புதுமண்டபம் பழைய வரலாறு (பகுதி - 1)




காலவெளியில் பயணிக்க ஆர்முடையவனாக,
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டித்
தேடிப் பார்க்கும் போது, பல வரலாற்றுச் சுவடுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வாறாக மதுரையின் காலச்சுவடுகளை புரட்டியபோது....

• தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டிவந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான மீனாக்ஷியன்னை பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் இம்மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கியமான சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் மதுரையின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப் படுகின்றன.
• மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் மதுரைநாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகர பேரரசர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் "மதுரை நாயக்கர்கள்" ஆட்சியில் அமர்ந்தனர். மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் ( "திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு")
 ஆட்சியில் தான் மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது.
• திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர் ஆட்சி செய்தபோதிலும் "நாயக்கர் வம்சம்" என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் 'திருமலை நாயக்கர்' மட்டும் தான். 
• விசுவநாத நாயக்கர், மதுரையில் நாயக்க ஆட்சியை தொடங்கி சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார். இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.
இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572),  வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601),  முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609),  முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களுக்குப்பிறகு,
மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர். திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
 நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர் தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம். மரத்தினடியில் அமர்ந்திருக்கும் காளையின் உருவத்தைத் திருமலை நாயக்கர் தமது குலச்சின்னமாகக்
கொண்டிருந்தார். இது மதுரை, திருப்பரங்குன்றம் கோயில் கொடிமரங்களில் காணப்படுகின்றன.
• பன்னெடுங்காலமாக வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, நடைபெற்றுவந்தது. இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக திருமலை நாயக்க மன்னரால் மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனாக அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து கோபித்துக் கொண்டு அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் "மண்டூக மகரிஷிக்கு" சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே புராணம். திருமலை மன்னராலேயே இன்றும் மதுரை திருவிழா நகரமாக, பண்பாட்டின் நகரமாக இருந்து வருகிறது. • மதுரை நாயக்ககர்களில் ஆறாவது மன்னரான முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். அவருக்குப்பின் திருமலை நாயக்கரும் தம் அண்ணனைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.
• திருமலை நாயக்கர் திருச்சியில் அமைந்திருந்த தலைநகரை [கி.பி.1634இல்] மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சோமசுந்தரப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார்.
அவருடைய ஆட்சிகாலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டே விளங்கியது.
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை ஐந்து பெரும் போர்களை சந்தித்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமலை நாயக்கரின் பிரமராய அமைச்சரான ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பல கிரந்தங்கள் இயற்றியுள்ளார். ஆனால் தற்காலத்தில் நமக்கு கிடைத்துள்ள நூல்கள் மிகச்சொற்பமே. அவையாவன "சிவோத்கர்ஷம், சிவலீலார்ணவம், கங்கவதாரணம், சிவதத்வ ரஹஸ்யம், முகுந்தவிலாஸம், ரகுவீரஸ்தவம், சண்டீரஹஸ்யம், நளசரித்திர நாடகம், குருராஜ ஸ்தவம், அன்யாபதேச சதகம், நீலகண்ட விஜய சம்பு, கையட வியாக்கியானம்,கலி விடம்பனம், ஸபாரஞ்ஜன சதகம், வைராக்ய சதகம், சாந்தி விலாஸம், ஆனந்த ஸாகர ஸ்தவம்" ஆகும்.
 • திருமலைமன்னரின் (கி.பி. 17ஆம் நூற்றாண்டு) மதுரை நகர அரசியல் நிலையை அறிந்து கொள்ள "இராமப்பய்யன் அம்மானை" பெரிதும் துணைபுரிகின்றது. எனலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், போன்ற சிற்றிலக்கியங்களும், இரவிக்குட்டி போர், மதுரைவீரன் கதை போன்ற வாய்மொழி இலக்கியங்கள் திருமலை மன்னர் காலத்தில் தோன்றியவையாகும்.
மேலும் திருமலை மன்னர் காலத்தில் 'பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' (அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்.. (“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்" என்று தமிழறிஞர்கள் கூறுவர்.) •  திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த "கலாரசிகர்" ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.



