கோதையின் கீதை (பகுதி - 28)



            • முத்துக்குறி உற்சவம்

 (ஆடிப்பூர ப்ரம்மோற்சவம் பத்தாம் நாள்)- (அரையர் சேவை)

  • சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்! தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க!  "இரக்கம் இல்லாத பெருமாளே"ன்னு காய்வாய்ங்க.
"வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே."
பின்னர், கட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவாள்.

 அது என்ன முத்துக்குறி?

 முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவாள் குறத்தி!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் தொடர்ந்து விடிய விடிய நடக்கும் இந்த உற்சவம்.

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!





  பத்தாம் நாள் சப்தாவரணம் முடிந்த பிறகு முத்துக்குறி உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் உருவில் காட்சியளிப்பாள். ஸ்ரீநாதமுனிகள் பரம்பரையைச் சேர்ந்த அரையர் குறத்தியாய் இருந்து பாசுரங்களின் மூலம் அபிநய முத்திரையோடு முத்துக்குறி சொல்வர். ஆண்டாள் அரங்கனை அடைய குறி கேட்பதாக ஐதீகம்.

                   • அரையர்சேவை

      அரையர் என்போர் வைணவக் கோயில்களில் "திராவிட வேதம்' எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி "அரையர் சேவை" என்று அழைக்கப்படுகிறது.

திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும்.

இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருக்குருகூர் (ஆழ்வார்திருநகரி) ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள திருநாராயணபுரம் [மேல்கோட்டை] கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து [திருவத்யயன உத்ஸவம்] உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.



• இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள, இறுதி ஐந்தின் தொடக்கப் பாசுரம்.

கோபியர் கிருஷ்ணனிடம் நோன்புக்கு வேண்டி ஆறு பொருள்களை யாசிக்கின்றனர். அதாவது, சென்ற பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து) கண்ணனது அவதாரச் சிறப்பை போற்றிப் பாடிய பின், தாங்கள் வேண்டுவதை அருளுமாறு கோபியர் இப்போது நேரடியாகக் கேட்கின்றனர் !





•  திருப்பாவையின் 26-வது பாசுரம்


மாலே. மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே!
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே! பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்


[ •அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான, பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும்
ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக! ]


       •  பாசுரச் சிறப்பு:-

• இடைச்சியர் ஆறுவகைப் பொருட்களை கண்ணனிடமிருந்து யாசிக்கின்றனர் .

1. சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்
2. நோன்புக்கான புறப்பாடு அறிவிக்க பறை வேண்டும்
3. புறப்படும்போது எதிரே நின்று காப்பிடுவதற்காகப் பல்லாண்டு பாடுபவர்கள் அவசியம்
4. அதிகாலை வேளையாதலால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிய மங்கள தீபங்கள் தேவை
5. தொலைவில் இருப்பவர்களுக்குத் தெரிவதற்காக, உயரத் தூக்கிப் பிடிக்கும் கொடியும்
6. தலையில் பனி விழாமல் தடுக்க துணியும் வேண்டும்.
இப்படி, அவர்கள் வேண்டியதெல்லாம் சின்னச்சின்ன பொருட்கள் தான். அதுவும், கண்ணனுடன் சேர அவர்கள் மேற்கொண்ட நோன்பிற்காகவே ஆகும்.

• ஆண்டாள் மற்றும் அவள் தோழியர், இப்பாசுரத்தில் தாங்கள் நோற்கும் நோன்பிற்கு அவசியமான ஆறு பொருட்களைத் தருமாறு கண்ணனை வேண்டுகின்றனர்.
இது 26 ஆவது பாசுரம். தத்துவங்களின் வரிசையில், எண் 26 பரமாத்மாவைக் குறிக்கும் தத்துவம்.

