கோதையின் கீதை (பகுதி - 30)



🔹 கி.பி.1872ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து 12வயதிலே நாடகக் கம்பெனியில் சாதாரண நடிகனாகச் சேர்ந்து, பிற்காலத்திலே நம் கோதை ஸ்ரீஆண்டாளின் அற்புத அருள் சக்தியில் நாடகக் கலையுலகில் தமிழகம் கண்டிராத புதுமைகளையும் புரட்சிகளையும் செய்தவர் சி. கன்னையா நாயுடு அவர்கள். ஆண்டாளின் அருளைப் பெறுவதற்கு முன்பு வீண் பொழுது போக்குக் கதைகளையே நாடகமாக நடத்தி வந்தார். அவற்றால் பெரும் நஷ்டமடைந்து, மனமொடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தார். ஸ்ரீஆண்டாளை வணங்கி, கோவில் வாசலில் அனாதையாக படுத்துறங்கினார்.  பிறகு மறுநாள் மதுரையில் தங்கியபோது, அவரது கனவில் ஸ்ரீஆண்டாள் தோன்றி,  ஆறுதல் கூறி ஊக்கமும்,ஆறுதலும் அளித்தாள். மதுரை மேலக்கோபுரவாசலில் ஓட்டலில் பணியாற்றிய கிட்டப்பா, செல்லப்பா, அனந்த நாராயணன் என்னும் மூவரையும் வைத்து நாடகம் நடத்துமாறும் அவருக்கு அறிறுத்தி விட்டு கனவில் மறைந்தாள். அதன்படியே கன்னையா இராமாயணம்,மகாபாரதம், பகவத் கீதை, ஸ்ரீஆண்டாள் கல்யாணம், ஸ்ரீஇராமானுஜ வைபவம், தசாவதாரம், அரிச்சந்திரா போன்ற தெய்வீகக் கதைகளையே நடத்திக் காட்டி, மக்களைக் கவர்ந்து நாடகக் கலை உலகில்  பெரும் பெயரும் செல்வமும் பெற்றார்.

🔹🔸ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு கன்னையா அவர்கள் வழங்கியவை:- யானை,ஒட்டகம்,பசு, காளை, 305தோலா எடையுள்ள தங்கக் குடம் ("கன்னையா தங்கக்குடம்" என்றே கூறுவர்), தங்க டம்ளர்கள், தங்கத்தால் செய்த எச்சில் பணிக்கம், தங்கத்தால் செய்த மாம்பிஞ்சு மாலை, ரங்கூன் காசுமாலை, பச்சைக்கல் நடுவிலும், சுற்றிலும் வைரக் கற்களும் பதித்த பதக்கம் ("கன்னையா வைரப் பதக்கம்" என்பர்), தங்க சரிகைப் பாவாடைகள், தண்டியல், ஜரிகைப் பண்ணாங்கம், தசாவதாரத் தோரணம், அரங்கநாதர் சயனக் கோலத்துடன் கூடிய பெரிய திரை ஆகியன. இன்னும் பல கைங்கர்யங்களை நம் கோதை ஆண்டாளுக்குச் செய்துள்ளார்.


🔸சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள், ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.



🔹 திருப்பாவையின் 28வது பாசுரம்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


[பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் பழந்தமிழ் தொல்குடியான ஆயர் குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!
உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக ! ]

  🔹🔸  பாசுரச் சிறப்பு:- 🔹🔸

🔸கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை இடைச்சியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஶ்ரீஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது.
ஶ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் சம்பந்தம் ஏதும் இல்லாததால், தங்களுக்கு பகவத் விஷய ஞானம் இல்லை என்பதையும் "அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து" என்று சொல்லி ஒப்புக் கொள்கின்றனர். தாங்கள் பசுக்களை மேய்க்கும் சிறுதொழில் செய்து வாழ்பவர்கள் என்றும், ஆதலால் பகவத்-பாகவத சேவை என்று பெரிதாக எதுவும் செய்யாதவர்கள் என்றும் கூட கண்ணனிடம் மனம் விட்டுச் சொல்கின்றனர்!

