கோதையின் கீதை (பகுதி - 2)


தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதா முபாஸ்மஹே |
யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம்ப்ரபு: ||

(எவள் சூடிக்களைந்த மாலையை ஸர்வேஸ்வரனான ப்ரபு உகப்புடன் ஏற்றுக்கொண்டானோ அவ்விஷ்ணுவின் திவ்யமஹிஷியான அத்தகைய கோதையை முதலிலே உபாசிக்கிறோம்.)

முக்கூர் லட்க்ஷிமி நரசிம்மாச்சார்யர் எனும் ஓர் ஸ்வாமி கூறிய கதை ஒன்று அடியேனுக்கு தற்போது நினைவில் வருகிறது. ஒருமுறை பொறுமையே உருவான நம் லோகமாதா பூமிப்பிராட்டியிடம் 
 எம்பெருமான் "ஹே! பூதேவி!  நீ போய் நம் கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்தில் உள்ளவர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டாராம்.
"அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் ஸ்வாமி!" என்றாளாம் பூமாதா. அவளுக்கு முன்னதாக மஹாலக்ஷ்மி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாதா உடனே ஏற்றுக் கொண்டுவிட்டாள். அதற்கு சில காரணங்கள் உண்டு. பகவான் மகாலக்ஷ்மியிடம் கேட்ட போது, தான் ராமாவதாத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் பட்ட தொல்லைகளைக் காரணம் காட்டி பூமியில் அவதாரம் எடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டாள்.
ஆனால் லோகமாதா பூமிப்பிராட்டியோ
"நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சுகளோடு ஆனந்தமாக பகவானை வணங்கினாளாம்.

எப்போது போட்ட முடிச்சு அது?   வராஹ அவதாரத்திலே, வராஹத்தின் மூக்கின் மேலே அவள் உட்கார்ந்திருந்த போது அவன்(பகவான்) சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.
1. அவன்(பகவான்) திருவடியிலே மலரிட்டு அர்ச்சனை செய்யவேண்டும்.
2. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்.
3. அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்
என்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுக்கள்.

இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன் ஸ்வாமி! என்றாள் நம் அன்னை  பூமாதா.
"எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?" என்றார் பகவான்.
"உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்" என்று புறப்பட்டுவிட்டாள் பூமிதேவி.
வில்லிபுத்தூர் வேதியர்கோன் விஷ்ணு சித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள்.
கல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளசி வனத்திலே அவதரித்தாள் அன்னை பூதேவி. பிறக்கும்போதே மேன்மையுடைவளாய், ஸுவாசனையுடன் ஆர்பவித்தாள். அவள் ஆழ்வாரின் திருமகளாய் வளர்ந்து பகவானுக்கு இருமாலைகள்  கட்டினாள். ஒரு மாலை திருப்பாவையெனும் பாமாலை, மற்றொரு மாலை பூமாலை. ஒன்றைப் பாடிச் சமர்ப்பித்தாள். மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள்.
திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள். அவற்றில் முதல் பத்து "அவன் திருநாமத்தைச் சொல்லு என்று உணர்த்துகின்றன". இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப் பாரு " என்று சொல்கின்றன.
மூன்றாம் பத்து "அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்லுகின்றன.  ஆக வராஹமூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களைய்ப் பாடி ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.
திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யக்ஞம். ஆண்டாள் பண்ணிய வேள்வி(யாகம்) அது.



வராஹமூர்த்தியினிடத்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள். வேள்வி-யக்ஞம் செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திரசாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். 'வைஷ்ணவம் வா த்ரிபாலகம்'  என்கிறது வேதம். வைஷ்ணவம் என்கிற யக்ஞத்தில் விஷ்ணுவிற்கு ஹவிஸை சேர்க்க 3 கபாலங்கள்(பாத்ரம்) உண்டு.
ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசார்ய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
யக்ஞம் பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்கிறபடி, ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனை துதிக்கிறார் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்."ஒங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். "அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த.." என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்ரம அவதாரத்தைப் பாடுகிறாள்.
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என்று மறுபடியும். இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள். ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் செய்துக் கொண்டாள்.
ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது. வராஹ மூர்த்தி சொன்னதை  அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம். அவன் நமக்குப் பதி. நாம் அவனுக்கு பத்தினி என்கிற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாமும் அவனை அடையலாம்.!


                ||: ஆண்டாள் வைபவம் :||

ஆண்டாள் தமிழத்தில் கி.பி.8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவள் என்று வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவள் ஒருத்தியே பெண்ணாவாள்.

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து!

[அஞ்சு குடி – 1. முதல் ஆழ்வார்கள் ( பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்), 2. திருமழிசை ஆழ்வார், 3. நம்மாழ்வார், 4. குலசேகர ஆழ்வார், 5. பெரியாழ்வார் – ஆகிய
ஐந்து ஆழ்வார்களுக்கும் சந்ததியாய் அவர்களுடைய
செயலை விஞ்சும் அளவிற்கு இளமையிலிருந்தே
பக்குவமான ஆண்டாளை பக்தியுடன் எப்போது
மகிழ்ச்சியாக மனமே துதிப்பாயாக.!
*உபதேச ரத்தின மாலையில் (24) ஸ்வாமி மணவாளமாமுனிகள் இயற்றிய பாடல் இது.]