"திருமலை நாயக்கர் மஹால்" இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். "தென்னிந்தியாவின் தாஜ்மஹால்" என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம். இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த 'இந்தோ சரசனிக் பாணி' என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒன்று 'சொர்க்க விலாசம்' என்றும், மற்றொன்று 'ரங்க விலாசம்' என்றும் அழைக்கப்பட்டது. சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர். அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள 'பத்துத் தூண்கள்' ஆகும். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன. எஞ்சியுள்ள தற்போதைய திருமலை நாயக்கர் அரண்மனை பகுதிக்கு அப்பொழுது 'சொர்க்க விலாசம்' என்று பெயர்.
 இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை , பதினெட்டு வித இசைக் கருவிகள் வைக்கும் இடம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. (18 வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்ட இடம் இன்று 'நவபத்கானா தெரு' என்று மஹாலை ஒட்டி இருக்கிறது.)
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே ['பொற்படியான் சந்நதி'] இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.  திருமலை நாயக்கர், இந்த அரண்மனையில் தனது 75ஆம் வயது வரை, மனைவியுடன் வசித்து வந்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.
• தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், ஆலோசனைப்படி, மதுரை நகரை ஸ்ரீசக்ர வடிவில் கட்டமைத்தார். தனது அரண்மனைக்குள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலும் கட்டி வழிபட்டார்.
திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள சுவாமி கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் (எழுகடல் தெரு-விட்டவாசல்) நின்றுவிட்டது.
 இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.
[புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத இராயகோபுரமும், எழுகடல் தெருவும் அமைந்துள்ளது.]


                        ||:புதுமண்டபம்:||
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரிலிருக்கிறது புதுமண்டபம். மன்னர் திருமலை நாயக்கர் 1626ல் தொடங்கி 1645ல் இம்மண்டபத்தைக் கட்டி முடித்தார். நடுவில் "வசந்த மண்டபம்" உள்ளது. சுற்றிய பள்ளத்தில் கோடை காலங்களில் நீர் நிரப்பி வைக்க, பள்ளத்து நீரில் குளித்தெழுந்து உள்ளே வரும் காற்று வசந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் குளிர வைத்து விடும். 333 அடி நீளம்,105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 124 தூண்கள் இருக்கின்றன. யாழிகள், குதிரை வீரர்கள், சூரிய சந்திரர் உருவங்கள். திருவிளையாடல் காட்சிகள், தடாதகை பிராட்டியார், கல் யானைக்கு கரும்பு அளித்தது உள்ளிட்ட சிற்பங்களுடன், ஏகபாத, கஜசம்கார மூர்த்திகளின் சிலைகளும், நடுமண்டபத்தில் கருங்கல் மேடையும் உள்ளன. மண்டப நடுவரிசை தூண்களில் நாயக்கமன்னர் திருமலை மன்னர் உள்ளிட்ட பத்துப்பேரின் உருவச்சிலைகள் வரிசையாக மிக அழகுபடச் செதுக்கப்பட்டிருக்கிறது. மதுரையின் சுமார் 369 ஆண்டுகள் பழமையான இந்த பழைய மண்டபத்தை இன்றும் "புதுமண்டபம்" என்றே மக்கள் அழைக்கின்றனர்.
அதன் பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.
ஆனாலும் இம்மண்டபத்திற்கு மட்டும் காலங்கடந்தும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது.


•  இந்த மண்டபத்தின் தூண்களில் சிவன், மீனாட்சி, அவர்களின் திருமணம் திருவிளையாடற்புராணச் சிற்பங்கள் மற்றும் மதுரையை நிர்மாணித்த விஸ்வநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் ஆகியோரது சிற்பங்கள் புடைக்கப்பட்டுள்ளன. யாளிகள் நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் கிழக்கு ராஜகோபுரத்தை நோக்கியவாறு உள்ள குதிரைவீரர்களின் குதிரைக் குளம்புகள் சிப்பாய்களின் தோள்களில் ஓய்வெடுக்கின்றன.

• புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
(மும்முலைப்பிராட்டியார்)
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம்















• விஸ்வநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் ஆகியோரது சிற்பங்கள் புதுமண்டபத்தின் உட்பகுதியில் நடுக்கூடத்தில் உள்ளன.

•  புதுமண்டபத்தினுள் உள்ள திருவிளையாடற்புராணச் சிற்பங்களாக தடாதகைப்பிராட்டியார், பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்தது, புலிமுலை புல்வாய்க்கருளியது, கல்லானைக்கு கரும்பளித்தது, கரிக்குருவிக்கு உபதேசித்தது, மீனாட்சிசுந்தரேசர் திருக்கல்யாணம் ஆகியன அறியப்படுகிறது.
திருமால் தாரை வார்க்க, பிரமன் சடங்குகளை நடத்த, தும்புரு,நாரதர் வீணை வாசிக்க, நந்தி தேவர் மத்தளம் கொட்ட, மற்ற தேவர்கள் பணிசெய்ய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் திருமணம் கம்பத்தடி மண்டபத்தூணிலும், புதுமண்டபத்தூணிலும் அமைக்கப் பெற்றுள்ளது.
• முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்(கி.பி1564-72) காலத்தில் கட்டப்பட்ட கம்பத்தடி மண்டபத்தில் உள்ள சில சிற்ப உருவங்களைப் போலவே புதுமண்டபத்திலும் திருமலைநாயக்கரின் ஆஸ்தான சிற்பி 'சுமந்திர மூர்த்தி' ஏற்படுத்தினார். மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாண கோலம், கைலாசாரூடர், அர்த்நாரீஸ்வரர், ஏகபாதமூர்த்தி, கஜசங்காரமுர்த்தி ஆகியனவாகும்.



• புதுமண்டபத்தின் நடுக்கூடம் நாற்புறமும் அடைப்புக்களாகிய நிலையில் திருக்கோயில் பாதுகாப்பில் உள்ளது. திருமலைநாயக்கரின் பெருமைக்குரிய கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்கும் இப்புதுமண்டபத்தின் நடுக்கூடம், நாயக்க அரசர்களின் திருவுருவங்களைக் கொண்டுள்ளது.  மண்டப நடுக்கூடத்தின் தெற்கிலும் வடக்கிலுமாய் நிற்கும் பெருந்தூண்கள் அனைத்துமே நாயக்கர் காலக் கலை, பண்பாட்டு வரலாற்றைக் காட்டும் சிற்பங்களைப் பலவாகக் கொண்டுள்ளன. அவற்றுள் மண்டபத்தின் வடக்கில் ஐந்து தூண்களிலும் தெற்கில் ஐந்து தூண்களிலுமாக எதிரெதிர் நோக்கியவர்களாக நாயக்க அரசர்களின் பேருருவச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. வடக்குத் தூண்களில் கிழக்கிலிருந்து மேற்காக உள்ள ஐந்து பெருந்தூண்களில் முறையே, பத்தாவது பட்டம் திருமலைநாயக்கர், ஒன்பதாவது பட்டம் முத்துவீரப்ப நாயக்கர், எட்டாவது பட்டம் முத்து கிருஷ்ண ரங்கப்ப நாக்கர், ஏழாவது பட்டம் கஸ்தூரி ரங்கப்ப நாயக்கர், ஆறாவது பட்டம் கிருஷ்ணப்ப நாயக்கர் இவர்தம் திருவுருவங்கள் உள்ளன. ஒவ்வோர் அரசரின் பெயருக்கு முன்னும் 'மகாராஜ மானிய ராஜ' என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. அரசர்கள் பட்டத்திற்கு வந்த வரிசைமுறை '10வது பட்டம், 9வது பட்டம்' என எண்களில் தரப்பட்டுள்ளது.
தெற்குத் தூண்களில் மேற்கிலிருந்து கிழக்காக ஐந்தாவது பட்டம் இலிங்கம நாயக்கர், நான்காவது பட்டம் கிருஷ்ணப்ப நாயக்கர், மூன்றாவது பட்டம் பெரிய வீரப்ப நாயக்கர், இரண்டாவது பட்டம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர், முதற் பட்டம் விசுவநாத நாயக்கர் திருமேனிகள் காட்டப்பட்டுள்ளன.


