கோதையின் கீதை (பகுதி - 20)



🔸 நப்பின்னை வைபவம் 🔸

திருப்பாவையில் மூன்று பாடல்களில் தொடர்ந்து(18,19,20) கோதை ஆண்டாள் தொல்குடியான ஆயர்குல நப்பின்னையை கூறுகிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. கோதை ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு, பாவை நோன்பு இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு ஆயர்குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது தனிப் பிரியம் ஏற்படுவது இயல்பு அல்லவா?

🔵  நப்பின்னை என்பது யார்?
யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று வைணவப்பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள்.
             நக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் நக்னஜித் கரம்பிடித்தான். நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள். இருந்தனர் என்றும்,  "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக, விஷ்ணு புராணம் சொல்கின்றது.
             நக்னசித்தி என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். சத்தியை என்றும் அழைக்கப்படும் இவள், எண்மரில் ஆறாவது ஆவாள். இவள் வரலாறு, பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.
             நக்னசித்தி, அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆண்ட மன்னன் நக்னசித்துவின் மகள் ஆவாள். சத்தியை, கோசலை என்று இவளைப் பொதுவாக அழைக்கின்றன பாகவதம் முதலான நூல்கள். மகாபாரதமும், "சத்தியை" என்ற எண்மனையாட்டியரில் ஒருத்தி பற்றிக் குறிப்பிடுகின்றது. இவளே தமிழ் மரபில் நப்பின்னையாக அறியப்படுகின்றாள் என்பர்.
🔹பழந்தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.
🔶 நப்பின்னையானவள் முல்லை நிலத்து தமிழ்க் கடவுள் மாயோனை மணந்த ஆயர் மகள்.
🔹 வள்ளியானவள் குறிஞ்சி நிலத்து தமிழ்க் கடவுள் சேயோனை மணந்த குறமகள்.
வடமொழி இலக்கியங்களில் காணக்கிடைக்காத  வள்ளி மற்றும் நப்பின்னை இருவரையும் பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே அதிகமாக பாடுகின்றன.
🔹வைணவ இலக்கியங்கள் ஆண்டாள் தன் திருப்பாவையிலும் நம்மாழ்வார் "பின்னை மணாளன்"  என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" என்றும், இன்னும் பலவிதமாகவும், ஆழ்வார்கள் அருளிச்செயலான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பலவிடங்களில் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றன.
🔹சைவ இலக்கியங்கள் மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்" என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்" என்றும் பாடுகின்றனர்.
🔹தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.
🔹காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள்.
“உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான். உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப” என்பது திருவள்ளுவமாலையில் உள்ள பாடல். உபகேசி என்பது "நப்பின்னைப் பிராட்டியார்" என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
🔹 தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த நப்பின்னை வரலாற்றை நெல்லிநகர் வரதராச ஐயங்கார் தம் காவியத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். நப்பின்னைப் படலம் என அப்பகுதிக்குப் பெயரிட்டு, யசோதையின் தமையன் கும்பகன் மகள் நப்பின்னை என்று குறிப்பிட்டுள்ளார். கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டானாம்.
🔹 திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இம்மூவரைப் பற்றியும் சூக்தங்கள் உள்ளன. நீளா தேவியை பற்றிய சூக்தம், ஆயர் குல சாயலை வெளிப்படுத்துகின்றது. நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள். பூவுலகுக்கும், விண்ணுலகுக்கும் ஏற்படும் தொல்லைகளைப் போக்குபவள் என்பதே அதன் முக்கியக் கருத்து.
🔹 நப்பின்னை நீளாதேவியின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை "இளையபிராட்டி" என்பதும் ஒரு சம்பிரதாயம்.
🔹 கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" எனும் நூல், தமிழில் வெளிவந்துள்ள நப்பின்னை பற்றிய இறுதியான,  முழுமையான நூலாக இனங்காணப்படுகின்றது.
🔹ஆழ்வார்களது பாசுரங்களை வைத்துப் பார்க்கையில், நப்பின்னை, திருமாலின் 3வது துணைவியான நீளாதேவியே என்று ஓரளவு உறுதியாகவே சொல்லலாம்.
🔶 நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில், திருமாலின் 3 தேவியரையும் சுட்டுவதோடு, ஏறு தழுவி கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற செய்தியையும் தருகிறார்.

