காலந்தோறும் மதுரை (பகுதி − 1)



🔸மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

    நூல்: பரிபாடல் திரட்டு (8) / புறத்திரட்டு

(பாடல் விளக்கம்:எமது அழகிய மதுரை, மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும். மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும். மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும். சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள், அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர். அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர், அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர். அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை, வைகறைப் பொழுதில் ஓதும் இசையே, மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உறையூர்− திருக்கோழியுர்) கோழியின் குரல் கேட்டு தூக்கம் கலைவது போல் அல்ல , நாம் வாழும் ஊரே! வாழிய இவ்வூரே!.)


🔸உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

நூல்: பரிபாடல் திரட்டு (7) / புறத்திரட்டு
(இது ‘உயர்வு நவிற்சி அணி’ வகையைச் சேர்ந்த பாடல்)

(பாடல் விளக்கம் :  நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள் (மதுரை தவிர) அனைத்தினது பெருமைகளையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது (மதுரை) பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, சீர்தூக்குமிடத்து உலகத்துள்ள ஏனை அனைத்து நகரங்களின் பெருமையும் மெலிந்தேற, தன் பெருமை அங்ஙனம் மெலியாமல் தன் பெருமையாலே துலாத்தட்டு தாழும் தன்மையுடைத்து  பாண்டியன் ஆளும் நான்மாடக்கூடல்நகர்.)


🔷 மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என
ஆனை கட்டிப் போரடித்த அழகாய தென்மதுரை 🔷



காலந்தோறும் மதுரை

 ‘தூங்காநகரம்’ 'திருவிழாநகரம்' பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' எனப் புகழ்பெற்ற நகரம், சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது  பெருநகரமாகத் திகழும் நகரம், இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம் ஆகும். மதுரையை "கோயில் நகரம்" என்றும் வழங்குவதுண்டு. அத்தகைய கோயில் நகரைப் பற்றி 🔸"காலந்தோறும் மதுரை"🔸என்ற தலைப்பில்  இந்த கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது.

🔷 மதுரை – பெயர்க்காரணம்:−

"மதுரை" என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை.

மருதத் துறை − மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் "மருதத் துறை" என்பது மருவி 'மதுரை' என ஆனது என ஒரு கருத்துள்ளது. வையை ஆற்றங்கரையில் சங்க காலத்தில் மருத மரங்கள் மிகுதியாக இருந்துள்ளது. மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் ‘மருதை’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் "மதுரை" என்று திரிந்ததாகவும் சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அதற்குச் சான்றாக தற்போது மதுரையின் சுற்றுப்பகுதிகளில் வாழுகின்ற கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.
🔸சிவபெருமானின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் (இனிமை) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ( தற்போதைய மதுரை, முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாய்த் திகழ்ந்ததாக புராணங்கள் சுட்டுகின்றன.  இதனால் "கடம்பவனம்" என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது.) மதுரை என்ற பெயர்க்காரணத்தை விளக்க புராணக்கதையொன்றும் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. அக்காலத்தில் பாண்டிய நாடு மணவூரைத் தலைநகராய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் சிவபக்தனான 'தனஞ்சயன்' என்னும் வணிகன், ஒருநாள் தொழில் நிமித்தம் காட்டிற்குள் பயணம் செய்தபோது, தேவர்கள் எல்லாம் கூடி, ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புலிங்கம் ஒன்றை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். இந்தச் செய்தியை மன்னன் குலசேகர பாண்டியனிடம் தனஞ்சயன் சொல்ல, மன்னனும் உடனே அவ்விடத்தில் கோவில் ஒன்றை எழுப்பினான். அதற்குப் பிறகு கோவிலை மையமாக வைத்து மதுரை மாநகரை வடிவமைத்தான். இந்நகருக்குப் பெயர் சூட்டும் நாளன்று "சிவபெருமான்" எழுந்தருளியதாகவும், அவரது சடைமுடியிலிருந்து சந்திரக் கலையின் புத்தமுது நகரின் மீது விழுந்ததாகவும், அதனால் இந்நகர் "மதுரை" என்று பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. (மதுரம் என்றால் தமிழில் இனிமை என்று பொருள்.)
🔸தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அழகர்மலை தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று "மதிரை" எனக் குறிக்கிறது. ஆதிரை என்பது போல
மதிரை என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். "மதிரை" என்பது மதுரையாக பிறகுதான் மாறுகின்றது.

