கோதையின் கீதை (பகுதி - 29)



     கூடாரை வெல்லும் என்று தொடங்கும் இப்பாசுரத்தின் நாளாகிய "மார்கழி 27 ஆம் நாள்" 'கூடாரைவல்லி' என்று ஸ்ரீவைஷ்ணவர்களால் குறிப்பிடப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அன்று ஸ்ரீவைஷ்ணவ அடியார்களின் வீடுகளில் "அக்கார அடிசில்" படைத்து இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.பிறகு "மூடநெய் பெய்து முழங்கை வழியார" அக்கார அடிசில் உண்டு மகிழ்வர்.



🔵  நாச்சியார் திருமொழிப் பாசுரம்

நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!

(நாச்சியார் திருமொழி 9:6)

    🔶  பாசுர விளக்கம் :-

• (நாறு நறும் பொழில் மால் இருஞ்சோலை நம்பிக்கு) நல்ல மணம் வீசும் சோலை கொண்ட [அழகர்மலை] திருமாலிருஞ்சோலை நம்பிக்கு
• (நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்)  நான் நூறு  தடாவில்  வெண்ணெய்  என் வாயால்  நேர்ந்து கொண்டு  நேர்த்திக் கடனாக  வைத்தேன்.
• (நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்) நூறு தடா முழுவதும் நிறைய "அக்கார வடிசில்" [சர்க்கரைப்பொங்கல் போன்ற இனிப்பு ] சொன்னேன்
• (ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?)  குறையாத செல்வங்களைக் கொண்டவன் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ?



🔶  திருப்பாவை ஜீயரான ஸ்வாமி ஸ்ரீஇராமானுஜர், ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகருக்குத் தருவதாக வேண்டிக்கொண்ட நூறு தடா வெண்ணையும், நூறு தடா அக்கார அடிசிலும், அவள் தந்தாளோ இல்லையோ என்று கவலையுற்று, ஆண்டாள் சார்பாக அவரே நிறைவேற்றினாராம்.

ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு நூறு தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை
"வாரீர்! எம் கோயில் அண்ணரே" வாரும் என்று அழைத்தருளினாள்.

எட்டாம் நூற்றாண்டு ஆண்டாளுக்காக , பத்தாம் நூற்றாண்டில் பிறந்து 11-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மகான் ஸ்ரீராமாநுஜர் (கிபி 1017-1137) எவ்வாறு அண்ணன் ஆனார் ?

ஓர் தமையனைப் போல ஆண்டாள் வேண்டியதை நிறைவேற்றிய  இதன் காரணமாகவே  அண்ணன் ஆனால் "கோயில்" திருவரங்கத்திலிருந்து வந்த இராமாநுஜர்.

இதனாலேயே நம் கோதை ஆண்டாள் வாழித்திருநாமத்தில் "பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே " என்றும் பெயர் பெற்றாள்

பகவத் ஸ்ரீஇராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது ஸ்ரீஆண்டாள் அவரை “வாரீர் நம் கோயில் அண்ணரே!” என்று நெகிழ்ந்து அழைத்துக்கொண்டே எட்டடி முன்னால் ஓடிவந்துவிட்டாளாம். இப்போதும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவருக்கும் உத்ஸவருக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது. உத்ஸவர் மற்ற கோவில் உத்ஸவர்களைவிட இன்னும் எட்டடி அதிக முன்னாலேயே இருப்பதால் பின்னால் இருக்கும் மூலவரை நன்றாக தரிசிப்பது சிரமமாகவே இருக்கும். இந்த நிகழ்வை ஸ்ரீரங்கம் கோயிலொழுகும் குறிப்பிட்டு உறுதிசெய்கிறது.



