கோதையின் கீதை ( பகுதி - 17)



• ஆண்டாள் கிளி •

கொஞ்சம் நம் கோதை ஆண்டாளின் கொஞ்சும் கிளி பற்றியும் அறிந்து கொள்வோம். வாருங்கள்!

ஸ்ரீகோதை ஆண்டாள் சுகப்பிரம்ம ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் தங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் ஓர் ஐதீகமுண்டு.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். ஆண்டாளின் தோளில் அமர்ந்து கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப்பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதுமான ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!
ஆம்! இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.

• இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள். எப்படிச் செய்கிறார்கள் தெரியுமா ?
அது ஒரு தனிக்கலை , அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள்.  சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் . ஏழிலை என்று சொல்லப் படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், மற்றும் நந்தியாவட்டை இலைகளை கிளியின் இறக்கைகளுக்கும் பயன் படுத்துகிறார்கள். கிளி உருவாக பயன் படுத்தப் படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன. கிளி அமர்ந்திருப்பது போல காண்பிப்பதற்கு , நந்தியாவட்டை பூக்களே கிளியின் கால்களாக அமைக்கப் படுகின்றன . இறக்கைகளுக்கு முதலில் பனைஒலையும் , அதன் மேல் இலைகளும் போர்த்தப் படுகின்றன .கிளியின் வால் பகுதிக்கு, வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர். சிவப்பு நிற மாதுளம் பூ , கிளியின் மூக்கிற்கு பயன் படுத்தப் படுகிறது. இவ்வாறான ஒரு கிளியைத் தயாரிக்க சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது. நுணுக்கமான இந்த  வேலையை ஆண்கள்தான் செய்கின்றனர்.
• அந்தப் பச்சைக் கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் நிகழ்வின் போது, கிளியும் அகற்றப்படும்.
• மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக, ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலிலிருந்து மாலை, கிளி, ஆடைகள் ஆண்டாளுக்குச் சாத்தப்பட்டு, அதன் பின்னர் அந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கூடையில் வைக்கப்பட்டு தலைச்சுமையாக கோயிலைச் சுற்றி ஊர்வலம் வந்து, பின்னர் அவை மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும். அக்கூடை மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குக் கொண்டு வரப்படும்.  தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலை, கிளி,வஸ்திரம் ஆகியவற்றைச் சாற்றிக் கொள்கிறார்.
• திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கருட சேவையன்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படும் ஆண்டாள் மாலை, கிளி, வஸ்திரம் சார்த்தப்படுகிறது.




பத்து அடியவர்களை எழுப்பும் வகையால் அமைந்த 6 முதல் 15 வரையிலான பாசுரங்களில் இதுவே இறுதியான பாசுரம். முந்தைய பாசுரங்களில் இருந்து சற்றே இப்பாசுரம் மிகவும் ஆழமான உட்பொருள் கொண்டது. "திருப்பாவையில் திருப்பாவை இப்பாசுரம்" என்று ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சார்யர்கள் கொண்டாடுகின்றனர். மாறுபட்டது இப்பாசுரம். 


ஆண்டாளாகிய கோபிகைக்கும் ,அப்போதுதான் துயிலெழுந்துள்ள, அவளது தோழியாகிய இடைச்சிக்கும் இடையேயான சுவாரசியமான உரையாடல் வடிவில் அமைந்துள்ள பாசுரமிது.
இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு இடைச்சியை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விடுகிறாள் . ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் விளங்கும்படியாக, உரையாடல் வடிவில் அமைந்திருக்கிறது.



• திருப்பாவை பதினைந்தாம் பாடல்

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

[ * சென்ற பாடல் வரை ஆண்டாள் இடைச்சியரை துயிலெழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் உறக்கம் விட்டெழுந்த இடைச்சியாகிய தோழி ஒருத்தியுடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.*

• ஆண்டாள்: (எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! )  இளங்கிளி போல பேச்சுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

 • தோழி : (சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்! ) அறிவார்ந்த என் தோழிமாரே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ வந்து கொண்டே இருக்கிறேன்"

• ஆண்டாள் : (வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்.) உன் வாய்ப்பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் வரவில்லை.
திறம்பட நீ உதிர்க்கும் உறுதிமொழிகளையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் வெகு காலமாகவே அறிவோமே

• தோழி :(வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக! )  நீங்கள் தான் பேச்சுத் திறனுடையவர்கள்! சரி விடுங்கள், நீங்கள் கூறியபடி நானே வாயாடியாக இருந்து விட்டுப் போகிறேன்

• ஆண்டாள் : (ஒல்லை நீ போதாய்)  விரைவாகத் தயாராகி எங்களுடன் சேர்ந்து கொள்

• தோழி : (உனக்கென்ன வேறுடையை)  உங்களுக்கு வேறு வேலையில்லையா?
(எல்லாரும் போந்தாரோ?) எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?

