கோதையின் கீதை (பகுதி - 33)
"தேடிக்கிடையாத் திரவியத்தைத்
தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப்
பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில
நிகமாகம விளக்கைச்
சூடிக்கொடுத்த சுடர் கொடியைத்
தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!"
🔹[வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்]
🔹🔸🔷🔶 கோதையின் கீதை 🔶 🔷🔸🔹
🔹சங்க காலத்தில் நிலவிய "திருமால் வழிபாடு" ஆழ்வார்களின் காலத்தில் (கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு முடிய)
உயர்நிலையடைந்தது. திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு
ஆழ்வார்கள் பன்னிருவரும்
அருளிய பாசுரங்கள், "அருளிச்செயல்" எனவும்
'திவ்வியப்பிரபந்தம்' எனவும் ஶ்ரீவைஷ்ணவர்களால் வழங்கப்படுகின்றன.
ஆழ்வார் பாடிய அருட்பாசுரங்களை
"ஶ்ரீமந்நாதமுனிகள்" என்னும் வைஷ்ணவ ஆச்சார்யர் அரும்பாடுபட்டுத் தொகுத்தளித்ததாக ஶ்ரீவைஷ்ணவ
குருபரம்பரை நூல் கூறுகின்றது. பாசுரங்களின்
எண்ணிக்கையும் தெய்வத்தன்மையும் நோக்கி "நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்" என்று இத்தொகுப்புக்குப் பெயர் ஏற்பட்டது. எனினும் ஆழ்வார்களின் பிரபந்தங்களை "அருளிச்செயல்" எனக்குறிப்பதே முந்தைய வழக்கமாயிருந்தது.
மணவாளமாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் "அருளிச்செயல்" என்றே குறிப்பிடுகின்றார். [ஆழ்வார்கள் வாழி! அருளிச்செயல்வாழி!!]
ஆழ்வார்களைக் குறிப்பிட்டு, அவர்தம்
படைப்புகள் பற்றிக் கூறும் போதெல்லாம், "அருளிச்செயல்" என்றே அவர் பாடுவதைக் காணலாம். ஆசார்ய ஹிருதயம் என்னும் ஶ்ரீவைஷ்ணவ ரகஸ்ய நூல் "அருளிச்செயல்"
என்பதனோடு, "திவ்வியப்பிரபந்தம்" என்னும் பெயராலும் ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் குறிப்பிடுகிறது. நாளடைவில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை, திவ்வியப் பிரபந்தம் என்னும் வடமொழிப்பெயர் கொண்டு
அழைப்பதே நிலைபெற்றுவிட்டது. ஆறாயிரப்படி, குருபரம்பரை, கோயிலொழுகு போன்ற நூல்களில் திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயர் காணப்படுகின்றது.
"பிரபந்தம்" என்னும் சொல் "நன்றாகக் கட்டப்பட்டது" என்னும் பொருளில் நூலைக் குறிப்பதாகும். அதனோடு "திவ்வியம்" என்னும் அடைமொழி சேர்ந்து, திவ்வியப்பிரபந்தம் என ஆயிற்று. திவ்வியம் என்னும் சொல் தெய்வீகமான பொருள்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஶ்ரீவைஷ்ணவ நெறியில் இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் "திவ்வியதேசம்" எனப் பெயர் பெறுகின்றன. இறைவனால் மயர்வற மதிநலம் (மயக்கம் நீங்கிய அறிவுச் செல்வம்) அருளப்பெற்ற தெய்வப்புலவர்களான ஆழ்வார்கள் "திவ்விய சூரிகள்" என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.
எனவே அவர்களாற் பாடப்பெற்ற பிரபந்தங்களும் திவ்வியப்பிரபந்தங்கள் ஆயின. இன்று சகலரும் அறிந்த பெயர்
"நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்" என்பதே. ஆழ்வார்களின் பிரபந்தங்களை "தமிழ்மாலைகள்" எனவும், "சந்தமிகு தமிழ்மறை",எனவும் "பதின்மர்கலை" எனவும் குறிப்பதுண்டு.
🔹🔸"ஆழ்வார்" என்னும் சொல்லுக்கு, ‘இறைவனுடைய கல்யாண
குணங்களாகிய அமுதவெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர்’ என்பது பொருளாகும். (கல்யாண குணங்கள் = மிகவுயர்ந்த போற்றத்தக்கப் பண்புகள்) ‘வேறொன்றில் கண் வையாதே பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டு இருந்தமையால் இவர்களுக்கு
ஆழ்வார்கள் என்று பெயராயிற்று’. (பகவத் குணங்கள் = தெய்வீகப் பண்புகள்)
🔸 பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார்,
ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் எனப் பன்னிருவர் ஆழ்வார்கள் ஆவர். இவர்களுள் முதல் மூவரும் காலத்தால் முந்தியவர்கள்
ஆதலின் முதலாழ்வார்கள் எனப்படும். ஆழ்வார்களுள் பதினொருவர் மட்டுமே இறைவனைப் பாடியுள்ளனர்.