ஆண்டாளுக்குப் பின்பு அவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மற்றும்  திருமங்கையாழ்வார் ஆகிய மூவர்க்கும் கூட இவள் ஒருத்தியே சந்ததி என்று கொள்வதும் நிறைவே ஆகும்.  எவ்வாறு என்றால், எம்பெருமானுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்ற அச்சம் அனைத்து ஆழ்வார்களுக்குமே இருந்ததால், "அஞ்சுகுடி" என்றும் கருதப்பட்டனர். எனவே, ஆழ்வார்கள் (பதின்மர்) அனைவர்க்கும் ஆண்டாள் ஒருத்தியே சந்ததியாய்த் தோன்றியவள் என்ற பரமார்த்தமும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.
ஆழ்வார்கள் இயற்கையிலேயே ஆண்களாகப் பிறந்து, பெண்மையை ஏறிட்டுக்கொண்டு பேசினார்கள்.  அதாவது, எம்பெருமானிடம் கொண்ட பக்தி காதலாய் ஊற்றெடுக்க, தங்களைப் பெண்ணாய்ப் பாவித்து (நாயகி பாவம்) அவனிடம் மோகித்தார்கள்.  ஆண்டாளோ அப்படியல்லாமல் இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்ததனால், புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில் சிறந்த உரிமை உடையவளானது பற்றி, "ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்" என்று அருளிச்செய்துள்ளார் மாமுனிகள்.   இவள் பருவம் நிரம்புவதற்கு முன்னமேயே "வானிடை வாழும் அவ்வானவர்க்கு  (நாச்சியார் திருமொழி, 1.5) என்பது முதலான பாசுரங்களில் தானே பணித்தபடி பகவத் விஷயங்களில் அன்பு அதிகரிக்கப் பெற்றவளாதலால், "பிஞ்சாய்ப் பழுத்தாள்" எனப்பட்டாள்.

இறைவன் மீது இவள் கொண்டிருந்த தெய்வீக காதலை விளக்கும் வித்தியாசமான இவளது வரலாறு பற்றி ஸ்ரீவைஷ்ணவ சமய குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன.

                           பகவான் ஐந்து நிலைகளில் வியாபிக்கிறான் என்பது வைஷ்ணவ மரபு.  அதாவது, (*1) பரவாசுதேவனாய் [பரம்] ஸ்ரீவைகுண்டத்திலும் , (*2) வியூஹ வாசுதேவனாய் [வ்யூஹம்] திருப்பாற்கடலிலும்,
  (*3) இராம, கிருஷ்ண அவதாரங்கள் எடுத்ததன் மூலம் [விபவம்] விபவ வாசுதேவனாயும்,
(*4) அனைத்து திருப்பதிகளில் [அர்ச்சை] அர்ச்சாமூர்த்தியாகவும், (*5) அனைத்துக்கும் மேலாக "அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:" என்று வேதம் உரைத்ததன்படி அனைத்திற்குள்ளும்,  [அந்தர்யாமி] உள்ளுறைபவனாக இருக்கிறான்.  இந்த ஐந்து நிலைகளில்  எளிதில் பெருமானை அடையும் வழி எது?  என்று கேட்டால், பலபல திவ்யதேசங்களில் அர்ச்சாமூர்த்தியாய் அவன் எழுந்தருளியுள்ளானே! அதுவே ஆகும். அதாவது கைங்கர்யம் செய்வதற்குப் பர வ்யூஹ விபவங்களைக் காட்டிலும் அர்ச்சாவதாரமே எளிதென்று ஆழ்வார்களும்,ஆச்சார்யர்களும்  அருளிச்செய்துள்ளனர். அப்படிப்பட்ட பெருமைக்குரிய அர்ச்சாமூர்த்தியாய், 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அனுதினமும் புஷ்பமாலைகள் தொடுத்து அளிக்கும் கைங்கர்யம் புரிந்துவந்தார் "விஷ்ணுசித்தர்" என்ற பெயர் கொண்ட பெரியாழ்வார்.  இவரது திருக்குமாரத்தியாக அவதரித்தவளே நம் அன்னை கோதை ஆண்டாள்.

"கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியினடியில் கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல்,  பூமிப்பிராட்டியே ஆண்டாளாக அவதாரம் செய்தாள் என்கிறது வைணவ குருபரம்பரை நூல்கள்..

  கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
  சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
  நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
  வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

முன்பு திரேதா யுகத்திலே விதேஹ தேசத்தில் மிதிலை மாநகரில் ஜனகமஹாராஜன் யாகசாலை அமைத்ததன் பொருட்டு, கலப்பையைக் கொண்டு பூமியை உழுகையில் அவ்வுழுப் படைச்சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் (ஜனகன்) தன் புத்திரியாக பாவித்து, அவளுக்கு "சீதை" என்று திருநாமம் இட்டு வளர்த்து வந்தான்.  அதைப்போலவே பின்பு கலியுகத்திலே  பாண்டிய நாட்டிலே ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார், அந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு, ஒரு நந்தவனம் அமைக்கவேண்டி, களைக்கொட்டுக்கொண்டு திருநந்தவனத்தைக் கொத்துகையில், அந்நிலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியின் அம்சமான ஒரு மகள் ஆடி மாதம் பூர்வ பல்குனி நாளிலே (பூர நக்ஷத்திரத்தில்) தோன்ற, அவளை அவ்வாழ்வார் தமது மகளாகவே பாவித்து, அவளுக்குக் "கோதை" என்ற திருநாமம் சார்த்தி, வளர்க்கலானார். (கோதை என்றால் தமிழில் "மாலை' என்றும் வடமொழியில் 'வாக்கைக் கொடுப்பவள்' என்று பொருள்.)

"வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி" என்று குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி, 10.1) போற்றி உகந்தார்.  அதைப்போல், பகவான் கண்ணனாக ஆயர் (இடையர்) குலத்தில் தோன்றியதை "ஆயர் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை" என்று திருப்பாவையில் (பாசுரம் 5) கோதை நாச்சியார் போற்றி உகந்தாள்.  இப்படிப் போற்றிய ஆண்டாளை "ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" (கோதா ஸ்துதி ஸ்லோகம்-1) என்று  ஸ்வாமி வேதாந்த தேசிகர் போற்றி உகந்தார்.   இப்படி தங்கள் குலத்துக்கே ஒரு விளக்காகத் தோன்றிய கோதையை பெரியாழ்வாரும் மற்றையோரும்  கண்ணன் கதைகளையே அவளுக்குப் பாலாகவும் தேனாகவும் ஊட்டி சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்து, அவளுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து, பரமஞானத்தை போதித்தனர்.  இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவளாயும், தமிழில் நல்ல திறமை கொண்டவளாகவும் இருந்தாள். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டாள்.


தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தாள். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தாள். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூட்டப்பட்டன. இப்படிப் பல நாள்கள் கழிந்த பின் ஒருநாள் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை பெரியாழ்வார் கண்டு, ஆண்டாளை கண்டித்தார்.


அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் கோதை எம்பெருமானுக்குரிய மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டு பார்த்துப் பின்பு அவனுக்குக் கொடுத்தது காரணமாக 'சூடிக்கொடுத்த நாய்ச்சியார்'  என்றும்
 தாம் பெற்றெடுத்த பெண்பிள்ளை  எம்பெருமானுடைய தேவிகளில் ஒருத்தியின் அவதாரமே என்று அறுதியிட்டு, அவளுக்கு  அது காரணமாக "ஆண்டாள்" என்றும் திருநாமம் இட்டு பெரியாழ்வார் அழைத்து வந்தார்.

[கோதை அரங்கனையும் ஆண்டாள்!
அரங்கன் அடியவர்களையும் ஆண்டாள்!]

இவளுடைய ஞான பக்திகள் க்ஷணம் தோறும் பகவத் விஷயத்திலே கை வளர, வடபெருங் கோயிலுடையானுடன் தழுவி முழுசிப் பரிமாறவேணும் என்னும் ஆற்றாமை கரைபுரண்டது. எம்பெருமானிடம் சென்றபோது அவன் முகம் கொடாதே இருக்க,
இவளும் ஐஸ்வர்யார்த்திகளுக்காக திருஉலகளந்தருளின  களைப்பிலே சாய்ந்து கிடக்கிறான் என்று புத்தி பண்ணித்
தன் திருமுலைத் தடங்களாலே அப்பெருமானை  நெருக்கினாள். அத்தாலும் எழுந்திருந்து பதில் கூறாதிருக்க, விசிறி முதலியவைகளாலே சிசிரோபசாரம் பண்ணினாள்.
அத்தாலும் எழுந்திருக்கக் காணாமையாலே,
இது களைப்பு அல்ல, நம் பக்கல் ப்ராணய அபராதத்தாலே கிடக்கிறான் என்று நினைத்து மிகவும் தளர்ந்து, இவனை அனுபவித்தாருண்டோ?  என்று ஆராய்ந்தாள். திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகள் இவனை அனுபவித்தார்கள்.  ஆனால் அது காலாந்தரத்திலே யாகையாலே நாம் அதற்கு உதவப் பெற்றிலோம் என்று ஏங்கினாள். "இனி அவன் உலாவிப்போன அடிச்சுவடும், அவனும் பெண்களுமாய்த் திளைத்த யமுனையும், அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடந்தாகில் அவற்றைக் கண்டாகிலும் உயிர் வாழ்வோம்" என்று பார்த்து, அவ்விடங்களுக்குப் போக பலமில்லாமையாலே கலங்கினாள். ஜனகராஜன் திருமகளைப் போலே 'வில்' என்று ஒரு அவதி பெற்றிலேன். நப்பின்னைப்பிராட்டியைப்போலே 'ரிஷபங்கள்' என்ற அவதியைப் பெற்றிலேன். என் செய்வேன் என்று நிலை தடுமாறினாள். அப்போது சில பெரியார்கள்  "ராஸக்ரீடை செய்த பிறகு கிருஷ்ணனைப் பிரிந்த இடைப்பெண்கள் தங்கள் ஆற்றாமையாலே கிருஷ்ணனாகத் தங்களை பாவித்துக் கொண்டு உயிர் தரித்தார்கள். அம்மாதிரியே செய்வாயாக" என்று உரைத்தனர்.


இவளும் கிருஷ்ணரை அநுகரிப்பதைக் காட்டிலும் அவனை அநுகரித்த பெண்களை அநுகரிப்பதே நல்லது என்று நினைத்து, அவ்வநுகாரம் முற்றி, "இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய்" ஆண்டாளுக்கு உண்டாகின.
இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லிபுத்தூரே திருவாய்ப்பாடியாகவும்,வட பெருங்கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும்,
வடபெருங் கோயிலுடையானே ஸ்ரீகிருஷ்ணனாகவும், தன்னைப் பிராட்டியாகவும், தோழிமாராகவும் அநுகரித்துக் கொண்டு இடைப்பெண்கள் நோற்ற பாவை நோன்பை தான் நோற்கிறாள். திருவாய்ப்பாடியில் மழை பொழிய வேண்டுமென்று  நோன்பு நோற்கும்படி ஆயர்களால் நியமிக்கப்பெற்ற திருவாய்ப்பாடி இடைப்பெண்கள், அதை வ்யாஜ்யமாகக் கொண்டு கண்ணனைப் பெறுவதற்காக நோன்பு நோற்ற ப்ரகாரத்தை அநுகரித்து, பாதகங்கள் தீர்ப்பதாய், பரமனடி காட்டுவதாய், வேதமனைத்துக்கும் வித்தான திருப்பாவையைப் பாடியருளினாள். இவ்வநுகாரம் **'நாச்சியார் திருமொழி' என்னும் மற்றொரு ப்ரபந்தத்திலும் தொடர்கிறது. இவ்வாறு பகவதனுபவம் செய்து கொண்டு வாழ்ந்து வருகையில் இவளுக்கு விவாஹத்திற்கேற்ற பருவம் வந்ததைக்கண்டு, ஆண்டாளிடம் அது பற்றிக் கேட்கிறார்.
மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்" என்னும்படியான உறுதியுடையவளானாள். கோதை இவ்வாறு கூறுவதைக் கேட்டு மனம் வருந்திய விஷ்ணு சித்தர், ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,
தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, நடுநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.  இவற்றுள்
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் குழலழகு, வாயழகு, கண்ணழகு
ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து
அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக் காணலானாள்.  ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என
ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.
அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்
திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.
ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்ரம்(குடை),
சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்
பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயிலுடையானை வணங்கி திருவரங்கம் செல்ல அவனது அனுமதி பெற்றார். பிறகு ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட
பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” என்ற முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர்.


அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால்
சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை(ஆதிசேஷன்) மீது
கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினார்.
 "ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்" என்று தாம் பாடியது உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டு,  ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்பு போலவே செண்பகம், மல்லிகையோடு,  செங்கழுநீர், இருவாட்சி, முதலிய பல மலர்களுடன்,  ஆர்வமென்பதோர் பூவையும் இட்டுக்கொண்டு, 85 ஆண்டுகள் வாழ்ந்திருந்து கடைசியில் திருமாலிருஞ்சோலை சென்று அழகர் பொன்னடி பூண்டு, சிலகாலம் கைங்கர்யம் செய்து வாழ்ந்து பின்னர் பேரின்ப பெருவீடு எனும் பரமபதமடைந்தார். இதுவே "ஸ்ரீஆண்டாள் வைபவம்" (வரலாறு) ஆகும்.

(திருவரங்கத்துப் பெருமாளுடன் ஒன்றி ஐக்கியமான பெருமை பெற்றவர்கள் திருப்பாணாழ்வார், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் ஆகியோர் ஆவர். திருவரங்கம் கோயிலில் ஆண்டாளுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. மேல அடையவளைந்தான் திருவீதியில் "வெளி ஆண்டாள்' சந்நிதி உள்ளது.
பெரியாழ்வாருடன் ஆண்டாள் திருவரங்கம் வந்த பொழுது இங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது. ஆடி மாதம் பதினெட்டு அன்றும், பங்குனி பிரம்மோற்சவம் போதும் நம்பெருமாள் இக்கோயிலுக்கு எழுந்தருளி ஆண்டாளுடன் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடைபெறுகிறது.)

• அவள் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24. என்று  கூறுவர். ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது. (ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு.மு. இராகவையங்கார்

• சங்க காலத்து அம்பா ஆடல் :-


          தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் 'பாவைப் பாட்டு ' என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று தமிழறிஞர் திரு. மு. இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.
பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்கு முன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும்.
(இந்த பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல் என்பதாகும்.)
 “அம்பா ஆடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும் என்று இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் மேற்கண்டவாறு கூறுகிறார். அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் 'தாயின் வடிவைப் பாவையாக' அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம் என்று தமிழறிஞர் திரு.மு. இராகவையங்கார் கூறுகிறார். 
                                 பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை 'விஷ்ணு தருமோத்த புராணம்' கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும், அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம்  கூறுகிறது. 

(பஞ்சவடிவில் இராமர் இருக்கும் போது, இலக்குமணன் , இராமனுக்கு விருப்பமான பனிக்காலம் வந்ததென்றும், இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டு முழுவதும் அணி பெறுகிறதென்றும் இராமனிடம் கூறிகிறான்.
'' மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் '' என்று கண்ணன் கீதையிலும் கூறுகிறான்.)

                        இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. இந்த வடநூற் குறிப்புகள் தென்னாட்டு தொடர்பால் எழுந்தன என்று கூறலாம். சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்தது ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள
 மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர்.
                            இந்த பாவை நோன்பு சங்ககாலந் தொட்டே கடைபிடிக்கப்பட்டிருந்தாலும், அது ஆண்டாள் காலத்திற்குப் பிறகு சற்றே மாறுதல்களுடன் தொடர்ந்து  வந்திருப்பதாயும் தெரியவருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என தமிழறிஞர் திரு.மு.இராகவையங்கார்  கூறுகின்றார்.

                 
                           ||: பாவை நோன்பு :||

ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவை பாடினாள்.
ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் 'பாவை நோன்பு' என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.


ஸ்ரீ பாகவத புராணம் 10 வது ஸ்கந்தம் 22 வது அத்யாயத்தில் 'காத்யாயனீ வ்ரதம்' என்று பெயர் வழங்கிய ஒரு நோன்பைக் கண்ணனைத்  தங்களுக்குப் புருஷனாக அடைதற்பொருட்டு அறிவிலா இடைச்சிறுமியர்கள் நோற்று அவனை அடைந்தார்கள் என்பதை ஆண்டாள் தெரிந்தாள். அது வைதிக மத ஸம்மதமான நோன்பு. அதில் வழிபடு தெய்வம் 'காத்யாயனீ'  என்னும் நாமமுடைய பார்வதி தேவியாவாள். இப்பெயரின் பெருமை என்னையோவெனின், 'கதி' , 'அயன' என்னும் இரண்டு பதங்களால் மோக்ஷமார்க்கங்கள் எவையென்று  விசாரிக்கிறவர்களின் கூடஸ்தரான கத்யயனர் என்னும் ரிஷியின் குலத்தில் பிறந்தவள் காத்யாயனீ. ஆதலின் அதற்கேற்ப பகவத் ஸ்வரூபத்தை முற்றிலும் விசாரித்த பெரியாழ்வார் திருமகளாகிய இவள் மற்றொறு வழிபடு தெய்வதைக்கருதாது அந்தக் கண்ணனையே அவனை அடைவதற்கு உபாயமாய்க் கொண்டு அவனை அடைய நோற்கிறாள். ஆதலின், வைதிக மதத்தின் போக்கைப் பின்பற்றி கண்ணன் ஒருவனையே ஆறும் பயனுமாக உடைய ஆழ்வார்கள் உறுதிப்பாட்டைத் தலைக்கட்டும் வகையில் இவள் நோற்ற நோன்பும் அதன் பயனும் திருப்பாவை 30 பாக்களில் பொதிந்துள்ளன.
                ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.


[மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இன்றும் ஆண்டாளின் திருப்பாவை மட்டுமே பாடப்படும்.
கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.]
• ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன்  திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)  என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளாள். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
 • ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
• பூமிப்பிராட்டியே ஆண்டாள் என்று வேதமே வலியுறுத்துகிறது.
       " தநுர்த்தராய வித்மஹே
          ஸர்வஸித்தயை ச தீமஹி
          தந்நோ தரா ப்ரசோதயாத் "
 என்கிறது பூமாதா காயத்ரீ. தநுர் மாத வ்ரதத்தை தரித்தவள் என்கிறது.
'த்ரிகும்ஸத் தாம வ்ராஜதி' என்கிறது பூஸுக்தம். 30 இடங்களில் பூமாதா வாஸம் பண்ணுவதாக சொல்லுகிறது. (திருப்பாவை 30 பாசுரங்கள்)
• திருப்பாவை முதல் பத்தில் 'அ' என்கிற அட்சரத்தின் மகிமையும், இரண்டாம் பத்தில் 'உ' என்கிற அட்சரத்தின் பெருமையும், மூன்றாவது  பத்தில் 'ம' என்கிற அட்சரத்தின் உயர்வும் விவரிக்கின்றது. வேத சூடாமணியான ப்ரணவத்தை ( அ+ உ+ ம = ஓம்) சூடிக்கொடுத்த சுடர் கொடி கோதை விவரிக்கின்றாள்.
• ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமாளிகையிலுள்ள "கனக சமர பூபாலனம்" எனும் மஞ்சத்தில் திருப்பாவை முப்பது பாசுரங்களை நினைவூட்டும்படி 30 தங்க மாவிலைகள் உள்ளன.
• ஸ்வாமி வேதாந்த தேசிகர்  தனது 'கோதா ஸ்துதி'யை 29 ஸ்லோகங்களோடு நிறைவு செய்ததற்கு திருப்பாவை 30 பாசுரங்களாகையாலே அவ்வாறு பாடினார் என்பர்.
• பகவத்கீதை சமஸ்கிருத மொழியில் 700 ஸ்லோகங்களைக் கொண்டது. அதன் தமிழாக்கத்தைப் படித்தாலே நமக்கு சற்று தலை சுற்றும். பலமுறை படித்தால் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என புரியும். ஆனால் எளிய தமிழில் கீதையின் சாரமாக திருப்பாவை முப்பதே பாடல்களில் இருக்கிறது. கீதையின் நடை கடினமானது. பல விஷயங்களைச் சொன்ன கிருஷ்ணன், இதையெல்லாம் கடைபிடித்தால் நீ என்னை அடையலாம், என்று கடைசியில் சொன்னார். "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" ( நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) என்ற வரி இதை உறுதிப்படுத்தும். ஆனால், திருப்பாவையில் ஆண்டாள் முதல் பாடலிலேயே "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்ற வரிகளின் மூலம் அவனைச் சரணடைந்தால் அவன் தன்னையே நமக்கு தருவான் எனச் சொல்லி விட்டாள். முதல் பாடல் "மார்கழி திங்கள்" பக்தி யோகத்தையும், அடுத்த பாடலான "வையத்து வாழ்வீர்காள்" கர்ம யோகத்தையும், மூன்றாம் பாடலான "ஓங்கி உலகளந்த" ஞான யோகத்தையும் குறிப்பிடுவதாயும் சொல்லுவதுண்டு.
 எனவே, கிருஷ்ணரின் பகவத் கீதையைக் காட்டிலும் கோதை கீதையான ஆண்டாளின் திருப்பாவை மிக மிக உயர்ந்ததாகிறது.
(ஆண்டாள் "கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.)
• திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. அவள் பாடல்களில் உள்ள நுட்பமான பழக்கவழக்கங்கள், நுட்பமான இயற்கை வருணனைகள் எல்லாவற்றையும் நோக்கும்போது ஆண்டாளை ஒரு அறியாச்சிறுமியாக எண்ணுவதில் நமக்கு சிரமம் ஏற்படுகிறது.
• திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரமும் "எம்பாவாய்" என்று முடிவதால், "திரு" என்னும் அடைமொழி சேர்ந்து, "திருப்பாவை" என்று பெயர் பெற்றது. இதில் முதற்பாசுரத்தில், நாராயணன் என்று  தெரிவித்து, 30ஆம் பாசுரத்தில், வங்கக்கடல் கடைந்த மாதவனை என்று பிராட்டியோடு கூடி யுள்ள பெருமானை, "மாதவன்" என்று நிறைவு செய்துள்ளாள்.  முதற்பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறைதருவான்" என்று அறுதியிட்டபடி, 29ஆம் பாசுரத்தில் "உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று தெரிவிக்கிறார்.  இரண்டாம் பாசுரத்தில், "பரமன் அடிபாடி" என்று பெருமானின் திருவடியைப் பாடி, 29ஆம் பாசுரத்தில் "உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்கிறாள்.  மேலும், 2ஆம் பாட்டில் "பரமன் அடிபாடி" என்று ஆரம்பித்து, 30ஆம் பாட்டில் "கேசவனை" என்று திருமுடியில் முடிக்கிறாள்.  27, 28, 29ஆம் பாசுரங்களில், கோவிந்தனைப்பாடி, “உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று தெரிவித்து, திருப்பாவை பாடுவதனால் விளையும் பயன் யாது என்று கேட்டால், "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று அருளிச்செய்தாள்.  மேலும் திருப்பாவையில், பகவத் பக்தி, பாகவத பக்தி, மந்திர பக்தி, புருஷகார வைபவம் (இரட்சிக்கும் செயல்), ப்ரபத்தியின் அங்கங்கள், சரணாகதி ஆகியவற்றின் அர்த்தங்களை ஆண்டாள் நமக்குத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறாள்.  இதனாலேயே, "கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்துமான" முப்பது பாசுரங்களை அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும் என்று நம் பூருவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