🔶 ஆண்டாள் பிள்ளைத் தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில்
(10. பொன்னூசல் பருவம்) இச்செய்தி பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

"அன்னம் தடந்தாம ரைப்போதி னைக்கொணர்ந்து
அளியமென் பேடையோ டும்
ஆடகப் பூஞ்சோலை யுள்குடம் பையைஅமைத்து
அகலாத சோலைமலை வாழ்
மன்னன் தனக்குநீ வாய்நேர்த்தி டப்பொன்னி வளைகோயில் அண்ணன்அன் பால்
வாழ்விக்கு மாறர்திரு மகளாய உரிமைக்கும்
வரிசைஇது எனமதித் தே
இன்அன் புறப்புதிய வெண்ணெயொடு தேன்நிறைத்து
இருநூறொடு ஒருநூற தாய்
இனியதெள் அமுதென்ன அக்கார அடிசிலும்
இயற்றவே தைத்திங்கள் வாய்
பொன்னின் தடாநிறைத் தருளும்இன் அமுதமே!
பொன்ஊசல் ஆடியரு ளே! புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!
பொன்ஊசல் ஆடியரு ளே (பாடல்: 98)

🔶  அக்கார அடிசில் பற்றி ஸ்வாமி எம்பார் சுவைப்படச் சொல்லும் கதையினை அறிவோம்.

"பாவனமான ஆத்மா என்று சொல்லுகிறோம். நமது சரீரத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மா எப்படி உடல், மன உபாதைகளால் சம்பந்தப் படாமல் இருக்கிறது?"

உபநிஷத் நம் சரீரத்தை ஒரு மரமாக உருவகப் படுத்துகிறது. அந்த மரத்தில் இரு பறவைகள். ஒரு பறவைக்கு திடமான இறக்கைகள். மற்றொன்றுக்கு இறக்கை கிடையாது. இந்த உடம்புக்கு ஏற்படும் சுகம், துக்கம் வியாதி எல்லாம் இறக்கையில்லாத பறவையிடம் ஒட்டிக்கொள்ளும். இன்னொரு பறவைக்கு அதெல்லாம் ஒட்டாது என்கிறார் குரு.
ஒரு சிஷ்யன் "வேதமே சொன்னாலும் இதை நான் நம்பத் தயாராயில்லை. இதற்கு ஆதாரம் என்ன?" என்றான். குரு வாயை மூடிக் கொண்டார்.

" நான் கேள்வி கேட்டு ஆச்சாரியனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை'' என்று கர்வப் பட்டான் சிஷ்யன்.

 அந்த வருடம் மார்கழியும் வந்தது. மார்கழி 27வது நாள். 27வது பாசுரம் படித்து பாத்திரத்துக்கு மேலே நெய் முழ அளவுக்கு மிதக்கிற மாதிரி சர்க்கரைப் பொங்கல் தயாரானது. விதண்டா வாதம் பண்ணின மாணவனுக்கு வயிறு நிறைய சர்க்கரைப் பொங்கல் அளித்தார் குரு. சிஷ்யன் சீயக்காய் பொடி போட்டு நெய்ப் பிசுக்கான கையை அலம்பிக்கொண்டு வந்தான். குரு அவனைக் கூப்பிட்டு இன்னும் கொஞ்சம் சீயக்காய்ப் பொடி கொடுத்தார். "ஸ்வாமி, கைப் பிசுக்கு தான் சுத்தமாகி விட்டதே, இன்னும் எதற்கு சீயக்காய் பொடி? " என்றான். "இது கைக்கு அல்ல,உன் நாக்குக்கு" என்கிறார் குரு.

" நாக்கிலே ஒன்றும் ஒட்டிக்கலையே, சுவாமி" இது மாணவன். ஒரு சின்ன பதார்த்த, நெய், கையிலே ஓட்டுவது போல் நாவில் ஒட்டுவதில்லை. கையும் நாக்கும் ஒரே சரீரத்தில் தானே இருக்கிறது?" ஒரு சாதாரண நெய்க்கே இது சாத்தியமென்றால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த சக்தி இருக்காதா?பரமாத்மா எனும் பறவை எதிலும் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதன் சாத்தியத்தை வேதம் சொன்னால் அதை ஏற்கத் தான் வேண்டும் "என்கிறார் குரு. சிஷ்யன் தன் தவறை உணர்ந்தான்.




🔶 இனி "அக்கார அடிசில்" செய்முறையை அறிவோம்.
அக்காரம் - கரும்பு, வெல்லம் சர்க்கரை என்று பொருள்.
 திருக்கடிகை(சோளிங்கர்) திவ்யதேசத்து பெருமாளை அக்காரக்கனி என்றே அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.

"மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே."
* (பெரிய திருமொழி 8-9-4)


* அக்காரக் கனி என்றால் என்ன?
 அக்காரம் எனில் வெல்லக்கட்டி; அதற்கு ஒரு கனியுண்டோ வென்னில் வெல்லக்கட்டியையே உபாதாநமாகக் கொண்டு ஒரு மரம் முளைத்து அதில் படிமம் பழுத்தால் அது எவ்வளவு இனிப்பாயிருக்குமோ அவ்வளவு போக்யதைமிக்கவன் திருக்கடிகை பெருமாள் என்றவாறு திருமங்கையாழ்வார் அனுபவிக்கிறார்.

"எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே!"
என்று திருமாலை நம்மாழ்வாரும் (திருவாய்மொழி   இரண்டாம் பத்து;
ஒன்பதாந் திருமொழி; 8ம் பாசுரம்.) ஒரு பாசுரத்தில் அருளிச்செய்துள்ளார்.


🔶 ||அக்கார அடிசில்|| 🔶

🔸தேவையான பொருள்கள்:-

தினை அரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பால் - 3 கப்
வெல்லம் நன்றாகப் பொடித்தது - இரண்டரை கப்
நெய் - அரை கப்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை - தலா 10 அல்லது 15
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும். 3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.

இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.

வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.

 அக்கார அடிசிலின் சிறப்பே இனிப்புச் சுவைதான். ஆகவே தேவையென்றால் இன்னும் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். அப்படிச் சேர்ப்பதாக இருந்தால், நெய்யும் கொஞ்சம் சேர்க்கவேண்டும்.




 🔹 இப்பாசுரத்தில் கண்ணன் இடைச்சியரது (நோன்பிருந்து செய்த) வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால் அவர்களுக்கு வரும் பேரானந்தம் தெரிகிறது. இடைச்சியரின் பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது.

🔸முதலில் மார்கழி நோன்பு பற்றி 1- 5 பாசுரங்கள் மூலம் தெரிவித்த பின்னே, 6- 15 பாசுரங்கள் ஒவ்வொரு கோபியரையும் (இறையடியாரை) நோன்பிற்கழைத்து எழுப்பிய பின்னே,16-20 பாசுரங்கள் நந்தகோபனுடைய இல்லத்திற்கு சென்று, நந்தகோபன், யசோதா, பலதேவன் நப்பின்னை பிராட்டி வரை எழுப்பியபின், 21-25 பாசுரங்கள் கண்ணனையும் எழுப்பியதாக அமைந்தன. 26 ஆம் பாசுரத்தில் நோன்பிற்குரிய பொருட்களை அருளுமாறு கண்ணனை வேண்டிப் பெற்று, அந்நோன்பும் பூர்த்தியாகும் கட்டத்தில் இப்போது 27 ஆம் பாசுரம் சேவித்துக் கொண்டாருக்கிறோம். இப்பாவை நோன்பை நோற்ற இடைச்சியர்கள் தாங்கள் வேண்டும் பரிசுகளைக் கண்ணனிடம் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பாசுரமிது.




🔹 திருப்பாவையின் 27வது பாசுரம்


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

🔹[ பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே ! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து எங்களுக்கு பரிசாக வழங்கும், நாட்டவர் எல்லாம் கொண்டாடுகின்ற அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம் ! அழகான ஆடைகளை உடுத்துவோம் !
 பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக !]