மதுரகவியாழ்வார் திருமாலைப் பாடவி்ல்லை. நம்மாழ்வாரையே அவர் தம்முடைய ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டு போற்றிப்
பாடியிருக்கின்றார். ஆழ்வார்கள் அனைவருமே பிரபத்தி நெறி பற்றிப் பேசியவர்களாதலால் அவர்களுக்குப் பிரபந்நர்கள் என்றும்,
அவர்களின் தலைவரான நம்மாழ்வாருக்கு,
🔹🔸 "பிரபந்ந,ஜனகூடஸ்தர்" 🔹🔸
என்றும் பெயர் ஏற்பட்டது. (பிரபந்நர் -
பிரபத்திநெறியைக் கடைப்பிடிப்போர்.
பிரபந்ந ஜனகூடஸ்தர் - அந்நெறியைக் கடைப்பிடிப்போர்க்குத் தலைவர்)
🔸ஆழ்வார்களின் எண்ணிக்கையில் ஆண்டாள், மதுரகவி ஆகிய இருவரையும் சேர்க்காது பதின்மர் எனக்கொள்ளும்
வழக்கும் உண்டு. ‘ஆண்டாள் ஏனைய ஆழ்வார்கள் போலன்றித் திருமாலைக் கணவராக வரிக்கும் பேறு பெற்றவராதலின் அவர் ஆழ்வார்களுள் ஒருவராகச் சேர்த்துக் கணக்கிடப் பெறவில்லை;
மதுரகவியோ திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரிடம் மட்டுமே பக்தி பாராட்டியதால், அவரும் ஆழ்வார்கள் வரிசையில்
சேர்க்கப்பெறவில்லை’. இவ்வாறு கூறப்பட்ட போதிலும் "ஆழ்வார்கள் பன்னிருவர்" என்னும் வழக்கே வெகுஜனங்களால்
நிலை பெற்றுவிட்டது. வைஷ்ணவத்தின் அடிப்படைக் கருத்துகளை
வழங்கும் திவ்வியப் பிரபந்தம் "திராவிடவேதம்" என்றும் பாராட்டப் பெற்றது.
🔸திருமங்கையாழ்வார் காலத்திலேயே திவ்வி்யப் பிரபந்தங்களைத் திருக்கோயில்களில் பாடும் மரபு உருவாயிற்று.
திருவரங்கம் கோயிலில் உற்சவரின் முன் ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய
திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயி்த்தார் என அறிகிறோம். திவ்வியப்பிரபந்தம் ஓதுதலைத்
திருவரங்கம் கோயிலில் நடைமுறைக்குக் கொண்டுவந்து, அதை மற்றைய வைஷ்ணவ ஆலயங்களிலும் செயல்படுத்துமாறு செய்தவர்
ஶ்ரீமந்நாதமுனிகள் ஆவார். அவர்காலம் தொடங்கித் திருவரங்கத்தில் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாளும் இராப்பத்து
எனப்படும் திருவாய்மொழித் திருநாளும் [ "திருவத்யயனம் உத்ஸவம்" ] நடைபெற்று
வருகின்றன.
🔸நாலாயிரம் தேடித்தந்த ஶ்ரீமந்நாதமுனிகள் காலம் தொடங்கி ஶ்ரீவைஷ்ணவ சமய ஞானக்கல்வி ஓராண்வழியாகவே உபதேசிக்கப்பட்டு வந்தது. அதாவது ஓர் ஆசிரியனிடத்தில் (ஆசார்யன்) சீடன் ஒருவன் மட்டுமே கற்கலாம். ஒருவன் கற்று முடித்த பின்னரே மற்றொருவன். பின்னர் அச்சீடன் ஆசான் ஆன நிலையிலும் அவனிடத்தே
ஒருவன். இப்படி வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது தான்
ஓராண்வழி முறை. இதனை மாற்றி முன்னோர் செய்த வரம்பினை அறுத்து, ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள்
என்றார் இராமாநுசர். அதன் அடையாளமாகத்தான் திருக்கோட்டியூர் நம்பியிடத்தே தாம் பெற்ற திருமந்திரப்
பொருளை உலகுக்கெல்லாம் அறிவித்தார் அவர். வழிவழியாக நிலவிய மரபைத் தம் வள்ளன்மையால் மாற்றியவர் இராமாநுசர்.
🔸ஶ்ரீமத் இராமாநுசர் சாதிவேறுபாடற்ற ஒரு பொதுநெறியை உருவாக்கினார். இவர் தான்பெற்ற இன்பம் பிறரும் பெறவேண்டும்
என்ற பரந்த எண்ணத்தை உடையவர் ஆவார். நால்வகைக் குலத்திற்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று கருதப்பட்டிருந்தவர்களைத் திருக்குலத்தாராகக் கண்டு போற்றியது அவர் திருவுள்ளம். மேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) திருமால் கோயிலில்
அவர்கள் செய்த உதவியைப் பாராட்டி, அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபடவும் அனுமதி அளித்தார். பல நூற்றாண்டுகளுக்கு
முன்னே அரிஜனங்களுடைய ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலியவர் அவரே ஆவார்.