• இறைவனடியின் கீழ் என்றுமிருந்து பணி செய்வதான வீடுபேற்றினை அடைய மேற்கொள்ளும் சரணாகதி வழியாகிய, ப்ரபத்தி மார்க்கத்தின் ஆறு அங்கங்கள்

1) • அநுகூல்ய ஸங்கல்பம்
(இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)
2) • ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம் (இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )
3) • பலத் த்யாகம்,( தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்)
4) • மஹா விஸ்வாஸம் ,(இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்)
5) • கார்பண்யம், (அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து, எல்லாம் அவன் செயல் என்று அறிதல்.)
6) • கோப்த்ருவம், (ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்)

இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம் - புறத்தாலே செய்யும் திருவாராதனை (பாஹ்ய ஆராதனம்) என்கிற இறை பூசனைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
மந்த்ர,திருமஞ்சன,அலங்கார,நைவேத்ய,த்வஜ ,பர்யங்காஸ என்கின்ற ஆறு நிலை ஆராதனம். ஆகும்.

• நயமான இந்தப் பாசுரத்தைக் கேட்டு கண்ணன் பாஞ்சசன்னியத்தை அனுப்பி வைத்தான், நோன்புக்கு வேண்டி பறையைக் கொடுத்தனுப்பினான். பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான். எல்லாவற்றோடும் பரமனோடு சேரும் தருணம் நெருங்கியது இடைச்சியருக்கு!

• இது 26வது பாசுரம். உபநிடதங்கள், சர்வேஸ்வரனை 26வது தத்வமாகக் கூறுகின்றன. முதல் 24 தத்வங்கள் சரீரம் சம்பந்தப்பட்டவை. 25வது தத்வம் ஜீவாத்மா. அதாவது, ஜீவாத்மாவானது, 24 படிகளைக் (மோட்ச சித்திக்கு தடையாக இருக்கின்ற 24 சரீரத் தத்வங்களை வென்று) கடந்து, பரமாத்மாவை அடைய வேண்டியிருப்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர். [காஞ்சிபுரம் அத்திகிரி பேரருளாளனைச் சேவிக்க 24 படிகளைக் கடந்து தாண்டும் 25வது தத்வமாக ஜீவாத்மா உள்ளது.]

• "மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள்" என்று கண்ணனிடம் கோபியர் கூறும்போது, தாங்கள் மார்கழி நோன்பிருப்பதற்குக் காரணம், தாங்கள் கற்றறிந்தது வாயிலாக அல்ல என்றும், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுவதால் மட்டுமே என்றும் குறிப்பில் உணர்த்துகின்றனர். நம் அன்னை கோதை ஆண்டாள் பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுவும் அவசியம் என்று இப்பாசுரத்தில் வலியுறுத்துகிறாள்.








• (ஆலின் இலையாய் அருளே)  ஆண்டாள் மற்றும் அவளது தோழியர்கள் உன் "ஸ்ரீபாஞ்சஜன்யம்" போல் பல சங்குகள் வேண்டும் என்று கூறுகிறாளல்லவா? "மற்றதெல்லாம் தரலாம் ஆனால் பாஞ்சஜன்யம் ஒன்று தானே உள்ளது, அதைப் போல் வேறில்லையே அதற்கு நான் என்ன செய்வேன்?" என்று கண்ணன் பதிலளிக்கவும், "நீ பெரிய மாயக்காரன், மாயகண்ணனே! அண்டங்களையெல்லாம் வயிற்றில் அடக்கியதோடல்லாமல், ஒன்றுமறியாத பாலனாய் ஒரு சிறு ஆலிலையில் (வடபத்ரசாயீ) துஞ்சியவன் தானே நீ ! இவ்வளவு செய்கிறாய் இதைச் செய்ய மாட்டாயா? உலகில் இல்லாத ஒன்றைக் கூட உன்னால் உண்டாக்கிக் தர இயலும், அப்படியிருக்க உன் ஸ்ரீபாஞ்சஜன்யம் போல் சங்குகளும் இன்னும் நாங்கள் விழையும் நோன்புக்கருவிகளையும் உன்னால் தர இயலாதா?" என கண்ணனிடம் சரண்புகுகின்றனர்.

• (மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்)  சுருதி (வேதம்) வாக்கியங்களை அறிந்து கொள்வது கடினம். எனவே நிறைய மஹரிஷிகள் ஸ்ம்ருதி இயற்றியுள்ளார். யாக்ஞயவல்க்யர், பராசரர், மனு மற்றும் பலர். ஆனால் அதுவும் நடை முறையில் கடினம். உன் வம்சத்தில் முன்னோர்கள் செய்ததை நீயும் செய்.