          • திருப்பாவை வ்யாக்யானங்கள் :-

                             தேகத்தையே ஆத்மாவாக நினைத்திருப்பவர்களான ஸம்சாரிகளுக்கும், ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த ரிஷிகளுக்கும் மிகவும் வாசி (வித்தியாசம்) உண்டு. ஸ்வயத்னத்தால் புருஷார்த்தத்தைப் பெறவிருக்கும் ரிஷிகளுக்கும், பகவானாலே மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார்களுக்கும் நெடுவாசியுண்டு.  பகவதனுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும், பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும் நெடுவாசியுண்டு. பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும், பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும் அம்மாதிரியே நெடுவாசியுண்டு. ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றார்கள். இவள் எம்பெருமானுக்கு மயர்வற மதிநலமருளிளாள். ஸம்சாரத்தில் உறங்கிக்கிடந்த ஆழ்வார்களை ஸர்வேச்வரன் எழுப்பினான். (பள்ளியுணர்த்தும் பிரானாகிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் முதலில் நாராயணனாலே உணர்த்தப் பெற்று பிறகு அவனை உணர்த்தினார்)
"அவரைப்பிராயம் தொடங்கி  என்றும் ஆதரித்தெழுந்த என் தடமுலைகள் துவரைப்பிரானுக்கென்றே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்...." என்கிற படியே பிறந்ததிலிருந்தே  கேசவனைக் காமுற்றவளாயிருந்து அவனை எழுப்பினாள் இவள்.

            ஆழ்வார்கள் இளையபெருமாளைப் போன்றவர்கள். பெரியாழ்வார் ஸ்ரீபரதாழ்வானுக்கு ஒப்பானவர். ஆண்டாளும், மதுரகவிகளும் ஸ்ரீ சத்ருக்கனாழ்வானை ஒப்பானவர்கள். ஆழ்வார்களும், இளையபெருமாளும் பகவதனுபவத்தை ஆசைப்பட்டார்கள். பெரியாழ்வாரும் ஸ்ரீபரதாழ்வானும், பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார்கள். ஸ்ரீசத்ருக்கனாழ்வானும், ஆண்டாளும், மதுரகவியாழ்வாரும் பாகவத சேஷத்துவத்திலே நிலை நின்றவர்கள். மேலும் புருஷன் புருஷனைக் கண்டு காமுறுவதிற்காட்டில், ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேகிக்கை பள்ளமடையாகையாலே ஆழ்வார்களுடைய பக்தியைக் காட்டில் பதின்மடங்கு அதிக அன்பை உடையவளாயிருப்பாளிவள். "பதின்மருடைய ஜ்ஞானமும்  ஸ்த்ரீதனமாக இவள் பக்கலேயிறே குடிகொண்டது; பத்துபேர்க்கு ஒரு பெண்பிள்ளையிறே" என்று ஜநந்யாச்சார்யர் அருளிச்செய்தார்.

இக்காரணங்களாலே நம் ஆச்சாரியர்கள்  இத்திருப்பாவையை மிகவும் ஆதரித்து போருவார்கள். எம்பெருமானார்க்கு  இப்பிரபந்தத்தின் மேலுள்ள ப்ரேமம் அளவற்றது. திருப்பாவை ஜீயர் என்று இதையிட்டு நிருபிக்கும்படியாக விளங்கினாரன்றோ நம்மிராமாநுஜன். திருப்பாவை ஈராயிரப்படி வ்யாக்யானத்தில் அருளிச்செய்யப்பட்ட பின்வரும் ஐதீகம் இங்கு உணரத்தக்கது.  எம்பெருமானாரை 'ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்' என்ன;
திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப் பாவைக்கு ஆள் கிடையாது என்று அருளிச் செய்தார். மோவாய் எழுந்த முருடர் (மீசை முளைத்த முரட்டு ஆண்கள்) கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்; முலை எழுந்தார் கேட்க வேணும்; அவர்களிலும் எம்பெருமானைத் தாங்கள் அனுபவிக்க வேணுமென்றிருக்கும் பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல;  பல சொல்லி என்?
பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான தானே சொல்லித் தானே கேட்குமித்தனை என்று அருளிச் செய்தார்.

            இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பிரபந்தத்துக்கு நம் பூர்வாச்சார்யர்கள் பலர் அமுதினுமினிய வ்யாக்யானங்கள் இட்டருளியிருக்கிறார்கள். பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை  மூவாயிப்படி என்னும் வ்யாக்யானமும், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆறாயிரப்படி என்னும் வ்யாக்யானமும், திருநாராயணபுரத்துக்கு ஆய் என்று ப்ரசித்தரான ஜநந்யாசார்யர் ஈராயிரப்படி, நாலாயிரப்படி என்னும் இரு வ்யாக்யானங்களும் அருளிச் செய்திருக்கிறார்கள். இவைகளை அநுசரித்தே வைணவச் சான்றோர் பெருமக்கள் திருமால் திருக்கோயில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முப்பது நாட்களுக்கு திருப்பாவை காலட்சேபம் இனிதே நடத்துகின்றனர்.
அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சார்யர்கள்  காட்டிய நெறிப்படி கோதையின் கீதையானதிருப்பாவையை கூடியிருந்து குளிர்வோம்! வாருங்கள் !



