அழகர்சாமியின் குதிரை


வைகை ஆற்றைக்கடந்து  அழகர் சாமியின் குதிரை மட்டும் ஆலவாய் நகருக்குள் வந்தது. நகருக்குள்  வந்ததோடல்லாமல் அழகர் ஒய்யாரமாய் அமரும் அந்த தங்க குதிரை மேல் வேறொரு பெருமாளுக்கென எழுந்தருள அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்ததோடல்லாமல் நான்கு மாசி வீதியில் வீதியுலா புறப்பாடும் செய்யப்பட்டது. அது எங்கே? எப்போ?எப்படி?
எனும் கதைய சொல்றேன் கேளுங்க!

மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு இடையர் சமூகத்தினருள் ஆட்டு வியாபாரிகள் நடத்துகிற ஆட்டு மந்தை சார்பாக
(ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை)
அச்சமூகத்தினரின் தெய்வமான ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கான ஸ்ரீஜயந்தி 8ம் நாள் உத்ஸவத்திற்காக 1955ம் வருடத்தில் அழகர் தங்கக்குதிரை சிவராஜதானியாக கருதப்படும் ஆலவாய் நகருக்குள் வந்தது.



செல்வச்செழிப்பில் செருக்கின் உச்சத்தில் மதுரையில் கொடி கட்டிப் பறந்த இராமாயணச்சாவடித் தெரு இடையர்கள் நடத்தும் ஸ்ரீஜயந்தி 15நாட்கள் உத்ஸவமானது அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே  திரும்பி பார்க்க வைத்ததென்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். அவர்களது கதையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள். திருமலை நாயக்கர்( கி.பி.1623 -1659)ஆட்சி காலத்தில் தெற்கே திருநெல்வேலி வட்டாரத்திலிருந்து ஒரு காரணத்திற்காக மதுரையை நோக்கி சில இடைச்சமூகத்தினர் புலம்பெயர்ந்தனர். திருமலை நாயக்க மன்னர் அனுமதி பெற்று
மதுரையில் வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி இடையர்களாக மாறிய அச்சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து மதுரை வட்டாரத்தில் 56 கிராமங்களில் பல்கி பெருகி வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தனர்.
திருமலைநாயக்கர் காலத்தைய இராமாயணச்சாவடியானது கி.பி.09.02.1881ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு  தேசியமும்,தெய்வீகமும் என்று இணைந்து செயல்படும் ஆன்மிக அரசியல் களமாகவும் மாற்றப்பட்டது.
கம்பத்தடி கிருஷ்ணனாக இருந்த நவநீதகிருஷ்ணனுக்கும் கலைநயமிக்க கோயிலை இராமாயணச்சாவடி இடைச்சமூகத்தினர் கட்டிக் கொண்டிருந்தனர். கம்பத்தடியிலிருந்த கண்ணபிரானை பழநியிலிருந்து வந்த நாச்சிமுத்து பழநிச்சாமிகள் எனும் சிவநாராயண தேசிகர் சுவாமிகள் கி.பி.1909 ம் ஆண்டில் பிரதிஷ்டையும் செய்தார். அதே வருடம் சித்திரை - உத்திரம் நாளில் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருவடியடைந்தார்.
சுதந்திர இந்தியாவாக மாறிய பிறகு 07-07-1949 ல் இராஜகோபுரத்துடன் கூடிய கலைநயமிக்க ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயிலையும் இச்சமூகத்தினர் கட்டி முடித்தனர்.

 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறைய சட்டக் கட்டுப்பாடுகள் வந்ததனால் ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக அவர்களுக்கு இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் என்பவர் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர். அன்றிலிருந்து அந்த இடத்தை ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் அடைப்பதற்கும், ஆடுகள் வியாபாரம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.  அதன்பிறகு ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை டிரஸ்ட் கி.பி.1927 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டிரஸ்டியாக திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1927 முதல் கி.பி 1947 வரை டிரஸ்டியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் டிரஸ்டியாக இ.சுடலைமாடக்கோனார் கி.பி 1947 முதல் 1953 வரை பணியாற்றினார். பின்னர் மூன்றாம் டிரஸ்டியாக வீ.சி.பி.வீரணக்கோனார். கி.பி 1953 முதல் 1988 வரை பணியாற்றினார



இவர் காலத்தில்  இறைப்பணிகள் மற்றும்
பக்தியில் சிறந்த ஆயிர வீட்டு யாதவ சமுதாய மக்கள் டிரஸ்ட் மூலமாக இறைத்தொண்டாற்றிட எண்ணினர். அதன்படி வடக்கு மாசி வீதி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவத்தை டிரஸ்ட் சார்பில் நடத்துவதாக முடிவு செய்தனர். ஆட்டு மந்தை சார்பாக (ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை)
அச்சமூகத்தினரின் தெய்வமான ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கான ஸ்ரீஜயந்தி 8ம் நாள் உத்ஸவத்திற்காக (மன்மத வருடம் ஆவணி 31ம் தேதி) 16-09-1955ம் வருடத்தில் அழகர் தங்கக்குதிரையை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆலவாய் நகருக்குள் கொண்டு வந்தனர்.

 (*குறிப்பு - 1.   தமிழக முதல்வராக 1955ம் ஆண்டில் இருந்தவர் பெருந்தலைவர் திரு. கு.காமராஜ் ஆவார்)

(*குறிப்பு- 2 . பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே சப்த தேவஸ்தானங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலை அழகர் திருக்கோயிலின் ஹானரரி டிரஸ்டியாக இராமாயணச்சாவடி தெரு இடையரான திரு.பி.எம்.முத்திருளப்பக்கோனார்  அவர்கள் 1937 மற்றும்1944ம் ஆண்டுகளில் இருந்தார்.)








அது வரை கட்டைக்குதிரையில் புறப்பாடு கண்ட ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு தங்கக்குதிரையில் புறப்பாடு கண்டார் (ஆதாரம்- ஆட்டுமந்தையின் அலுவலக அறையில் அழகர் குதிரையில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளி வீதியுலா கண்ட புகைப்பபடம் உள்ளது)

      வீ.சி.பி.வீரணக்கோனார் காலத்தில் அழகரின் தங்கக்குதிரையை முன் மாதிரியாகக் கொண்டு கி.பி.1957 ல் புதிதாக வெள்ளிக்குதிரை
 வாகனம் செய்யப்பட்டது. 
இந்த புதிய வெள்ளிக்குதிரை விளம்பி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி 01.09.1958 ல் ஸ்ரீநவநீதகிருஷ்ணருக்காக அலங்காரம் செய்து முதன்முதலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
அதன்படி அன்று முதல் இன்று வரை நவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவம் டிரஸ்ட் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளி குதிரை வாகனம் தற்போது ஆட்டுமந்தையில்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஜயந்தி 8ம் நாளன்று இராமாயணச்சாவடிக்கு வானவேடிக்கையோடு வெள்ளிக் குதிரையை அழைத்துக் கொண்டு வருவர்.




ஆற்றைத்தாண்டி வந்த அழகர்சாமியின் குதிரையானது 2010 வரை அழகரின் பயன்பாட்டில் இருந்தது. 11.04.2011க்குப்
பிறகு புதிய தங்கக்குதிரையில் அழகருக்கு சித்திரைத்திருவிழா புறப்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.     


அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்





Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)