கோதையின் கீதை ( பகுதி - 26 )




             •  ஐந்து கருட சேவை

         திருவாடிப்பூர உற்சவம் 5ம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெறும். பெரிய தங்க அன்னவாகனத்தில் ஸ்ரீஆண்டாளும், சிறிய அன்னவாகனத்தில் ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் பெரியபெருமாள் (வடபத்திரசாயீ),
மற்றும் ஸ்ரீரங்கமன்னார், மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் (சுந்தரராஜப் பெருமாள்), ஸ்ரீவி.திருவண்ணாமலை
ஸ்ரீநிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் தனித்தனி தங்க கருட வாகனத்திலும் ஆக இந்த ஏழுவரும் எட்டு வீதிகளில் சுற்றி புறப்பாடு கண்டருளுவர். ஆண்டாள் இந்த ஐந்து பெருமாள்களை மட்டுமே  பதிகமாக மங்களாசாசனம் செய்துள்ளாள்.
இந்த ஐந்து கருடசேவை பற்றி சுவையான ஓர் செய்தி! பூமிதேவியின் அம்சமான சத்யபாமா ஒருநாள் பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகிய திரௌபதியைப் பார்த்து ஐவர்க்கு மனையாள் என்பதை பரிகசிக்க கோபம் கொண்ட அவள் சத்யபாமாவை "தன்னைப் போல ஐவரைப் பதியாக அடைக!" எனச் சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாக பூமிபிராட்டியான சத்யபாமா பட்டர்பிரான் பெரியாழ்வார் நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளாக அவதரித்து, சாபத்தின்படி ஐந்து பெருமாள்களை மணந்தாள் என்கிற புதுமைச் செய்தியினை வில்லி இயற்றிய "ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்" மற்றும் சிதம்பரநாத கவி இயற்றிய "சீவலமாறன் கதை" ஆகிய சிற்றிலக்கிய நூல்களில் காணலாம். இது பற்றி குருபரம்பரைக்கதைகள் ஏதும் குறிக்கவில்லை.


இதுவரை வாயில் காப்போன் முதல், நந்தகோபர், யசோதை, பலதேவன், நப்பின்னை ஆகியோரிடம் உதவி பெற்றுக் கண்ணனுக்கு அருகில் வந்தாயிற்றல்லவா? இனிமேல் ஆண்டாள் குழுவினருக்குக் கண்ணன் அருள் இருந்தால் மட்டுமே வேண்டிய எண்ணம் நிறைவேறும் என்பதை உணர்த்தவே "இரங்கு" என்று இப்பாசுரத்தில் நம் கோதை ஆண்டாள் இறைஞ்சுகிறாள்.



திருப்பாவை 24-வது பாசுரம்

அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

[ மகாபலி உலகங்களையெல்லாம் தன் கட்டுக்குள் வைத்திருந்த அக்காலத்தில், உன் திருவடிகளால் உலகங்களை அளந்து, அவற்றை அவனிடமிருந்து இரந்து பெற்றவனே ! உன் திருவடிகள் வாழியே !
தென் இலங்கைக்கு வானரப் படையெடுத்துச் சென்று, இராவணனையும் அசுர கூட்டத்தையும் அழித்தவனே ! உன் வலிமையும், திறமையும் வாழியே !
வண்டிச் சக்கர வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து அழித்தவனே ! உன் கீர்த்தி வாழியே !
கன்றின் உருவெடுத்து வந்த வத்சாசுரனை எறிதடியாக்கி, விளாங்கனி மர வடிவில் நின்ற கபித்தாசுரன் மீது வீசியெறிந்து, அவ்விரு அரக்கர்களையும் ஒரு சேர மாய்த்தவனே ! உன் திருவடிக் கழல்கள் வாழியே !
கோவர்த்தன மலையை குடை போல் தூக்கி நிறுத்தி, தேவேந்திரன் உண்டாக்கிய பெருமழையிலிருந்து ஆயர்பாடி மக்களைக் காத்தவனே ! உன் குணம் வாழியே !
பகைவர்களை வென்று அழிக்கின்ற, உன் கையிலுள்ள வேலாயுதம் வாழியே !
இது போல, சதாசர்வ காலமும் உன் பெருமைகளையும், கல்யாண குணங்களையும் போற்றிப் பாடி, உனக்குச் சேவகம் செய்து, வணங்கி வழிபட நாங்கள் இங்கு வந்துள்ளோம். நோன்புக்கான பறையை உன்னிடம் வேண்டிப் பெற வந்துள்ள எங்கள் மீது மனம் இரங்குவாயாக ! ]


