கோதையின் கீதை (பகுதி - 23)




ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஶ்ரீரங்கமஹிஷி, புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை, சீலத்தனள், தென்திருமல்லிநாடி, புதுவையர்கோன் பட்டன்கோதை,
குழற்கோதை,
புதுவைமன்னன் பட்டர்பிரான்கோதை,
வில்லிபுத்தூர்கோன் கோதை, சுரும்பார் குழற்கோதை, விட்டுசித்தன்வியன் கோதை, வில்லைத்தொலைத்த புருவத்தாள், ஶ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீ, கோதா விஷ்ணு சித்தாத்மஜா, ஶ்ரீதந்விநவ்யபுரவாஸினி, வைதிக விஷ்ணுசித்த தநயா, ஶ்ரீரங்கபதிதேவி, ம்ருதுவாணி, நூதனநகரஸ்திதா, நூதனபுரநாயகி, ரங்கஜீவிகா,ஶ்ரீரங்கநாயகி, கோபீவேஷதரா, துளசிவன ஸஞ்ஜாதா, பட்டநாதப்ரியா, க்ருஷ்ணாயுத போகி, ரங்கநாதப்ரியா, யதிராஜ ஸகோதரி,துர்லபஶ்ரீ ஸுலக்ஷணா, தநுர்மாஸ க்ருத வ்ரதா, நாராயணபதாஶ்ரிதா, திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள், திருப்பாவை முப்பதும்செப்பினாள், பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள், ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள், உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள்,
திருமல்லிவளநாடி, வண்புதுவை நகர்க்கோதை, விஷ்ணுசித்த தநூஜா என பல பெயர்கள் உண்டு.







நப்பின்னை உட்பட எல்லாப் பெண்களும், கண்ணனைப் போற்றிக் துதித்துத் துயில் எழ வேண்டும் பாடல் இது ஆகும்.

 இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் கண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்த ஐந்தாம் 5 இன் தொடக்கம். முந்தைய 3 பாசுரங்களால் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் கோபிகைகளான ஆண்டாளும் அவள் தோழியர்களும். இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள். பரமனை எழுப்பி கோபியரின் கோரிக்கையை அவனிடம் எடுத்துச் சொல்லி பரிந்துரைக்க சரியான சமயம் வேண்டித் தான் காத்திருந்ததை நப்பின்னை கோபியரிடம் தெளிவுபடுத்துகிறாள். அதன் காரணமாக மிகுந்த உற்சாகமுடன் இப்பாசுரத்தால் கண்ணனை எழுப்புகின்றனர்,ஆண்டாள் மற்றும் அவளது தோழியர்கள் !

 இன்னும் முனைப்போடு கண்ணனை "ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!" என்று பக்திப் பேருவகையோடு போற்றிப் பாடுகின்றனர். ஆயர் குலத்தினில் ஒருவனாக கண்ணன் வாழ்ந்தாலும், அவனது பரம்பொருள் தன்மையானது "உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே" என்ற விவரிப்பின் வாயிலாக இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது!



திருப்பாவை 21ம் பாசுரம்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


 [நந்த கோபரிடம் ஏராளமான பசுக்கள் உண்டு. அவ்வளவு பசுக்களும், எவ்வளவு பெரிய பாத்திரங்களை வைத்தாலும், அவை எதிரே பொங்கி வழியும் படியாக, இடைவிடாமல் பாலைச் சொரியக் கூடியவை. வள்ளல் தன்மை மிக்க அப்படிப்பட்ட பசுக்களை, விசேஷமாகப் படைத்துள்ள நந்தகோபரின் மகனே! எழுந்திரு.

எளியவர்களைக் காப்பதில் மன எழுச்சி கொண்டவனே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! இந்த உலகத்தில் தோன்றிய தேஜோ மயமானவனே! பகைவர்கள், உன் எதிரில் நிற்க மாட்டாமல், தங்கள் வலிமை ஒழிந்து, வேறு கதியில்லாமல் உன் திருவடிகளில் வந்து விழுந்து பணிவதைப் போல, நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து பல்லாண்டு பாடியபடி வந்து சேர்ந்தோம்].




   • பாசுரச் சிறப்பு:-

• இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடி எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பிராட்டியும் எழுந்திருந்து வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டு பகவானை எழுப்புவதாகச் சொல்வர். வேறு விதமாக இந்த பாசுரத்திலும் பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடுவதாகவும் சொல்வர். எப்படியாயினும் இவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணனை கண் முன்னே கண்டு அனுபவித்து பாடுவது இந்த பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் புரியும்.

