புதுமண்டபம் பழைய வரலாறு (பகுதி - 2)




                                • கி.பி.1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற்ற பின் பல அரசியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டன. அதனைத்தொடர்ந்து கி.பி.1801ல் பிரிட்டிஷாரின் ஆளுமையின் கீழ் மதுரை சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.

ஆடித் திருவிழா, வைகாசித் திருவிழா, எண்ணெய்க் காப்புத் திருவிழா எனப் பல திருவிழாக்கள் நடைபெற்ற புதுமண்டபத்தில்
கி.பி.1920-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு கடையாக வந்தன. தற்போது, சுமார் 250 - 300 கடைகள் இங்கே இருக்கின்றன.
ஒரு காலத்துல புத்தகக்கடைகள் எல்லாம் புதுமண்டபத்துல தான் இருந்தது. கி.பி.19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி கி.பி.1940கள் வரைக்கும் மிக அரிய நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் எல்லாம் அங்கே கடைகளை வைத்திருந்தார்கள். அன்றைக்கு பல கோயில்களின் தலபுராணங்கள், தமிழ் இலக்கியம், இலக்கணம், நாட்டார் கதைப்பாடல்கள் மற்றும் தத்துவ நூல்களை வெளியிட்டவர்கள் இன்றும் கடைகளை வைத்திருந்தார்கள்.







• ¶|| "பு து  ம ண் ட ப ம்" ||¶ காணொளி
••• Puthumandapam video
YouTube Link:-
https://m.youtube.com/watch?v=Te7qwCMmIW0

• புது மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், உட்பகுதிகளில் ஆடைகள் தைக்கும் தையற்கலைஞர்கள் கடைகளும் இருந்தன.
 நோட்டு, புத்தகம், வெள்ளி, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் கடைகளுக்கும், நாட்டார் தெய்வ விழாக்களுக்குத் தேவையான பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுச்சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் செல்ல வேண்டும். இன்னொரு கடையில் டர்பன், ஜரிகைத் துண்டுகள், டர்பன்கள், செம்மர
மரப்பாச்சி பொம்மைகள், மற்றும் சாமி பொம்மைகள் ( குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைனா, இந்தப் பொம்மையைப் பால்விட்டு உரசி, தலையில் தேய்ப்பாங்க. உடம்பு சரியாயிரும்.) எல்லாம் புதுமண்டபத்தில் இருந்தன. சித்திரைத் திருவிழாவில் அழகருக்குத் திரியெடுப்பவர்கள், துருத்தி நீர்பீச்சுபவர்கள், சாமியாடுபவர்களுக்குத் தேவையான திரி, உடை, நாங்குலி கம்பு எல்லாம் புதுமண்டபத்தில் தான் கிடைக்கும்.  இன்னொரு பக்கத்துல கோயிலுக்கு பயன்படுற பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், மஞ்சள்-குங்குமம் போன்ற விசயங்கள் அங்க கிடைக்கும்.  வெளிநாட்டிலிருந்து வருகிற பயணிகள் மதுரையில் புதுமண்டபத்தில்  கிடைக்கக்கூடிய பருத்தி துணிகளை வாங்கி உடனே தைத்து போட்டுக் கொள்வதற்கான வசதி புது மண்டப தையற்கலைஞர்கள் மூலம் கிடைத்ததால், வெளிநாட்டுச்  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாவும் அமைந்தது.
 (இந்து சமய சின்னமான ॐ ('ஓம்') மற்றும் இறைவனின் பாதங்கள் உள்ள காவித்துணிகள்  அதிகமாக வாங்கப்பட்டன.)

                     •  கலைக்கூடமான புதுமண்டபத்தில் உள்ள கடைகள் மதுரை வட்டார மக்களின் புழங்கு பொருள் பண்பாட்டின் கூடமாகத் திகழ்கிறது என்றபோதிலும், இந்த கலைக்கூடாரம் இன்று கடைத்தெருவாக மாறிப்போயிருக்கிறது. பாதுகாப்பின்றி பல அற்புத பழமைச் சிற்பங்களின் பாகங்கள் உடைந்து இந்த பொக்கிஷம் பரிதாப நிலைக்குப் போயிருக்கிறது. மதுரையின் 369 ஆண்டு பழமைமிக்க கலைப்பொக்கிஷமான புதுமண்டபத்தை, அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை 'கலை ஆர்வலர்கள்'  எழுப்பத் தொடங்கினர்.
வயிற்றிற்கு உணவில்லாத உயிரோவிங்களாக. தெருக்களில் பிச்சை எடுக்கும் மானிடர்களைப் பாதுகாக்க எந்த  ஆர்வலர்களும் வரக்காணாது ஈசனும் பிட்சாடனராய் நிற்கிறானோ…?
• புதுமண்டபத்தின் கலை எழிலை காப்பதற்கு, இந்தக் கடைகளை அகற்றி, மாற்று இடத்தில் குடியேற்றும் வகையில் கி.பி.1990ம் ஆண்டுகளில் மதுரையின் எழுகடல் வீதியில் மாடிக் கடைகளை மதுரை மாநகராட்சி கட்டி வழங்கியது. ஆனால் சில காரணங்களால், இக்கட்டிடத்திற்கு குடியேற புதுமண்டப கடைக்காரர்கள் மறுத்ததால் எழுகடல் தெருக் கடைகள் பிறருக்கு வாடகைக்கு விடப்பட்டன.
• இதன் பிறகு மதுரையின் பழமைப் பொக்கிஷமான புதுமண்டபத்தை கடைக்காரர்களிடமிருந்து மீட்கும் வகையில் கி.பி.2010 ம் ஆண்டு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டது. ஐந்தாண்டு முன்பு புதுமண்டபம் அருகாமை குன்னத்தூர் சத்திரத்தை இடித்து அகற்றி பார்க்கிங் வசதியுடன் 3 மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கென நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு பணிகளும் துவங்கின.
மண்டபத்திற்குள் உள்ள கடைகளை அகற்றி, இந்த குன்னத்தூர் சத்திர புதிய வணிக வளாகத்திற்கு கொண்டு வரவும், புதுமண்டபத்தை புதுப்பித்து இம்மண்டபத்தில் மீனாட்சியம்மன் கோயில் குறித்த ஒலி-ஒளிக்காட்சி நடத்தவும் முடிவானது. ஆனால் குன்னத்தூர் சத்திர புதிய வணிக வளாகக் கட்டுமானப் பணி வளர்ச்சியடையாமல் அப்படியே கிடக்கிறது.
• யார் கண் பட்டதோ தெரியவில்லை?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  பிப்ரவரி 02,  2018 அன்று இரவு சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள கடைகளில் திடீரென 'தீ விபத்து' ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குள்ள கடைகள் எரிந்து நாசமாயின.
மேலும் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. (ஆனால் அந்த மண்டபத்தின் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.)