🔷மதுரையின் வேறு பெயர்கள்:−

மதுரைக்கு 'கூடல்' நான்மாடக்கூடல், எனவும், 'ஆலவாய்' கடம்பவனம், கன்னிபுரீசம்,சிவராஜதானி,சிவநகரம், சமஷ்டிவிச்சாபுரம், சிவன்முத்திபுரம், சிவலோகம், துவாதசாந்தபுரம் முதலிய வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
🔸'நான்மாடக்கூடல்' என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது என்பது சைவ சமய மரபு ஆகும். திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், "நான்மாடக்கூடல்" என்னும் பெயரமைந்தது என்றும் சைவ சமய மரபு கூறுகிறது.

🔸வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளார். வந்தாரை வாழ வைத்து, எந்நாட்டவரும், எவ்வூரினரும், வந்துகூடும் 'வளமான நகர்' என்பதால், "கூடல்" என்னும் பெயர் பெற்றது என்பர்.
🔸சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், "கூடல்" என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர்கள் கூறுவர்.
சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தியதன் காரணமாய் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது என்றும் அறிஞர்கள் கூறுவர்.  ‘கூடல்’ என்னும் பெயர் பொதுவாக இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் குறிப்பதாகும். பழங்கால நகரங்கள் பல இத்தகைய கூடல்களில்தான் அமைந்திருந்தன. அதுபோன்றே மதுரை மாநகரும் கூட, வைகை நதியும் அதன் உபநதியும் சங்கமித்த இடத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த உபநதி தன் போக்கை மாற்றியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
🔸‘ஆலவாய்’ என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப்பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையைச் சுற்றி அகழியும், கோட்டையின் வடபுறத்தில் அகழியை ஒட்டி வைகையும் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது என்று "அறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி" அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
🔸மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு "ஆலவாய்" என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் "ஆலவாய்" என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
🔸தடாதகைப்பிராட்டி கன்னியாயிருந்து ஆட்சி புரிந்தமையால் "கன்னிபுரீசம்" என்றும், சிவபெருமான் சுந்தரபாண்டியனாக அரசாண்ட காரணத்தால் பூலோக கைலாயம்- "சிவராஜதானி,சிவநகரம்," என்றும், ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் நான்கையும் அருளுவதால் "சமட்டிவிச்சாபுரம்" என்றும், ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தரால் "ஜீவன்முத்திபுரம்" என்றும், வரகுணபாண்டியனுக்கு சிவலோகம் காட்டியதால் "சிவலோகம்" என்றும், விராட்புருஷனுக்கு சிரசின் ஸ்தானமாகிய பிரமரந்திரத்திற்கு மேல் 12அங்குல அளவில் இருப்பதாலும்,ஆதாரம் கடந்த நிராதாரப் பரவெளித் தலமாதலாலும் "துவாதசாந்தபுரம்" என்றும் பெயர்கள் மதுரைக்கு வழங்கபட்டதாக சைவ சமய மரபு கூறுகிறது.

🔶 இந்து சமய ஆலயங்கள், கிறித்தவ சமய
ஆலயங்கள், இஸ்லாமிய சமயபள்ளிவாசல்கள், தர்காக்கள், சமண,பௌத்த சமய
ஆலயங்கள் எனசமயம் சார்ந்த கட்டடங்கள் ஆகியவையும், மற்றும் சமயச்சார்பற்ற அரசியல் சார்ந்த கட்டடங்களான
அரண்மனை, ஆகியவையும், சமயம், அரசியல் மட்டுமல்லாது வாணிபம், நுண்கலைகள், வீரம், தேசியச்சிந்தனை ஆகியவைகளும்
காலச்சுவடுகளைப் புரட்டும் போது, மதுரை நகரத்தின் பழந்தரவு வரலாறாக தொகுக்கக் கிடைத்தன.