"என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,
அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,…."




                🔵 ஆய்மகள் = நப்பின்னை 🔵
         (நீளாதேவியில் அவதாரமானவள். நீளாதேவி நீருக்கு ஆதாரமானவள் என்பதால், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனே இவள் மடியில் தலை வைத்து சயனித்திருப்பதாகச் சொல்வது ஐதீகம்!)
🔶 திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில்,
“இரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்…” என்று 3 தேவியரையும் ஒரு சேரச் சுட்டுகிறார். நிலமங்கை – பூதேவி, மலர்மங்கை – ஸ்ரீதேவி(திருமகள்) & புலமங்கை – நீளாதேவி (நப்பின்னையாக அவதரித்தவள்)
• குறிப்பு: ”புலம்” இங்கு இந்திரியத்தைக் (ஐம்புலன்கள் சார்ந்த உணர்ச்சி) குறிக்கிறது. அதனால் புலமங்கை எனும்போது, அது திருமாலின் தெய்வீகப்புலன் உணர்வில் நிறைந்த நீளாதேவியைக் (கண்ணனின் நப்பின்னை) குறிக்கிறது.
🔶 நீளாதேவியின் அவதாரம் தான் நப்பின்னை என்பதை ஆழ்வார்களுக்குப் பின் வந்த வைணவ ஆச்சாரியார்கள் ஏற்றுக்கொண்டு சம்பிரதாய விளக்கங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.
🔹பகவானின் அவதாரங்களில் கிருஷ்ணனின் அவதாரம் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது. ராமாவதாரத்தில்கூட, மகாலக்ஷ்மி பிராட்டி மட்டுமே சீதையாக அவதரித்தார். பூமி தேவியோ நீளா தேவியோ அவதாரம் செய்யவில்லை. ஆனால், கிருஷ்ணன் அவதரித்தபோது பகவானின் மூன்று தேவியருமே இந்த உலகத்தில் அவதாரம் செய்தனர். மகாலக்ஷ்மி ருக்மிணியாகவும், பூமிதேவி சத்யபாமாவாகவும், நீளாதேவி நப்பின்னையாகவும் அவதரித்து கிருஷ்ணனை மணந்துகொண்டனர்.
இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், ருக்மிணியும் சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்துகொண்ட பிறகுதான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர். ஆனால், இந்த நப்பின்னையோ ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள். எனவே முன் இருவர்களை விடவும் ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறாள்.
🔹கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கும் வரை, அவனை ஆண்ட "ஆண்டாள்"(நப்பின்னை) இவளே ஆவாள்.



🔴 இதற்கு முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையில் கண்ணனை எழுப்ப முயற்சித்த கோபிகைகள், தம் முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவர்களுக்கு அப்போது தான் பகவானை ஆஸ்ரயிக்க பிராட்டியின் புருஷகாரம் தேவை என்ற புத்தி வருகிறது. பிறகு இப்பாசுரத்தால் நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை (கண்ணன் நாயகி) புருஷகாரம் செய்தருள எழுப்புகிறார்கள்.


🔹திருப்பாவை பதினெட்டாம் பாடல் 🔹

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

[ மதம் கொண்ட யானையின் நடையை உடையவரும், போரில் பகைவரைக் கண்டு பின்வாங்காத தோள் வலிமை மிக்கவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தல் கொண்ட நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத் திற! எழுந்து வந்து கோழிகள் கூவுவதைக் கேள்!

