கோதையின் கீதை (பகுதி - 1)








"மாயோன் மேய காடுறை உலகம்' என சங்க காலத்தில் சிறப்புற்று இருந்த திருமால் நெறியான  மாயோன் மதம் இடைப்பட்ட 'களப்பிரர்' காலத்தில் வலுவிழந்தது.
எதிர்த்து வந்த புறச்சமய இடையூறுகளைத் தகர்த்து 'அன்பு நெறி'யாம் அருள்தரும் திருமால் நெறி கி.பி.6,7,8ம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களால் உயர்த்திப் பிடித்து அன்பு நெறியாக வளர்க்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் மதமாக வளர்ந்தது விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வணங்கிய வைணவம். அன்றைய சமூகத்தில் 'தீண்டாமை' அதிக துன்பத்தைச் சாதாரண மனிதனுக்குக் கொடுத்தது. அவைகளை நீக்க ஓர் அருளாளர் உதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்நேரத்தில் (கி.பி.1017ல்) விடிவெள்ளியாக உதித்தார் புரட்சித் துறவி ராமானுஜர்.
தொடக்கத்தில் ஆதிசேஷனாகவும் பின்னர் ராமாவதாரத்தில் இலக்குவனாகவும் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் இருந்து இறுதியில் கலியுகத்தில் மக்களை உய்விக்க வந்த மகானாக - ராமானுஜர் தோன்றினார்.
வைணவ நெறியை மக்கள் நெறியாக்கிய வித்தகர். சேரியில் வாழ்ந்த மனிதர்களை திருக்குலத்தார் ஆக்கி தெய்வத்தை வழிபட வைத்தவர். இனம் குலம் மொழி வேற்றுமை இல்லாத அன்பு நெறியை வளர்த்தவர்.
ஆச்சாரம் ஒன்றே வாழ்வின் நெறியாகக் கொண்ட மனைவியைத் துறந்து     எம்பெருமானின் அடியவருக்காக, குடும்ப வாழ்க்கையை விட்டு, ஸ்ரீ வைணவத்தையும் அதன் கோட்பாடுகளையும் நிர்ணயித்து நிறுவி வளர்த்தவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமையாஜி பட்டர், காந்திமதி அம்மையார் இவர்களின் திருமகனாக "இளையாழ்வார்' என்றழைக்கப்பட்டார்
ராமானுஜர்.  மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரம் செய்யும்போது "ராமானுஜன்' என்ற பெயர் குருவான பெரிய நம்பியால் சூட்டி அருளப்பட்டது. "எதிராஜர்' என்ற திருநாமம் கச்சிப் பேரருளாளனாலும் "உடையவர்' என்ற பெயர் திருவரங்கத்து நம்பெருமாளாலும் "தேசிகேந்திரன்' என்ற திருப்பெயர்  திருமலை வேங்கடேசப் பெருமாளாலும். "ஸ்ரீ பாஷ்யகாரர்' என்று காஷ்மீரத்து சாரதா பீட சரஸ்வதியாலும், பெரிய நம்பிகளால்  "திருப்பாவை ஜீயர்' எனவும், திருக்கோஷ்டியூர் நம்பிகளால் "எம்பெருமானார்' எனவும் அழைக்கப்பட்டார். ஆண்டாள்  நம் "கோவிலண்ணன்' எனவும் திருமாலையாண்டான் "சடகோபன் பொன்னடி' எனவும் திருவரங்கப்பெருமாளரையர் "லட்சுமண முனி' எனவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துள்ளனர்.


             இந்த பன்னிரு திருநாமங்களில் இராமானுஜருக்கு பிடித்த திருநாமம்
 | "திருப்பாவை ஜீயர்" | என்பதே ஆகும்.
ஒரு நாள் இராமாநுஜர் “உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் தனது ஆச்சார்யரான பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரே சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர். இதனால் இராமானுஜருக்கு திருப்பாவையில் மிக அதிகமான ஈடுபாடு உள்ளதை அறிந்த பெரியநம்பி ஸ்வாமிகள் இராமாநுஜர்க்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பெயரிட்டார். இந்த பெயரையே இராமாநுஜரும் விரும்பினார். 

