சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)


ஒரு கதை சொல்லட்டுமா?

ஆலவாய் நகரினுள் அத்திகிரி வரதன்,திருக்கச்சி ஏகாம்பரநாதன்,சோலைமலை அழகன்  ஆகிய பெருந்தெய்வங்களை சிறு தெய்வங்களாக வழிபட்டு வரும் கதையை சொல்லட்டுமா?

பாண்டிமா தேவி அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்த  ஆலவாய் நகரினுள், புட்டுக்கு மண் சுமந்த லீலாவிநோதனான சோம சுந்தரேஸ்வரரின் ராஜாங்க நகரான சிவராஜதானியென்றழைக்கப்படும் மதுரை நகரிலே பிரசித்தி பெற்ற வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடிக்கு அருகேயுள்ள ஒருசிறு தெய்வக்கோயிலுக்குச் செல்வோம். வாருங்கள்!

அதற்கு முன்பு முதலில் சிறுதெய்வம் மற்றும் பெருந்தெய்வம் பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வோம்.  சிறுதெய்வம் என்று சொல்லும் பொழுதே பெருந்தெய்வம் என்ற ஒன்றும் இருப்பதாகக் கருத்து அமைவது தவிர்க்க இயலாததாகும். மனித சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு தோன்றி வளர்ந்துள்ளதைப் போலவே, மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வழிபாட்டிலும் பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்ற பாகுபாடு நிலவி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும் தனித்தனியே வணங்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு,
ஆண் தெய்வ வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம் காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்ற சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்று தந்த முறைப்படியும் நடக்கிறது.
பல்வேறு குலம், இனம், மொழி என்ற பாகுபாடுகள் இருப்பதால் எண்ணில் அடக்காத சடங்குகள் கொண்டதாக "சிறுதெய்வ வழிபாடு" காணப்படுகிறது.
இந்த சிறுதெய்வ வழிபாட்டோடு  சடங்குகள் பல பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பலியிடுதல், ஆணி செருப்பணிதல்,சூரைக் கொடுத்தல், கோழிக் குத்துதல் போன்ற சடங்குகள் சிறுதெய்வ வழிபாட்டிற்கு உரியன. இந்த சடங்குகளை பெருந்தெய்வ வழிபாட்டில் மக்கள் பின்பற்றுவதில்லை.

சங்க கால பழந்தமிழா்களின் வழிபாட்டில் பெருந்தெய்வம் - சிறுதெய்வம் என்ற வேறுபாட்டுணா்வுகள் தலையெடுக்கவில்லை.  சமய நோக்கு, சமநோக்கு என்ற கொள்கையுடன் சிவன், திருமால், முருகன், இந்திரன்.  வருணன் என்ற பெருந்தெய்வங்களும், இயற்கை வழிபாடு, கொற்றவை வழிபாடு, நடுகல் வீரவணக்க வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு முதலான சிறு தெய்வ வழிபாட்டின் மரபுக் கூறுகளும் பழந்தமிழ் மக்களின் வழிபாட்டுணா்வுகளில் கலந்திருந்தன.
தற்காலத்தில் வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பத் தெய்வமும் கோயிலும் சிறப்புப் பெறும். ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஏதேனுமொரு தோற்றக்கதை வாய்மொழி மரபில் கதையாகவோ, பாடலாகவோ வழங்கிவரும்.
சிறுதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் மரத்தடியிலும் குளம், கண்மாய்,ஏரி,ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுமே அமைந்திருக்கும். இக்கோயில்கள் கிழக்கும் வடக்கும் பார்த்து இருத்தல் வேண்டும் என்பது மரபு. நீங்கள் வழிபடச் செல்லும் கோயிலிலும் கூட இதனைப் பார்க்க முடியும்.

