கோதையின் கீதை (பகுதி - 10)


              திருவரங்கநாதனைக் காதலனாக கருதிய சூடிக் கொடுத்த சுடர் கொடியான நம் அன்னை ஸ்ரீகோதை ஆண்டாள், ஒரு முறை தன் ஊரார் மூலமாக திருவரங்கநாதருக்கு மடல் ஒன்றினைக் கொடுத்து அனுப்பினாளாம். அதில் தன்னை மறந்து அரங்கர் பல தேவிகளுடன் லீலை புரிவதாகவும், "வஞ்சக்கள்வன்" என்று குற்றம் சாட்டி இருந்தாளாம். மனது மிகவும் புண்பட்டுப் பேசிய இச்சொற்களை மறுத்து "என்றும் உன்னை மறக்கவே இல்லை, மற்ற தேவருக்கு கப்பம் தவிர்ப்பது போன்ற வேறு வேலைகளாய் இருந்துவிட்டோம்" என்று திருவரங்கநாதர் காதல் மீதூர்ந்து கடிதம் எழுதினாராம். இதற்கு நிரூபணமாக அரங்கன் தனது பல்லக்கு, தாம் அணியும் கண்ட மாலை, பட்டு,பருத்தி, சுகந்த திரவியங்கள் மற்றும் "திருவரங்கநல்லூர்" என்னும் கிராமம் ஆகியவற்றை ஆண்டாளுக்கு அளித்து, கோதைக்கு "ப்ரணய பத்திரிக்கை" (காதல் கடிதம்) அனுப்பினாராம்.

இச்செய்தியெல்லாம் ஓர் அற்புதமான கவிதைக் கல்வெட்டாக [கி.பி. 1454ம் வருடம் மார்ச் 13ம் தேதி] ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ளது. உண்மையில் அந்த சாசனம் (அரங்கனாய் பாவித்த அரசன்) 'உறங்காவில்லி தாசனான மாவலி வாணாதிராயன்' என்னும் மன்னன் "மதுரை மண்டலத்து முட்டநாட்டுத் திடியன்" என்னும் திருவரங்கநல்லூரைத் தானமாக வழங்குவதைக் குறிக்க எழுந்ததாகும். கோதை ஆண்டாளின் பாசுரங்களில் பயிலும் பல சொற்றொடர்கள் இக்கல்வெட்டிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆனால் ஒரு கவித்துவ அழகுடன்  இந்த தானத்தை  ஆண்டாளின் தெய்வீகக் காதலைப் போற்றுகிற விதமாகத் தான் வாசகத்தை  அமைத்திருக்கிறான்.

🔷 தன்னை அரங்கனாக பாவித்த அந்த அரசனின்
 அந்த சாசனம் பற்றி விரிவாக அறிய
Download link:-
Internet Archive
https://archive.org/details/subburaji2009_gmail_201812

"திருமாலிருஞ்சோலை நின்றான் வானாதிராயன் உறங்காவில்லிதாசன் சமரகோலாகலன்" (கி.பி1428-1477) என்று அறியப்படும் இம்மன்னன்  விஜயநகர பேரரசர் காலத்தில் அவர்களுக்குக் கீழ் நாற்பத்தொன்பது ஆண்டுகள் திருமாலிருஞ்சோலையைத் [அழகர் கோயில்] தலைநகராகக் கொண்டு
மதுரைப்பகுதி பாண்டிமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனது ஆட்சிப்பரப்பு பாண்டி நாட்டில் தெற்கே  ஸ்ரீவில்லிபுத்தூர் வரைக்கும், வடக்கே புதுக்கோட்டை மாவட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது.


