பஞ்சாங்க குறிப்புகளில் ஆவணி மாதம் மதுரை வடக்கு மாசி வீதியில் நடைபெறும் ஸ்ரீஜயந்தி 15 நாட்கள் உத்ஸவங்கள் பற்றிய குறிப்பு இடம் பெறும்.)

ஸ்ரீராஜமன்னார்குடியில் பங்குனி மாதம் நடைபெறும் 18நாட்கள் பிரம்மோத்ஸவம் போன்று மதுரை வடக்கு மாசி வீதி வடக்கு கிருஷ்ணன் திருக்கோயிலிலும் நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்றாகும். மதுரை இராமாயணச்சாவடி தெரு வடக்கு மாசி வீதி பகுதியில் தெற்கே திருநெல்வேலி வட்டாரப்பகுதியிலிருந்து  திருமலை நாயக்கர்(கி.பி. 1623- 59) காலத்தில் குடியேறிய யாதவ சமூகத்தினரால் பெருமைக்குரிய ஸ்ரீஜயந்தி உத்ஸவம் நடத்தப்பட்டு  வருகிறது.

இதில் மூன்றாம் நாள் மாலையில் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் நாச்சியார் திருக்கோலமானது (இரவு வீதியுலாவாக ஸ்ரீராமர் திருக்கோலத்தில் சிறியதிருவடி-ஹனுமன் வாகனத்தில் எழுந்தருளல்)  "மண்டபம் பெரியசாமிக்கோனார்" என்னும் யாதவச் செல்வந்தரின் கட்டளையாக தொடங்கப்பட்டது.




 ஸ்ரீகண்ணபிரானை கோயில் சாராத தன் சொந்த கல்மண்டபத்தில் (ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயிலருகே இருந்தது) திருவிழாவை நடத்தியதால் மண்டபம் என்கிற அடைமொழி அவர் பெயருக்கு முன்பு ஒட்டிக்கொண்டது.


(ஸ்ரீஜயந்தி 3ம் நாள் மோகினி திருக்கோலத்திற்கு பிறகு சிறிய திருவடி வாகனத்தில் ஸ்ரீ ராமர் கோலத்தில்  ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி)



காலமாற்றத்தால் தற்போது மண்டபம் கைமாறிய பின்பு அவரது சந்ததியரால் இராமாயணச்சாவடியிலேயே உத்ஸவம் நடைபெற்று வருகிறது.




மண்டபம் பெரியசாமிக்கோனார் காலத்தில் மோகினி அலங்காரத்தினை காண திருப்புல்லாணி, திருக்குறுங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர்,  ஸ்ரீரங்கம்,காஞ்சிபுரம் போன்ற தலங்களிலிருந்து வருவார்கள்.  காஞ்சிபுரம் வித்வான். பி.ப..அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் சில காலம் வடக்கு கிருஷ்ணன் கோவில் எதிரே தங்கியிருந்த போது நடந்த ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தை வியந்து கூறியுள்ளார் என்ற தகவலை அடியேனுக்கு வே.நா.திருமால் சோலை மணி(ராமக்காரர்) அவர்கள் கூறியதும் தற்போது என் நினைவுக்கு வருகிறது. "ராமக்காரர் 'யாரெனில்  மதுரை கூடல்அழகர் பெருமாள் கோயிலில் காலட்சேபம் செய்து வந்த மதுரைப்பேராசிரியர் கலையிலங்கு மொழியாளர் இரா.அரங்கராசன் ஸ்வாமிகளின் ஆப்த மித்ரர் ஆவார்.



              அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I.இராமசுப்பிரமணியன்.

ஸ்ரீஜயந்தி 3ம் நாள் உத்ஸவ அழைப்பிதழ்
Mediafire link :-

https://www.mediafire.com/download/4jhsan3rsuvap5u





Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)