 J.H.நெல்சன் உருவாக்கிய "Madura country manual" எனும் நூல், W.ப்ரான்சிஸ் உருவாக்கிய "Madura" எனும் நூல் இரண்டும் மதுரையின் பழம் வரலாற்றைப் பதிந்துள்ள,தலைசிறந்த ஆவண நூலாகும். இவ்விரண்டு நூலையும் அடியொற்றி D.தேவகுஞ்சரி அவர்களால் எழுதப்பட்ட "Madurai through the ages" எனும் நூலும் குறிப்பிடத்தக்க நூலே ஆகும். மேலும் மதுரைத்தல வரலாறு, திருப்பணி மாலை, திருவிளையாடற்புராணம், ஹாலஸ்ய மாஹாத்ம்யம், திருகூடல் கதலிவனச் சேத்திர மாஹாத்ம்யம், மற்றும் சங்க இலக்கிய நூல்கள், மதுரைக் கோயில்களின் சிற்றிலக்கிய நூல்கள், நீலகண்ட சாஸ்திரியின் "பாண்டியர் வரலாறு", R.சத்தியநாத ஐயரின் ஆங்கில நூலான The history of Nayaks of Madura "மதுரை நாயக்கர் வரலாறு"  தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’, டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara], க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ மனோகர் தேவதாஸ் எழுதிய "Multiple facts of Madurai", அம்பை மணிவண்ணன் எழுதிய "பொற்றாமரை", வலையபட்டி இரா.கிருஷ்ணன் எழுதிய "The Great Temple of Madurai Meenakshi" ஆகிய நூல்கள் மதுரையின் பழம் பெருமை அறிய உதவுகிறது.

நாம் இப்போது சுமார் 2500 ஆண்டுகள் பின்நோக்கி கடைச்சங்க காலத்திற்கு காலவெளியில் பயணம் செல்வோம். வாருங்கள்!

:||மதுரை − பாண்டிய நாடு||:

பண்டைய காலந்தொட்டே மேலை நாடுகளுடன் மதுரை பாண்டியநாட்டுத் தமிழ் மக்கள் கடல் வாணிகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தங்கி
வாணிகம் செய்துவர வேண்டுமாயின் அந் நாட்டில் உள்நாட்டு வாணிகம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்கவேண்டும் என்பதில்
ஐயமில்லை. உள்நாட்டு வாணிகத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே
வழங்கி வந்தது. தென்னிந்தியாவுக்கும் வடஇந்தியாவுக்குமிடையே கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிகம் நடைபெற்றுவந்தது.
தமிழகத்தில் ஊர்கள் சில பண்டங்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கின.
பாண்டி நாட்டு முத்துகளைப் பற்றி மெகஸ்தனிஸ் மிகவும் புகழ்ந்து
பேசுகின்றார். தாமிரவருணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த
முத்துகளும், மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைவகைகளும், கௌடில்யர் தமது (சாணக்கியர்) அர்த்தசாத்திரத்தில் புகழ்ந்து கூறுகிறார்.  வட இந்திய வாணிகத் தொடர்பினால் தமிழகத்துக்கு
ஏற்பட்ட நல் விளைவுகளை விட  தீமைகளே அதிகம். வட இந்தியாவிலிருந்து
வாணிகச் சரக்குகளுடன் ஆரிய மக்களும் சிறுசிறு கூட்டமாகத் தமிழகத்தில் புலம்பெயர்ந்தனர். ஆரியரின் நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் தமிழரின் நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் பற்பல வேறுபாடுகள் இருந்தன. ஆரியபுலப்பெயர்வால் பழந்தமிழ்ப்  பண்பாட்டில் சிதைவுகள் தோன்ற ஆரம்பித்தன.

அசோகர் வடக்கே ஆண்ட காலத்திலேயே பௌத்தமும் ஆரியப் பண்பாடுகளும் தமிழகத்தில் ஆங்காங்கு புகுந்து பரவத் தொடங்கின. புத்தத் துறவிகளும், சமண முனிவர்களும் தமிழகத்துக்குள்
நுழையும்பொழுதே ஆரியரின் குடியேற்றம் பெருமளவில் பரவிவிட்டிருக்க
வேண்டும். இத் துறவிகளும், முனிவர்களும் தனித்தனியாகவும், குழுக்களாகவும்
தமிழகம் சேர்ந்து தொடக்கத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்து, பிறகு தத்தம்
சமயக் கோட்பாடுகளை மக்களுக்கு பிரச்சாரம் செய்து எழுச்சி பெற்றனர்.

🔶 முத்தமிழ் மதுரை:−

உலகின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நகரங்களுள் ஒன்றானதும் பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியதுமான மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது. மதுரையைத் "தமிழ்கெழு கூடல்" எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். சங்க காலத்துக்குப்
பிற்பட்ட சமய குரவரான மாணிக்கவாசகர் கி.பி. 792 முதல் 835 வரை அரசாண்ட வரகுண பாண்டியனின் உடன்காலத்தவர். அவர் தம்முடைய திருக்கோவையாரில் ‘வான் உயர் மதில்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்...’
என்று  மதுரையில் சங்கம் வளர்த்த தமிழைப் பாராட்டுகின்றார்.