ஒருமுறை மதுரை திருக்கூடல் திவ்யதேசத்தில் வைணவ ஆச்சார்யரான "ஸ்வாமி மணவாள மாமுனிகள்" மூன்று தினங்கள் தங்கியிருந்த போது,திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன், அவரை ஆச்ரயித்தான். மாமுனிகளும் அவனுக்கு திருவிலச்சனை முதலிய பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து ஆட்கொண்டார். பிறகு அம்மன்னன் வைணவநெறியினைப் பின்பற்றி பல வைணவ திருக்கோயில்களுக்கு பல தொண்டுகள் செய்துள்ளான் என்பதை "யதீந்திர ப்ரவண ப்ரபாவம்" எனும் வைணவ நூல் கூறுகிறது. "சமரகோலாகலன், புவனேக வீரன்" என்ற இவனது பட்டப் பெயர்கள் பொறித்த செப்புக் காசுகளில் திருமாலின் பெரிய திருவடியான கருடன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். (கருடன் இருபுறமும் சங்கு,சக்கர சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளது) இவனது கொடிச் சின்னமும் கருடக் கொடியே ஆகும். இமயம் முதல் குமரி வரையான நம் பாரததேசத்தை ஆண்ட அரசர்களில் கருடக் கொடி, கருட முத்திரை கொண்ட அரசன் இவன் ஒருவன் மட்டுமே ஆவான்.

        சிறந்த அடியவருடன் கூட்டாகச் சென்று பரமனை வழிபடுதலாகிய உயரிய வைணவக் கோட்பாட்டைத் தான் நம் அன்னை கோதை நாச்சியார் இப்பாசுரம் மூலம் முன்னிறுத்துகிறாள்.

இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் இடைச்சி ஒரு சிறந்த பாகவதை, பகவான் கண்ணனுக்கு மிகவும் ப்ரியமானவளும் கூட. அதனால் தான் ஆண்டாள் "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து, "மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி, அந்த ஞானமிக்கவளை தங்களுடன் கூட்டிச் செல்ல இவ்வளவு பிரயத்தனப்படுகிறாள்!
 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய இடைக் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற இடைச்சி, இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.



   🔷   திருப்பாவை எட்டாவது பாசுரம்  🔷

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


[கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் (பால் கறக்கப்படுவதற்கு முன்னர்) பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா ? பாவை நோன்பு ஒன்றையே தலையாய கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம்!
குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் எனும்) மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி, (அவனை அடைந்து) நாம் வணங்கினால், நம்மைக் கண்ட மாத்திரத்தில் 'ஐயோ' என்று மனமிரங்கி, கருணையோடு நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வாராய்! ]

எல்லோரும் வந்து அழைக்கும் படி கிருஷ்ணனாலே விரும்பப்பட்டவளான ஒருத்தியை  அழைக்கிறார்கள். "மிக்குள்ள பிள்ளைகளும்" என்றதினால் எல்லோரும் வந்து அழைக்கத் தக்கவள் என்பதும் "கோதுகலமுடைய பாவாய்"  என்பதினால் கிருஷ்ண வல்லபை என்பதும் தோற்றுகிறது.


(கீழ்வானம் வெள்ளென்று) ஸம்ஸாரிகளுக்கு ராத்திரி வேளையில்  பரஹிம்சை முதலியவற்றைச் சிந்திப்பதும், நரகத்தைக் கொடுக்கும் விஷயங்களின் அனுபவமும், தமோ குணத்தின் மிகுதியினால் வந்த தூக்கமாய்ச் சொல்லுகையாலே, ராத்திரி வேளை அனிஷ்டமாகவும், புருஷார்த்தமான பகல்வேளை விரும்பத்தக்கதாகவுமிருக்கும். பாவை நோன்பிருக்கும் இவர்களுக்கு, கிருஷ்ணானுபவத்திற்கு ஸஹகாரியாக இருக்கும்,  இரவு வேளை விரும்பத்தக்கதாகவும், கிருஷ்ணனையும் இவர்களையும் சேரவொட்டாத ஆயர்கள் உணருங்காலமான பகல் வேளை அஸஹ்யமாகவுமிருக்கும்.  ஆகையாலே கிருஷ்ணனையும் நம்மையும் சேரவொட்டாதவர்கள் உணருங்காலம் உண்டான பின்பும் நீ உறங்கலாமோ? என்றார்கள். 

(கீழ்வானம் வெள்ளென்று) 
"கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ? எழுந்திராய்" என்கிறார்கள்.
கிழக்கு வெளுத்தது அன்று உங்களில் யாரேனும் அத்திக்கைப் பார்க்கையாலே உங்கள் முகத்தில் ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது. இவர்கள் தான் "திங்கள் திரு முகத்து சேயிழையார்" ஆயிற்றே. உங்களின் முகத்தின் ஒளிபட்டு கீழ்வானம் வெளுத்திருக்கக் கூடும். மேலும் எப்போதும் நீங்கள்  பாலையும், மோரையும்,தயிரையும் பார்த்தே பழகினவர்களாகையாலே உங்களுக்குக் கண்டதெல்லாம் வெளுப்பாகத் தோன்றும்.
ஆகையால் இது சரியான அடையாளமன்று.
மற்று அடையாளம் உண்டோ என்ன? சொல்லுங்கள் என்றாள்.

(எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்) எருமைகள்
பனிப்புல் மேய வயல்கள்  எங்கும் பரவின. இது கூட விடிவிற்கு அடையாளமன்றோ? என்றார்கள்.

 [மேட்டிள "மேதிகள் தளை விடும் ஆயர்கள்" [மேதிகள் - எருமைகள்] என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் எம்பெருமானை எழுப்பினார். "எருமை சிறு வீடு ...பரந்தன காண்" என்று என்று இவள் அவனடியார்களை எழுப்புகிறாள். இது ஆழ்வார்களுக்கும் இவளுக்கும் உள்ள வாசி என்கிறது ஆறாயிரப்படி. ]




(சிறுவீடு) சிறிது பொழுது அவிழ்த்து விடுவது சிறு வீடென்றும், அதிக நேரம் மேய விடுவது பெரு வீடு என்றும் ஆயர்களின் பரிபாஷை.

கல்பஸூத்ரவ்யாக்தாவான பெரியாழ்வாரின் திருமகளான இப்பெண் பிள்ளை அக்நி ஹோத்ர ஹோமங்களின் வாசியறிகை தவிர்த்து இடைச்சியாய், எருமைகளின் சிறுவீடு
பெருவீடு, வித்தியாசத்தை
அறியும் படியான
மெய்ப்பாடு இருக்கிறபடி.

(பரந்தன காண்) "காலிப் பின்னே போகும் பிள்ளையன்றோ க்ருஷ்ணன். அவற்றின் பின்னே அவனும் சென்றுவிட்டால் பின் யாரைக் காண்பது? உயிர் தரிக்கும் விரகேது? கெடுவாய்? எழுந்திராய்." என்றார்கள்.

"உங்களுடைய முகவொலியைக் கண்டு சிதறிப் போகிற இருளைக் கண்டு எருமைகளென்று பிரமிக்கிறீர்களே ஒழிய, எருமைகள் இன்னும் மேயப்போகவில்லை. உங்களுடைய முகவொலியை கீழ்த்திக்கின் வெளுப்பு நிறமாக கருதினீர்கள். இது அந்யதா ஜ்ஞானம்.
இருளின் திரட்சியை எருமைகளென்று இப்போது நினைக்கிறீர்கள். இது விபரீத ஜ்ஞானம். ஆகையால் இவையெல்லாம் விடிவுக்கு அடையாளமன்று" என்றாள்.  "நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்ஙனே என்ன அதற்கான அடையாளம் சொல்லு" என்றார்கள். "ஆயர்பாடியிலுள்ள பஞ்ச லக்ஷம் பெண்களில் இங்கு ஓராயிரம் பெண்கள் கூட வந்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே!  மற்றவர்கள் உணராததிலிருந்தே இன்னும் விடியவில்லையென்று தெரிகிறது." என்றாள்.

(மிக்குள்ள பிள்ளைகளும்) என்று பதில் கூறினார்கள்.
உன்னை ஒழிந்தார் எல்லாரும் ஆற்றாமையாலே போந்தார்கள். நீயே எழுப்பக் கிடந்தாய் என்றார்கள். அவர்கள் என்னைக் கணிசிக்காமல் போய்விட்டனரே என்றாள். பெரிய திரளையாகையாலே நீ போகவில்லை என்பதை அறியாமையால் போய்விட்டார்களே ஒழிய உன்னை அலட்சியம் செய்து போனார்கள் அல்லர் என்றனர்.
"என்ன காரியத்திற்காகச் சென்றார்கள்" என்று கேட்டாள்.