       🔹 பாசுரச் சிறப்பு:-

(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா) "பகைவரை வெல்லும் சிறப்பு மிக்கவனே" எனும்போது, பகைவர்கள் வெல்லப்படவேன்டியவர் தானே என்ற எண்ணம் எழுகிறதல்லவா? 'கூடார்' என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பரமனை அறியாதவர்கள், அறிந்தும் பயப்படுகிறவர்கள், அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள், அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள் என்று 'கூடார்' நால்வகைப்படுவர்.
🔹 (உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்)
நன்றாக கவனித்தால், இந்த கட்டத்தில், ஆண்டாள் "சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு" என்று குறிப்பாக எதுவும் கண்ணனிடம் வேண்டவில்லை. ஆண்டாள் கண்ணனிடம், "நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறாள் போலும்.
 "உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?
🔹(நாடு புகழும் பரிசினால் நன்றாக)
கண்ணன் "நாடு புகழும் பரிசை", அடியவரே பிரமித்துப் போகும் வண்ணம், அவர்களுக்கு அளிக்க வல்லவன். கண்ணன் குசேலனுக்கு (அவன் வாய் விட்டுக் கேட்காதபோதும் கூட) வழங்கியது நாடறியும் பரிசல்லவா? அது போலவே, திரௌபதிக்கும், தக்க தருணத்தில் அவள் மானத்தைக் காக்கும் விதமாக, கண்ணன் வழங்கியதும், ஆன்றோரும் சான்றோரும் போற்றிய பரிசு தானே! பஞ்சபாண்டவர்க்கோ யுத்த வெற்றியைப் பரிசாக வழங்கி தர்மத்தை நிலைநாட்டினான் ஸ்ரீகிருஷ்ணன்!





🔹("சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்" )
என்று அத்தனை நகைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ளப் போவதாக கோபியர் கண்ணனிடம் சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் பெண்டிருக்கு நகை மேல் ஆசை உண்டு போலும் . நீலமேக வண்ணனின் சுந்தர வடிவத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஶ்ரீஆண்டாளின் விருப்பம் இதில் பளிச்சிடுகிறது.
"காறை பூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன்திறம்பிதற்றும்
மாறில் மாமணிவண்ணன்மேல் இவள் மாலுறுகின்றாளே."
என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசையை ஸ்ரீஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் பாடியிருக்கிறாள்.
ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரும், இப்பாசுரத்திற்கு இணையான பாசுரம் ஒன்றை தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.
"நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு  காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே."


🔹 (ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்) மேலும், பகவத் கைங்கர்யம் செய்யும் ஒரே விருப்பத்தில் ஸ்ரீகண்ணனை சரண் புகுந்த இடைச்சியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் "பாவை நோன்பு" நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. இடைச்சியரின் விருப்பம் ஸ்ரீகண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே ஆகும். இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற "ஶ்ரீவைஷ்ணவக் கோட்பாடு" ஸ்ரீகோதை நாச்சியாரால் வலியுறுத்தப்படுகிறது.
🔹 இடைச்சியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற இடைச்சியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர்.
🔹(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா) அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய திருக்கல்யாண (சௌர்யம், சௌசில்யம், சௌந்தர்யம் ) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.
🔹🔸 சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)
தோடு - திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமுண்டு)
செவிப்பூ - த்வயம் (பக்தியைக் குறிப்பது)
பாடகம் - சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)
 பல்கலன் - ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் (தோடு, செவிப்பூ,பாடகம் என்ற மூன்றும் ) என்ற குணங்களைக் குறிப்பதாம்.
ஆடை - அடியவர் பரமனுக்கு உரிமையானவர் என்பதை உணர்த்துவதாம்.
பாற்சோறு - பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்
 மூடநெய் பெய்து - ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)
(கூடியிருந்து குளிர்தல்) இடைச்சியர்குழுவினர் மோட்ச சித்தியை அடைதல்
'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும் என்பர்.
🔹 இப்பாசுரத்தில் ஆரம்பித்து, 28-வது பாசுரத்தில் (குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு) மற்றும்
 29-வது பாசுரத்தில் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!) என திருப்பாவையில் மூன்று முறை ஓதப்பட்டு நிறைவடைகிறது. கோவிந்த நாம சங்கீர்த்தனம் (கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!)
🔹 ஆண்டாள் தன் தந்தையாரைப் போன்றே இப்பாசுரத்தில் பாவை நோன்பிருந்ததற்குக் கண்ணன் இன்னின்ன பரிசுகளைத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுகிறாள்.

