கோதையின் கீதை (பகுதி - 4)


ஸ்ரீ பராசர பட்டர் தனது காலக்ஷேபத்தின் போது அடிக்கடி சொல்லுவாராம்: ‘தினமும் திருப்பாவையை அநுசந்திக்க வேணும்’ என்று. ஒருமுறை, சம்சாரி ஒருவர் எழுந்திருந்து கேட்டாராம்: ‘சம்சாரத்தில் உழலும் எம்மைப் போல்வாருக்கு முப்பது பாசுரங்கள் சேவிப்பதற்கு கால அவகாசம் கிடைத்தல் அரிது. என்ன செய்யலாம் ஸ்வாமி?’

‘முப்பது பாசுரங்கள் சேவிக்க இயலாது என்றால் கடைசி இரண்டு பாசுரங்களையாவது சேவியுங்கள்!’.

‘அதற்கும் நேரமில்லையென்றால்?’

‘ஆண்டாள் திருவடிகளே சரணம் என்று சொல்லுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் என்று ஒருத்தி இருந்தாள். அவள் பெருமாளுக்கு திருப்பாவை பாடினாள் என்றாவது மனதிலே நினையுங்கள். அந்த நினைவு உங்களை நல்லகதிக்கு அழைத்துச் செல்லும்’ என்றருளிச்செய்தாராம்.

         நம்மை அவ்வாறு நல்ல கதிக்கு அழைத்துச்செல்லும் 'கோதையின் கீதை'யான
திருப்பாவையின் 30 பாசுரங்களையும் நம் வைணவ ஆச்சார்யப் பெருமக்கள் ஐயைந்தும் ஐந்தும் (5 * 5 + 5) என்று பகுதிக்கு ஐந்து வீதம் ஆறு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

• முதல் பகுதி( 1-5)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம் நோன்பு நடத்துவதற்கான வழிமுறைகள் சொல்லப் படுகின்றன.
• இரண்டாம் பகுதி(6-10)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் புதிதாக இறைநெறியில் இணைந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன.
• மூன்றாம் பகுதி (11-15)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன .
• நான்காம் பகுதி (16-20)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறைவன் உறையுமிடம் சென்று அவனைச் சார்ந்தோரையும், அவனையும் எழுப்பும் படி அமைந்துள்ளன,
• ஐந்தாம் பகுதி( 21-25)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் கண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்துள்ளன.
• ஆறாம் பகுதி (26-30) - இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம், இறுதியாகவும் , உறுதியாகவும் , இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.



          கடந்த பதிவில் முதற்பாட்டில் "மார்கழித்திங்கள்" என்றுதொடங்கி "சிறுமீர்காள் என்னும் வரையில் ப்ராப்யம் சொல்லப்பட்டது. "கூர்வேல் கொடுந்தொழிலன்" என்று தொடங்கி "பறைதருவான்" என்னும் வரையில்  ப்ராபகம் சொல்லப்பட்டது பற்றி அறிந்தோம்.

இப்பதிவில் தொடரும் இரண்டாம் பாசுரத்தில் 'இச்சையுடையவர்களின் இயற்கையான ஸ்வாபங்களைச் சொல்லுகிறது. இப்பாட்டில் இச்சையுடையவர்கள்  செய்ய வேண்டியவற்றையும், செய்யக்கூடாதவற்றையும் சொல்லுகிறது' என்று பூர்வாச்சார்யர்கள் வழியில் அறிவோம்.
[அதாவது திருப்பாவையின் இந்த இரண்டாவது பாசுரமானது, பாவை நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது.]



              • திருப்பாவை பாசுரம் - 2

வையத்து வாழ்வீர்காள் ! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெம்பாவாய்.

[பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக !
பாற்கடலில் (பாம்பணையில்) யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!]

(வையத்து வாழ்வீர்காள்)
ஸாதநாநுஷ்டானம் பண்ணும் பூமியிலேயே  பலன் அனுபவிக்கும் பாக்யவதிகளே! குணங்கள் பகல் விளக்கு போலே பிரகாசிக்கும் வைகுண்டத்தில் போய் சிறையிராதே, குணங்ஙள் ஒளி விடும் இவ்வுலகத்திலிருந்து க்ருஷ்ண குணங்களைப பெற்றவர்கள் அன்றோ இவர்கள். நித்யஸூரிகளைக் காட்டிலும் ஒரு வாழ்ச்சி பெற்றவர்களை இவ்விருள் தருமா ஞாலத்திலே கிடைக்கப்பெறுவர்.