அத்தகைய திருப்பாவை ஜீயர் பகவத் இராமாநுஜரைத் தொழுது, வேதமனைத்துக்கும் வித்தாகும் திருப்பாவை பாசுரங்களை இனிதே அனுபவிப்போம்! வாருங்கள்! அன்பர்களே!



         ||: குரு வணக்கம் :||

• எம்பெருமானின் திருக்குணங்களின் அடைவே அனுபவித்த நம்மாழ்வாரின் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழியானது, பெருஞ்செல்வமாகவும், தந்தை, தாயாகவும், உயர்ந்த குருவாகவும், மணம் மிகுந்த பூவில் வாழும் திருமகளுக்கு நாதனான திருமாலாகவும் கொண்டாடும்  இராமாநுசர் அடியேனுக்கு அருமையான  ஞானஅமுதமாகிறார். அத்தகைய லோக குருவான "திருப்பாவை ஜீயர்" ஸ்ரீஇராமாநுசர் திருவடிகளைத் தொழுது வணங்கி, லோகமாதா ஸ்ரீஆண்டாள் கோதையின் கீதையாகிய திருப்பாவை என்னும் ஞானத்தமிழின் புகழினை அடியவர்களோடு கூடியிருந்து  அடியேனும் வணங்கிப் போற்றுகிறேன்.

          ||தொடக்கவுரை||

                "கோதையின் கீதை" எனும் இக்கட்டுரையானது,  அடியவர்கள் நெஞ்சங்களில் பதிந்து, நீங்காத செல்வமான நீள்வைகுந்தக் கைங்கர்யம் பெறும் பாக்கியத்தினை அவர்கள் அடைந்தால், அடியேனின்  பிறவியுற்ற பயனை  பெரிதும் உகப்புற்று மகிழ்வேன்.

வைணவ சமய தத்துவத்தின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்; அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே (புருஷோத்தமன்) ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷ்ணப் பிரேமை.
இந்தத் தேஹம் அழிந்தால் ஆத்மாவிற்கு பிராட்டிமார்களுடன் ஒப்புமை உண்டு என்பது ஸ்ரீவசனபூஷண திவ்யஸாஸ்த்ரத்தால் அறியப்படுவதாகும். "கந்தல் கிழிந்தால் ஸர்வருக்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை வரக்கடவதாய் இருக்கும்" என்று 239ம் சூர்ணிகையில் ஸ்ரீவசணபூஷண திவ்யஸாஸ்திரம் கூறுகிறது.
 பராங்குச நாயகி,பரகாலநாயகி என்றும் ஆழ்வார்கள் 'நாயகி பாவம்' அடைந்ததும் ப்ரசித்தம். 'பக்தி' என்ற தத்துவத்தை பெண்ணாகவே முற்றோதிய ஞானிகளும் இதனை அறிவர்.

'பக்தி' என்றால் என்ன?

இந்த பிரபஞ்சம் விஞ்ஞானிகளாலும், ஆன்மிக நெறியாளர்களாலும் அளவிட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. அதில் எது முடிவு என்று நினைக்கிறீர்களோ, அங்கு தான் புதிய ஆரம்பம் இருக்கிறது. திசை, தூரம், காலம் மற்றும்  பொருள் என்பதெல்லாம் இங்கு வெறும் அற்பமான விஷயம். நாம் இருப்பது (Solar system) சூரிய குடும்பத்தில். இது போன்று கோடிக்கணக்கான சூரிய குடும்பங்களால் ஆனது நம் (Milky way) பால் வீதி.
இது போன்று எண்ணிலடங்கா பால் மண்டலத்தைக் கொண்டது பெரிய (universal space) அண்டவெளி. ஒளி வேகத்தில் சென்றாலே பால்மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைவதே மிகக்கடினம். இதற்கு நம் சராசரி ( ? ) ஆயுளான 100 ஆண்டுகள் போதவே போதாது. அப்பாலுக்கு அப்பால் அதற்கும் மேல் இருப்பது என்னவென்று விஞ்ஞானிகள் தொலைநோக்கியில் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்நிலையில் பாரத தேசத்து மெஞ்ஞானிகள் திகைத்து அந்த எல்லையற்ற சக்தியை இறைவன் (பகவான்) என்று கொண்டாடினர். இந்த பிரபஞ்சத்தில் நாம் கற்றது கைம்மண் அளவே தான்.  இந்த உலகம் எந்த பாதிப்பும் இன்றி அதன் பயணத்தை தொடர  எங்கோ ஓர் இயற்கை கட்டளை மறைந்துள்ளது.
அதை உணர நாம் முற்படும் போது அந்த இயற்கை முன் நாம் சிறு துரும்பாக நிற்கிறோம். இந்த இயற்கையை படைத்தவரை எண்ணிப் பார்க்கும் போது மனதில் ஓர் பக்தி ஏற்படுகிறது. ஆம்! மாற்றத்தையே மாறாததாக கொண்டுள்ள இந்த உலகில் மாறாதது பக்தி மட்டுமே.