குருக்கத்தி கொடி படர்ந்த பந்தல் மேலமர்ந்து, பலவகையான குயில்கள் சத்தமிடுவதைக் கேள்! மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் போற்றிப் பாட வந்துள்ளோம். ஆகையால், தாமரை மலரை ஒத்த உன் சிவந்த, மென்மையான கையில் அணிந்த கைவளையல்கள் சீராக ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறப்பாயாக! ]

** ** *


        🔹  பாசுரச் சிறப்பு:- 🔹

🔶 ஐம்புலன்களில் "தொடுதல்" என்பது மேலே சொல்லப்பட்டது. அது போல, மற்ற நான்கு புலன்களின் அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு!
* கந்தம் கமழும் குழலி - மூக்கு
* உன் மைத்துனன் பேர் பாட - நாக்கு
* சீரார் வளையொலிப்ப - செவி
* வந்து திறவாய் மகிழ்ந்தேலோ - கண்
🔶வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர் (ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும் (குறிக்கோள்) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், "ஏக சேஷித்வம்" என்றுரைப்பார்கள்.
🔶 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது.

(மாதவி = வசந்தமல்லி அல்லது செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்.)

ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
⭐ சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
⭐ சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
⭐ துருவன்,பிரகலாதன் போன்ற பக்த அன்பு உள்ளங்களும்,
⭐ ஆஞ்சநேயர் முதலான சரணாகத தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.

⭐ இப்படி அவர்கள் வந்து அமரும் செண்பகக் கொடியானது வேத,வேதாந்த சாகை!
அதில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல், இன்பமாக அமர்ந்து கொண்டு, அவரவர் தமதமது அறிவறி வகைவகையாக பகவானைப் பாடிப் பரவும் கோஷப் பந்தல் என்றே வியாக்யானங்களில் குறிக்கிறார்.

                🔶 ||திருப்பாவை ஜீயர்|| 🔶

          🔶 ஸ்வாமி ராமானுஜருக்கு "கோதா உபநிடதம்"(கோதையின் கீதை) என்று போற்றப்படும் திருப்பாவையின் மீது மிக்க ஈடுபாடு இருந்தது. எம்பெருமானாருக்கு "கோதக்ராஜர்" (ஆண்டாளுக்கு தமையன் என்ற முறையில்) என்று ஒரு திருநாமமுண்டு.



ராமானுஜரின் திருப்பாவை ஈடுபாடும், அவர் அடிக்கடி திருப்பாவைப் பாசுரங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததும், அவருக்கு
⭐"திருப்பாவை ஜீயர்"⭐ என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது! உடையவரும் தன்னை அவ்வண்ணம் அழைப்பதையே மிகவும் விரும்பினார். பிட்சை பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல் தான் செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்கச் சொல்லியபடி செல்லும் பழக்கம் இருந்ததால், பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே கருதினார்.

“உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் "அத்துழாய்" கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரே சமயம் நிகழ, ராமானுஜர் அவளை "நப்பின்னை" என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்
அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச் சரியாக ராமானுஜர் "உந்து மதகளிற்றன்" பாசுரத்தை பாடியபோது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டு அவர் மயங்கியிருக்க வேண்டும் என்பதை கணித்து விட்டார்!  என்ன இருந்தாலும், ராமானுஜருக்கே ஆச்சார்யன் அல்லவா பெரிய நம்பி. உடனே இராமாநுஜருக்கு
"திருப்பாவை ஜீயர்" என்ற பட்டத்தை அளித்து ஆச்சார்யனான பெரிய நம்பி பாராட்டினார் என்பதாக ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இப்பாசுரம் உடையவருக்கு மிகவும் உகந்தது ஆகும். அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.


🔶 கந்தம் கமழும் குழலி என்று கேச பாகத்தையிட்டுச் சொன்னது, ஸ்வாமியின் திருவுள்ளத்திற்கு மிக உகப்பான ஸம்போதனமாம் மதாந்தரஸ்தர்களான. யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவார்கள். அங்ஙனன்றிக்கே காரிசுதன் கழல் சூடிய முடியும், கனகநற்சிகை முடியும்"  என்றும் "கமநீய சிகாநிவேஷம்" என்றும் "சிகயா சேகரிணம் பதிம் யதீநாம்" என்று நம் முதலிகள் உள் குழைந்து பேசும் படி  கமநீய சிகாபந்தத்தோடு ஸ்வாமி ஸேவை சாதித்த அழகு  நெஞ்சு குளிர அநுபவிக்கப்பட்டதாயிற்று.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

🔶 தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

             அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)