(வாழ்வீர்காள்) அவ்வூரில் பிறந்தும் ஆண்களாயிராதே பெண்களாய் இருக்கப் பெற்றவர்களே! பெண்களாயிருந்தும் பருவம் நிரம்பிடாதே அவனோடே ஒத்த பருவத்தையுடைய பாக்யவதிகளே!

(நாமும்) அவனாலே அவனைப் பெற வேணும் என்றிருக்கும் நாமும், அவனைப்பெற வேணும் என்னும் ஆசையால் இருந்தவிடத்திலேயே இருக்கவொட்டாத நாமும்

(நம் பாவைக்கு) நம்முடைய நோன்புக்கு , அவனையும் அவனடியாரையும் அழிப்பதற்காக இந்திரஜித் முதலியோர் செய்த யாகம் போலன்றியே, அவனும் அவனடியார்களும்  வாழுகைக்கு பண்ணும் யாகம். அவனிடம் ஒரு பலனை விரும்பிச்செய்யும் நோன்பு போலன்றியே, அவனுக்கு நம்மைக் கொடுத்து, அவனையும் அவனுடைய விபூதியையும் உண்டாக்குவதற்காகச் செய்யும் நோன்பு.  தசரதச் சக்கரவர்த்தி நாலு ஆஹூதி பண்ணி நாலு ரத்னத்தை (மகன்கள்) பெற்றாற்போலே நமக்கும் ஒரு நோன்பு வாய்க்கப்பெறுவதே என்கிறார்கள்.

(செய்யும் கிரிசைகள்)  நாம் பொழுது போவற்காகச் செய்யும் காரியங்களை, (கிரிசைகள் - கிரியைகள்)
உபாயத்வ புத்தியுடனன்றியே காலட்சேபத்திற்காக செய்பவை. மடல் போலே ஆரம்பித்து தவிருமதன்றியே செய்து முடிக்க வேண்டிய காரியங்கள்.

(கேளீரோ) கிருஷ்ணனைப் பெறவிருக்கிறோம் என்கிற ஆனந்தத்தாலே  அவர்கள் மெய் மறந்திருந்தார்கள். கேளீரோ என்று அவர்களை உணர்த்துகிறாள். மேய்ச்சல் தரையில் அசையிடலாமோ? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமோ? இந்த நாலு நாளும் சென்றால் நம்மை ஒருவரையொருவர் சேர விடுவார்களோ? என்கிறாள். அவர்களைக் கேட்பித்தாலொழிய உயிர் தரியாளாகையாலே கேளுங்கள் என்று யாசிக்கிறாள். ஆச்சார்ய பதம் நிர்வஹிக்கைக்காக சொல்லுகிறாளல்லள். அவர்களுக்கு தெரியாததொன்று என்று நினைத்துச் சொல்லுகிறாளல்லள்.
தன் செல்லாமையாலே    "போத யந்த: பரஸ்பரம்" [ ஒருவரையொருவர் உணர்த்துகிறவர்கள் .] என்கிற முறையிலே கேளீரோ என்கிறாள். கேட்கையே ப்ரயோஜனமாயன்றோ இருப்பது. "ஸம்ச்ரவே மதுரம் வாக்யம்" என்றும் "செவிக்கினிய செஞ்சொல்" என்றும் சொல்கிறபடியேயிருக்கை. மஹாபாரதத்திலே லட்சத்து இருபத்தையாயிரம் க்ரந்தங்களாலும் தர்மார்த்த காம மோட்சங்களைச் சொல்லி  " இவற்றுள் நீ எதை புருஷார்த்தமாக நினைத்திருந்தாய்? என்று வைசம்பாயனர் தனது சிஷ்யன் ஜனமேஜயனைக் கேட்க , அவன் நீர் பகவத் குணங்களைச் சொல்ல நான் கேட்டிருந்ததையே பரம புருஷார்த்தமாக நினைத்திருந்தேன்" என்றான். செவி படைத்த பயன் பெறவேண்டாமோ?  ஆகையாலே கேளீரோ என்கிறாள்.