திருமலைநாயக்கர் சிற்பம் உள்ள தூண் மட்டும் அனைத்துப் பக்கங்களிலும் சிற்ப வேலைப்பாடு பெற்றுள்ளது. இருபுறத்தும் சற்றுக் கீழான நிலையில் தேவியர்கள் இடம்பெறத் தூண்களின் கீழ்ப்புறத்தே அமைச்சர்கள், படைத்தலைவர்கள், இன்னபிற அலுவலர்கள், கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர். பத்துப் பட்டங்களுள் திருமலை நாயக்கரும் அவருடைய தந்தையாரும் மட்டுமே வண்ணப்பூச்சுப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைக் காலங்காலமாக எத்தனையோ அரசமரபுகள் ஆண்டிருந்தபோதும் ஓர் அரச மரபைத் தொடங்கித் தொடர்ந்த பத்துப் பட்டத்துப் பேரரசர்களின் கருங்கல்லாலான திருவுருவங்களை அவரவர் தம் பெயர்களைத் தரும் எழுத்துப் பதிவுகளுடன் காணமுடிவது மதுரைப் புதுமண்டபத்தில் மட்டும்தான்
[ குறிப்பு:- வரலாற்று ஆய்வாளர்கள் திருமலைமன்னரை ஏழாவது மன்னராக குறிக்கிறது.]


• வைகாசி மாத வசந்தோற்சவம் (10நாட்கள்) எனும் இளவேனிற்கால திருவிழாவின் போதும், மார்கழி மாத தைலக்காப்பு  உத்ஸவம் (9 நாட்கள்) ஆகிய திருவிழாக்கள்  புதுமண்டபத்தின் நடுவில் உள்ள கல் மேடையில் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

• திருமலை நாயக்கர் மீனாக்ஷியம்மன் கோவில் திருப்பணிகளாக நடந்த புதுமண்டப வேலைகளுக்கு மந்திரி நீலகண்ட தீட்சிதரே மேற்பார்வையாளராக இருந்தார். புதுமண்டபம் என்று சொல்லப்படும் வசந்த மண்டபத்தைக் கட்டும்போது பிரதம சிற்பியான 'சுமந்திர மூர்த்தி' ஒரு தூணிற்கு ஏகபாத மூர்த்தியைச் செதுக்கி முடித்து, அதை நிறுத்த நன்னாளும் பார்த்திருக்கிறார். 'ஏகபாத மூர்த்தி' என்பது பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடமிருந்து உற்பத்தியானதாக இருந்த ஐதீகத்தைக் கொண்டு செதுக்கப்பட்ட உருவம். இந்தத் தூணை வைக்ககூடாதென்றும் வைப்பது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றும் 'வைணவர்கள்' நாயக்கரிடம் சென்று ஆட்சேபிக்கவே மன்னன் இது சம்பந்தமாக சாஸ்திரங்களைக் கற்ற பல பெரியோர்களின் வாதங்களை ஆறுமாதங்கள் வரைக் கேட்டு இறுதியில் சிற்பி செதுக்கிய மூர்த்தியுள்ள தூணை நிறுவ அனுமதி கொடுத்தார். இந்தத் தகராறில் சைவர்கள் பக்கம் வாதாடியவர் மந்திரி 'நீலகண்ட தீட்சிதரே' என ஓர் செவிவழிக்கதை உண்டு.