'பக்தி' என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதையின்மை. எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான். பக்தியில் 'ஒன்பது வகைகள்' உள்ளன. அவற்றை விளக்கும் வடமொழிப் பாடல் கீழே பின்வருமாறு:-
"ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணு:
ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சாக்கியம் ஆத்ம நிவேதனம்.”
[ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.]

       விஞ்ஞானத்தின் எல்லா சாதனைகளும் ஆராய்ச்சியின் முடிவில்,  மனித வாழ்க்கையை மேலும் சிக்கலுடையதாகவும், படோடபமுடையதாகவும் செய்கின்றன. மனிதனுடைய உண்மையான மனஅமைதிக்காக அது எந்த உதவியும் செய்யவில்லை. அதே வேளையில் மன அமைதிக்காக பாரத தேசத்து மெஞ்ஞானிகள் ஆன்ம ஞானத்தை பக்தியின் வாயிலாக தேடினர். இதன் மூலம் எல்லையற்ற இறைவனை (பரமாத்மா) அறிந்து ஆனந்தமடைந்தனர்.
உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி.
ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் எதேனும் ஒன்றின் மூலம் அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிது. 'மாமேகம் சரணம் வ்ரஜ' என்று கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார். நானே அனைத்தும் என்று உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்படாதே! என்கிறார்.
ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற‌ 'வழிகாட்டி' அவசியம். அவரால் தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும்.
ஆன்மநெறிக்காக 'கர்மா' என்கிற கட்டமைப்பிருக்க சமீப காலமாக 'பரிகார ஆன்மிகம்' என்ற சனாதன தர்ம விரோதமான ஒன்றை 'ஜ்யோதிஷ ஆஷாட பூதிகள்' (போலி ஜோதிடர்கள்) அற்ப பணத்திற்காக எளிய சாதாரண பக்தர்களை குழப்பி வருகின்றனர்.  தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது. பிறப்பிலா பெருநிலை என்பது, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம், தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன் குரு மற்றும் ஆன்மவியல் சாத்திரங்களின் துணையுடன் ஆத்மாவை அறிந்து, பரமாத்மாவை சரண்புகுந்தால் மன அமைதி பெற்று மரணமிலாப் பெருவாழ்வு (மோட்சம்) நிலைக்கு வழி வகுக்கும்.
 • ஆனால் தற்போது ஆன்மிகத்தை மன அமைதிக்கும் செயலாக்கத்திற்கும் நாடுவதற்குப் பதிலாக வெற்றிக்கான குறுக்கு வழியாகக் கருதும் 'ஜ்யோதிஷ பற்றாளர்கள்' (Astro mania) அதிகம் பெருகியதால் பக்தியை நுகர்பொருளாக்கும் (Consumer product) ஆன்மிக கார்ப்பரேட் சாமியார்களாகிய வியாபாரிகளும் பெருகியுள்ளார்கள்.  இதனால்  'நல்லதொரு ஆச்சார்யன்' எனும் வழிகாட்டி கிடைப்பது தற் காலத்தில் அரிதாக உள்ளது.

                            ஸ்ரீவைகுந்த நிகேதநனான ஸ்ரீமந்நாராயணன் (சர்வேஸ்வரன்) நித்ய சம்சாரிகளான 'பரிகார பக்தர்களான' இந்த சேதனர்கள் போன்றோர்கள் மீது இரக்கம் பிறந்து, ஸ்ரீவைகுந்த நித்ய கைங்கர்ய பரர்களான நித்ய முக்தரோடே கூடி  அவனை அனுபவிக்கிற பேற்றை பெறுவதற்காக மட்டுமே, அவர்கட்கு கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தருளியுள்ளான்.
அவர்கள் அக்கரணகளேபரங்களைக் கொண்டு அவனுடைய திவ்யச் சரிதைகளைப் பேசி வாய் வெருவவும், கைகளாரத் தொழவும், திவ்ய தேசங்களை நாடி நடக்கவும் வேண்டும்.
ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்து ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடி 'உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல்' உலகியல் ஆசைகளில் பற்றறுத்து,
 எவ்வித பலனும் கருதாமல், தங்களை உடல்,மன அளவிலும், மற்றும் ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடம் ஒப்புவிக்க வேண்டும்.