சிறுதெய்வங்களுக்குக் கோயில் எழுப்பி வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதே ஆகும். பெரும்பாலும் திறந்த வெளியில் மரத்தின் கீழேயே தெய்வமாகக் கருதி வழிபடத் தக்க கல், சூலாயுதம், வேல், அரிவாள், விளக்கு மாடம் போன்றவை இருக்கும். வேறு சில இடங்களில் பீடம் அமைக்கப்பட்டு மேற்கூறிய வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு அடுத்த நிலையில் சிலைகள் (தெய்வச் சிலைகள், குதிரை, நாய்) உருவாக்கப்பட்டு அவை திறந்த வெளியிலோ கோயிலினுள்ளோ வைக்கப்பட்டிருக்கும். இக்கோயில்கள் கூடக் கூரை வேயப்பட்டதாக, சதுர வடிவிலோ வட்ட வடிவிலோ அமைந்திருக்கும். வட்ட வடிவமே தொன்மையான கோயில் அமைப்பாகும். வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பக் கோயில் அமைப்பும் தெய்வ உருவங்களும் மாறிக் கொண்டே இருக்கும். பெண் தெய்வக் கோயில்களில் பச்சை, மஞ்சள் வண்ணங்களும் ஆண் தெய்வக் கோயில்களில் சிவப்பு, வெள்ளை வண்ணங்களும் மிகுதியாகப் பயன்படுத்தப்படும்.

 உருவ அமைப்பு
சிறுதெய்வங்கள் பலவற்றிற்கும் வழிபாட்டின் போது மட்டுமே புதிதாக உருவ வடிவங்கள் செய்யப்படுகின்றன. வழிபாடு முடிந்த நிலையில் அவற்றைச் சிதைத்துவிடும் வழக்கம் பல சிறுதெய்வக் கோயில்களில் காணப்படுகிறது. அம்மன் கோயில்களில் ‘சக்திக் கரகமே’ தெய்வ உருவமாகக் கருதி வழிபடப் படுகிறது. சிறுதெய்வங்களின் பெயரை மட்டுமே நினைவில் கொள்ள முடியுமே தவிர, அந்தத் தெய்வங்களுக்கான உருவங்களைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அதையும் தாண்டி, சிறுதெய்வங்களுக்குச் சிலையெடுக்கப் பட்டிருந்தால் அவை பிரமாண்டமான உருவங்களைக் கொண்டிருக்கும். திறந்த வெளியில் குதிரையும் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் தெய்வமும் தனித்து, நின்றோ, அமர்ந்தோ இருக்கும்.

பெரிய உருவம், பிதுங்கிய நிலையில் உள்ள பெரிய கண்கள், கையில் சூலாயுதம், வேல், சாட்டை, கதாயுதம், அரிவாள், சிறியதும் பெரியதுமான பரிவாரத் தெய்வங்கள், வேட்டை நாய்கள் என்று பார்ப்போரைப் பயத்தில் ஆழ்த்துவனவாக அச்சம் ஊட்டுவனவாகக் காணப்படும். இரவு நேரங்களில் எளிதாகக் கோயிலின் பக்கம் சென்றுவிட முடியாது. ஆண் தெய்வங்கள் மட்டுமின்றிப் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய பூதாகார வடிவம் ஏற்றுக் கொள்ளப் படுவதுண்டு. 
  
சிறுதெய்வங்கள் பெரும்பாலும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே தோற்றம் பெறுகின்றன. சிறுதெய்வங்கள் எல்லாம் ஒரே முறையில் தோற்றம் பெறுவதில்லை. அவை பல்வேறு காரண காரிய அடிப்படையில் பல்வேறு பின்புலத்தில் தோற்றம் கொள்கின்றன. சிறு தெய்வங்களின் தோற்ற முறைகளைக் கீழ்க்காணும் நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். அவை :
1) குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து, இறந்ததன் அடிப்படையில் தோற்றம் பெறுதல்.
2) ஆற்றில் மிதந்து வந்த பெட்டிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
3) மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புலம் பெயர்ந்த நிலையில் பூர்வீகத் தெய்வக் கோயிலில் இருந்து பிடிமண்ணாக எடுத்து வரப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
4) வேறு திசைகளிலிருந்து வந்து ஒருகுறிப்பிட்ட ஊர்மக்களை, வட்டார மக்களைப் பாதுகாத்ததன் வாயிலாகத் தோற்றம் பெற்றவை.
என்பனவாகும். இவ்வாறு தோற்றம் பெற்றவை ஆண் தெய்வங்களாகவோ பெண் தெய்வங்களாகவோ இருக்கும்.