• புது மண்டபம் கட்டியபோது நடந்ததாக கூறப்படும் மற்றொரு செவி வழிச்செய்தியாக ஓர் கதை உள்ளது. அது பின்வருமாறு:-
சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையும் தமது துணைவியார் சிலைகளையும் வடிக்க நிவந்தமளித்து அவற்றையும் கோவில்களில் நிறுவது வழக்கம். [நாயக்கர் தம் மனைவிகளுடன் இருப்பது போன்ற சிலையை திருப்பரங்குன்றம், அழகர்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார் வளாகம் போன்ற திருத்தலங்களிலும் காணலாம்.] இவ்வாறாக புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க திருமலை மன்னர் உத்தரவிடுகிறார் .  அரச உத்தரவுக் கேற்ப, தலைமை சிற்பி சுமந்திர மூர்த்தி தானே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் இடது முழங்காலுக்கு 
மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது.


அரசரது கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். அப்போது அங்கே மேற்பார்வையிட வந்த அரசனது பிரதம மந்திரி நீலகண்ட தீக்ஷதர் [இவரே அப்பய்ய தீக்ஷதரது தம்பி மகன்] சிற்பியின் கவலையை அறிந்து கொண்டு சற்று உள்ளார்ந்து இருந்துவிட்டு, பின்னர் அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். 
அரசர் சிலைகளைப் பார்வையிட வருகையில் அரசியின் சிலை பற்றி 'நீலகண்ட தீட்க்ஷிதர்' சொன்ன கருத்து அரசரிடம் சொல்லப்படுகிறது. பிரதம மந்திரிக்கு அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு அழைத்துவர உத்தரவிடுகிறார்.
சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, பூஜையில் இறைவனுக்கு காண்பிக்கப்பட்ட கர்ப்பூர ஆரத்தியின் உதவியால் தன் கண்களை தாமே அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களிடம், அரசர் தர இருந்த தண்டனையை தாமே விதித்துக் கொண்டுவிட்டது பற்றி அரசருக்குத் தெரிவித்துவிடச் சொல்லுகிறார்..
தர்பாருக்குத் திரும்பிய சேவகர்கள் நீலகண்டரது செயலையும், செய்தியையும் மன்னரிடம் கூறுகின்றனர். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக மன்னனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட திருமலை மன்னர், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறார். தனது தவறை நினைத்து வருந்திய மன்னர், நீலகண்டரைத் கண்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டு, அவரது கண் பார்வை திரும்ப என்ன செய்வதென்று வினவுகிறார். அப்போது நீலகண்ட தீட்க்ஷிதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் 'ஆனந்தஸாகர ஸ்தவம்' இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாகச் சொல்லப் படுகிறது.


  பின்னர் அரச சேவையை உதறித்தள்ளிவிட்டு திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையிலுள்ள 'பாலாமடை' கிராமத்தில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். (அவருடைய சமாதியும் அவ்வூரில் இருக்கிறது. )
திருமலை மன்னன்  நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக பாலாமடை கிராமத்தை அளித்தார். நாயக்க அரசின் ஆவணங்களில் பாலாமடை கிராமம் "நீலகண்ட சமுத்திரம்" என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).
             • நவக்கிரங்களில் புதனுக்குரியவராக சோமசுந்தரேசுவரர் கூறப்படுகிறார். சோதிடத்தில் 'வித்யா காரகன்' என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனை கொண்டே கணிக்கப்படுகிறது. பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , •சிற்பம், •சித்திரம், நடிப்பு, நாடகம், •எழுத்துக் கலை, •சாஸ்திர ஞானம் , •நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.


சுந்தரேஸ்வரரின் ஆலவாய் மதுரை நகரம் புதன் ஆதிக்கம் பெற்ற ஊராகையாலேயே இன்றும் கலை,பண்பாட்டு நகரமாக திகழ்கிறது. சுவாமி சந்நதியிலிருந்து சிவனின் புதன் ஆதிக்கமுடைய பார்வை கொண்டதாலேயே புதுமண்டபம் கலைக்கூடமாகவும், பண்பாட்டின் சங்கம மையமாகவும் உள்ளது என சமயச்சான்றோர்கள் கூறுவர். (மேலும் சித்திரக்காரத்தெருவும் சிவபெருமான் திருப்பார்வையிலேயே உள்ளது.)
 பாமரர், நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்கள் அனைவருக்குமான ஒரே "ஷாப்பிங் மால்" என்றவாறு சமத்துவ கூடமாக புதுமண்டபம் இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள், தவறவிடக் கூடாத ஓர் இடம் எனவும் அடையாளப்படுத்தப் பட்டிருந்தது.