உலகியல் விஷயாந்தரங்களைக் கண்ட கண்களையும், பேசிய வாயையும் சுத்தி பண்ணும் பொருட்டு, ஸமஸ்த கல்யாண குணனான எம்பெருமானை, ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சார்யர்கள்   வாயாரப்பாடி மனதாரச் சிந்திந்து வாழ்ந்து நமக்கு வழிகாட்டினர்.  அவ்வழிமுறைப்படியே 'திருப்பாவை' மூலம் பிராட்டியான ஆண்டாள் நாம் உய்வடைய எளிமையாக உபதேசித்து நமக்கு வழிகாட்டுகிறாள். அதனைப் பின்பற்றி நாம் எங்கும் "திருவருள்" பெற்று இன்புறுவோம்.




  ||:கோதையின் கீதை:||

• பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் போர் உண்டாக்குவதையே குறிக்கோளாக கொண்டு, குருஷேத்திரத்தில் தோன்றியது ஸ்ரீகண்ணனின் பகவத் கீதை.

• திருவரங்க அழகியமணவாளனின் கைத்தலம் பற்றுவதையே குறிக்கோளாக கொண்டு வராகஷேத்திரத்தில் தோன்றியது ஸ்ரீகோதை ஆண்டாளின் திருப்பாவையான பகவதி கீதை.

            மகாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42ம் அத்தியாயங்கள் வரையுள்ள  (18 அத்தியாயம் - 700ஸ்லோகங்கள்) பகுதி ஸ்ரீமத் பகவத் கீதை ஆகும். இதில் பகவான் கண்ணனால் உபதேசிக்கப்பட்டது 574 ஸ்லோகங்கள் ஆகும்.
கீதை போர்க்களத்தில் உபதேசிக்ப்பட்டது. போர்க்களத்தை விட பரபரப்பான ஆரவாரமான, மரணத்தின் நிழல் படிந்த சூழ்நிலை இருக்கமுடியாது. வாழ்க்கை பொருளற்றது, பயனற்றது, விலகி ஓட வேண்டும் என்பது போன்ற எதிர்மறைக்கருத்துக்கள் பகவத் கீதையில் இல்லை. அதே வேளையில் துன்பங்களை மறைத்து 'எல்லாம் இன்ப மயம்' என்று காட்டுகிற அணுகுமுறையும் இல்லை. உலகம் துன்பம் நிறைந்தது என்று பகவான் கண்ணன் பலஇடங்களில் எடுத்துக் காட்டவே செய்கிறார். இன்ப துன்பங்களை சமநிலை கொள்ள (ஸ்திதப் ப்ரக்ஞ நிலை) மரணமில்லா பெருவாழ்வைத் தரும் என்கிறது பகவத் கீதை.
                   பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் கோதையின் கீதையாகிய திருப்பாவையானது  30 பாசுரங்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 முதல்  503 வரையுள்ள  30 பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். திருப்பாவையின் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை உபதேசமாக கூறியவாறு  'கோதையின் கீதை' என்ற சொற்றொடரை உறுதி செய்தவாறு விளங்குகிறது. பகவத் கீதையில்  பகவான் கண்ணன் சரமச்லோகமாக இறுதியில் கூறியதை பகவதி ஆண்டாள் திருப்பாவை முதல் பாசுரத்திலேயே 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று ரகசியத்தை அடியவர்களுக்கு உபதேசித்து விடுகிறாள்.
    நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

• 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்')
• 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். ('வ்ரஜன் சிந்தய கேசவம்')
• 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்')
• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும். ('ஸ்வபன் சிந்தய மாதவம்') .

இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தய காலத்தில் தவறாமல் செய்துவந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை  (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.
1. துயில்  எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு ''முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ'' (பாசுரம் - 6) என்கிறார்.
2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலோ நீராடி வந்துவிட்டார்கள். தற்சமயம் தயிர்கடைந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேசவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?
"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?" (பாசுரம் - 7)
3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள். (பாசுரம் - 27)
4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.
(பாசுரம் - 9)

 மனிதன் தினசரி தவறாமல் செய்யவேண்டிய செயல்களை, கோதை நாச்சியார் தனது திருப்பாவை பாசுரங்களில்,
மேற்க்கண்டவாறு
சுட்டிக் காட்டியுள்ளதை வைணவப் பெரியோர்கள் நமக்கு  உணர்த்துகின்றனர்.
•  ஆக இவ்வாறு 'ஸ்ரீமத் பகவத் கீதை' சாஸ்திரத்திற்கு இணையான பெருமை இந்த பகவதி கீதைக்கும் உண்டென்பதை இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் நாம் உணரலாம்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு என்று  வேதப்பிரான் பட்டர் ஸ்வாமிகள் என்னும் வைணவ ஆச்சார்யர்
அருளுகிறார்.
எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை 'பூமிக்கு பாரம்' என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும்போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரே ஆவார். கோதை ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் 'பூமிக்கு பாரம்' என்று கணக்கிட்டுள்ளார். நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். ஆகவே கோதையின் கீதையை பின்பற்றிச் செல்லுவோம். முதலில் கோதையின்  திருப்பாவை பாடப்பட்ட 'மார்கழி' மாதத்தின் சிறப்பை அறிவோம்.