இந்த அடிப்படையில் நாம் அறிந்து  கொள்ளப்போகும் ஸ்ரீபத்திர காளியம்மன் திருக்கோயிலானது (மதுரை இராமாயணச்சாவடி அருகேயுள்ளது) மூன்றாவது ரகமாகும். இவள் காஞ்சிபுரத்திலிருந்து பிடிமண்ணாக கொண்டுவரப்பட்ட சிறுதெய்வம் ஆவாள். 








 


இவளோடு காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள், காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர், காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆகியோரையும் காஞ்சிபுரத்திலிருந்து பிடிமண்ணாக எடுத்துக்கொண்டு தம் பூர்வ குடியான மதுரையை நோக்கி கூட்டமாய் புலம்பெயர்ந்தனர் இந்த சிறுதாலி இடையர்கள். வழியில் செஞ்சி இடையர்களும் இவர்களோடு இணைந்து கொண்டனர்.



அவர்கள் மதுரையை நெருங்கும் போது மதுரையில் சித்ரா பௌர்ணமி - சித்திரை திருவிழா கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் அழகிய தங்கங்குதிரையில் இறங்கியதை கண்டு அந்த இடைச்சமூகம் வழிபட்டனர். ஆக இந்த இடையர்கள் அழகர் மலைச்சாமியையும் வணங்கி அவரையும் பிடிமண்ணாக மாற்றி மதுரை நகருக்குள் வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெருவில் தம் பூர்வ மக்களான நெல்லை மேலப்பாட்டம் இடையர்களோடு மறுபடியும் இணைந்து, தாம் கொண்டு  வந்த பிடிமண் தெய்வங்களை கோயில்கட்டி பூடம் வைத்து வழிபடத் தொடங்கலாயினர்.

எல்லாம் சரி! பெருந்தெய்வமான ஸ்ரீகாஞ்சிவரதராஜப் பெருமாளுக்கும்,ஸ்ரீஏகாம்பரநாதருக்கும்,காமாட்சியம்மனுக்கும் சிறு தெய்வமான காஞ்சி கன்னி காளியம்மனுக்கும் என்ன சம்பந்தம்?
அடுத்த "பதிவு-Post" ல பார்ப்போம்.



                  அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

Comments

  1. சிறுதெய்வங்களை இங்கு வகைப்படுத்திக் காண்போம்.

    1.வீட்டுத் தெய்வம்
    2.குல தெய்வம்
    3.இனத் தெய்வம்
    4.ஊர்த் தெய்வம்
    5.வெகுசனத் தெய்வம்
    6.பெண்தெய்வங்கள்7.ஆண்தெய்வங்கள்
    8.தாய்த் தெய்வங்கள்
    9.கன்னித் தெய்வங்கள்
    10.முதன்மைத் தெய்வங்கள்
    11.துணைமைத் தெய்வங்கள்

    ReplyDelete
  2. சிறுதெய்வங்களை இங்கு வகைப்படுத்திக் காண்போம்.

    1.வீட்டுத் தெய்வம்
    2.குல தெய்வம்
    3.இனத் தெய்வம்
    4.ஊர்த் தெய்வம்
    5.வெகுசனத் தெய்வம்
    6.பெண்தெய்வங்கள்7.ஆண்தெய்வங்கள்
    8.தாய்த் தெய்வங்கள்
    9.கன்னித் தெய்வங்கள்
    10.முதன்மைத் தெய்வங்கள்
    11.துணைமைத் தெய்வங்கள்

    1.வீட்டுத் தெய்வம்:-
    தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.

