தேசியமும் தெய்வீகமும்


       மதுரை வடக்குமாசி வீதி இராமாயணச்சாவடி தெரு 'தேசியமும் தெய்வீகமும்' கலந்த புகழுடையது. இராமாயணச் சாவடி கோயிலானது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இராமபிரான், கணேசர், தண்டாயுதபாணி ஆகிய கடவுள்களின் வழிபாட்டு சிலைகளும் சாவடிக்கு உள்ளே உள்ளன.  இராமாயணச்சாவடியின் வெளியே ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு தனிக்கோயில் உள்ளது. (சிவநாராயண தேசிகர் (எ) நாச்சிமுத்து பழனிச்சாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், கற்றங்குடி ரெட்டி சுவாமிகள் மூக்கையா சுவாமிகள் ஆகியோர் உலாவிய பகுதி இதுவாகும்.)





இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாவடிக்குள் இராமாயணம்,பாகவதம், என சாதி பேதமின்றி இடையர்,மறவர்,பிள்ளை,ஐயங்கார் என பலரும் படித்து வந்தனர்.  சங்கர மூர்த்திக்கோனார் என்பவர் ஸ்ரீமத் பாகவத அம்மானையினை கி.பி.1817ம் ஆண்டு நடந்த வைகுண்ட ஏகாதசியன்று இராமாயணச்சாவடியில் அரங்கேற்றினார் என்கிறார் பேராசிரியர் தொ.பரம சிவன்.  (ஆதாரம்: ஆய்வு நூல்- அழகர் கோயில்  -பக்கம் 171 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு-முதற்பதிப்பு:1989)
இதிகாச, புராண கதாகாலட்சேபம் நடத்தும் இடமாக ஆன்மீகச் சான்றோர்களும், ஆங்கிலேயர்களை எதிர்க்கும் ரகசிய களமாக அரசியல் தலைவர்களும் இராமாயணச்சாவடி பயன்படுத்தப்பட்டது. மதுரையிலேயே இப்பகுதியில் தான் அதிகமான சுதந்திர போராட்ட தியாகிகள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயணச்சாவடி இடையரான திரு.ஏ.வி.செல்லையாக்கோனார்
 ஒரு சிறந்த தேசபக்தர். மதுரை வட்டார சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையாக்கோனார் ஆவார்.
 இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது.
இவருடைய சகோதரர் திரு. அணுகுண்டு அய்யாவு அவர்களும் ஓர் பிரபலமான சுதந்திர போராட்டக்காரர்.  இவரும் பிரிட்டிஷாரை எதிர்த்து பலமுறை சிறை சென்றிருக்கிறார்.  மதுரையில் வைணவர்கள் பெரிதும் கொண்டாடும் மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டும் பொட்டல்) என்னுமிடத்தை ஜான்சி ராணி பூங்காவாக மாறியதற்கும், திண்டுக்கல் ரோடு என்றிருந்ததை நேதாஜி ரோடாக மாறியதற்கும் காரணமாக இருந்தவர்  இவரே ஆவார். மேலும் (கிருஷ்ணராயர் தெப்பகுளம்) ஞாயிற்றுக்கிழமை சந்தையை 'திலகர் திடல்' என மாற்றியதும் இவரே.
அந்நாளைய சென்னை மாகாண முதல்வர் பெருந்தலைவர் திரு. காமராசரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக அணுகுண்டு அய்யாவு இருந்தார். அதன் காரணமாக வடக்கு மாசி வீதி பகுதியில் இவரது அடுத்த தலைமுறை தேசியவாதி இளைஞர்களை காங்கிரஸ் மாணவர் சங்க தலைவரராக இருந்த திரு.இ.பெ.பாலச்சந்தர் மூலம் ஒருங்கிணைத்து 'காமராசர் எழுச்சி மன்றம்' என்கிற சமூகநலன் கொண்ட அமைப்பு உருவாவதற்கும் இவரே தூண்டுகோலாக  இருந்தார். மதுரையில் பிச்சைக்காரர்களை அழைத்து மாநாடு நடத்தி அன்றைய அரசியல் மேல்மட்டத்து தலைவர்களின் கவனத்தையே திருப்பி புரட்சி செய்தார். பகுத்தறிவாளரான நடிகவேள் திரு. எம்.ஆர்.ராதா மதுரையில் நடத்திய 'கீமாயணம்' நாடகத்தை எதிர்த்த பெருமைக்குரியவர். பிற்காலத்தில் நடிகவேள் அவர்களுடன் சமரசம் ஏற்பட்டு 'உலகம் சிரிக்கிறது' என்கிற படத்திலும் நடித்தார்.