பெரியாழ்வார் தம் பல்லாண்டில் விழைந்த பரிசுகள்
"நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே !"
🔹 1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம் )கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம் ),கண்ணனை தரிஸித்தும் (ஸாரூப்யம் ) ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர். இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றனர்.(ஸாயுஜ்யம் -கூடிக் குளிர்ந்தே ).
🔹 மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள் என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள். அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.
🔹 (கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா) தன்னை ஏற்றுக் கொள்ளாமல் தூற்றுவோரையும் தன் பக்கமாய் மாற்றும் நற்குணம் கொண்ட பகவான்.
இந்திரன் இறுமாப்போடு கொட்டிய பெருமழையிலிருந்து கோவர்த்தன கிரியினைக் குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்பாடியைக் காத்ததின் பின், இந்திரனே வருந்தி, மனந்திருந்தி, கண்ணனுக்கு "ஸ்ரீகோவிந்தராஜன்" என்று பெயர் சூட்டிப் பட்டம் கட்டினான். இதுவே "ஸ்ரீகோவிந்தராஜ பட்டாபிஷேகம்" என்று உயர்த்திக் சொல்லப்படுகின்றது. ஆண்டாள் வாழ்ந்த திருவில்லிப்புத்தூரும் 'கோவிந்தன் வாழுமூர்' தான். அசையும் அசையா பொருட்கள் அனைத்தையும் காப்பவன் இவன். "அனைத்தையும் காக்கும் இறைவன்" என்ற பொருளில் வரும் பெயரான கோவிந்த நாமம் ஸ்ரீவைஷ்ணவ நெறியில் தனிச்சிறப்பு வாய்ந்திருக்கிறது.
🔹 (உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு) கண்ணனைத் தொழுது நோன்பிருந்து பறையினைப் பெற்று. உன் + தன்னை= கண்ணனை மட்டும் பாடவில்லை, அவனைச் சேர்ந்தவர்களான ,அவனது வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை எல்லோரையும் தானே பாடினார்கள்.
🔹 (பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால்) நோன்பிருந்தமைக்காக ,அனைவரும் பார்த்து வியக்கும்படி போற்றும்படி பரிசுகள் வேண்டுகிறோம். "இதென்ன இச்சிறுபெண்கள்? மார்கழியாம், நோன்பாம், இருக்கிறார்களாம், கண்ணன் பறை தருவானாம்?" என்றிருந்தவர்கள் எல்லோரும் வியக்கும்படியாக நாங்கள் நோன்பிருந்ததென்ன, நீ எங்களுக்குப் பரிசுகள் கொடுத்ததென்ன என்று தர வேண்டும் கண்ணா!" என்று ஆண்டாள் நயமாக சொல்கிறாள் !
🔹 (ஆடை உடுப்போம்) கண்ணன் உடுத்திக் களைந்திட்ட ஆடையைக் காதலோடு ஆயர்குலப் பெண்கள் உடுத்துவார்களாம் ! அவ்வளவு உரிமை அவன் மேலே !
🔹(கூடி இருந்து குளிர்ந்தே) -அதை உண்பதோடல்லாமல், உன்னுடன் கூடிக் களித்திருக்கும் இன்பத்தை அடைந்து உள்ளம் குளிர அருள் செய்.
🔹கோவிந்தா- இப்பெயர் மிகவும் உயர்ந்தது என்று ஶ்ரீவைஷ்ணவ நெறியாளர்கள் உரைக்கின்றனர். "அனைத்தையும் காப்பவன்" என்ற பொருள். இறைவன் தன்னை வெறுப்பவர்களையும் அருள் செய்து காக்கின்றான். தன்னைப் பணிந்தவர்களை யும் அருள் செய்து காக்கின்றான். சரி. இவையிரண்டும் செய்யாதவர்களை ? அங்கே தான் கோவிந்த நாமம் வருகின்றது. கோ வாகிய பசுக்கள் கண்ணனிடம் தம்மைக் காக்கச் சொல்லிக் கேட்கவில்லை, கண்ணன் அவற்றின் பின் சென்று காத்த போது, அவனைப் புகழவுமில்லை, இகழவுமில்லை. ஆயினும் கண்ணன் அவற்றைக் காத்தானல்லவா? அது போன்றேத் தன்னை அண்டியவர் அண்டாதவர், அறிந்தவர்,அறியாதவர், இப்படி அனைவரையும் காப்பவன் என்பதைக் குறிக்கவே "கோவிந்த" நாமம்.
🔹(சூடகமே,தோள்வளையே,தோடே,செவிப்பூவே ,பாடகமே,)  இவை ஶ்ரீவைஷ்ணவ நெறியில் இணைந்த ஒருவருக்கு ஆச்சாரியார் செய்து வைக்கும் பஞ்சசம்ஸ்காரத்தின் உருவகமாகக் கொள்ளலாம்.
🔹(தோள் வளையே) வலக்கையில் ஸுதர்ஸன சக்கரக் குறியீட்டையும், இடக்கையில் பாஞ்சசன்ய சங்கின் குறியீட்டையும், திரு இலச்சினை,பொறித்துக் கொள்ளுதல்
🔹 (சூடகமே) - மேனியில் பராமனுடைய 12 உப-வ்யூஹங்களைக் குறிக்கும் வகையில் ஊர்த்துவபுண்டரங்கள் எனப்படும் திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்ளுதல் (திருமண் காப்பு )
🔹 (தோடே) பிரணவ வடிவைக் கொண்டிருக்கும் செவியினைக் குறிக்கின்றது. இரஹஸ்ய த்ரயத்தில் வைணவ நெறியின் மூலமந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெறுதல்
🔹 (செவிப்பூவே) திருமகளாகிய தாயாருடன் தொடர்புடைய இரண்டாவது இரஹஸ்யமான த்வய மந்த்ர உபதேசம் பெறுதல்
🔹 (பாடகமே) காலில் அணியும் அணிகலன், இறைவன் திருவடியில் சரணம் செய்வதைக் குறிக்கும் விதமாய், சர்மஸ்லோகம் என்கின்ற இறை உறுதிமொழியைக் குறிக்கின்றது.
🔹 (ஆடை உடுப்போம்) இறைவனுக்கு என்றும் தொண்டு செய்கின்ற அடியார் என்பதை உணர்த்தும் தாச பாவத்தைக் குறிக்கின்றது . (அடியேன் இராமானுஜ தாசன் என்று குருவின் மூலம் பரமதாச பாவத்தைச் சொல்வது)
🔹 (பால்சோறு நெய் மூட) திருவாராதனம் என்கின்ற இறைப்பணியைக் குறிக்கின்றது.
கூடிக் குளிர்ந்தே.