• ஆண்டாள் :(போந்தார் போந்தெண்ணிக் கொள்) வந்துவிட்டார்கள், நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்வாய்
(வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்)  கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த) குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனுமான கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாயாக ! ]






** ** *

             பாசுரச் சிறப்பு:-

• பெரியோர் இப்பாசுரத்தை "திருப்பாவையிலும் திருப்பாவை" என்று போற்றுவர். அதற்கு முக்கியக் காரணம், "நானே தான் ஆயிடுக" என்ற வாக்கியமாம். இதற்கு ஆழ்ந்த உட்பொருள் உள்ளது. எளிமையாகச் சொன்னால், இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்ற தாத்பர்யத்தை இந்த ஒரு வாக்கியம் சொல்லி விடுகிறது!
• இதற்கு முன்னால் வந்த 9 துயிலெழுப்பும் பாசுரங்கள் போல் அல்லாமல், இப்பாசுரம் உரையாடல் நடையில் பாடப்பட்டு, மிக சுவையாக, பாகவத கைங்கர்யம் (அடியார் சேவை) பகவான் சேவையினும் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது!
• பகவத் சேவையும், அவனது திருவடியில் சரணடைதலும் "சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்று திருப்பாவையில் இறுதியில் (29வது பாசுரத்தில்!) தான் ஆண்டாளால் கொண்டாடப்படுகிறது. அதற்கும் முன்னாலே இந்த 15வது பாசுரத்திலேயே, கோதை நாச்சியார் பாகவத சேவையைக் கொண்டாடி, சரணாகதித்துவத்தில் பாகவத சேவையின் உன்னதப் பங்கை சொல்லி விடுகிறார்!
• இந்தப் பாசுரம் பாகவத தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்க்கு அடியார் ) சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்) சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. இறைநெறியில் சேர்ந்தும், சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் அடியவர்களுக்கு, இறைவனை அடைந்து பேரின்பம் பெறுவதற்கு ஏற்ற எளிய வழி இறையடியார்களுடன், ஒன்றாய்க் கூடி, இறையடியார் சரிதங்களைக் கேட்டு, இறை நாமங்களைச் சொல்லி, இறைவனின் இயல்புகளைப் போற்றிப் பாடி ,சரணம் புகுதலே என்பதை ஆசிரியர் வாய் மொழியாகக் கூறும் விதத்தில், ஒரு விளக்கம் சொல்கிறார்கள். வைணவ அடியார்களின் அடையாளமாகவும் அதைச் சொல்லுகிறார்கள்.
• திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே" என்பதாகும். திருநெல்வேலி வட்டார மொழி வழக்கு சார்ந்தே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியும் ஒரு காலத்தில் இருந்துள்ளதை ஆண்டாள் தன் தோழியை  "எல்லே இளங்கிளியே" என்று வட்டார வழக்கில் செல்லமாக கோபித்துக் கொள்கிறதன் மூலம் அறியமுடிகிறது. (எல்லே  = ஏலே)




• ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி வரிசையில் இப்பாசுரத்தால் குறிக்கப்படுபவர், திருமங்கையாழ்வார் ஆவார்
"மானமரு மென்னோக்கி.."
என்று தொடங்கும் இவரது 5 ஆம் திருமொழிப் பாசுரங்களில், உரையாடல் பாணியைக் கையாண்டவர் இவரே !
• திருமங்கையாழ்வாரை "இளங்கிளியே" என்பது மிகப் பொருத்தமே, இவர் தான் ஆழ்வார்களில் இளையவர், அத்துடன் தன்னைக் கிளியாக பல பாசுரங்களில் வருணித்துக் கொண்டவர். அதை விட முக்கியமாக ஒரு கிளி செய்வதைப் போல, நம்மாழ்வாரின் உபதேசத்தை இவ்வுலகுக்கு திரும்ப உரைக்க அவதாரம் கொண்ட (மாறன் தமிழ்மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த) திருமங்கையாழ்வாரை "இளங்கிளியே" என்று அழைக்கின்றனர்.

                    ||திருப்பாவை ஜீயர்||
        
        இந்தப்பாட்டில்  உனக்கென்ன வேறுடையை" என்னுஞ் சொற்றொடர் நிதியானது. உனக்கு அசாதாரணமான பெருமை என்னே என்று வியந்து கூறப்பட்டுள்ளது.



 ராமாநுஜர்க்கு முன்னே  நம்மாழ்வாரும்,
 ஸ்ரீமந்நாதமுனிகளும், ஆளவந்தாரும் நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களாய் இருக்கச் செய்தேயும், நம்மாழ்வார் தரிசனம் என்றோ, நாதமுனிகள் தரிசனம் என்றோ, ஆளவந்தார் தரிசனம் என்றோ வ்யவஹாரம் வராமே "எம்பெருமானார் தரிசனம்" என்றே வ்யவஹாரம் நடந்து வருகைக் கீடான ஸ்வாமியின் அஸாதாரணமான பெருமை இங்கு அநுஸந்திக்க உரியது.  மாற்றாரை மாற்றழிக்க வல்லான் என்றவிடத்தில்,
"பாஷாண்ட த்ரூமஷண்டதாவ தஹநச் சார்வாக கைலாசநி: பௌத்த த்வாந்த நிராஸ வாஸரபதிர் ஸைநேவ கண்டீரவ:  மாயாவாதி புஜங்கபங்க கருட:" , "தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்...நீசரும் மாண்டனர். சாறுவாகமத நீறு செய்து " இத்யாதிகள் நினைவுக்கு வரும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்





Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)