ஸ்ரீஉடையவர் திருக்கோயில் (பகுதி - 1)


வைணவ புரட்சித் துறவி ஸ்ரீஉடையவர்  -இராமானுசர் (கி.பி.1017-1137)
 சனாதன (இந்து) சமய தத்துவப் பிரிவுகளில் வேதாந்தத்தின்
 விளக்கங்களில் ஒன்றான ஸ்ரீவிசிஷ்டாத்துவைதத்தின் விடிவெள்ளியாக விளங்கினவர்.
இவரே விசிட்டாத்துவைத தத்துவ இயலை  இந்தியா முமுவதும் பரப்பினார்.

சுவாமி விவேகானந்தரும் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் "Although Adisankara was great by intellect yet Ramanuja's heart and compassion were as wide as the universe ( இராமாநுசரது கொள்கை அறிவுக்கு விருந்தாயிருப்பதோடு மட்டுமின்றி இதயத்தை தொடக்கூடியதாகவும் உள்ளது) என்று  உடையவரை பாராட்டினார்.

  அனைத்து மக்களும் வாழப்பிறந்த உடையவர் ஸ்ரீஇராமாநுசர் மனித குல வரலாற்றில் காணப்படும் ஒரு வியப்பூட்டும் தத்துவ மேதை, சமூக புரட்சியாளர், பூவுலகில் வைகுந்தத்தை காட்டிய புனிதர். மனிதாபிமானம் மிக்க சமூகச் சிந்தனையாளர். தாம் ஒரு வேதாந்தியாக மட்டும் வாழ்ந்திடாமல், சமுதாயநலனில் அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
ஜீவ ஆத்மாக்கள் எல்லாம் ஒரே இனம் என்றும் ஒரே தேவனான ஸ்ரீமந்நாராயணனின் குழந்தைகளே எல்லா உயிர்களும் என்று உலகிற்கு பறை சாற்றியனார் நம் உடையவர்.

உடையவர் ஸ்ரீராமாநுசர் விண்ணிலிருந்து நமக்காக மண்ணுக்கு வந்தவர் (நித்ய ஸூரிகளில் ஒருவரான ஆதிசேஷன் அம்சம்) என்றே வைணவர்களும் நம்புகிறார்கள்.
இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.

பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் சிறந்த உரையை இயற்றி, ஆதி சங்கரரின் மாயாவாதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதியான உடையவர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து ஸ்ரீவைஷ்ணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார்.


ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்"  என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த மகாத்மா காந்தியும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது, டில்லி சுல்தான் கோயிலை இடித்து சிலைகளையும், பொன் பொருள் போன்றவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்த இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த சிலையை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான்.
அதைத் தன் மகளிடமிருந்து திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவ மூர்த்தியை அழைக்க வேண்டும. அந்தச் சிலை தானாகவே அவரிடம் வந்து சேர வேண்டும் என்றான்.
உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பது போல் ”வாராய் என் செல்லப் பிள்ளாய் வருக” என்று அன்போடு அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்து மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து உடையவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். அவன் விதித்த நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப் போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி இன்றும் கூட ‘செல்லப்பிள்ளை’ என்றே அழைக்கப்படுகிறார்.சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து ‘பீபீ நாச்சியார்” (துலுக்க நாச்சியார்) என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர்.   இதற்கிடையில், டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ”அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்” என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.

அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள், “கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை” என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்றனர். இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்த அந்தக் காலத்தில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் கொண்டு சென்ற பெருமை இதன் மூலம் இராமானுஜருக்குக் கிடைத்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரியில் வசித்த மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த இராமானுஜரின் புரட்சி இன்றும் போற்றப்படுகிறது. ”பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. கல்வியில் சிறந்தவரே உயர்ந்தவர். தவம், கல்வி, ஆள்வினை இவற்றால் ஆவதே குலம்” என்றார் உடையவர் இராமானுஜர்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ஆற்றில் குளிக்கச் செல்லும் போது தனது சீடர்களுள் உயர்குலத்தைச் சேர்ந்த நம்பியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இருவரின் தோள் மீதும் கைபோட்டபடி செல்வார். குளித்து விட்டுத் திரும்பும் போது பிள்ளை உறங்கா வில்லிதாசன் எனும் அந்தணரல்லாத சாதியைச் சேர்ந்தவரின் தோளில் கை போட்டபடி திரும்புவார். இராமானுஜரின் இச்செயலில் எரிச்சலடைந்த உயர்சாதியினர் அவரைப் பற்றித் தவறாக விமர்சித்தனர். அப்போது, “வில்லிதாசனைத் தொடுவதால்தான் நான் மிகவும் சுத்தமாகிறேன்” என்பார்.


இராமானுசரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், )
தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

                          தமர் உகந்த திருமேனி :-

கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள 'மேல்கோட்டை' என்ற திருநாராயணபுரத்தில் இத்திருமேனி  நிறுவப்பட்டது. உடையவர் இங்கு 12 ஆண்டுகள் தங்கி பகவத்,பாகவத கைங்கர்யங்கள் செய்தார். இது உடையவரின் 'அபிமான தலம்' ஆகும். தாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களைக்) கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில் தான். உடையவர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற உடையவர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது.  உடையவர் இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை 'தமர் உகந்த திருமேனி' என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது. 

                              தானுகந்த திருமேனி:-

ஸ்ரீபெருபுதூரில் நிறுவப்பட்டது.  உடையவர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது  உடையவரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம்  உடையவர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு  உடையவர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள்.  உடையவர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள்  உடையவரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது.  

                              தானான திருமேனி:-

*(இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.
உடையவர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் திருநாட்டை அலங்கரிக்கச் சென்றார். அவருடைய சிஷ்யர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.
அரங்கன், ”இராமானுசன் என்தன் மாநிதி” என்றும் ‘இராமனுசன் என்தன் சேமவைப்பு” என்று அருளி, அந்த நிதி வெளியேயெங்கும் போகலாகாது தம்முடையத் திருக்கோவில் ஆவரணத்துக்குள்ளேயே, எப்படி ஒரு மஹாராஜன் தம் மஹஷிகளை அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோன்று தன்னுடைய சந்நிதிக்குள்ளேயே, யதி ஸம்ஸ்காரவிதியின் படி, பள்ளிப்படுத்தினர்.
வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சந்நதியாகும்
இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் உடையவர் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு 'தானான திருமேனி' என்று பெயர். 



. உடையவர் நமக்கு தந்த ஞான நவநிதிகள்:-
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம்,குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

1.பத்மம்,
2.மஹாபத்மம்,
3.மகரம்,
4.கச்சபம்,
5.குமுதம்,
6.நந்தம்,
7.சங்கம்
8.நீலம்,
9.பத்மினி,
ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன்.

குபேரனிடம் உள்ள நவநிதிகளை விட உடையவர் தந்த நவநிதிகளே அழியாத நிதிகளாகும்.

வடமொழியில் இராமானுசர் இயற்றிய 1.ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த ஞான நிதியாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)
• 2.வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது).
• 3.வேதாந்த சாரம், மற்றும், 4.வேதாந்த தீபம் : (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.)
• 5.கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)
• 6.நித்யக்கிரந்தங்கள். (அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.)
• கத்யத்ரயம். (இவை மூன்று உரைநடை நூல்கள்.)
7.சரணாகதி கத்யம் (பிரபத்தி என்ற சரண் புகுதலைப் பற்றியது.)
8.ஸ்ரீரங்க கத்யம்(ஸ்ரீரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.)
9.வைகுண்ட கத்யம் (மகாவிஷ்ணுவின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.)    

 உடையவர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. 
இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததார். திருவரங்கநாதனே இராமானுசரை "உடையவர்" என அழைத்தார்.


சமய தத்துவ உலகில் இராமாநுசர் செய்த அருஞ்சாதனைகள்
பலவாகும். பலரும் தத்தம் நோக்கில் கொண்டாடத்தக்க
குணவியல்புகள் கொண்டதாக அவர் வாழ்க்கை அமைந்திருந்தது.
சமயவாதிகள் மட்டுமன்றிச் சமுதாயச் சிந்தனையாளர்கள்,
சீர்திருத்தவாதிகள், மெய்விளக்க அறிஞர்கள்,
வரலாற்றாசிரியர்கள், கவிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும்
இராமாநுசர் பற்றி எழுதியுள்ள நூல்களும் புகழுரைகளும் இதற்கு
எடுத்துக்காட்டு. இராமாநுசர் வரவும் கொடையும் தந்த
விளைவுகள் இவை.