    2.குலதெய்வம்:-
    ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம் என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
    3. இனத்தெய்வம்:-
    பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத்தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத்தெய்வங்கள் விளங்குகின்றன.
    4. ஊர்த்தெய்வம்:-
    வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
    தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.
    5.வெகுசனத் தெய்வங்கள்:-
    சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
    சிறுதெய்வங்கள் பின்வரும் செயல்பாடுகளின் வழி வெகுசனத் தெய்வ நிலைக்கு மாற்றப்படுகின்றன.
    சிறுதெய்வமாக இருந்து வளர்ந்ததாக இருந்தாலும், ஆதி அந்தம் இல்லாததாகவும் அவதாரக் கடவுளாகவும் பெருந்தெய்வங்களுக்கு உறவுடையதாகவும் மாற்றப்படும்.
    பிரபலமான ஆற்றல் கொண்டவையாக, நோய்கள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணம் கொடுப்பவையாக நம்பப்படும், பரப்பப்படும். பழிவாங்கும் உணர்வு, ஆவேசம், உக்கிரம் போன்றவை குறைக்கப்பட்டுச் சாந்தம், அமைதி போன்ற பெருந்தெய்வக் குணங்கள் இத்தெய்வங்களுக்குக் கற்பிக்கப்படும்.
    கோயிலின் வருமானத்தைக் கொண்டு ஆகம விதிகளின்படி கோயிலும் தெய்வ உருவமும் மாற்றி அமைக்கப்படும். சைவப் படையல் தெய்வத்தின் முன்பாகவும் அசைவப் படையல் கோயிலுக்கு வெளிப்புறமும் படைக்கப்படும். திருவிழாக்கள் ஏழு நாட்கள் அல்லது பத்து நாட்கள் வரை நடைபெறும்.
    மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, சமயபுரம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், இராஜ காளியம்மன், வெக்காளியம்மன், அய்யனார், சனீஸ்வரன் போன்ற தெய்வங்கள் வெகுசனத் தெய்வங்களாக இன்று வழிபடப்பட்டு வருகின்றன.
    இத்தெய்வங்கள் எல்லாச் சாதி, மத, மொழி மக்களுக்கும் பொதுவானவை என்று கருதப்படுகின்றன.

    ReplyDelete

  3. பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.
    குலதெய்வ வழிபாட்டிற்கான 51 குறிப்புகள்:-
    1. குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
    2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
    3. மறைந்த முன்னோர் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.
    4. குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    5. குல தெய்வ வழிபாடுதான் நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
    6. இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.
    7. குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
    8. வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
    9. குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
    10. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    11. மதுரை வீரன், கருப்பன் ஆகிய குல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது12. இஷ்ட தெய்வ வழிபாடு போல் அல்லாமல் குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னி பிணைந்துள்ளது.
    13. நீர் வளம் தரும் அய் யனாரையும் நோயில் இருந்து காக்க மாரியம்மனையும் குல தெய்வமாக கருதும் வழக்கம் பின்னணியில் ஏற்பட்டது.
    14. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.
    15. சாதிகள் தோன்றிய பிறகு குல தெய்வ வழிபாடும் சாதி வட்டத்துக்குள் சென்று விட்டது.
    16. தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ரெட் பீல்ஸ் என்ற சமூகவியல் அறிஞர், தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு குல தெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார்.
    17. குல தெய்வ வழிபாடு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதாக கருதப் படுவதால், அந்த வழிபாடு தமிழ்நாட்டில் தொய்வே இல்லாமல் நடந்து வருகிறது.
    18. பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.
    19. நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.
    20. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன.
    21. குல தெய்வம் இருக் கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.
    22. காணிக்கை அளித்தல், மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன.
    23. தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெறுகிறது.
    24. குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
    25. இடம், தோற்றம், வாழ்க்கை நிலை போன்றவற்றைக் கொண்டே குல தெய்வ வழிபாடு நிர்னையமாகிறது.
    26. தென் இந்தியாவின் குல தெய்வ வழிபாடுகளை முதன் முதலாக ஹென்றி ஒயிட்ஹெட் என்பவர் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.
    27. குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும்.
    28. குல தெய்வ வழிபாடு களில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.
    29. குல தெய்வங்களுக்கு கருவாடு, சுருட்டு, கஞ்சா, சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
    30. குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.