 ஐந்துக்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தது.
இந்த பயங்கர தீ விபத்துக்கு "அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள்" என்று காரணம்  கூறி சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது.
ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்தை அடுத்து புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.


இதை எதிர்த்து புதுமண்டபத்திலுள்ள கடைகளை திறக்கவும் மாற்றிடம் வழங்கும் வரை கடைகளை காலி செய்வதற்கு தடைவிதித்தும் உத்தரவிடக் கோரி வியாபாரிகள் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யவும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். புதுமண்டபத்திலிருந்த
 150 புத்தகக்கடை, 150 பாத்திரக்கடைக்காரர்கள், 100க்கும் மேற்ப்பட்ட தையல் கலைஞர்கள், கடைகளை காலி செய்யும் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 'சிதம்பரம்' என்பவர் (புது மண்டபம் வாசல் முன் அமர்ந்து தையல் தொழிலை மேற்கொண்டவர்)
மன உளைச்சலுடன் வீட்டிற்கு சென்றபோது மாரடைப்பால் பிப்ரவரி 17,  2018. இறந்த
 சோகமும் நடந்தேறியது.
• சுமார் 300 கடைகளில் 250 கடை வியாபாரிகள்  சில மாதங்களாக வாழ்வாதாரத்திற்கு வழியின்றித் தவித்ததற்கு ஒரு நல்ல
தீர்வாக புதுமண்டபம் பகுதியில் இயங்கி வந்த கடைகள்  அனைத்தும்  ' 2018 ஜூலை 17 'அன்று திறக்கப்பட்டன.
மீனாட்சி கோவிலுக்குள் செயல்பட்டு வந்த 51 கடைகள் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு திறக்கப்பட்டதையடுத்து, புதுமண்டபம் கடை வியாபாரிகளும்
ஐந்து மாதங்களாக நீடித்து வந்த தடை நீங்கி மிகவும் மகிழ்ச்சியோடு மீண்டும் கடைகளைத் (மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட புதுமண்டபமாகவே) திறந்தனர்.
• நீதிமன்றம் 2018 டிசம்பர் 31ம் தேதி இங்கு கடை நடத்த கெடு விதித்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கித் தருவதற்கான செயல்பாடுகளைத் துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என இதுகுறித்து
புதுமண்டப வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் 'திரு.முத்துப்பாண்டியன்' அவர்கள் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

• ஆன்மிகத்தை மன அமைதிக்கும் செயலாக்கத்திற்கும் நாடுவதற்குப் பதிலாக வெற்றிக்கான குறுக்கு வழியாகக் கருதும் 'ஜ்யோதிஷ பற்றாளர்கள்' (Astro mania)அதிகம் பெருகிய நிலையில் பக்தியை நுகர்பொருளாக்கும் (Consumer product) ஆன்மிக கார்ப்பரேட் சாமியார்களாகிய வியாபாரிகளும் பெருகியுள்ளார்கள். அந்த ஆன்மிக வியாபாரிகளுக்கு இது போல தடை ஏதும் ஏற்படாதது ஏன்? என பொதுவுடமைச் சிந்தனையுள்ள எனது மூளை சற்றே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நொடியில்,  "ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்று வளையல் விற்ற லீலையாம்..." யாரோ ஒருவர் கீழச் சித்திரை வீதியில் கிழக்கு ராஜ கோபுரம் வாசலில், என் செவியருகே பேசிக்கொண்டு
சென்றனர்.
• ஆலவாய் நகரிலும் "கார்ப்பரேட் கருநாகம்" புகுந்து சிறு,குறு தொழிலை நசுக்கத் தொடங்கிய இன்றைய டிஜிட்டல் அவலநிலையில் "சுருக்குப்பை" வாங்க புதுமண்டபத்தை தேடி அலைந்த "மீனாட்சி கிழவி" ஒருத்தியையும் அப்போது கண்டேன்.
• வசந்த மண்டபமாகிய புதுமண்டபத்தில்
மலிவு விலை "ஷாப்பிங் மால்"  தொடரத்தான் போகிறதா? என்பதை
ஆலவாய் நகரிலுள்ள
"எல்லாம் வல்ல சித்தன்" காலவெளியில் வந்து அந்த புதியகதையை யாரிடம் தான் இனி கூறுவானோ… … …?

• எல்லோரும் இன்புற்றிருக்க யாமொன்றும் அறியேன் பராபரமே!


 அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)