(பாற்கடலுள்) முதற்பாட்டிலே நாராயணன் என்று ஸ்ரீவைகுண்டத்திலிருப்பை  சொல்கிறாள். இங்கு  உயிர்களை உயிர்விப்பதற்காக பாற்கடலில் யோகநித்திரை செய்வதை சொல்லுகிறாள்.
(பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்)
வேதாந்தங்களில் தலைசிறந்ததான நாராயணனுவாகமும்  'பரமம் ப்ரபும்' என்றும் 'நாராயணம்' என்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருப்பை அனுபவித்து, 'ஸமுத்ரேந்தம்' என்று பாற்கடலிலே   சாய்ந்தருளின அழகில் ஈடுபட்டதன்றோ? 

(பையத்துயின்ற)  "கள்ளநித்திரை கொள்கின்ற" என்கிறபடியே தூக்கம் என்கிற பேராய் ஜகத்ரக்ஷணத்திற்கு  உபாயத்தை சிந்தித்து கிடக்கிறபடி.

( பரமன்) நம் பாற்கடல் சேர்ந்த பரமன் என்ற ஆழ்வார் வாக்யத்தையும்,  "பரமம் ப்ரபும்.... ஸமுத்ரேந்தம்" என்ற வேதாந்த வாக்யத்தையும் உணர்த்துகிறது. பரமன் - ஒப்புயர்வற்றவன். திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்தவுடன் வடிவில் பிறந்த ஒளியைச் சொல்லுவதாயும் கொள்ளலாம். அந்யப்ரயோஜனங்களைக் கொண்டு அகலுமவர்களை ரக்ஷிப்பதற்காகவே படுகாடு கிடப்பவனாகையாலே குணத்தின் ஏற்றத்தைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். பரமபதத்தில் வீற்றிருக்கும் இருப்பைக் காட்டிலும்,  திருப்பாற்கடலில் சாய்ந்தருளின போது அழகுமிக்கிருக்கிறபடி. "கிடந்ததோர் கிடக்கை" என்றும் "கோலம் திகழக் கிடந்தாய்" என்றும் ஆழ்வார்களும் இதை அனுபவித்தார்களன்றோ?



(அடிபாடி) அவனுடைய மேன்மைக்குத் தோற்று அவனுடைய திருவடிகளைப் பாடி.
(பாடி)  "நம்மை ரக்ஷிக்கை அவனுக்கு  பாரம் என்றிராமல் நம்முடைய ரக்ஷணத்துக்கு நாம் முயற்சி செய்வதன் மூலம் நம்முடைய சொரூபத்தையும், அவனுடைய சொரூபத்தையும் அழிக்கக்கடவோம்" என்கிறாகள். ஆற்றாமை சொரூபத்தைபார்க்கவொட்டாதன்றோ? (அடிபாடி) கைக்குழந்தைக்கு தாயின் முலையே தாரகமாயிருப்பது போல் இவர்களுக்கும் எம்பெருமான் திருவடிகளே தாரகம். " செவ்வடி செவ்வித் திருக்காப்பு" என்றவர் திருமகளன்றோ? கிருஷ்ணனுடைய திருவடிகளைப் பாடாதே க்ஷீராப்தி நாதனுடைய (திருப்பாற்கடல் நாதன்) திருவடிகளைப் பாடுவதற்குக் கருத்தென்னென்னில், " நோன்பு நோற்க்கப் புகுந்தவர்கள் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள்" என்று இடையர்கள் சந்தேகிப்பார்களாகையால் ஒரு தெய்வத்தின் பேரையிட்டு பாடுகிறார்கள். மேலும் க்ஷீராப்தி நாதனேயன்றோ கிருஷ்ணனாகத்  திருவவதரித்தது.  "ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந: |
நாகபர்யங்கமமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || '(க்ஷீராப்தி நாதனான ஸ்ரீமந்நாராயணனன்றோ  ஆதிசேஷனான படுக்கையை விட்டு மதுராபுரிக்கு கிருஷ்ணனாக வந்திருக்கிறான்.) என்று ஹரிவம்சத்திலும் சொல்லப்பட்டதன்றோ?