"நீ ஆயர் குல மணியாக எங்கள் குலத்தில் அவதரித்தது மட்டுமே நாங்கள் பெற்ற ஒரே பெரும்பேறு, அதனாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் பெற்றவராகி விட்டதாக நினைக்கிறோம். மற்றபடி, நாங்கள் செய்த எதுவும் புண்ணியத்தில் சேராது. உனது அருமை பெருமைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குத் திறனில்லை. தகுதியுமில்லை. ஆனாலும், நீ ஒருவனே குற்றமற்றவன், குறையற்றவன் என்ற ஒரு விஷயத்தை எப்படியோ உணர்ந்து கொண்டோம், திடமாக நம்பினோம்!

உன்னோடான எங்கள் உறவு மட்டுமே அழிவில்லாதது என்பதை புரிந்து கொண்டு விட்டோம். உன்னை எங்களில் ஒருவராக எண்ணி, அன்பின் காரணமாக உண்டான உரிமையால் மட்டுமே, உனக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் இருந்திருக்கிறோம். உன்னையே கேலி செய்திருக்கிறோம்! அவை தவறு என்று கூட பேதைகளான நாங்கள் உணர்ந்ததில்லை, உன்னிடம் மன்னிப்பும் கேட்டதில்லை. ஆனால் உன் மேல் கொண்ட பேரன்பும் பரமபக்தியும் என்றும் மாறாது.

எங்கள் அறியாமையால், உன்னைச் சரணடைவதே கதி என்பது புரிய எங்களுக்கு இத்தனை காலமாகி விட்டது! எங்கள் கர்ம ஞான பக்தியில் குறைவிருக்கலாம். ஆனால், உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!

பரமனைப் பற்ற அடியவருக்கு வேண்டியது பேரன்பு மட்டுமே, பக்தியும், ஞானமும், வழிபாட்டு முறையைப் பேணும் சம்பிரதாயமும் கூட அவ்வளவு முக்கியமில்லை என்பதை ஆண்டாள் அருமையாக உணர்த்தியுள்ளாள்!

🔹🔸 இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை விளிக்கின்றனர். அதாவது, உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே *  துயிலெழுந்து கோபிகைகளை அரவணைத்துக் கொண்ட கண்ணன்,"நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஆண்டாள் இயற்றிய இந்தப் பாசுரம் மிக உயர்ந்த பொருட்செறிவு கொண்டது.
🔹🔸இந்தப் பாசுரமும், அடுத்து வரவிருக்கும் இருபத்தொம்பதாம் பாசுரமும் ஶ்ரீவைஷ்ணவ நெறியின் மந்திர இரத்தினம் என்று கொண்டாடப்படும் "த்வய மந்திரத்தின்" விளக்கப் பாசுரங்கள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று சொன்னதற்கான ஆழமான விளக்கமாக இந்த இரண்டு பாசுரங்களும் அமைகின்றன. அதாவது, இறைவனே அடையத் தக்கவன், ப்ராப்யம், உபேயம். அவனை அடைகின்ற வழியும் அவனே-,ப்ராபகம் உபாயம். ஸம்ஸாரமென்னும் கடலைக் கடப்பதற்கு ஜீவாத்மாக்களுக்குப் படகாக இருப்பவனும் ஆண்டவனே, அந்தக் கடலைக் கடந்து, ஜீவர்கள் அடையக்கூடிய பரமாத்ம நிலையும் ஆண்டவனே ! வழியாகவும், வழி சென்று சேர்க்கும் இடமாகவும் ஒரு பயணம் உண்டென்றால் அது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பயணமே !







இப்பாசுரத்தில் தான் ஆண்டாள் முதன்முதலாக 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள் . "நாங்கள் பறையும்,பரிசுகளும் வேண்டி உன்னைத் தொழுது வந்ததெல்லாம் உனக்குக் குற்றேவல் செய்யவே அன்றி வேறொன்றும் இல்லை" என்று கண்ணனிடம் உளப்பூர்வமாகத் தெரிவிக்கிறாள். "அறிவற்ற எங்களின் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்" என்று மன்றாடுகிறாள். "எங்களிடம் பல குறைகளிருப்பினும், உன் கருணைக்கு ஒரு குறைவுமில்லை ஆதலால் எங்களைக் காத்தருள் கோவிந்தா" என்று கோவிந்த நாமத்தைக் கொண்டாடும் பாசுரம்.