🔶சங்கத்தமிழ் மதுரை:−

பண்டைய தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என மூன்று சங்கங்கள் கூட்டி அவற்றில் அமர்ந்து தமிழ் வளர்த்தார்கள்
என்று கூறுவது மரபாக இருந்து வருகின்றது. கடைச்சங்க காலத்தில் எழுந்தவையே எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.

 சங்க இலக்கியங்கள் ஒன்றிலேனும் ‘சங்கம்’ என்னும் சொல் காணப்படவில்லை. ஆனால் இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் உண்டு, "கூடல், அவை, மன்றம்" ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம். சமணரும் பௌத்தரும் தத்தம் சமயங்களை வளர்ப்பதற்காகச் சங்கங்கள் நிறுவினார்கள். மதுரையில் நடைபெற்று வந்த
கூடலை முதன்முதலில் அவர்களே "சங்கம்" என்று பெயரிட்டழைத்திருக்கக்கூடும்.

🔶தலைச்சங்கம் அல்லது முதல் தமிழ்ச்சங்கம்:-
( கி.மு. 5000 – கி.மு. 3000 வரை. )

பழம்பாண்டிய மன்னனான “காய்ச்சின வழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.

அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பஃறுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

திடீரென நிகழ்ந்த கடற்கோளால் (சுனாமி) பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த குமரிக் கண்டமாகிய லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது


🔶 இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம்:-
(கி.மு. 3000 முதல் 1500 வரை)

முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்சங்கம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திகழ்ந்தது.
“இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது. இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்க இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.

🔶 கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம்:-
(கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை)
கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே. நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு,
பதிற்றுப்பத்து, கலி நூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச்சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல்கள் அகத்தியமும் தொல்காப்பியமுமாம். இச்சங்கம் 1850 ஆண்டுக் காலம் நீடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன தற்போதைய மதுரையில் இருந்துள்ளன.

படைவீரர்கள், வணிகர், அந்தணர், கணியர், காவிதி மாக்கள் போன்றவர்களுக்குத் தனித்தனித் தெருக்கள் இருந்தது பற்றி மதுரைக்காஞ்சி என்னும் நூல் விளக்கமாக எடுத்துரைக்கிறது. இரவுக் காலத்தை ஆறு பொழுதுகளாகப் பிரிப்பது தமிழர் நெறி. இந்தப் பொழுதுகளில் மதுரை இருந்த நிலை பற்றியும், நாளங்காடி அல்லங்காடி விவரங்களும் இந்த நூலில் உள்ளன. கணிகையர் தெரு பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார் என்பர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.

கடைச் சங்கமானது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பிரர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.

 🔶 களப்பிரர் ஆதி்க்க காலம்:−

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. களப்பிரர் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த தமிழ் மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனவே களப்பிரர் காலம் தமிழக வரலாற்றில் "இருண்ட காலம்" என்றும் கூறப்படுகிறது.

எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். "யாப்பருங்கல விருத்தி" என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே.
இவர்கள் காலத்தில் சைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவம் மற்றும் வைதீக சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்றும் களப்பிரர்கள் காலம் "தமிழகத்தின் இருண்ட காலம்" என்றும் இன்று வரை ஒரு கருத்துண்டு. களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்" எனும் நூலில் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.

  "அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம். அதே வேளை இக்காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர்.

 “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள் என்கிறார் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.
The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters"  எனும் ஆங்கில நூலில் மு. அருணாச்சலம் களப்பிரர் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
பூஜ்ஜியபாதர் என்பவரின் மாணவரான
வஜ்ஜிநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது "தர்சனசாரம்" என்னும் நூலில் எழுதியிருக்கிறார். வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்க”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. 

வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும்

திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; அதாவது, சமண சமயத்தைப் பரப்பவே நிறுவப்பட்ட சங்கம். சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங் கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்கள், பௌத்த பிட்சுக்கள் கூட்டத்திற்கு "சங்கம்" என்பது பெயர். சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன. (கணம் - சங்கம்). இந் நான்கு கணங்களில் நந்தி கணம் பேர் போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்த படியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார்.

ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் (கி. பி. 250 - கி.பி. 550) பாண்டிய நாட்டை களப்பிரர்கள் ஆண்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கடுங்கோன் என்னும் பாண்டிய வேந்தன் களப்பிரர்களை வென்றதாக வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.




தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.


Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

கோதையின் கீதை (பகுதி - 33)