(பாடி நெய்யுண்ணோம்)  எம்பெருமானைப் பாடுவதாகிற பரமபோக்ய வஸ்துவை அடையப்பெற்ற நாங்கள் இவ்வுலகத்திலுள்ள போக்யவஸ்துக்களை புஜிக்க மாட்டோம். "உண்டார்க்கு உண்ணவேணுமோ?" என்கிறார்கள். பாலைக் குடித்தபின்  வேப்பங்காயைத் தின்பாருண்டோ?  என்கிறார்கள். பகவதனுபவத்தையே உணவாகக் கொண்டவர்களன்றோ இவர்கள்.

"கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான் உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளும் இருக்கெச்சுசாம
வேதநாண்மலர் கொண்டு உன்பாதம் நண்ணாநாள் அவை தந்துறுமாகில்  அன்றெனக்கவை பட்டினி நாளே"
 ( பெரியாழ்வார் திருமொழி - 437)
என்றவர் மகளன்றோ நம் அன்னை கோதை.

"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்" என்றும் "கூறை சோறிவை வேண்டுவதில்லை" என்றும் ஆழ்வார்கள் அருளினார்களன்றோ?
"பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தனாம்ருதம்"  ( புண்டரீகாக்ஷனுடைய திருநாமஸங்கீர்த்தனம் செய்வதாகிற அமிர்தமே கட்டுச்சோறு) என்றல்லவோ  கருடபுராணம் கூறுகிறது.

( நெய்யுண்ணோம் பாலுண்ணோம்) இடக்கையும் வலக்கையும் அறியாத ஆய்ச்சிகளாகையாலே, 'நெய் குடியோம்', 'பால் குடியோம்'  என்று கூறாது 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்கிறார்கள். உண்ண என்று குடிக்கைக்கு (இடையர்)சாதிப்பேச்சு.
'ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்போந்து' (ஸ்ரீநம்மாழ்வார் திருவிருத்தம் - 21) என்கிபடியே நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவன் நம்முடைய நெய் பால் முதலியவற்றை களவு செய்தாவது உண்பதற்காகவன்றோ அவதரித்திருக்கிறான். அப்படியிருக்கும் போது அவனுக்குத் தாரகமான அவற்றை நாம் உண்ணலாமோ? என்கிறாள்.

(நாட்காலே நீராடி)  கிருஷ்ணனைப் பிரிந்ததால் ஏற்ப்பட்ட தாபம் தீர விடியற்காலையில் குளிக்கக் கடவோம்.

(மையிட்டெழுதோம்)  மையகண்ணாள் எனப்பட்டவர்களாகையாலே இவர்கள் அழகுக்காகக மையிட வேண்டியதில்லை. இவர்களுக்கு மையையிட்டு ஸத்தையைப் பெறுபவன் அவன். அதற்கு இடம் கொடோம் என்கிறார்கள்.

(மலரிட்டு நாம் முடியும்) 'சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்' என்னும் நாம் அவன் நம்மை  உபேக்ஷித்திருக்கும் போது பூச்சூட மாட்டோம் என்கிறார்கள். அவன் வந்து மலர் சூட்டினானாகில் செய்யலாவதில்லை; நாமாக மலர் முடிக்கமாட்டோம்.

(செய்யாதன செய்யோம்)
முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்யமாட்டோம். பஞ்சலக்ஷங் குடியிலுள்ள பெண்களில் ஒருத்தி வாராவிடிலும் கிருஷ்ணனிடம் போகமாட்டோம். என்று கருத்து. அவனடியார்களை முன்னிட்டுக் கொண்டல்லவோ  அவனைப் பற்ற வேண்டும். பரதாழ்வானை முடிசூடச்சொன்னபோது "இக்குடியில் இதுலரையில் ஒருவர் செய்யாததை நான் செய்யமாட்டேன் என்றானன்றோ?.
ஸ்வாமி கூரத்தாழ்வானை "நீங்கள் ஏன் மற்ற தெய்வங்களைப் பணிவதில்லை" என்று சிலர் கேட்க "எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்" என்று பதிலளித்தாராம்.