🔹🔸திருமால் அடியார் கூட்டத்தில் (பாசுவத கோஷ்டி) சாதியைக் குறிப்பிடுவது (ஜன்ம
நிரூபணம்) கூடாது என்னும் கொள்கையைத் தாமே கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியும் காட்டினார். காவிரியில் நீராடப்போகும்போது அந்தணரான கூரேசரில் தோள்மீது தம் கையை இட்டுச் செல்வாராம் இராமாநுசர். நீராடித்
திரும்பும்போதோ, தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லிதாசரின் தோள்மீது அவரின் திருக்கை இருக்குமாம். சாதிப்
பற்றுடையவர்கள் இந்தக் காட்சி கண்டு
மருண்டார்கள்; திகைத்தார்கள். ஆனால் இராமாநுசரோ, நால்வகைச்சாதி நாராயணனுக்கு இழைக்கும் அநீதி என்று
உணர்ந்தவர். அங்ஙனம் உணர்ந்தமையினாலே, தம் வாழ்விலும் பொதுமையுணர்வை அப்படியே கடைப்பிடித்துக் காட்டினார்
🔹🔸திருக்கோட்டியூர் நம்பியிடம் ரஹஸ்யார்த்தங்களை (சமய
நுண்பொருளை)ப் பெறுவதற்காகப் பதினெட்டு முறை நடந்தார் இராமாநுசர். திருவரங்கத்துக்கும், திருக்கோட்டியூருக்குமாகப் பலமுறை அலைக்கழித்த பிறகு நம்பிகள் மனமிரங்கி, ‘இவ்வர்த்தத்தை நீர் யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று நிபந்தனையிட்டு, நலந்தரு சொல்லான நாராயண மந்திரத்தை உபதேசித்தார். பிரணவத்தின் ஆழ்பொருளையும் எட்டெழுத்தின்
(திருமாலைப் போற்றும் திருமந்திரம்) விரிபொருளையும் விளக்கிக் கூறினார். விளக்கம் பெற்றதுதான் தாமதம்.
விரைந்தெழுந்தார் இராமாநுசர். தம்மை மறந்தார். தம் ஞானாசிரியரான திருக்கோட்டியூர் நம்பி தமக்கிட்ட கட்டளையையும் மறந்தார். அவ்வூர்க்கோயிலின் உச்சிமீது ஏறி,
"சேரவாரும் செகத்தீரே" என்று மக்களைக் கூவியழைத்து, நம்பியுரைத்த மறைப்பொருளையெல்லாம் சாதாரண மக்கள்
முன்னே வெளியிட்டார். பலமுறை நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தைப் பலரும் அறிய ஓலக்கமாக வைத்து உபதேசித்தார். அந்நிலையில், தானறப் பெய்து மாயும்
தடமுகில் போல் அவர் விளங்கினார். (தடமுகில் - பெரியமேகம்) நம்பி அவரை அழைத்து, என் கட்டளையை மீறியதால் நீர் என்ன பெற்றீர்? என்று வினவ, அழிவில்லாத நரகம் பெற்றேன்; நசிப்பது நான் ஒருவன் மட்டுமே. இத்திரள்கள் எல்லாம் ஆனவான் பேரின்பத்தை அருந்துமே என்று பதில் உரைத்தார் இராமாநுசர். (ஆனவான் பேரின்பம் - வைகுந்தம்) சீடனின் பக்குவ நிலை கண்ட ஆசார்யர், அவரை ஆரத்தழுவிக் கொண்டார். இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் "எனக்கே பெருமான் ஆனீர்" என்று பொருள். அன்றுமுதல் இராமாநுசரை "எம்பெருமானார்" என்னும் பெயரால் குறிப்பது பெருவழக்காயிற்று.
🔸காரேய் கருணை கரைபுரண்டபடியால் அர்த்தத்தின் சீர்மை பாராமல், சம்சாரிகள் படும் அனர்த்தத்தை நோக்கியே, இங்ஙனம் மறைப்பொருளை வெளியிட்டார் இராமாநுசர். (காரேய்கருணை - கரியமழை
மேகம் போன்ற கருணை) இதனால் கருணைக் கடலான எம்பெருமானைக் காட்டிலும் கருணையில் விஞ்சி நின்றார் அவர்.
ஆகவே எம்பெருமானார் (எமக்கெல்லாம் தலைவர்) என்னும் சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டது சரியே எனலாம். இதனை அங்கீகரித்த
திருவரங்கத்து இறைவனும், ஸ்ரீவைஷ்ணவ மதத்துக்கு
🔸 🔹 🔸"எம்பெருமானார் தரிசனம்" 🔸 🔹 🔸
என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தானாம். ஶ்ரீமணவாளமாமுனிகள் தாம் பாடிய
உபதேசரத்தினமாலையில், (37,38 )
இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.🔹கடவுள் மறுப்புக்கொள்கையுடையவர்களும் இராமாநுசரை வியந்து நோக்கியதையும், போற்றியதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்."முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்ற தன்றோ?"
என்னும் "பாவேந்தர் பாரதிதாசன்" அவர்களின் பாராட்டுரை இங்கே நினைத்தற்குரியது ஆகும்.