ஆகிஞ்சன்யம்(கையறு நிலை),நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு),பரமனின் சௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன் இறைவன் எனும் தெளிவு ), பரத்துவம் (நாராயணனே இறையென அறிதல் ), ஜீவாத்மா-பரமாத்மாவுக்கு உள்ள சம்பந்தம் ,அபராத க்ஷமணம் (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு), சித்தோபாயம் -பரமனை அடைவதற்கு ஆகிய பரமனே வழி என்று தெளிதல் என்றிவையான இறைவனை சரணாகதி செய்வதற்கான அறிவுத்தெளிவுகள், ஏழு நிலைகளை இப்பாசுரம் விளக்குகிறது. 

த்வயத்தின் முதல் வரியின் விளக்கத்தை, அடியவர் இறைவனை அடையத் தாமாக செய்ய வேண்டியது என்ன என்பதற்கான விடையை இப்பாசுரம் கொண்டுள்ளது. இறைவனை அடைவதற்குத் தாங்கள் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே என்று அறிவிக்கும் பாசுரம். வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மிக முக்கியமான மந்த்ரமான த்வய மந்திரத்தின் முதல் வரியின் விளக்கமே இப்பாசுரத்தின் உட்பொருள். (இரண்டாவது வரி அடுத்த பாசுரம்) . த்வயத்தின் முதல் வரி (ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே)

 🔹🔸(கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்) "இறைஞானமெல்லாம் அறியக்கூடிய வாய்ப்பினை நல்கும் அறிஞர்களின் நட்பெதுவும் எங்களுக்கு இல்லை. வாய்பேசாத ஆநிரைகள் மேய்த்துண்ணும், மாலையானதும் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி அடையும் சாதாரணர்கள்.
ஆகையினாலே அறிவு பெறுவதற்கு நாங்கள் விரும்பினாலும் அதற்கான வழியே இல்லாதவர்கள் நாங்கள் !" என்று தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.
🔹🔸(அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து) "உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்கள் குலத்திலாவது யாருக்காவது அறிவுண்டா?" எனக் கண்ணன் கேட்க அப்படியும் இல்லையென்று கூறுகிறார்கள். சரி தவறுகள் என்னவென்றெல்லாம் தெரியாதவர்கள், சூது வாதற்றவர்கள், இறைஞானம் பெறாதவர்கள் எங்கள் குலத்தினர் என்கிறார்கள். "நீங்களே பிறவியில் அறிவு பெறாவிட்டாலும், பெரியோர் கூறியிருக்கும் கருத்துகளைப் படித்தாகிலும் இருக்கிறீர்களா ?" என்றால் இல்லையென்றே கூறுகிறார்கள்."எங்களைப் பற்றிய அறிவே எங்களுக்கு இல்லை, இதில் இறையறிவு எங்கிருந்து வருவது ?" என்று கூறுகிறார்கள்.
🔹🔸(உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்)  என்னதான் பெருமையென்று பார்த்தால், ஆயர்குலத்தில் கண்ணன் தோன்றியதே பெருமை."எங்களுக்கு அறிவெதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எங்கள் மத்தியில் நீ வந்து தோன்றி பெருமை செய்கின்ற அளவுக்குப் புண்ணிய பலன் எங்களுக்கு இருக்கிறது. அது தான் கண்ணா எங்களுக்கு இருக்கும் ஒரே ஏற்றம் !" என்கிறார்கள். இறைவனே நமக்கு இரங்கி (ஸௌஸீல்யம்) நம்மிடையே வருகின்ற எளிமைத்தன்மையும் (ஸௌலப்யம் ) சுலபமாய் அவனை அண்டிப் பணிய நமக்கிருக்கும் வாய்ப்பையும் குறிக்கிறது.
🔹🔸(குறையொன்றுமில்லாத கோவிந்தா) எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும் தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை?" என்கிறாள்.