(தீக்குறளை சென்றோதோம்)  பிறர்க்கு தீங்கை விளைவிக்கும் பொய் வார்த்தைகளை பேசமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.  நாம் ஒருவருக்கொருவர் "பேய்ப்பெண்ணே" "நாயகப்பெண்பிள்ளாய்" என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டதை கிருஷ்ணனிடம் போய் சொல்ல மாட்டோம் என்று கருத்து. பத்துமாதம் படாதபாடு படுத்திய இராட்சசிகளைப் பற்றி  ஸ்ரீராமபிரானிடம் சீதாப்பிராட்டி  கோள் சொல்லவில்லை. அப்படியிருக்கும் போது அநுகூலர்களைப் பற்றி கோள் சொல்லுவார்களோ இவர்கள்.


 (ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி) தகுந்தவர்கள் விஷயத்தில் மிகுதியாகக் கொடுப்பது.  பிட்சை பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் கொடுப்பது. இங்கு ஐயம்  என்பது கிருஷ்ணானுபவம் பண்ணவேணுமென்றிருப்பார்க்கு அவனை அனுபவிப்பிக்கை; பிச்சையாவது - அவனடியார்களை அனுபவிக்க வேண்டுமென்றிருப்பார்க்கு அவர்களை அனுபவிப்பிக்கை; அவர்கள் கொள்ளவல்லாரந்தனையும், யாசிப்பார் இருக்கும் வரையிலும்.

(கைகாட்டி) எல்லாவற்றையும் கொடுத்தாலும்  'நாம் கை காட்டினோமேயொழியக் கொடுக்கவில்லை' என்றிருக்கை. இவர்களுக்கு கிருஷ்ணானுபவம் பண்ணி வைத்தும் ஒன்றும் செய்யப்பெற்றிலோம் என்றிருக்கை.
[ ஐயம் - பகவத் விஷயாமான ஜ்ஞானம்
பிச்சை - ஆத்மஸ்வரூப விஷயமான ஜ்ஞானம். ]

(உய்யுமாறு எண்ணி உகந்து) இப்படி உஜ்ஜீவிக்கும் வழிகளை எண்ணி, "அஸந்நேவ ஸ பவதி| அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் |
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத | ஸந்நமேநம் ததோ விது: ||"
[ப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமில்லையாகில் அவன் இல்லாதவனாகிறான். ப்ரஹ்ம ஞானமுள்ளவனாகில் அதிலிருந்தே இவனை உள்ளவனாக அறிகிறார்கள். ] என்கிறபடியே பகவத் விஷயத்தில் ஈடுபடுகையே சேதனர்க்கு உய்வு உபாயமாகும்.  இவ்விஷயத்தில் மநோரத மாத்ரமே பரம போக்யமாயிருக்கும்.
"நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் மற்றினிதோ நீயவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான்" என்றல்லவோ ஆழ்வார் அருளினார். "உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ" என்று பூர்வர்கள் அந்வயிப்பர்.

                     • பாசுர சிறப்புகள்:-
• சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் சொன்ன ஆண்டாள் அதை அடையும் மார்க்கத்தில் எதை செய்ய வேண்டும் – எதை செய்யக்கூடாது என்று 'க்ருத்யா, அக்ருத்ய விவேகம்' சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் – இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழலுவோம் என்று விவரமாக சொல்கிறாள்.