🔹🔸||: திருப்பாவை ஜீயர் :|| 🔸🔹
🔷இறைவனை அடைவதற்குரிய நெறிகளைக் கர்மயோகம் (செயல்நெறி), ஞானயோகம் (அறிவுநெறி), பக்தியோகம் (அன்புநெறி) என்பன கூறப்படுகின்றன. இவற்றுடன் சரணாகதி (அடைக்கலநெறி), ஆசார்யாபிமானம் (ஆசிரியப்பற்று)
போன்றவைகளையும் நெறிகளாக எடுத்துரைப்பது உண்டு.
1) கர்மயோகம் 2) ஞான யோகம், 3) பக்தி யோகம் , 4) ஸ்வநிஷ்டை எனும் பிரபத்தி யோகம் , 5) ஆச்சார்ய நிஷ்டை எனும் பிரபத்தி யோகம் என்னும் இவற்றை யோக பஞ்சகம் என்பது மரபு.
இதில், முதல் நான்கு நெறிகளை பகவத் கீதை மூலம் ஶ்ரீகண்ணன் நமக்குரைக்கிறான். ஐந்தாவதான ஆச்சார்ய நிஷ்டை பற்றி வைணவ குருபரம்பரைக்கதைகளில் காணலாம்.
ஆசிரியப்பற்று (ஆசார்யாபிமானம்)
மேற்கூறிய நான்கு வழிகளில் ஒன்றையும் கடைப்பிடிக்க இயலாதவனாய் இருப்பவனுக்கு ஆசார்யன் (ஆசிரியன்) திருவடிகளே தஞ்சமாகும். இது ஶ்ரீவைஷ்ணவ சமயம் காட்டுகின்ற பிறிதொரு நெறியாகும்.
“பக்தியில் அசக்தனுக்குப் பிரபத்தி; பிரபத்தியில் அசக்தனுக்கு இது” என்று ஸ்ரீவசனபூஷணம் (சூத்திரம்: 465)
குறிப்பிடுகின்றது. பக்தியில் நிற்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு உரிய நெறி சரணாகதி என்பதும், அந்தச் சரணாகதியிலும்
நிலைத்து நிற்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஆசார்யாபிமானம் என்பதும் இதன் பொருளாகும். ஆசிரியன் இறைவனைப் பெறுவதற்குத் துணையாய் நிற்கிறான். அவன் முதலில் அறியாதனவற்றை அறிவிக்கிறான்.
பின்னர் இறைவன் குணங்களிலே ஈடுபட்டு அவற்றைக் துய்க்கும்போது உசாத்துணையாகின்றான். (உசாத்துணை =
உற்றதுணை) மேலும் இறைவனைக் கிட்டுகைக்கு (அடைவதற்கு)ச்
சேர்த்து வைப்போனாகவும் (புருஷகாரபூதனாகவும்) பேற்றுநிலையில் தொண்டினை வளர்ப்பவனாகவும் அமைகின்றான். இவ்வகையால் எல்லாம் ஆசிரியன் கொள்ளத்தக்கவன் ஆகிறான். இதனாலேயே, "ஆச்சார்யாபிமானமே உத்தாரகம்" (உய்யும் வழி) என்று
ஆசிரியப்பற்றினைப் பற்றி ஸ்ரீவசனபூஷணம் எனும் வைணவ ரகஸ்ய நூல்
(சூத்திரம்-250) போற்றுகின்றது
1) கர்மயோகம் 2) ஞான யோகம், 3) பக்தி யோகம் , 4) ஸ்வநிஷ்டை எனும் பிரபத்தி யோகம், என்று ஶ்ரீகண்ணன் கூறிய நான்கு யோகங்களையும் கூறி, ஐந்தாவது யோகமான "ஆச்சார்ய நிஷ்டை எனும் பிரபத்தி யோகம்" பற்றியும் ஶ்ரீகோதை ஆண்டாள் தமது கோதையின் கீதையான திருப்பாவையில் கூறுகிறாள். அதனாலேயே வைஷ்ணவ விடிவெள்ளியான லோகாச்சார்யர் ஸ்வாமி இராமாநுஜர் திருப்பாவையை பெரிதும் கொண்டாடினார். எம்பெருமானார்க்கு இப்பிரபந்தத்தின் (திருப்பாவை) மேலுள்ள ப்ரேமம் அளவற்றது. "திருப்பாவை ஜீயர்" என்று இதையிட்டு நிருபிக்கும்படியாக விளங்கினாரன்றோ நம் இராமாநுஜர். திருப்பாவை ஈராயிரப்படி வ்யாக்யானத்தில் அருளிச்செய்யப்பட்ட பின்வரும் ஐதீகம் இங்கு உணரத்தக்கது. எம்பெருமானாரை 'ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்' என்ன; திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப்பாவைக்கு ஆள் கிடையாது என்று அருளிச் செய்தார். மேலும் மோவாய் எழுந்த முருடர் (மீசை முளைத்த முரட்டு ஆண்கள்) கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்; முலை எழுந்தார் கேட்க வேணும்; அவர்களிலும் எம்பெருமானைத் தாங்கள் அனுபவிக்க வேணுமென்றிருக்கும் பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல; பல சொல்லி என்? பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான (ஶ்ரீகோதை) தானே சொல்லித் தானே கேட்குமித்தனை என்று அருளிச் செய்தார்.