சினிமா ஜோதி, அணுகுண்டு ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தியவர். திருமணம் செய்து கொள்ளாது தேசத்திற்காக  போராடிய ஒரு முக்கிய பெருமையும் இவருக்குண்டு. தன் வாழ் நாள் இறுதிக்காலம் வரை இப்பகுதி சிறு குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி 'ஜெய்ஹிந்த்'  என முழக்கமிடச் செய்து தேசப்பற்றுச்சிந்தனைகளை புகட்டி வந்தார்.  முன்னாள் தமிழக முதல்வர்  திரு.மு.கருணாநிதி அவர்களின் மதிப்பிற்குரிய தியாகிகள் இச்சகோதரர்கள் ஆவார்கள். இவர்களுக்கு


 அடுத்து பதுமைக் கம்பெனி திரு.வீரணக்கோன் சுதந்திர போராட்டங்களில்  (வடக்கு மாசி வீதியில்)  பெரும் பங்கு வகித்த மற்றொருவர்
ஆவார். ஆன்மீகமும் அரசியலும் இங்குபிரிக்கமுடியாத ஒன்றாகவே இன்றும் உள்ளது. பொதுவாக கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் வடக்கு மாசி வீதியில் உள்ள இராமாயணச்சாவடி கிழக்கு பகுதிமுகப்பில் காந்திஜி,நேருஜி,நேதாஜி
மூவரும் உள்ளனர். மேலும் மகான்களின் சிலைகளாக சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர், நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள், சுவாமி விவேகானந்தர், அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகள்(வள்ளலார்) ஆகியோரின் சுதைச்சிற்பங்களும் சாவடி முன் முகப்பில் காணலாம். மேலும் இராமாயணச்சாவடி  இடையர்கள் உறவின் முறை சார்ந்த ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில் கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.












    மல்லாண்ட திண் தோள் கொண்டு   மல்லுக்கு நிற்கும் குஸ்தி பயில்வான்களாக இராமாயணச்சாவடி  பகுதி இடையர்கள்  வாழ்ந்துள்ளதற்கு இக்கோபுர சிற்பமே நல்லதொரு உதாரணமாகும்.

இராமாயணச்சாவடி இடையர்கள் தேசியத் தலைவர்களை தெய்வங்களுக்கு நிகராக மதித்து கோயில் கோபுரத்தில் இடம் பெறச் செய்துள்ள செயல் பலரையும் ஆச்சர்யமூட்டும் ஒன்றாகும்.

அன்புடன்
                          ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
                    E.P.I.இராமசுப்பிரமணியன்


Comments

  1. • சித்திரை திருவிழாவில் தங்ககுதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இச்சாவடியில் எழுந்தருளுகின்றனர்.

    • திருக்கூடல் திவ்யதேசத்து கூடலழகர் வைகாசி ப்ரம்மோத்ஸவம் 4ம் நாள்
    இந்த சாவடியில் எழுந்தருளுகிறார்.

    • திருக்கூடல் மலை ஸ்ரீநவநீதப்பெருமாள் சுவாமி ஆடிமாதத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் காட்சி தருவாராம்

    • வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் தைமாதம் 9ம் திருவிழா திருத்தேர் உற்வசத்தன்று இரவு இந்த சாவடியில் தங்கி நாடகம் பார்த்து மறுநாள் மஞ்சள் நீராட்டு நடை பெறுவது சிறப்பாகும். திருவிழா சமயம் சாமி வந்து இறங்கி மக்களுக்குக் காட்சி கொடுக்கும் போது இரவு வள்ளி திருமணம் நாடகம் முன்பு நடக்குமாம்.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  2. நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கு சந்தன சாற்றுப்படி நடக்கும். இந்த கருப்பசாமியின் சிறப்பு என்று சொல்வதெனில் வாயுக்குத்து வந்து மிகவும் கஷ்டப்படுபவர்கள் "நாச்சிமுத்துக் கருப்பா மூச்சுக்குத்தை வாங்குப்பா"
    என்று மூன்று தடவை கூறி வழிபட்டால் மூச்சுக்குத்து நீங்குவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

    அன்புடன்

    ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
    E.P.I. இராம சுப்பிரமணியன்

    ReplyDelete
  3. அருமையான விவரங்கள், அழகான படங்கள்.
    நன்றி சுட்டி கொடுத்தமைக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)