(போவான் போகின்றாரை) "அர்ச்சிராதி கதியாக ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்றார் போலேயும், அக்ரூரன் கண்ணனைப் பார்க்க வந்தாரேப் போலேயும்,   திருவேங்கட யாத்ரை செய்வாரைப் போலேயும், போவதையே பிரயோஜனமாகப் போனார்கள்" என்றார்கள்.
என்னை விட்டுச் சென்றார்கள் ஆகில்
நான் இனி வந்து பிரயோஜமென்ன? என்றாள். "அவர்கள் போன அழகை நீ கேட்கவில்லையோ? போகிற அவர்களிடம் 'இன்னாள் வரவில்லை' என்றோம். தடை கட்டின நாகம் போலே அசையாமல் நின்றுவிட்டனர்" என்றார்கள்.

(போகாமல் காத்து) அவர்கள் போகாதபடி காவலிடவில்லை; 'திருவாணை, நின்னானை' என்று ஆணையிடவில்லை. நீ வரவில்லை என்று ஒரு வார்த்தை காதில் பட்டவுடன், அவர்களுடைய திருவடிகள் விலங்கிட்டாற் போலே தானே நின்று விட்டன." என்கிறார்கள்.

(உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்) அவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு உன்னை அழைப்பதற்காக நாங்கள் இங்கே வந்தோம். அவர்கள் போவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு போனாப் போலே நாங்களும் உன்னைக் கூவுவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு  இங்கு வந்தோம். வந்து நின்றோம். ராவணனுடைய வீட்டிலிருந்து புறப்பட்டு ஸ்ரீராமபிரானருகில் வந்தவுடன் விபீஷ்ணாழ்வான் நிலை நின்றாப் போலே நாங்களும் உன் வாசலிலே வந்து நிலை நின்றோம்.
"அப்பெண்களெல்லாம் இருக்கும் போது என் வாசலிலே வந்து கால் தரித்தோமென்று சொல்லுகைக்குக் காரணமென்ன? "நான் உங்களுடன் கூடாது உறங்குவதைக் கண்டும், நீயில்லாமல்  நாங்கள் 'உயிர் தரியோம்' என்று நீங்கள் சொல்லும்படியான ஏற்றம் என்னிடம் என்னவிருக்கிறது" என்றாள்.

(கோதுகலமுடைய பாவாய்)  என்கிறார்கள். உன் வாசல் வழியே சென்றாலும், க்ருஷ்ணனாலே
கொண்டாடும் படியாயன்றோ நீ அவனுக்கு இனிமையாய் இருப்பதன்று. உன் வாசலிலே வந்து உன் பேரைச் சொல்லி அழைப்பதை விட  ஏற்றம் எங்களுக்கு உண்டா?  எங்களுக்கு கிருஷ்ணனிடம் புருஷகார பூதையாக இருப்பவளன்றோ நீ?  என்கிறார்கள்.


(பாவாய்) நீ பெண் பிள்ளையாயிற்றே! பெண்ணின் வருத்தமறியாத பெருமானைப்போலே நீயும் இருக்கலாமோ?
நாரீணாம் உத்தமா வதூ: எனப்பட்டவளன்றோ? எங்களாற்றாமையை நீயும் அறிய மாட்டாயோ? என்கிறார்கள். "முலையெழுந்தார் படி, மோவாய் எழுந்தார்க்குத் தெரியாதிறே" என்று பட்டர் அருளிச் செய்வாராம்.

(எழுந்திராய்) " நீ எங்களுடன் புறப்பட்டு கூட வேண்டியது கூட வேண்டாம். நீ
எழுந்திருக்கும் அழகைப் பார்ப்பதற்கே நாங்கள்  ஆசைப்படுகிறோம்." என்கிறார்கள்.

"நாங்கள் உணர்த்த நீ உணர்ந்தாய் என்ற ஏற்றத்தை எங்களுக்கு தாராய்" என்கிறார்கள்.

 "எழுந்திருந்து நாம் பெறப் போகும் பலன்  என்ன?"  என்றாள்.

(பாடிப் பறை கொண்டு) –
இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்.

முன்பு நம்மையும் கிருஷ்ணனையும் பிரித்து வைத்திருந்ததினால், ஊராருக்குத் தெரியாதபடி  நெஞ்சாலே கிருஷ்ணனை அனுபவித்து வந்தோம்.
கிருஷ்ணானுபவத்தினால் ஏற்பட்ட ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் இருந்தோம்.  இப்போது ஊராரே அனுமதித்திருக்கையாலே, நெஞ்சிலே கங்கு கரையற்றுப்  பெருகுகிற
கிருஷ்ண குணானுபவ ஆனந்தத்திற்குப் போக்கு விட்டுப் பாடுவோமாக!