🔶 ஒரு நாள் இராமாநுஜர் “உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிட்சைக்கு ஒரு நாள் தனது ஆச்சார்யரான ஶ்ரீபெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, பெரியநம்பியின் மகள் "அத்துழாய்" கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரே சமயம் நிகழ, பகவக் இராமானுஜர் அவளை "நப்பின்னை" என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர். இதனால் இராமானுஜருக்கு கோதையின் கீதையான திருப்பாவையில் மிக அதிகமான ஈடுபாடு உள்ளதை அறிந்த ஶ்ரீபெரியநம்பி ஸ்வாமிகள் இராமாநுஜர்க்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பெயரிட்டார். இந்த பெயரையே இராமாநுஜரும் விரும்பினார். பன்னிரு திருநாமங்களில் இராமானுஜருக்கு பிடித்த திருநாமம்
🔷🔶⭐ | "திருப்பாவை ஜீயர்" | ⭐🔶🔷
என்பதே ஆகும். அத்தகைய "திருப்பாவை ஜீயர்" பகவத் இராமாநுஜரைத் தொழுது, வேதமனைத்துக்கும் வித்தாகும் திருப்பாவை பாசுரங்களை இதுவரை 32 பகுதிகளில் இனிதே அனுபவித்தோம்.
🔷 பரமாத்மாவாகிய இறைவன் மட்டுமே ஆண்மகனென்றும், மற்றுமுள்ள எல்லா ஜீவாத்மாக்களும் அந்தப் பரமாத்மாவையே நாடுகின்ற பெண் பாலர்களென்றே (நாயிகா பாவம்) கொள்ளும் வைஷ்ணவ நெறியாளர்களான ("நாராயண பாராயணர்") பன்னிரு ஆழ்வார்களின் சந்ததியானவளும், பூமி தேவியின் அம்சம் என்றும் கொண்டாடப்படும் ஶ்ரீகோதை ஆண்டாள் பெண்ணாகவே பிறந்தபடியால், ஆழ்வார்களில் வேறு யாரும் கைக்கொள்ளாத "பாவை நோன்பு" வழிமுறைகள் மூலம், இறைவனையே கணவனாக அடைந்து, பகவானுக்கு ஏற்ற "பகவதி" ஆனாள்.
🔶 ஶ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ரசயனப் பெருமாள் கோயில் நந்தவனத் தொண்டில் ஈடுபட்டிருந்த, ஶ்ரீபெரியாழ்வாரின்
(விஷ்ணு சித்தர் ) வளர்ப்பு மகளாக, பூமிப்பிராட்டியின் அம்சமாக ஶ்ரீகோதாப்பிராட்டி துளஸிச் செடியின் அடியில் அவதரித்தாள்.
கிடைத்தப் பெண் குழந்தையைத் தன் குழந்தையாகவே பாவித்து, அன்பும் சோறும் ஊட்டியதோடு, தமிழும், வைஷ்ணவமும் சொல்லிக் கொடுத்தே வளர்த்தார், பெரியாழ்வார். தந்தையின் மூலம் பெற்ற இறைஞானம், சிறுபெண்ணாகிய ஶ்ரீகோதைக்கு நாளடைவில் ஶ்ரீகண்ணன் மீதான காதலாகவே மாறிவிட்டது. பூமாலையைக் கட்டிச் சூடிக் கொடுத்ததோடு, இறைவனுக்குத் தமிழில் "திருப்பாவை, மற்றும் நாச்சியார் திருமொழி" என்ற பாமாலைகளும் தொடுத்திருக்கிறாள். தன் மணாளனாய்த் திருவரங்கத்தானைத் தேர்ந்தெடுத்து அவன் திருவடிகளில் அனைவரும் காணுமாறு கலந்து மறைந்தாள். சூலறியாது அயோனிஜையாக வந்துதித்தவள், சென்றத் தடமறியாது அரங்கனுடன் இரண்டறக் கலந்தவள். வாழும் போதும் அந்தக் ஶ்ரீகண்ணனின் காதலியாகவே வாழ்ந்தவள். பரந்துபட்ட மறைஞான விளக்கங்களையெல்லாம் தன் 30 திருப்பாவைப் பாசுரங்களிலும், 143 நாச்சியார் திருமொழிப் பாடல்களிலும் அடக்கித் தந்தவள்!
🔶🔶🔶 கோதையின் கீதை "திருப்பாவை"🔶🔶🔶
🔶 பாவை என்றால் பொம்மை என்று பொருள். (பாவை என்றால் பெண் என்றும் பொருள், நோன்பு என்றும் பொருள்.) ஆற்று மணலில் பிடித்துச் செய்த பொம்மையை கார்த்தியாயினி தேவியாக வரித்து, அவளை வேண்டி, உத்தமனான நாராயணனை அடைய வேண்டும் என்ற நோக்கில் விரதம் இருப்பதை ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'எம் பாவாய்' என்று வருமாறு இயற்றிய 30 பாசுரங்களில் சொல்லியிருக்கிறாள் ஆண்டாள் .