                   பொதுத் தனியன்கள்

தனியன்கள் கோயில்களிலும், மடங்களிலும், இல்லங்களிலும் சேவாகாலத் தொடக்கத்தில் சேவிக்கப்படும் ச்லோகங்கள். ஒவ்வொரு ப்ரபந்தத்துக்கும் தனித்தனியாக் தனியங்கள் இருந்தாலும், தொடக்கத்தில் பொதுத் தனியங்கள் என்று சில ச்லோகங்கள் சேவிக்கப் படுகின்றன. அவற்றை அர்த்தத்துடன் இங்கே அனுபவிப்போம்.

     • ஸ்ரீமணவாளமாமுனிகள் தனியன்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||

[ஶ்ரீசைலேசர் (திருமலையாழ்வார்)
  என்னும் திருவாய்மொழிப் பிள்ளையினுடைய திருவருளுக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவரும்,எம்பெருமானாரிடத்தில் பக்தி நிறைந்தவருமான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன். *இந்த தனியன் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதர்,மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்தது.]

     • குருபரம்பரை தனியன்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

[ திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் முதலாகஸ்ரீ நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் நடுவாக என்னுடைய ஆசார்யரான எம்பெருமானாரை முடிவிலே உடையதாகிய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன். *குருபரம்பரையின் வரிசையை இத்தனியனில் ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்துள்ளார்]

      • ஸ்ரீஎம்பெருமானார் தனியன் 

யோ நித்யமச்யுத பதாம்புஜயுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

[எவர் நிகரில்லாத எம்பெருமானுடைய பொன் போன்ற இரன்டு திருவடித் தாமரைகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் மிக அற்பமாக நினைத்தாரோ, அத்தகைய பகவானும் கருணைக்கடலும் என்னுடைய ஆசார்யருமான இந்த ராமாநுஜருடைய
இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகிறேன். *இது கூரத்தாழ்வான் அருளிச்செய்தது.]

     • ஸ்ரீநம்மாழ்வார் தனியன்

மாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

[தாயும் தந்தையும் மனைவியும் மக்களும் செல்வமும் மற்ற எல்லாமும் என்னொடு ஸம்பந்தமுடையவர்க்கெல்லாம் ஆதியாகவும் என்னுடைய குலத்திற்குப் பதியாகவும் இருக்கின்ற நம்மாழ்வாருடைய வகுள மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட எந்த இரண்டு திருவடிகளோ அத்தகைய இரண்டு திருவடிகளை என் தலையாலே வணங்குகிறேன். *இது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.]

     • ஆழ்வார்கள் உடையவர் தனியன்

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

[பூதத்தாழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் குலசேகராழ்வாரும் திருப்பாணாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் எம்பெருமானாரும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆகிய பெரியோர்களை எப்பொழுதும் வணங்குகிறேன்.
ஆழ்வார்கள் பதின்மரையும் ஆசார்யர்களில் முக்கியமானவரான ஸ்வாமி இராமாநுஜரையும் சேர்த்து அநுஸந்திக்கும் ச்லோகம் இது.  *இது பட்டர் அருளிச்செய்தது.]

பூதத்தாழ்வார் தொடங்கி நம்மாழ்வார் முடிவாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பிற்கு நல்லொதொரு காரணம் ஒன்றுண்டு.
ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரை அவயவியாக வைத்து (முழுமையான பகுதியாய்) மற்றுள்ள ஆசார்யர்களை அவயவங்களாக வைத்து (உறுப்பு) முன்னோர்கள் ச்லோகங்களை அருளிச்செய்துள்ளார்கள். அவற்றில்
பூதத்தாழ்வாரை திருமுடியாகவும் பொய்கை பேயாழ்வார்களை திருக்கண்களாகவும் பட்டர்பிரானை திருமுகமாகவும் திருமழிசைப்பிரானை திருக்கழுத்தாகவும்,
குலசேகரப் பெருமாளையும் திருப்பாணாழ்வார் பெருமாளையும் திருக்கைகளாகவும், தொண்டரடிப் பொடியாழ்வார் திருமார்பாகவும், திருமங்கையாழ்வாரராகிய பரகாலன் திருநாபியாகவும், எதிராசனாகிய இராமாநுசரை திருவடிகளாகவும் உருவகப் படுத்தியிருத்தலால் அந்த வரிசைக்கு ஏற்ப
இந்த தனியன் அவதரித்தது என்று பெரியோர் கூறுவர். (அவயங்களை) உறுப்புகளை முந்துற வரிசையாகச் சொல்லிப் பிறகு (அவயவியான) முழுமையான "ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார்" என்பதைத் தெரியப் படுத்தியுள்ளார் பட்டர். திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும்போது நஞ்ஜீயருடைய ப்ரார்த்தனையினால் அருளிச்செய்த ச்லோகம் இது.

பொதுத்தனியன்களைத் தொடர்ந்து திருப்பாவை தனியன்களோடு திருப்பாவை பாசுரங்களை ஒவ்வொன்றாக பூர்வாச்சார்யர்கள் வழியில் அனுபவிப்போம்!

திருப்பாவை ஜீயர் எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

தொடர்ச்சி.... ....  அடுத்த பதிவு - Post பார்ப்போம்.

            அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 




Comments

  1. ** நாச்சியார் திருமொழி

    திருப்பாவையில் எம்பெருமானே உபாயம் (வழி) என்றும், அவன் உகப்புக்கு (ஆனந்தம்) அடிமை செய்வதே பேறு என்றும் தன் உறுதியை அறுதியிட்டும்,, எம்பெருமானைப் பெறவில்லை ஆண்டாள். அதனால், அவனைப்பெறவேண்டும் என்ற பரபரப்பு அவளிடம் மிகுந்து இருந்தது. இதற்காகவே இவள் "நாச்சியார் திருமொழி" என்ற இன்னொரு பிரபந்தத்தை அருளிச்செய்துள்ளாள். இந்தப் பிரபந்தம் 14 பதிகங்கள் கொண்டு, 143 பாசுரங்கள் கொண்டதாகும். அதில் முதல் பதிகத்தில், பிரிந்தாரைக் கூட்டும் காமதேவனிடம் "வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே" என்று வேண்டினாள். உடனே எம்பெருமான் முகம் காட்ட, தான் சிற்றில் இழைத்ததை சிதைக்க வேண்டாம் என்று வேண்டியதை, இரண்டாம் பதிகமான "நாமம் ஆயிரத்தில் வேண்டுகிறாள். பின்பு, "தாங்கள் நீராடும்போது, அவன் கவர்ந்த இவர்களுடைய ஆடைகளைக் கொடுக்கும்படி கேட்பதை 3ம் பதிகமான "கோழி அழைப்பதில்" பாடினாள் மறுபடியும், இவனைக் காணவல்லோமோ என்று ஊடல் இழைத்ததை 4ம் பதிகமான "தெள்ளியார் பலரில்" பேசினாள். கூடல் மறுமொழி கூறாததால், குயிலைப்பார்த்து,எம்பெருமான் வரும்படி, கூவ வேண்டினாள் "மன்னுபெரும் புகழ்" என்ற ஐந்தாம் பதிகத்தில் பாடினாள். குயில்கள் கூவியும் அவன் வராததாலே, வருத்தமுற்ற இவளைத் தரிக்கச்செய்ய, கண்ணன் இவளை மணம் புரிவதாகக் கொடுத்த கனவு அனுபவத்தை 6ஆம் பதிகமான "வாரணமாயிரம்' பதிகத்தில் தோழிக்குத் தெரிவித்தாள். உடனே எம்பெருமானை எப்போதும் அனுபவிக்கும் சங்கைப்பார்த்து பவதனுபவம் இருக்கும்படியைக் கேட்கிறாள் 7ஆம் திருமொழியான "கருப்பூரம் நாறுமோ" என்ற பதிகத்தில். மழைக்காலம் முடிந்தவுடன் வருவதாகச் சொல்லிப் போனவன் வராததனால், திருவேங்கடத்திற்கு மேகங்களைத் தூதுவிட்டாள் 8ஆம் பதிகமான "விண்ணீல மேலாப்பில்". மேகங்கள் தூது செல்லாமல் மழை பொழிந்ததால் உண்டான மலர்கள், கனிகள், முதலியவை கண்ணனை நினைவுபடுத்தி, தன்னை நலிவதை 9ஆம் பதிகமான "சிந்துரச் செம்பொடி"யில் உரைத்தாள். அப்படி இருந்தாலும், பெரியாழ்வாரோடு ஆசார்ய சம்மந்தம் தன்னை அவனோடு சேர்த்துவிடும் என்ற உறுதியைப் பத்தாம் பதிகமான "கார்க்கோடல் பூக்காளில்" உரைத்தாள். என்றாலும், ஆற்றாமையால் மெலிந்த தம்மைக் காணவந்தவர்களிடம், "அவன் நம்மை வைத்த பரிசு இது" என்று 11ம் பதிகமான "தாமுகக்கும் தன்கையில் காட்டி, 12ம் பதிகமான "மற்றிருந்தீரில்" தம்மை அவன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கும்படி வேண்டினாள். அவர்களால் இவளை அவன் இருக்கும் இடத்திற்குக் கொண்டுபோக முடியாவிடில், அவன் சம்மந்தம் உடைய ஒன்றைக்கொண்டுவந்து கொடுத்து, உயிர்தரிக்கச் செய்யும்படி வேண்டினால். அவள் பக்தியின் எல்லையில் இருப்பதை உணர்ந்த கண்ணன் எம்பெருமான் நேரில் வந்து காட்சியளித்து ஆட்கொண்டதை, "கண்டீரோ" என்று கேட்பவர்களாயும், "கண்டோமே" என்று பதில் சொல்கிறவர்களாயும் தானே இரண்டு நிலைகளில் பேசி, தான் பெற்ற பேற்றைச்சொல்லி, பிரபந்தத்தைத் தலைகட்டுகிறாள் (நிறைவு செய்கிறாள்). நாச்சியார் அருளிச்செய்த பிரபந்தமாகையால், பெரியாழ்வார் திருமொழி போல, இந்தப்ரபந்தமும் "நாச்சியார் திருமொழி" என்று பெயரிடப்பட்டது.

    ReplyDelete
  2. சர்வ ஜகத்துக்கும் காரண பூதனான ஸ்ரீமன் நாராயணன் இந்த வராக அவதாரம் எடுத்தபோது சேதனர்களுக்காக தன்னை அடையும் வழியை சுருக்கமாக பூமாதேவி கேட்டதின் பேரில் அருளினான். இது வராக சரம ஸ்லோகம் எனப்படும். (கீதையின் சரம ஸ்லோகம் போலவே!).

    ஸ்ரீ வராக உவாச:
    ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
    தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
    ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
    அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||
    – வராக சரம ஸ்லோகம்

    அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!

    இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)