(பறை கொண்டு) ஊராருக்கு நோன்பு; தங்களுக்கு கைங்கர்யமே பலம்.

(மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய)
"குதிரை வடிவங் கொண்டு வந்த அரக்கனாகிய கேசியின் வாயைப் பிளந்து போட்ட வீரன் நம் கண்ணன்" என்றார்கள். அது முன்பன்றோ. இப்போது மதுராவுக்குச் சென்று வந்த பின்பு அங்குள்ள நகர ஸ்த்ரீகளை கண்டு மயங்கி நம்மை மறந்து கிடப்பவனான இவன் நம் காரியம் செய்வானோ? என்றாள்.



(மல்லரை மாட்டிய) அங்கு சென்று சாணூர, முஷ்டிகனைக் கொன்று நம் போன்ற பெண்களுக்குத் தன்னை உதவியவனாயிற்றே!' என்கிறார்கள்

(தேவாதி தேவனை) "அவனைத் தேவாதி தேவனென்றல்லவோ சொல்லுகிறார்கள். அப்படிப்பட்டவன் நம் காரியம் செய்வானோ?" என்கிறாள்
"தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம்
தம் தேவதாநாம் பரமஞ்ச தைவதம்|" [ஈச்வரர்களுக்கும் மேலான மஹேச்வரனும், தேவதைகளுக்கும் மேலான தேவதையை, ]
என்று ச்வேதாச்வர உபநிஷத் உத்கோஷித்தது.
ஆழ்வார்களும் "அயர்வரும் அமரர்கள் அதிபதியானவன்" என்றும் "மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ" என்றார்கள். இவைகளையெல்லாம் கொண்டு "தேவாதி தேவனை" என்கிறாள் ஆண்டாள்.

இப்படி தேவாதி தேவனாயிருப்பவன் நம் காரியம் செய்வனோ? என்றாள். இப்படி தேவாதி தேவனாயிருந்தாலும் நம்முடைய விரோதிகளைப் போக்க இவ்வுலகத்தில் அவதரித்தானன்றோ?


(சென்று நாம் சேவித்தால்) "அவன் அணுகி ஸேவிக்கத் தக்க நாம், அவனைக் கிட்டி ஸேவித்தால், அவன் வருகையும், ஸேவிக்கையும் தவிர்ந்தால் நாம் சென்று சேவிக்குமத்தனையன்றோ?" என்கிறார்கள்.
"ஸேவித்தாலும் நம் காரியம் செய்வனன்றோ?" என்றாள். "அடியார்கள் தானிருந்தவிடத்திற்கு வருகையையே பெரிதாகக் கொண்டு நெஞ்சு புண்படுபவனன்றோ?" என்கிறார்கள்.

(சேவித்தால் ஆவாவென்று...) "ஐயோ நம் பிரணயித்வம் போயிற்று; அடியார்களைக் காப்பவன் என்ற ஏற்றமும் போயிற்று. இவர்கள் நம்மை வந்து சேவிக்கும் படியாக நாம் இருந்தோமே!" என்று நம்முடைய குறைகளை ஆராய்ந்து அருளுவான். 
"ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம:" [இரக்கமே மேலான தர்மம்] என்னுமவன் நம் விஷயத்தில் பேசாமலிருப்பானோ? ஆகையால் அவன் குறையல்ல. புறப்படாத நம் குறையே; புறப்படுவாயாக என்கிறார்கள்.

(ஆவாவென்று) "ஆவாவென்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே" என்றும் ஆவாவென்றும் "அருள் செய்தான்"என்றும்   "அடியார்க்கு ஆவாவென்னாய்" என்றும்  "ஆ! ஆ! அடியான் இவனென்று அருளாயே" என்றும், "அடியார்க்கு ஆவாவென்றிங்கி" என்றும் ஆழ்வார்கள் பலகால் அருளிச்செய்தது இங்கு அநுஸந்திக்கத் தக்கது.  "ஆவாவென்று அருள்செய்து" என்றதினால் பரமபுருஷன் தன்னடியாருடைய துக்கத்தைக் கண்டு பொறுக்காமல், துக்கிப்பவன் என்று ஏற்படுகிறது.

"அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக." என்கிறார்கள்.