"எங்கள் மேலேயே தான் குறையென்று சொல்லித் தாழ்த்திக்கொள்ளுகிறோம். ஆனால் எம்மிடையே தோன்றிய உனக்குக் குறைவுண்டு என்று நாங்கள் சொல்லவில்லையே! அப்படிச் சொல்வதற்கும் உன்னிடம் குறை ஒன்று கூட இல்லையே கண்ணா! "உன்னை நாங்கள் புகழ்ந்தால் ஆதரிக்கலாம், இகழ்ந்தால் விட்டுவிடலாமென்று இருப்பதற்கு நீ என்ன சாதாரணனா? எங்கள் எல்லோரையும் காப்பவன் என்பதால் கோவிந்த நாமத்தைப் பெற்றவன் ஆயிற்றே?" அவனே அடையும் இடமாகவும் (ப்ராப்ய) , பயணிக்கும் வழியாகவும் (ப்ராபக) இருக்கும் ஒருமித்தத் தன்மையினை (ஸங்க்ரஹம்) இச்சொல்லாடல் உணர்த்துகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போலே.
🔹🔸(உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது) "நாங்கள் எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியே நாங்கள் குற்றங்குறை செய்திருந்தாலும், எங்கள் மீது சினங்கொண்டு நீ தண்டிக்க முற்பட்டால், அது உன்னில் ஒரு பகுதியையே கடிந்து கொள்வதாகாதா? இதை உன்னாலும் கூட மறுக்கவோ, மாற்றவோ முடியாதே ! "இற்றைக்கு ஈரேழ் பிறவிக்கும் இறைவன் ஒருவனே நம் உறவு, அது என்றும் மாறாது. கண்ணனே இறைவனென்று உணர்ந்து கொண்டார்களல்லவா ?

 இறைவன் சேஷி (சேவிக்கப் பட வேண்டியவன்), அடியார் சேஷன் (சேவிக்க வேண்டியவர்) என்ற உறவு எப்போதும் மாறாதது. ஆண்டவனே ஆண்டான், நாமெல்லோரும் அவனுக்கு அடி பணிந்து தொண்டாற்ற வேண்டியவர்களே, அடிமைகளே, என்ற எண்ணத்தை சீவர்கள் மறந்து விட்டாலும், அந்த உண்மை மாறாது.
🔹🔸(அறியாத பிள்ளைகளோம்) "நாங்களோ அறிவொன்றும் இல்லாத ஆயர்குலப் பெண்கள், சிறுமிகள்!" என்று தங்களின் நிலையைக் கூறிக்கொள்கிறாள். இன்றும் நாம் "இப்படிச் செய்து விட்டாயே, இப்படி ஆகிவிட்டதே!" என்று ஆற்றாமையோடு சண்டைபோட்டுக்,கோபமாகவும், அழுகையாகவும் ஆண்டவனைக் கேள்விகள் கேட்கும் அடியாரைக் காண்கிறோமல்லவா ?ஆணவத்தினால் அல்லாமல் ஆண்டவன் மீதில் அவர்களுக்கு இருக்கும் அன்பினால் ஏற்பட்ட உரிமையினால் அவ்வாறு செய்வதும், அப்படியானவர்களின் கர்ம ஞான பக்தி யோகங்கள் எதுவும் தெரியாத, உலக வழக்கங்கள் அறியாத நிலையும் குறிக்கப்படுகின்றது.
🔹🔸(அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும்) பெரியவாம் மறைகளுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக நீயாரென்று தெரியாமல், உன்மேல் கொண்ட அன்பு மிகுதியால் இறைவனான உன்னை நாராயணனென்றும், கண்ணனென்றும்,மாயன், மாதவன்,தாமோதரனென்றும்,பெயரிட்டு ஒருமையில் அழைத்தோம். இது அறியாமையாலும், சிறுவயதின் காரணமாகவும், அன்பினால் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.
🔹🔸 கோவர்தன மலையைக் குடையாய்த் தாங்கி கோகுலத்தைக் காத்த பின்னே, கண்ணனுக்கு மிகவும் உயர்ந்ததான கோவிந்த நாமத்தைச் சூட்டி, இந்திரனே "ஶ்ரீகோவிந்தராஜ பட்டாபிஷேகம்" செய்த பின்னே வேறு பெயர்களைச் சொல்லி அழைப்பது தவறல்லவா?

