ஸ்ரீஉடையவர் திருக்கோயில் (பகுதி - 2)






தாடியுடன் இருக்கும் சாமியார் மதுரை வட்டாரத்தில் புகழ்பெற்ற சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சிஷ்யர்களில்  ஒருவரான மூக்கையா சுவாமிகள் ஆவார். இந்த சூட்டுக்கோல் மாயாண்டி
 சுவாமிகள் பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.
சரி! அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. மன்னார்குடி ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மாயாண்டி சுவாமிகள் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காத குறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார். இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை. ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் தான் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.

இவ்வாறு ரயிலை நிறுத்திய சித்தராகிய சூட்டுக்கோல்  மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு இடையரான
மூக்கையா சுவாமிகள், கற்றங்குடி ரெட்டி சுவாமிகள் ஆகியோருடன் இந்த  உடையவர் கோயிலில் உள்ள ஓட்டுச்சார்பில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பல யோக சாதனைகள் செய்துள்ளார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர் சுந்தர ராமாநுச தாசர் என்கிற  இருளப்ப கோனார். மதுரை வடக்கு மாசி வீதியில் தாளமுத்துப் பிள்ளை சந்தில் வசித்து வந்தார் இவர்.










சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாருக்கு அந்த பட்டத்தை வழங்கியவர் ஸ்ரீரங்கம் மதுரகவி சுவாமிகள் ஆவார். எதற்கெனில்  ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளோடு இணைந்து அவரது நந்தவனக் கைங்கர்யத்துக்கு உதவினார். நந்தவனப் பணிகள் மேலும் சிறப்பதற்கும் தடை இல்லாமல் நடப்பதற்கும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இருளப்ப கோனாரின் அரும் பணிகளைப் பார்த்து வியந்த மதுரகவி சுவாமிகள் அவருக்கு சுந்தர ராமானுஜ தாசர் என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தார். வைணவப் பணிகளைப் பெருமளவு செய்து கொண்டிருந்ததால் ராமானுஜ தாசர் என்றும் மதுரையில் அழகர் கோயிலுக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், அழகர் பெருமாளின் திருநாமமான சுந்தர்ராஜர் என்பதில் இருந்து சுந்தர என்பதைச் சேர்த்து, சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாரை அழைத்தார் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்திலேயே பல காலம் தங்கி இருந்து, மதுரகவி சுவாமிகளின் திருப்பணிகளுக்கு உதவி, அவர் திருவரசு (மகா சமாதி) ஆன பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்தார் இருளப்ப கோனார்.

மதுரைக்கு வந்த இருளப்ப கோனார், தனது இறை பணிகள் இனிதாகத் தொடர்வதில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஒரு நாள் கீழப்பூங்குயில்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார். "இருளப்பா... திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய். உன் வாழ்க்கை சிறக்கும்?' என்று சொல்லிப் போனார்.

இருளப்ப கோனாரும்
மிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து, அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் . இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள். மூக்கையா சுவாமிகளுடன் போய் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளைச் சந்தித்தார். அவர் சந்தித்த இடம் உடையவர் கோயில் ஆகும்.
சுந்தர இராமாநுச தாசருக்கு இந்த இராமாநுசர் சந்நதியிலேயே குரு கிடைத்தார்.
இங்கு மூக்கையா சுவாமிகளின் சுதைச்சிற்பம் உடையவர் சந்நதி முகப்பில் உள்ளது. அது 1996-97ம் ஆண்டுகளுக்குப்பின் நூதன பிரதிஷ்டையாக, சுதைச்சிற்பங்களாக மதுரைவிளாச்சேரி மொட்டமலை வாழும் பூரணை புட்கலை உடனாகிய மங்கான் பெரியசாமி சாஸ்தா சந்நதியோடு மங்காயி அம்மன்,கருப்பண சாமி மற்றும் வல்லநாடு மெய்யாண்டவர்(யா செய்யது அப்துல் கரீம் வலியுல்லா) ஆகியோரை  இங்கு அபிமான வழிபாட்டுக்கு கொண்டுவரும் போது இந்த "மூக்கையா சுவாமிகள்" சுதைச்சிற்பத்தையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மூக்கையா சுவாமிகள் யோக சாதனை செய்த அழகிய  ஓட்டுச்சார்பு இன்றும் இக்கோயிலில் உள்ளது. 


14.10.1916 ல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் ரெட்டி சுவாமிகள் முன்னிலையில்  மூக்கையா சுவாமிகள்  ஜீவ சமாதி அடைந்தார்.
 திருப்பரங்குன்றத்தின் அருகேயுள்ள காகபுஜண்டர் மலை
மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்று  அழைக்கப்பட்டு வருகிறது. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான
மூக்கையா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன. தவிர  இருளப்பக் கோனார்,  சோமப்பா சுவாமிகள் இப்படி சுமார்
பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

இக்கோயிலில் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்  தேசப் பற்றுள்ளவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ரகசிய கூட்டம் நடத்தியதாகவும், "லஜபதி நிலையம்" எனப் பெயர் வைத்திருந்தனர் என்றும் தெரிகிறது.

இக்கோயில் முன் முகப்பு தேவாதாந்தர அடையாளங்களோடேயே காணப்படும். மறந்தும் புறந்தொழா வீர வைணவராகிய உடையவர் கோயிலானது தேவதாந்திர பின்ணணி ஏற்பட்டதால் உடையவருக்கு தீப ஆராதனை செய்து விபூதி(திருநீர்-பஸ்மம்)யே பிரசாதமாக தரப்படுகிறது. சிறு தெய்வங்களை ஆராதிப்பவரே  உடையவரையும் ஆராதிக்கிறார். அவர் மூக்கையா சுவாமிகளின்  பங்காளிகளின் வம்சாவழியினரான இராமாயணச்சாவடி இடைச்சமூகத்தைச் சேர்ந்தவரே ஆவார்.

அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் 
E.P.I. இராமசுப்பிரமணியன்



Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)