    பாசுரச் சிறப்பு:-

🔷 அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் (ஆச்சார்யனின் துணையோடு!) பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!

 🔷அது எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்ணுக்கு "சிறுவீடு மேய்வது" (பனித்துளி படர்ந்த புற்களை மேய்வது) போன்ற மாடு மேய்க்கும் ஆயர்களின் பிரயோகங்கள் எல்லாம் , ஆண்டாள் தன்னை ஒரு இடைச்சியாகவே வரிந்து கொண்டதே காரணம் ஆகும்.

🔷"தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பரமனைப் பற்றினால், நம் குற்றம் குறைகளை கருணையுடன் ஆராய்ந்து நமக்கருளுவான்" என்ற தத்வத்தை இங்கு ஆண்டாள் உரைக்கிறாள். இந்த தத்வத்தைத் தான் பகவான் கண்ணன் கீதையில் இப்படி அருளுகிறான்:

”மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய”
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ”” (கீதை:07:7)

அதாவது, “தனஞ்ஜயனே, என்னைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லை, நூலிலே மணிக்கோவைபோல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நூலான (சூத்திரத்தால்) என் மீது தான் கோக்கப் பட்டு இருக்கின்றன”

[• காஞ்சீபுரம் வரதராசப் பெருமாளுக்கு "தேவாதி தேவன்" என்று ஓர் திருநாமம் உண்டு.]

 🔷 எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.
'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்பர்.

🔷 சிறு வீடு என்பது அதிகாலையில் பாலைக் கறப்பதற்கு முன் மாடுகளை மேய விடுவதைக் குறிக்கிறது. ஊர்பசுக்களுடன் சென்று மேய்வதற்கு முன் அவரவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மேயவிடுவது இடையர்கள் வழக்கம்.
[பூரி ஜகந்நாதப் பெருமாளின் விடியற்காலை  உணவுக்குப் பெயர் "பால போகம்" ஆகும்.  (சிறுவீடு - பாலபோகம்)]
'சிறு வீடு' என்று ஒன்றிருந்தால் "பெரு வீடு" இருக்க வேண்டுமே!  இருக்கிறது. அதை ஆழ்வார்கள் பாடவில்லை. திருவரங்கத்தமுதனார் இராமாநுஜ நூற்றந்தாதியில்  பாடியுள்ளார்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் பெருவீடு என்றால் "மோக்ஷம்" என்பதைக் குறிக்கிறது.

 🔷 இராமாநுச நூற்றந்தாதி (பாடல் - 30)  🔷

இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே!

[• எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளப்பெற்றபின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலப்பல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! ]

ஆக பகவத் ராமாநுசராகிய ஆச்சார்ய ஸம்பந்தமே பெருவீடு ஆகும்.


🔷 இந்த எட்டாம் பாசுரத்தில் "கோதுகலமுடைய பாவாய்" என்பது  பூதத்தாழ்வாரைக் குறிப்பதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் "ஒன்னான வானமாமலை  ராமாநுஜ ஜீயர்" அருளிச்செய்துள்ளார்.

                 🔷  ||திருப்பாவை ஜீயர்||  🔷

"மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து" என்றதில் ஸ்வாமி ராமாநுஜரின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும்.


"அர்வாஞ்சோ யத்பத் சரஜி ஜத்த்வமாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வ்யபமுகதா தேசிகா முக்திமாபு" என்ற பட்டர் ஸ்ரீஸூக்தி படிக்கும்,  "பாத கோடீரயோஸ் சம்பத்தேன சமித்யமான விபவாந்" என்ற நிகமாந்த மகாதேசிக குரு  ஸ்ரீஸூக்திபடிக்கும், திருவடி ஸம்பந்தத்தாலே பின்னானார்களையும், திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ்வித்தவர் ஸ்வாமி எம்பெருமானார்.

"மிக்குள்ள பிள்ளைகள் " என்பது  ஸ்வாமிக்கும் பூஜ்யராய் இருந்த பூர்வர்களை ஆகும். அவர்களைப் "போகாமல் காத்து" என்றது தாம் அவதரித்து அவர்களை நற்கதி எய்துவித்த படியைக் காட்டுகிறது.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!
 
🔷 தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                 அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Comments

  1. ரொம்ப அருமை. நிறைய அறிந்து கொண்டேன் 🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)