உயர்ந்த இறையைப் பற்றிய பாடல்கள் என்பதாலும் , பூமி தேவியின் அம்சமாகப் பிறந்த உயர்ந்த பெண்பாலான ஆண்டாள் பாடியது என்பதாலும் , திரு என்று அடைமொழியும் சேர்ந்து இந்நூல் 'திருப்பாவை' என்று வழங்கலாயிற்று. இறைவனையே தன் மணாளனாக அடைய விரும்பி, அதற்காகப் பாவை நோன்பு என்னும் விரதம் மேற்கொள்ளுகின்ற ஆண்டாள், தன்னை ஒரு இடையர்குலப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு,, தன்னோடு ஆயர்பாடியிலிருக்கும் மற்றப் பெண்களையும் சேர்த்துக்கொண்டு, சரணாகதமென்னும் பாவை நோன்பின் பெருமையை எடுத்துச் சொல்லி, அந்நோன்பின் வழிமுறைகள், யார் நோற்கலாம், எதற்காக, யாரை வேண்டி, இந்நோன்பின் பயன் என்ன, அப்பயனைத் தருபவர் யார், என்றெல்லாம் விளக்கி அவர்களையும் அவ்விரதமிருந்து பரமனின் அருளை பெறச் செய்யும் வகையில் திருப்பாவைப் பாசுரங்களை இயற்றியிருக்கிறாள். அவள் சொன்னவை வேதங்களுக்கே வித்தான உண்மைகள் ஆகும்.
🔶 இப்படிப்பட்ட பெருமையையுடைய "திருப்பாவை" பிரபந்தத்துக்கு நம் பூர்வாச்சார்யர்கள் பலர் அமுதினுமினிய வ்யாக்யானங்கள் இட்டருளியிருக்கிறார்கள். பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை மூவாயிப்படி என்னும் வ்யாக்யானமும், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆறாயிரப்படி என்னும் வ்யாக்யானமும், திருநாராயணபுரத்துக்கு ஆய் என்று ப்ரசித்தரான ஜநந்யாசார்யர் ஈராயிரப்படி, நாலாயிரப்படி என்னும் இரு வ்யாக்யானங்களும் அருளிச் செய்திருக்கிறார்கள். ( 'படி' என்றால் 32 எழுத்துக்கள் கொண்டது. 3000 x 32 = 96000 எழுத்துக்கள் ; 6000 x32=192000 எழுத்துக்கள்; விளக்கங்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையில் வகுக்கப்பெற்றுக் காரணப்பெயர்களாயின)
வைஷ்ணவ இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு பாசுரத்தில் உள்ளிடு கருத்தை ஆழமாக விளக்கிக் கூறுகிறார்கள். 'ஸ்வாபதேசம்' என்று அதைச் சொல்கிறார்கள். அவற்றுள் முக்கியமானதாகக் கருதப் படுபவை ' சுத்தஸத்வம் தொட்டாச்சாரியார் மற்றும் வானமாமலை இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் இயற்றியவை .
🔶 இவைகளை அநுசரித்தே வைணவச் சான்றோர் பெருமக்கள் திருமால் திருக்கோயில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முப்பது நாட்களுக்கு திருப்பாவை காலட்சேபம் இனிதே நடத்துகின்றனர். அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சார்யர்கள் காட்டிய நெறிப்படி கோதையின் கீதையான திருப்பாவையை இதுவரை நாம் இனிதே அனுபவித்தோம்.
🔵 இறையருள் பெறுவதற்கு எளிமையானதும் ஒரே வழியாக இருப்பது "பரந்தாமன் திருவடியைப் பற்றுதலாகிய சரணாகதியே" என்ற உண்மையைத் தனக்குப் பிறகு வருபவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் எனும் உயர்நோக்கடன் திருப்பாவை முப்பது பாடலைப் பாடியிருக்கிறாள் கோதை.
🔵 திருப்பாவை முப்பது பாசுரங்களும் "வேதாந்த ரகஸ்யங்கள்" நிரம்பிய பாசுரங்கள் ஆகும். வேதமனைத்திற்கும் வித்தாகும் என்றே கொண்டாடப்பட்ட தமிழ் வேதம். வடமொழியில் உள்ள மெஞ்ஞானத்தை மிக எளிதாக சகலரும் புரிந்து கொள்ளும் வகையில் செந்தமிழில் பாடியதே, ஶ்ரீகோதை ஆண்டாளின் உயர்சிறப்பு.
🔶 கோதையின் கீதையான 'திருப்பாவை'யின் 30 பாசுரங்களையும் ஆச்சார்யப் பெருமக்கள் ஐயைந்தும் ஐந்தும் (5 * 5 + 5) என்று பகுதிக்கு ஐந்து வீதம் ஆறு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
🔶 முதல் பகுதி(1-5) இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம் 'நோன்பு' நடத்துவதற்கான வழிமுறைகள் சொல்லப் படுகின்றன.
🔶 இரண்டாம் பகுதி (6-10) இதில் வரும் ஐந்து பாசுரங்கள் புதிதாக 'இறைநெறி'யில் இணைந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன.