அது பற்றி அடுத்த பதிவு- Post ல பார்ப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Comments

  1. நீலகண்ட தீட்சிதர் வடமொழியில் மூன்று பெரிய காவியங்களையும் சிற்றிலக்கியம் என்று கருதக்கூடிய பல நூல்களையும் ஸ்ரீ மீனாக்ஷி யம்மனைக்குறித்து "ஆநந்த சாகரஸ்தவம்" என்ற 108 சுலோகங்களை உடைய ஒரு நெஞ்சை உருக்கும் தோத்திர நூலையும் எழுதிய மஹா கவி. அத்துடன் லௌகீக வாழ்விலும் உயர்ந்த நிலையில் இருந்தவர்.
    அவர் பல வருடங்களாக திருமலை நாயக்கருக்கும் முதன் மந்திரியாயிருந்து அவர் செய்த ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோவில் திருப்பணிகள் உற்சவாதிகள் முதலியவைகளைத் நிர்மாணிப்பதிலும், நடத்துவதிலும் ஊக்கம் காட்டி பெரும் பங்கு கொண்டவர்.
    நீலகண்ட தீட்சிதர் காஞ்சீபுரம் பக்கத்திலுள்ள அடையப்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பல கவிஞர்களையும் தோற்றுவித்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். கி.பி 16ஆம் நூற்றாண்டில் சிறந்து விளங்கி வடமொழியில் நூற்றுக்குமேல் நூல்கள் எழுதி அக்காலத்தில் வேலூரை ஆண்ட நாயக்க மன்னரால் ஆதரிக்கப்பட்ட அப்பய்ய தீட்சிதர், இந்த ஊரைச் சார்ந்த சிவபக்தர். இவருடைய சகோதரரின் பேரன் நீலகண்ட தீட்சிதர். நீலகண்டனின் பெற்றோர்கள் அவர் சிறுகுழந்தையாய் இருக்கும்போதே காலமாய்விட்டபடியால் அப்பய்ய தீட்சிதரே பையனை வளர்த்து கல்வி புகட்டினார். குடும்பத்தின் சொத்துப்பிரிவின் காரணமாக, ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நுண்ணிய அறிவையும் பேராற்றலையும் பெற்ற நீலகண்டர் தமது 12வது வயதில் பாட்டனாரின் ஆசியைப் பெற்று, தனது தாயாருடன் தெற்கே புறப்பட்டார். கொஞ்ச காலம் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்து தனது கல்வியை அபிவிருத்தி செய்து கொண்டு மதுரையில் வந்து குடியேறினார். தமது பிரசங்கங்களின் விளைவாக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

    ReplyDelete
  2. ஒரு சமயம் இவர் தேவி மகாத்மியத்தைப் பற்றி பிரவசனம் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கச் செய்து கொண்டிருந்தார். இரவில் நகரத்தைச் சுற்றும் வழக்கமுடைய திருமலை நாயக்கரும், பிரவசனத்தைக் கேட்டு ஆனந்தித்தார். பின்னர் தீட்சிதரையும் அழைத்து நடத்திய வித்வத் சபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பயனாக திருமலை நாயக்கர் அவரைத் தமது பிரதான மந்திரியாக்கினார். தீட்சதரின் மேதைமையும் நுண்ணிறிவும் தமது அரசாட்சிக்கு ஒரு பெரிய அரணாக இருக்கும் என்று நாயக்கர் கருதி வந்தார். பின்னர் அரச சேவையை உதறித்தள்ளிவிட்டு நெல்லை ஜில்லாவில் தாமிரபரணிக்கரையிலுள்ள 'பாலாமடை' கிராமத்தில் வாழ்ந்தார். (அவருடைய சமாதியும் அவ்வூரில் இருக்கிறது. )