இறையனுபவத்தைத் தனித்துப் பெறலாகாது, அடியார் பிறருடன் கூடியே நுகரவேண்டும் என்கிற ஶ்ரீவைஷ்ணவ நெறியினைக் குறிக்கின்றது.


            🔹🔸|| திருப்பாவை ஜீயர்|| 🔹🔸

 யக்ஞமூர்த்தி போன்ற பலப் பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமியோடு எதிரம்பு கோர்ப்பவர்களாய் (கூடாதவர்களாய்) இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமிக்கு வெற்றியைத் தந்தார்கள்.
அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை உடையவர் ஸ்வாமி. அந்த சீர்கள் எவையென்னில்; கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல. திவ்யமங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பலப்பல. ஸ்வாமியின் வடிவழகை சேவித்த மாத்திரத்திலேயே ஈடுபட்டவர்கள் பலப்பலர்.



(கோவிந்தா) பசுக்களை மேய்ப்பதனாலேயே கண்ணன் கோவிந்தனாயினான். ஶ்ரீஸூக்திகளும் கோசப்தார்த்தமென்று கீழே காட்டினோமாகையாலே,ஸகலப்ரமாணங்களையும், "பிபேத்யல்பச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி" என்னும்படியான பீதியைப் போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும் கோவிந்தர்.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.





Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆண்டாள் தன்னைத் தானே குறிக்கப் பயன்படுத்தும் கோதை என்ற பெயரை வடமொழியில் 'கோதா' என்றே குறிப்பிடுவர். 'கோவிந்தா' என்ற நாமம் கோதா என்ற தன் பெயருக்குள் குடிகொண்டிருப்பதாலும் அவளுக்கு அதில் விருப்பமதிகம்.

    கோதையாகிய ஆண்டாள் பூமி தேவியின் அம்சமல்லவா? வராஹ அவதாரமெடுத்து அரக்கன் ஹிரண்யாக்ஷனால் நீருக்கடியில் ஒளித்து வைக்கப்பட்ட அவளையும் வெளிக்கொணர்ந்து காத்தவன் என்று பொருள்படும் கோவிந்த நாமத்தின் பால் அவளுக்குத் தனி விருப்பம் உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)