கடவுள் மறுப்புக்கொள்கையுடையவர்களும் இராமாநுசரை
வியந்து நோக்கியதையும் - போற்றியதையும் இங்குக்
குறிப்பிட்டாக வேண்டும்.

"முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?"
என்னும் பாவேந்தர் பாரதிதாசனாரின் பாராட்டுரை இவ்வகையில்
நினைத்தற்குரியது.


இத்தனை பலப்பல பெருமைகளைக் கொண்ட உடையவருக்கு  மதுரையில் தனிக்கோயிலே
 உள்ளது பற்றி மதுரையில் உள்ள பலருக்கும் தெரியாது.
மதுரை வடக்கு மாசி வீதி கருவேப்பிலைக்காரத்தெருவில் புகழ்பெற்ற பிரண்ட்ஸ் ஜிம் அருகே
விசிஷ்டாத்வைத சித்தாந்த விடிவெள்ளியும், உபய விபூதிகளுக்கும் உடையவராகிய ஸ்வாமி இராமாநுஜருக்கு என்றே ஓர் தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் வாசல் வடக்கு முகமாக இருந்தாலும் ஸ்ரீஉடையவர் சந்நதி கிழக்கு முகமாகவே உள்ளது.





ஸ்வாமி ஸ்ரீஉடையவர்  பத்மாசனமிட்டு அஞ்சலி ஹஸ்தராக உள்ளார். அவரது வலப்புறம் திருமாலின் சுதர்ஸன சக்கரமும், அவரது இடப்புறம் பாஞ்சஜன்யம்  என்னும் சங்கும் உள்ளது.
கல்ஹாரமாக சிறிய வடிவில், இந்த சிறு சந்நதியிலேயே,  திருப்பரமபதம், பூலோக வைகுண்டமாகிய ஸ்ரீரங்கம் ஆகிய உபய விபூதிகளையும் ஆண்ட உடையவர் ஸ்ரீஇராமாநுஜர் வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காரேய் கருணை இராமாநுச! என்ற இராமாநுச நூற்றந்தாதி 25வது  பாடலும் காதில் ஒலிக்கிறது.

"பற்பமெனத்திகழ் பைங்கழலும் தண் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையிலேந்திய  முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரி சுதன்கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!"

என்ற ஸ்ரீஎம்பாரின் துதியே இந்த எம்பெருமானார் உடையவரைத் தரிசிக்கும் போது நினைவுக்கு வருகிறது.

"உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே!"
என்கிற திருவரங்கத்தமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதி (19) பாடலும் சிந்தனைக்கு வருகிறது.
அப்போது சற்றே தலை நிமிர்ந்தால்
அதென்ன 'உடையவர் சந்நதி' முகப்பில் மான்தோலில் ஓர் தாடியுடன் உள்ள துறவி!
யாராக இருக்கும்?

அதை அடுத்த பதிவு- Post ல பார்ப்போம்.


அடியேன் ராமாநுச தாஸன்
அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராமசுப்பிரமணியன்




பற்பமெனத்திகழ்... துதி
இராமாநுசர் நூற்றந்தாதி
பராங்குசாஷ்டகம்
Down load link:-https://archive.org/details/subburaji2009_gmail_20180902_1412
 




Comments

  1. இராமாநுஜருடைய 12 திருநாமங்கள்

    *இளையாழ்வார் – பிறப்புப் பெயர் – பெரிய திருமலை நம்பிகள் இட்டது
    *இராமாநுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்)-பெரிய திருமலை நம்பிகள் தந்தது.
    *பூதபுரீசர் – பெரிய திருமலை நம்பிகள் தந்தது
    *யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) – காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது

    *உடையவர் – ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, தந்தது.

    *தேசிகேந்திரன் – திருமலை வேங்கடேசன் தந்தது.
    *ஸ்ரீ பாஷ்யகாரர் – சரஸ்வதி தேவி தந்தது
    *திருப்பாவை ஜீயர் – பெரிய நம்பிகள் தந்தது.
    எம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி தந்தது.
    *நம் கோயில் அண்ணன் – வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது.
    *சடகோபன் பொன்னடி – திருமலையாண்டான் தந்தது.
    *லக்ஷ்மண முனி – திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது
    *அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்-திருவேங்கட சம்பவம்

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)