• ஆச்சார்யனையும், பிராட்டியையும் சரணடைந்து அவர்களின் பரிபூர்ண அருள் பெற்ற பின்னரும், ஒரு வைணவ அடியவருக்கு பரமன் திருஉள்ளம் வைத்தால் மட்டுமே முக்தி கைகூடுகிறது. அதை நன்கு உணர்ந்த ஒரு பக்தனின் சரணாகதித்துவம் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளது!
ஆச்சார்யனுக்கு உதாரணமாக எம்பெருமானாரையும் (ராமானுஜர்) உத்தம சீடர்களுக்கு உதாரணமாக கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் போன்றோரை குறிப்பிடுவர்.

• "பால் சொரியும்" எனும்போது பாலின் வெண்மையைப் போன்ற ஞானத்தூய்மையின் தன்மை வெளிப்படுகிறது. இங்கே பசுக்கள் என்பது ஆச்சார்யன், சீடன் என்று இருவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒரு நல்ல சீடன் தானே பின்னர் ஆச்சார்யனாகிறான்!

• அவதார பஞ்சகத்தின் அனைத்து நிலைகளும் இப்பாசுரத்தில் குறிக்கப்படுகின்றன.

ஊற்றம் உடையாய் - பரவாசுதேவனாக, அவனது படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.
பெரியாய் - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.
உலகினில் - ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த விபவ அவதாரங்களைச் சொல்கிறது.
தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில்,கோவில்களில் பரமன் அர்ச்சாவதார (சிலை வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.
சுடரே - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது.

• இப்பாசுரத்திற்கு விளக்கமளிக்கும் வைணவநெறி அறிஞர்கள், உடையவர் எனப்படும் இராமானுஜருக்கு முன்னும் பின்னுமான அவர்களது குருபரம்பரையின் பெருமையை ஏற்றிச் சொல்கிறார்கள். வைணவ குருபரம்பரையின் 4 தலைமுறைகளைக் குறிக்கிறார்கள் . 'ஏற்ற கலங்கள்' முதல் தலைமுறையையும், 'வள்ளல் பெரும்பசுக்கள்' இரண்டாம் தலைமுறையையும், 'ஆற்றப்படைத்தான்' மூன்றாம் தலைமுறையையும், 'மகனே' நான்காம் தலைமுறையையும் குறிப்பில் உணர்த்துவதாகும்.


||: திருப்பாவை ஜீயர் :||


• "வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான்" என்னும் போது ஸ்வாமி ராமாநுஜரின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வராது.
ஸ்வாமி ராமாநுஜருக்கு முன்பிருந்த ஆச்சார்யர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள் ? என்று கேட்டால், இருவர், மூவர், ஐவர் என்றே எண்ணவேண்டும்.
ஸ்வாமியின் சிஷ்யவர்க்கங்களைக் கேட்டாலோ, "ஏகாந்தி நாம் த்வாதசபிஸ் சஹஸ்ரை
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா" என்று உடனிருந்தவர்கள்  பேசும்படியாயிருக்கும். அன்றியும், மஹாஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து, 74 சிம்மாசனாதிபதிகளென்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் (ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப) ஆச்சார்ய ஸார்வபௌமருக்கு ஏற்றிருக்கும் தன்மையையுடைய ஸத்பாத்ரபூதர்களான ஸத்சிஷ்யர்கள்.
"சிஷ்யாதிச்சேத் பராஜ்யம்" என்று ஆச்சார்யர்களையும் விஞ்சினவர்களாய் இருப்பார்கள்.



• காச்மீரத்தில் சாரதாபீடத்தில் ஸ்வாமி ராமாநுஜரும், கூரத்தாழ்வானும் போதாயனவ்ருத்தியை அறிந்து கொள்ளச் சென்றனர். பல இடையூறுகள் அவர்களுக்கு போதாயன வ்ருத்தி கிடைத்தும் உண்டாகி அதை இவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர். வ்ருத்தியை முழுவதுமாக படிக்க முடியவில்லையே என ஸ்வாமி வருந்தினார்.  ஏகசந்தக்ராஹியான ஆழ்வான் போதாயன வ்ருத்தி அத்தனையும் அங்கு படித்து மனனம் செய்து வைத்திருந்தார். அவர் ஸ்வாமியிடம் ஆழ்வான் "இங்கே விண்ணப்பஞ் செய்யவோ? இரண்டாற்றிற்கு நடுவே விண்ணப்பம் செய்யவோ? " என்று பணித்தாரென்பது பிரசித்தம். இப்படியன்றோ மேன்மேலுமுள்ள சிஷ்யர்களின் சரித்திரமும்.  அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில் (மாற்றாதே பால் சொரியும்)  அவ்வாச்சார்யர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற அர்த்த விஷேசங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு. இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப்படைத்தவர் ஸ்வாமி .
(ஆற்ற - அபரிமிதமாக )
மேலே, "மாற்றாரானார்க்கு வலி தொலைந்து, உன் வாசற்கண்" என்றவிடத்து யாதவப்ரகாசர் வந்து பணித்த வ்ருத்தாந்தம் மிகப் பிரஸித்தம்.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்







Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)