    தாமிரபரணி நதியின் வடக்கு கரையிலுள்ள பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் மேலப்பாட்டம், ஸ்ரீவலப்பேரி, ராஜவல்லிபுரம் ஆகிய ஊர்கள் சூழ இவ்வூர் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது "நீலகண்ட சமுத்திரம்" என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244). இந்த கிராமத்தில் தன் சந்ததிகளுடன் தன் அந்திம நாட்களை இறை பணியிலேயே கழித்து பின் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஒரு மார்கழி மாத சுக்லாவஷ்டமியில் ஜீவ சமாதியடைந்தார்.
    ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருக்கள் தங்கள் விஜய யாத்திரைகளின் பொழுது முக்கியமாக இரண்டு அதிஷ்டானங்களுக்கு விஜயம் செய்வதை ஒரு நியதியாக கொண்டுள்ளார்கள், அவை முறையே நெரூரில் ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராளின் அதிஷ்டானமும் பாலாமடையில் உள்ள ஸ்ரீ நீலகண்ட தீட்சிதரின் அதிஷ்டானமுமாகும். மேலும் ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் பூஜை செய்யப்பட்டு பின்னர் நீலகண்ட தீட்சிதராலும் ஆராதிக்கப்பட்டு வந்த ஸ்ரீ சந்திரமௌரீஸ்வரர் லிங்கம். பஞ்சலோக மகாகணபதி மற்றும் ஸ்ரீ சக்கரமும் தற்பொழுது ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் பூஜையில் உள்ளன.

    ReplyDelete
  3. • ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் நூலானது 108 ஸ்லோகங்களைக் கொண்டது. முழுவதும் அன்னை மீனாக்ஷியின் பாதாரவிந்தங்களைப் பணிவதாக அமைந்த ஸ்லோகங்கள் என்றாலும் இவை சிறந்த அத்வைதக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, "ஜீவன் முக்தி" நிலையை நெருங்கும் ஓர் ஆத்மாவின் வேண்டுதலாகவே தோன்றுகிறது.
    • ஆனந்த சாகரஸ்தவம் 108 ஸ்லோகங்களாகும். அன்னையிடம் தாம் கொண்ட பூரண சரணாகதியை விளக்கிப் பாடப்பட்ட இவை மிக்க அழகும், பொருள் நயமும் கொண்டு உள்ளத்தை உருக்குவன.
    இந்நூலைக் கோவை நகர் கவியரசு வித்வான் கு. நடேச கவுண்டர் என்ற சமஸ்கிருதம்- தமிழ் ஆகிய இருமொழிப் புலமை வாய்ந்த பெருமகனார் செய்யுட்கள் வடிவில் "இன்பமாகடல்" என்ற தமிழ் மொழி பெயர்ப்பாகச் செய்தருளியுள்ளார்.
    “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!”

    அவ்யாஜ ஸுந்த³ரம் அநுத்தரம் அப்ரமேயம்
    அப்ராக்ருதம் பரமமங்க³ளம் அங்க்⁴ரிபத்³மம்
    ஸந்தர்ச’யேத³பி ஸக்ருத் ப⁴வதீ த³யார்த்³ரா
    த்³ரஷ்டாஸ்மி கேந தத³ஹம் து விலோசநேன

    (ஆனந்தசாகரஸ்தவம்-61)

    செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்
    அறிவிக்கும் சேய ஆகிப்
    பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும்
    மேலாம்உன் பொற்றாள் பூவை
    மையார்ந்த மனத்தடியேன் பால்எழுந்த
    கருணையினால் வந்து காட்டின்
    ஐயோநான் எவ்விழியால் கண்டுமனம்
    குளிர்வேன் அங்கயற்கண் அம்மே

    (இன்பமாகடல்-61)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)