• இப்பாசுரத்தில் திருமாலின் ஐந்துநிலைகளில் இரண்டாவதான "வ்யூஹம்" என்கிற நிலை "பாற்கடலில் பையத்துயின்ற பரமன்" என்ற அடிகளில் 'கோதை ஆண்டாள்' குறிக்கிறாள்.
• இப்பாசுரத்தில் இறைவன் நமக்கு வீடு பேறளிக்க, மனோ, வாக், காயம்,( எண்ணம், சொல், செயல்) இம்மூன்றின் வழியாக நாம் செய்ய வேண்டுவன, செய்ய வேண்டாதன பற்றி ஆண்டாள் அறிவித்தாள். கர்தவ்யம்,(செய்ய வேண்டிய கடமைகள்) தியாஜ்ஜியம் (செய்யக்கூடாதவை ), உபவாசம்,(உண்ணாமை) ஜாகரணம்(விழித்திருத்தல்) என்பதான ஏகாதசி விரதத்திற்கு ஏற்ற வழிமுறைகளைச் சொல்லுதற் போல், பாவை நோன்பிற்குண்டான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது.
• இப்பாசுரத்தில், அவதார பஞ்சகத்தின் பரமாத்ம நிலை குறிக்கப்பட்டுள்ளது. அர்த்த பஞ்சகத்தின் "விரோதி நிலை", அதாவது 'சரணாகதம் செய்வதற்கு உண்டாகும் இடையூறுகள்' இப்பாசுரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
• வைணவ அடியார்க்கு, பரமன் மேல் உள்ள பக்தியை விடவும், ஞானத்தை விடவும், உள்ளத் தூய்மையும், ஈகையும், எளிமையும் முக்கியமானவை என்பதை இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துகிறது.
• மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு - "பரமனடி பாடி" என்பது வாசிகம்
ஆ) செயல் - நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் - "உய்யுமாறெண்ணி" அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்
• நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு: நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.
• கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை
• மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும், ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.
• 'உய்யுமாறெண்ணி' என்ற பதத்தை 'உய்யும்', 'ஆறு எண்ணி' என்று பிரிக்கலாம். 'உய்யும்' என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது. அதை அடைய, காஞ்சீ வரதராஜப் பெருமாள், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, "ஆறு எண்ணி" என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.


• ஆண்டவன் கட்டளை ஆறு பற்றிய கதை :-  திருக்கச்சி நம்பிகள் என்னும் ஸ்வாமி பூவிருந்தவல்லியில் அவதரித்தவர். அவர் 'காஞ்சி பூர்ணர்' மற்றும் 'கஜேந்திரதாசர்' என்றும் அழைக்கப்பட்டார். இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக வரதராசப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.
ஒருமுறை நம்பிகள் வரதராசப்பெருமாளுடன் நேரிடையாக உரையாட வல்லவர் என்பதை அறிந்த  இளையாழ்வார் (பகவத் இராமாநுஜர்) மனதில் நெடுநாட்களாக
இருந்துவந்த  தன்னுடைய சில சந்தேகங்களுக்கான விடைகளை காஞ்சீ வரதராசப்பெருமாளிடமிருந்து பெற்றுத்தருமாறு வேண்டினார். அன்றைய தினம் இரவு தன்னுடைய கைங்கர்யங்களை முடித்திருந்த நம்பிகளை பெருமாள் வழக்கமான மிகுந்த கருணையுடன் நோக்கினார்.
உடனே பெருமாளும் அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) திருக்கச்சி நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

1.[அஹமேவ பரம் தத்வம்] – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்
2.[தர்சனம் பேத ஏவ] – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)
3.[உபாயம் ப்ரபத்தி] – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.
4.[அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்] – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்.
5.[தேஹாவஸானே முக்தி] – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்
6.[பூர்ணாசார்ய பதாச்ரிதா] – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக என்ற ஆறு கட்டளைகளாகும். இதையே ஆண்டாள் "உய்யும் ஆறு எண்ணி" என்று நமக்கு வழிகாட்டுகிறாள் என்பார்கள்.

• திருப்பாற்கடலிலே பையத்துயின்ற பரமன் - பகவத் இராமாநுஜர்.

"உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்" என்கிற பாசுரத்தினால் நம்மாழ்வார் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர் தாமே " சீர்கடலையுள் பொதிந்த" என்னும் பாசுரத்தில்  அக்குணங்களைக் கடலாகவும் பேசினார்.  இவற்றுக்குச் சார்பாக "அநந்த குணஸாகரம் ப்ரஹ்ம"  [அனந்தமான குணஸாகரத்தையுடையவர்]  பரமபுருஷர் என்றருளினார் ஸ்ரீபாஷ்காரர் இராமாநுஜர். அவ்வளவோடு நில்லாமல் அக்குணங்களையே தமது திவ்யக்ரந்தங்களில் வாய்வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச பகவத் குணங்களிலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் திருப்பாவை ஜீயர் இராமாநுர் என்பர் நம் பூர்வாச்சார்யர்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

               அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்





Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)