ஆகவே தான் தங்களது பிழையைப் பொறுத்தருள வேண்டுகிறாள். போய பிழையும் புகு தரும் ஆண்டவனினடம் ஜீவாத்மாக்கள் தாம் முன்னர் அறிந்தும், அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள (அபராத க்ஷமணம்) வேண்டுவதைக் குறிக்கும் சொல்லாடல்.
🔹🔸(அறியாத பிள்ளைகளோம்) - (அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும்)
என்ற கோதையின் கீதையின் இந்த வரி ஶ்ரீகண்ணனின் கீதையில் அர்ச்சுனன் ஶ்ரீகண்ணனிடம் கோரும் மன்னிப்பின் சாயலே என்பர் நம் பூர்வர்கள்.
"ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி |
அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி" (பகவத் கீதை 11:41)
[ இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ இடையா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும், ]
யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு |
ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || (பகவத் கீதை 11:42)
[விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன்.அளவற்றோய்! ]
🔹🔸(சீறி அருளாதே) அறிவற்று நாங்கள் செய்த அச்செயலால் எங்களைக் கோபிக்காதே. இறைவாநீ தாராய் பறை சீறுவது இறைத்தன்மையல்லவே ! பொறுத்து அருள்வது தானே இறையியல்பு ? நீயே எங்களைக் காக்கும் இறைவனாகையால், எம்மை மன்னித்துக் கருணையுடன் அருள் செய். நைச்சியமாகப் பேசி, "நீ பெரியவன் கண்ணா, நாங்கள் அறிவிலிகள். நீயே எம்மை மன்னித்துப் பறையென்னும் கருவியைத் தருவாய் !" என்று கேட்கிறார்கள்.
🔹🔸பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவுக்கும் அழியாது இருப்பதான நவ (ஒன்பது) வித சம்பந்தம் பற்றிய கூறப்படுகிறது.

பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன
1) பிதா -புத்ர, (தந்தை-மகவு),
2) பர்தா -பார்யா (கணவன்-மனைவி)
3) இரக்ஷக-இரக்ஷ்யக (காப்பவன்-காக்கப்படுபவர்)
4) சேஷி-சேஷ (ஆண்டான்-அடிமை)
5) ஞேயம்-ஞேயர் (அறியப்படுபவர்-அறிபவர்)
6) ஸ்வாமி -ஸ்வ (உரிமையுள்ளவர்-உரிமைப்பொருள்)
7) ஆதாரம்-ஆதேயம் (தாங்குபவர்-தாங்கப்படுபவர்)
8) சரீரி-சரீரம் (ஆத்மா-உடல்)
9) போக்தா-போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)


 🔹🔸 || திருப்பாவை ஜீயர் || 🔹🔸

"குறைவொன்று மில்லாத கோவிந்தா!  உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்" என்ற வார்த்தை ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி ஶ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத்தக்கது. ஞானம், அனுட்டானம், பரஸம்ருத் த்யேக, ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும் ஆசார்யபீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள். இவை மூன்றும் நன்கு நிறையப் பெற்றவர் நம் ஸ்வாமி ராமாநுஜர்.



(குறையொன்றுமில்லாத) மேற்கண்ட மூன்றாலும் குறையற்றிருப்பவர் நம் ஸ்வாமி.

(உன்றன்னை  பிறவிப்பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்) ஸ்வாமி வம்சத்திலே நாம் பிறக்கப்பெற்றது. நம் குலவிளக்காக ஸ்வாமி அவதரிக்கப்பெற்றது ஆகிய இரண்டும் இங்கே விவக்ஷிதமென்க.






 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)