🔶 மூன்றாம் பகுதி (11-15) இதில் வரும் ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன .
🔶 நான்காம் பகுதி (16-20) இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறைவன் உறையுமிடம் சென்று அவனைச் சார்ந்தோரையும், அவனையும் எழுப்பும் படி அமைந்துள்ளன,
🔶 ஐந்தாம் பகுதி (21-25) இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் ஶ்ரீகண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்துள்ளன.
🔶 ஆறாம் பகுதி (26-30) இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம், இறுதியாகவும், உறுதியாகவும், இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று ஶ்ரீகண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
🔶🔶 முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (ஶ்ரீகண்ணன்) குறித்தும்,
🔶🔶 2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,
🔶🔶 3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,
🔶🔶 4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,
🔶🔶 5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை ஶ்ரீகண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
🔶🔶 6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும்
இடைச்சியரை, உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,
🔶🔶 16-வது பாசுரத்தில், ஶ்ரீநந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
🔶🔶 17-வது பாசுரத்தில், ஶ்ரீநந்தகோபர், யசோதா பிராட்டி, ஶ்ரீகண்ணபிரான், ஶ்ரீபலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
🔶🔶 18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,
🔶🔶 19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, ஶ்ரீகண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
🔶🔶 21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (இடைச்சியர்) ஶ்ரீகண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், ஶ்ரீகண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
🔶🔶 23-வது பாசுரத்தில், ஶ்ரீகிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,
🔶🔶 24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப் போற்றியும்),
🔶🔶 25-வது பாசுரத்தில், (இடைச்சியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
🔶🔶 26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை ஶ்ரீகண்ணனிடம் யாசித்தும்,
🔶🔶 27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (இடைச்சியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை பட்டியலிட்டும்,
🔶🔶 28-வது பாசுரத்தில், (இடைச்சியர்) தங்களது தாழ்மை, ஶ்ரீகண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,
🔶🔶 29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து ஶ்ரீகண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,
🔶🔶 30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீகண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்
🔹🔸30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை,
🔷 "கோதா உபநிடதம்" [கோதோபநிஷத்] 🔶
என்று ஶ்ரீவைஷ்ணவ பூரவாச்சார்யர்களால் போற்றப்படுகிறது ! திருப்பாவையில்
மார்கழி ( 3 முறை ), திங்கள் ( 4 முறை )
பறை (11 முறை ) நீராட்டம் (6 முறை )
திருவடி (6 முறை), பாடி (18 முறை )
நாராயணன் (3 முறை ),ஓங்கி உலகளந்த (3 முறை), கோவிந்தன் (3 முறை),
கேசவன் (2 முறை ), மாதவன் (2 முறை ),
மாயன் (2 முறை ), மணிவண்ணன் ( 2 முறை ),
நப்பின்னை (4 முறை ) ,நந்தகோபன் (5 முறை ),
யசோதை (2 முறை ),செல்வம் (7 முறை ),
ஆராய்ந்து (2 முறை), செங்கண் (3 முறை),
புள் (4 முறை ), முலை ( 4 முறை),
மாரி ( 2 முறை), மழை ( 2 முறை),
பால் (6 முறை ), கோயில் ( 4 முறை),
விளக்கு ( 5 முறை ), தாமரை ( 3 முறை ),
மலர் ( 3 முறை ), தூயோமாய் (3 முறை),
கண்ணி ( 3 முறை ), கறவை (3 முறை ),
போற்றி ( 7 முறை ), பிள்ளாய் ( 2 முறை ),
பிள்ளை ( 3 முறை ), எழுந்திராய் (19 முறை), எம்பாவாய் (30 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருமாலின் இடக்கைச் சங்கு ( 5 முறை ),
திருமாலின் திருக்கண் ( 4 முறை ),
திருமாலின் திருவாய்
( 3 முறை ), திருமாலின் திருவடி
( 3 முறை ), திருமால் அவதரித்த ஆயர்குலம் ( 5 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.
🔹🔶செந்தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தாக அமைவது "ழ"கரமாகும். இந்த ழ கரத்தை தனது திருப்பாவை மூன்றாம் பாசுரமான "ஆழி மழைக் கண்ணா" எனும் ஒரே பாசுரத்தில் 11முறை பயன்படுத்தியுள்ள பான்மை "பாடவல்ல நாச்சியார்" ஶ்ரீகோதை ஆண்டாளுக்கே பொருந்தும்.
🔸🔷 ஶ்ரீகோதை ஆண்டாள் ஏகாரத்தைப் பயன்படுத்தி தான் கூறும் கருத்துக்களை ஒப்புயர்வற்றதாகக் காட்டுவது அவருக்கே சொந்தமான ஒரு கலையாகும். இதனால் "ஏகாரச்செல்வி" என்றும் கொண்டாடப் படுகிறாள்.