• (ஆலினிலையாய்) தர்க்கப்படி ஆராய்ந்தால் இளம் தளிர் கண்ணனைத்தாங்குகிறதா? கண்ணன் இளந்தளிரைத் தாங்குகிறானா? இளம் தளிருக்கே ஆதாரம் பகவான்தான்.
ஒரு சமயம் மார்க்கண்டேய மகரிஷி கடலில் ஆலிலையில் சயனிக்கும் எம்பெருமானைப் பார்த்தார். அக்குழந்தையைத் தொட அருகில் வந்தார். அப்போது அக்குழந்தை தன மூச்சை வெளியிட்டு அவரைத் தன வயிற்றுக்குள் செல்ல வைத்தது. அந்த வயிற்றினுள் சகல ப்ரஹ்மாண்டங்களையும் கண்டார். ஆச்சரியம் அடைந்து ஆனந்தப் பட்டபோது எம்பெருமானின் மூச்சுக்கு காற்றால் வெளியே தள்ளப் பட்டார். பின் ஆஸ்ரமத்தில் பழையபடி அமர்ந்திருந்தார்.
சமுத்திரம், ஆலிலை, குழந்தை எல்லாம் மறைந்து விட்டது.



          || திருப்பாவை ஜீயர் ||

  • இதில் ஆலினிலையாய் என்ற விளி
(ஆலின் நிலையாய்) ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமையுடையவர் ஸ்வாமி. "பாஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந:"  என்கிறபடியே தன் பஹுச்சாயையிலே, ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன். ஸ்வாமியோவென்னில், ப்ராப்தாநாம் பாதமூலம் "ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ:" என்றாப் போலே  அடிபணிந்தார்க்குத் திருவடி நிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர். இது தானே ஆலின் நிலைமை.
இதைத்தானே நூற்றந்தாதி தொடங்கும் போதே
"பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்" என்றன்றோ தொடங்கியது. "நியக்ரோதோ பஹுபாத்வட:"  என்ற அமரகோசம் ஆலமரத்திற்கு பஹுபாத் என்று பெயர் படித்தது. உண்மையில் ஆலமரமானது  மற்ற மரங்களன்றிக்கே அபரிடதமான பாதங்களையுடைத்தாயிருக்கும். ஸ்வாமிக்கும் திருவடிகள் அபரிமிதம்.
[அபரிமிதமான சாகைகள் உள்ள ஆல மரம் போல் சிஷ்ய கோடிகள் நிறைந்து] - சிஷ்யர்களே திருவடிகள்.
சங்கம், பெரும் பறை, பல்லாண்டு இசைப்பார்,
கோல விளக்கு, கொடி, விதானம் என்னுஞ் சொற்களை ஊன்றி நோக்கினில் இவையெல்லாம் ஸ்வாமி ராமாநுஜரே என்று எண்ணப் பொருந்தும்.



• (சங்கம்) சங்க ஸ்பர்சத்தால் துருவனுக்கு ஸர்வக்ஞ சக்தியை பகவான் உண்டாக்கினதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்வாமி ஸ்பர்சத்தால் கூரத்தாழ்வான், கூரத்துஆண்டாள்
 எம்பார், அனந்தாழ்வான் பிள்ளான் முதலானோரை ஸர்வக்ஞனாக்கினவர் ஸ்வாமி.
(பறை) பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறையென்னத் தகுவர்.
(பல்லாண்டிசைப்பார்) பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமின்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும், வல்லவராயிருந்தார்.
(கோல விளக்கு) ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம் ஆக இருந்தார்.
(கொடி) ஸ்ரீவிசிஷ்டாத்வைத சித்தாந்த விஜய த்வஜம் ஆவார்.
(விதானம்) "தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை" என்ற திருச்சந்த வ்ருத்தத்தின் படியே கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளின போது விதானமாய் இருந்தவர் ஆதிசேஷன். ஸ்வாமி ராமாநுஜராக ஆதிசேஷன் அன்றோ அவதாரமெடுத்தார் என்கிறார் நம் காஞ்சிபுரம் வித்வான் ஸ்வாமி.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.












Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)