              •  மார்கழி மாதத்தின் சிறப்பு:-
     முழுமுதற்கடவுளாகிய ஸ்ரீமந் நாராயணனின்
பன்னிரெண்டு திருநாமங்களான, கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா ஆகிய திருநாமங்கள் பன்னிரெண்டு மாதங்களுக்கு உகந்ததாக வைணவ சமயத்தினரால்  கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் 'கேசவா' என்னும் திருநாமம் மாதங்களில்  சிறந்ததான "மார்கழி" மாதத்திற்கானதாக விளங்குகிறது.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.


ஆன்மிக மார்க்கத்திற்குச் செல்வதற்கான தலையாய மாதமாகக் கருதப்படும் இம் மார்கழி மாதத்தை வடமொழியில் ''மார்க சீர்ஷம்'' என்பர். அதுவே நாளடைவில் மருவி 'மார்கழி' என்றானது என்றும் கூறப்படுகிறது. ஜோதிஷ சாஸ்திர வல்லுநர்கள் மார்கழி மாதத்தை (சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால்) தனூர் மாதம் என்று கூறுகின்றனர். [மார்கழியில் மனிதர்கள் தலையையும், காலையும் வளைத்து தனுசு (வில்) போல படுத்துறங்குவர். அதனாலேயே மார்கழி மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்பட்டது]
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனுர் இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தை "பீடுடை மாதம்" என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து 'பீடைமாதம்' என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள்.

बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

• ¶ மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
[ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் - 10; ஸ்லோகம் - 35]
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இந்த மார்கழி மாதம் ஆன்மிக நெறியினரால் தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பர்.
மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். [சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் 'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது ஆகும்.]
  தூங்கி எழும்போது இறைவனின் நினைவோடு எழ வேண்டும் என்பது மரபு. "உத்திஷ்ட சிந்திய ஹரிம்"என்று ஒரு வாக்கு உள்ளது. மனிதனின் ஒரு நாள் துவக்கம் இறை சிந்தனையோடு துவங்கினால் அந்த நாள் முழுவதும் பயனுள்ளதாக அமையும்.
தேவர்களின் ஒரு நாளின் துவக்கம் மார்கழி மாதத்தில் அமைவதால் அந்த நேரத்தில் தேவதா சிந்தனையுடன் மனிதனும் தன் வாழ்நாளில் நாளினை துவக்க வேண்டும் என்று விதித்துள்ளனர். ஆகையினால்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்பதின் நோக்கம், அந்த மாதம் முழுதும் என் நினைவாக இருந்து உனது செயலை துவக்கினால்  எடுத்துக்கொண்ட செயல் யாவிலும் என் அருளால் வெற்றி பெற்று பயனுருவாய் என்று அருள்கின்றார்.
இம்மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணப்பூக்கோலம் இட்டு,  திருமாலாகிய இறைவன் ஒருவனையே சிந்தனை செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.


ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் தான் காணப்படுகிறது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுவர்.
சங்க காலந்தொட்டே தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியும் முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனாலேயே இந்த மாதத்தை 'நோன்பு மாதம்' என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்ல கணவனைப் பெறுவார்கள். ஆகவேதான் சைவ, வைணவ சமயத்தினர்கள் இந்த மார்கழி மாதத்தினை சிறப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர். வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள் இறைவனையே மணாளனாக அடைவதற்காக மார்கழி நோன்பிருந்து  "திருப்பாவை" பாடி நமக்காக அளித்துள்ளார்.
அந்த ஆண்டாளின் வைபவத்தை இனி அறிந்து கொள்வோம்.

திருப்பாவை ஜீயர் எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post பார்ப்போம்.

அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Comments

  1. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் நிகழ்ந்த சில புராண நிகழ்வுகளை இங்கு காண்போம்
    • மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
    • திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.
    • இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.
    திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

    திருவாதிரைக் கொண்டே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது.
    வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

    பெரும்பாலும் எல்லா இந்து மக்களாலும் இத்தினத்தில் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)