🔷🔶 ஏகாரச் செல்வியாகிய ஶ்ரீகோதைஆண்டாள் புகழ் பாடும் நூல்கள் கீழ்வருமாறு:
கோதா சதுஸ் ஸ்லோகி - ஶ்ரீஅனந்தாழ்வான்;
கோதா ஸ்துதி - ஶ்ரீவேதாந்த தேசிகர்;
ஶ்ரீகோதா உபமான அஷ்டகம் − ஶ்ரீவேதப்பிரான் பட்டர்; கோதை வெண்பா,ஶ்ரீஆண்டாள் அந்தாதி, சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்),ஶ்ரீஆண்டாள் அஞ்சுமணிமாலை - மதுரகவி ஶ்ரீநிவாசஐயங்கார்; ஆமுக்த மால்யதா (தெலுங்கு) − ஶ்ரீகிருஷ்ணதேவராயர்; ஶ்ரீநாச்சாரு பரிணயம் (தெலுங்கு) − பாஷ்கர சேஷாசலம்; ஶ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை, ஶ்ரீஆண்டாள் பிள்ளைத் தமிழ் - வில்லி; அபிநவ கோதா ஸ்துதி − காஞ்சீபுரம் மகாவித்வான் பி.ப.அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி;
ஶ்ரீஆண்டாள் கும்மி - அழகிய சொக்கநாத பிள்ளை; கோதை மாலை, திருப்பாவை மாலை - ரெ.திருமலை ஐயங்கார்; மார்கழி நோன்பு (அ) ஶ்ரீஆண்டாள் திருமணம் - திருமலை நல்லான்; கோதா வைபவம் - எக்கிராள கிருஷ்ணமாச்சார்யா; புதுவைச் சிலேடை வெண்பா,ஶ்ரீவில்லிபுத்தூர் தல புராணம் - கூத்திப்பாறை முத்துகிருஷ்ணராமாநுசதாஸர்; சூடிக்கொடுத்த நாச்சியார் பிரபந்தம் - வடிவழகிய நம்பி தாஸர்; கோதா பரிணய சம்பு, ஶ்ரீஆண்டாள் அஷ்டோத்திர சத நாமாவளி
- கேசவாச்சாரியார்; சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்), ஶ்ரீஆண்டாள்குறவஞ்சி நாடகம்,ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம், ஶ்ரீவரமங்கை சதகம் - வரகவி அப்புவய்யங்கார்(எ) ஶ்ரீநரசிம்மாச்சாரியர்; ஶ்ரீகோதா நக்ஷத்ர மாலிகை - சடகோப இராமாநுசர்; ஶ்ரீஆண்டாள் ஆடி உத்ஸவ நாடகம் − கணபதி ஐயர்; ஶ்ரீவில்லிபுத்தூர் மான்மியம் − ஶ்ரீஅலங்கார தேவராஜ ஸ்வாமி; கோதா சுப்ரபாதம், கோதா ஸ்தவம் − கிடாம்பி கோவிந்த ஐயங்கார்; கோதா பஞ்ச ரத்னம், கோதா அஷ்டகம்,கோதா மதுர ஸ்தோத்திரம்,கோதா கோபால ஸ்தோத்திரம் − திருவேங்கடத்தம்மாள்;
🔹🔸🔷🔶 🔶🔷🔸🔹
"ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||"
["கோதாஸ்துதி" _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]
(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய பூமிப்பிராட்டியாகவும், இனிமையானமற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல், மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)
🔹🔸🔷🔶 🔶🔷🔸🔹
திருப்பாவை பரமனின் பாதாதி கேசமாக பாடப்பட்டுள்ளது என்பர் பூர்வாச்சார்யர்கள். இரண்டாவது பாசுரத்தில் "பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி" என பாதமாக "அடி" என்றும்,
முப்பதாவது பாசுரமான "வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை" என முடியாக கேசம்(முடி) என்றும் திருவடி பாடுதலில் தொடங்கி திருமுடி பாடுதலில் முடிக்கின்றார். பரமனைப் பாதாதி கேசமாக பாடும் ஆழ்வார்களின் (அஞ்சுகுடி) சந்ததியான நம் அன்னை ஶ்ரீகோதையும் அம்மரபைப் பின்பற்றியே தமது பிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார்.
ஆழ்வார்கள் மரபை பின்பற்றிய
'யதிராச இளைய பெண்'ணாகிய
கோதாப் பிராட்டியின் திருப்பாவையை கொண்டாடிய ஜீயர் "ஸ்வாமி இராமாநுஜாச்சார்யர்" திருவடி நிழல் ஒதுங்கிய சிறியேனாகிய அடியேன், ஸ்வாமியின் பரமக்ருபையால் "கோதையின்கீதை" எனும் இந்த தொகுப்புக் கட்டுரையை [இந்த 33வது பகுதியோடு] நிறைவு செய்து எம் குலதெய்வமேயான "ஶ்ரீஉடையவர்" ஶ்ரீஇராமாநுஜாச்சார்யர் திருவடிகளை வணங்குகிறேன்.
ஶ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே
ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!
🔹🔸🔷🔶🔴🔶🔷🔸🔹
"கோதையின்கீதை" நிறைவு பெற்றது.
🔹🔸🔷🔶🔴🔶🔷🔸🔹
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.
Comments
Post a Comment