    ReplyDelete
  4. 31.குல தெய்வ வழிபாடுகளின் போது சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு.
    32. குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.
    33. தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.
    34. குல தெய்வ கோவில்கள் ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.
    35. குல தெய்வ கோவில் கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.
    36. குல தெய்வ கோவில்களில் திருவிழா நடத்துவது உள்பட எல்லா காரியங்களும் குல தெய்வத்திடம் உத்தரவு கேட்டே நடத்தப்படும்.
    37. குல தெய்வ வழிபாடுகளில் மிகுந்த தீவிரமாக இருப்பவர்கள் தங்களை வருத்திக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
    38. குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் ‘வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.
    39. குல தெய்வ கோவில்களில் பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு.
    40. சில சமுதாயத்தினர் குலதெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். ஆனால் குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தினமும் பூஜைகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
    41. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
    42. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.
    43. குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.
    44. கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
    45. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.
    46. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப்புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.
    47. சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.
    48. குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள்.
    49. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என் பது பல ஊர்களில் நடை முறையில் உள்ளது.
    50. நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திரு விழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.
    51. குல தெய்வ வழிபாடே தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும்.

    ReplyDelete
  5. பெண் தெய்வங்கள்:-
    நாட்டுப்புறத் தெய்வங்களில் பெண்தெய்வங்களே மிகுதி என்பதால் பெண்தெய்வங்கள் முதன்மை நிலையில் வைத்து விளக்கப்படுகின்றன.

    இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலந்தொட்டுச் செழுமையின் அடையாளமாகவும் வலிமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால் பெண் வணங்குதற்கும் வழிபாட்டிற்கும் உரியவளானாள். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.

    பெண் தெய்வங்கள்:-
    தாய்த் தெய்வங்கள்கன்னித் தெய்வங்கள்
    மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் என்ற அடிப்படையில் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
    தாய்த் தெய்வ வழிபாடு
    ‘அம்மன்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்கள், பெண்மை மற்றும் தாய்மைக் குணங்களை ஒருசேரப் பெற்றவையாக விளங்குகின்றன. தொடக்கக் காலத்தில் வளமை தொடர்பான சடங்குகள் பெண்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதால் பின்னாளில் பெண்களே வளமையின் குறியீடாகக் கருதி வழிபடப் பட்டனர். இதுவே, தாய்த் தெய்வ வழிபாடு தோன்றி வளர்வதற்குக் காரணமாய் அமைந்தது.

    ‘மழையாகப் பொழிந்து மண்ணுயிர்களைக் காப்பவள் மாரியம்மா; நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளைக் காப்பவள் கங்கையம்மா; தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மா’ என்று, பெண் தெய்வங்கள் வளமையை மையமிட்டே வணங்கப் பட்டன; வழிபடப் பட்டும் வருகின்றன. காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி போன்ற பெரு நதிகளைப் பெண் தெய்வங்களாகவும் தாய்த் தெய்வங்களாகவும் வழிபடுவது இந்திய மரபாகும்.

    நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. நன்மை அளிக்கும் தெய்வங்கள், தீமை அளிக்கும் தெய்வங்கள் என்று கூட இவற்றை வகைப்படுத்துவதுண்டு. சக்தியின் அவதாரமாக, வடிவமாகப் பெண் தெய்வங்கள் கருதப்பட்டு வணங்கப் படுகின்றன. பெண் தெய்வங்களில் பரவலாக வழிபடப் பட்டுவரும் மாரியம்மனின் இயல்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
    மாரியம்மன்
    தமிழகமெங்கும் பரவலாக மாரியம்மன் வழிபாடு காணப்படுகிறது. என்றாலும் தென் மாவட்டங்களில் இவ்வழிபாடு மிகுதி. கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பெயர்களில் மாரியம்மன் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.

    மாரி - மழை. மாரியம்மன் வெம்மையைப் போக்கிக் குளிர்ச்சியைத் தருபவள், மழையாகப் பொழிந்து மண்ணில் உயிர்களைக் காப்பவள் என்ற நம்பிக்கையில் மழைத் தெய்வமாக வழிபடப்படுகிறாள். மாரியம்மன் வழிபாட்டுச் சடங்கின் போது சக்திக் கரகம் நீரால் நிரப்பப் படுவதும், அது அம்மனாக வழிபடப் படுவதும், வழிபாடு நிறைவடையும் நிலையில் கரகத்திலுள்ள நீர் நீர்நிலைகளில் விடப் படுவதுமாகிய செயல்கள் மாரியம்மன் மழைத் தெய்வமாக வணங்கப் படுவதற்குச் சான்றாக அமைகின்றன.

    தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடமிடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்றவை மாரியம்மனுக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகளாகவும் நேர்த்திக் கடன்களாகவும் விளங்குகின்றன.

    காளியம்மன்
    தமிழகத்தில் மாரியம்மனுக்கு அடுத்த நிலையில் காளியம்மன் பரவலாக வழிபடப்படுகிறது. காளி என்று வேதங்களில் குறிப்பிடப்படும் இத்தெய்வம் கோப ஆவேசம் கொண்ட தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய தெய்வமாகச் சுட்டப்படும் கொற்றவையே காளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகக் கிராமங்களில் "காளியம்மன் கோயில்" தவறாது இருக்கும். பலியிடலும் அங்கமளித்தலும் (உடல் உறுப்புகளாக வடிவமைக்கப் பட்டுள்ள தகடுகளைக் காணிக்கையாகச் செலுத்துதல்) காளி வேடமிட்டு ஆடுதலும் காளியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத் தக்கவையாகும்.

    கன்னித் தெய்வ வழிபாடு:-
    கன்னித் தெய்வ வழிபாடு பெரும்பான்மையும் சிறுதெய்வ வழிபாடே ஆகும். கன்னி என்ற சொல்லிற்குப் ‘பூப்படைந்து திருமணமாகாத, கன்னித் தன்மை இழக்காத பெண்’ என்று அகராதி பொருள் கூறுகிறது. இயல்பாகவோ அல்லது கொலை செய்யப்பட்டோ இறக்கும் பெண்களைக் கன்னித் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இறந்த கன்னிப் பெண், தன் வீட்டாருக்கு வளமையும் பாதுகாப்பும் அளிப்பதாகவும், அவள் கன்னிப் பெண்கள் மீது இறங்கி அருள்வாக்குச் சொல்வதாகவும் நம்பப்படுகிறது.

    ReplyDelete
  6. ஆண் தெய்வ வழிபாடு:-
    நாட்டுப்புறச் சிறு தெய்வங்களில் பெண் தெய்வங்களை நோக்க ஆண் தெய்வங்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். பெண் தெய்வங்கள் பல்வேறு சக்திகளைத் தங்கள் வசம் வைத்திருப்பதாகவும் ஆண் தெய்வங்கள் குறைந்த சக்தி உடையவையாகவும் நம்பப்படுவதே இதற்குக் காரணம் எனலாம். ‘சக்தி இருந்தா வேலையைச் செய், இல்லையென்றால் சிவனேன்னு கிட’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது பெண் தெய்வங்களைச் சிறப்பிக்கவே உருவாக்கப் பட்டதாகும்.

    ஆண் தெய்வங்களில் சில முதன்மைத் தெய்வங்களாகவும் பல முதன்மைத் தெய்வங்களுக்குத் துணைமைத் தெய்வங்களாகவும் விளங்குகின்றன. துணைமைத் தெய்வங்களைப் ‘பரிவாரத் தெய்வங்கள்’ என்றும் கூறுவதுண்டு.

    ReplyDelete
  7. ஏழு கன்னிமார்
    கன்னித் தெய்வங்கள் ஏழு என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகிறது. ஏழு கன்னிமார், சப்த கன்னியர், ஏழு கன்னித் தெய்வங்கள் என்று இதனைக் கூறுவதுண்டு. ஏழு கன்னித் தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து, நீராடிக் களிப்பது, துன்பப் படுவோர்க்கு உதவுவது போன்ற கதைகள் பரவலாக உள்ளன. வனப் பகுதிகளிலும் மலையை ஒட்டிய பகுதிகளிலும் திறந்த வெளியில் கன்னித் தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றை வன தேவதைகளாகக் கொண்டு வனத்தில் வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. ஒரே கல்லில் ஏழு பெண் உருவங்கள் வடிவமைக்கப் பட்டு வழிபடப் படுகிறது. இத்தெய்வங்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இல்லை. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபடப் படுகின்றன.

    ReplyDelete
  8. வணக்கம், தெய்வங்களை முதன்முதலில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என வகைப்படுத்தியது யார்? எந்த நூலில் எதனால் இவ்வாறான வகைபாட்டு தோன்றியது?
    பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. I too have this question, anyone can answer us🍁

      Delete

Post a Comment

Popular posts from this blog

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)