-** ** *



         
            • பாசுரச் சிறப்பு :-

• கோபியர்கள் கண்ணன் மேல் வைத்திருக்கும் வாத்சல்யமும், பரம பக்தியும், அவர்கள் 'பல்லாண்டு' பாடுவதில் வெளிப்படுகின்றன.

• ஆண்டாள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே! அதனால் தான், அவளது ஆச்சார்யனுமான தந்தையின் பல்லாண்டுக்கு நிகராக, துயிலெழுந்து மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கண்ணபிரானுக்கு பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறாள்!

• அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே இந்த பல்லாண்டு பாடுதல். வைணவத்திலுள்ள சிறப்பே இந்த மங்களாசாசனம் தான். சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்!

• (அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி)
ஆண்டாளின் த்ரிவிக்ரம அவதாரம் குறித்த பிரேமை நாம் அறிந்தது தான்.  இப்பாசுரத்தை மூன்றடி மண் கேட்ட பரமனின் திருவடியைப் போற்றி ஆண்டாள் ஆரம்பிக்கிறாள்.
(குறிப்பு:- இப்பாசுரம் தவிர, திருப்பாவையில் மேலும் இரண்டு இடங்களில் "ஸ்ரீவாமன அவதாரம்" பற்றி வருகிறது. "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்று 3-வது பாசுரத்திலும், "அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று 17-வது பாசுரத்திலும் ! அதாவது, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட த்ரிவிக்ரமனது வைபவத்தை ஆண்டாள் மூன்று பாசுரத்து அடிகளில் போற்றிப் பாடியுள்ளார்.)

• (சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி)ராவணனை, வானரப் படையை உருவாக்கி, கடலில் பாலம் அமைத்து, அவனது இருப்பிடமான இலங்கைக்கே சென்று வென்றதால், ராமனின் திறல் (வலிமை,திறமை) போற்றப்பட்டது!

• (பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி,
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி)
"பொன்றச் சகடம்" உதைத்தபோது, புகழ் போற்றி விட்டு, "கன்று குணிலா எறிந்தபோது" கோதை நாச்சியார் கழலைப் போற்றியது எதனால்? கன்று வடிவில் வந்த அரக்கனை தடியாகக் கொண்டு, கண்ணன் நின்ற இடத்திலேயே சுழன்று வீசி எறிந்தபோது, ஒரு காலை நிலத்தில் இருத்தி, மற்றதை சற்றே தூக்கி நின்ற கோலத்தில், கண்ணனது தாமரைப் பாதமும் கழலும் பளிச்சென்று கண்ணில் பட, கழல் போற்றப்பட்டது!

• (குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி)
"குன்றைக் குடையாக எடுத்து" பெருமழையிலிருந்து ஆயர்களைக் காத்தபோது, கண்ணனின்  பெருந்தன்மையுடனான கருணையை, "குணம் போற்றி" என்றாள் ஆண்டாள்! கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி கண்ணன் நின்ற கோலத்தை பெரியாழ்வார், பத்து பாசுரங்களில் மிக அற்புதமாக மங்களாசாசனம் செய்துள்ளார்.

• (வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி) பகைவர்களை அழிப்பதற்கு முதன்மைக் கருவியாக இருப்பதால், பரமன் கைவேல் போற்றப்பட்டது. அடியவர்களைக் காக்கவும், தீமையை அழிக்க வேண்டியிருக்கிறதே, அப்பரமனுக்கு, பல சமயங்களில்! அதுமடுமின்றி கண்ணன் "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனின்" மைந்தன் ஆயிற்றே! "படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!" என்று திவ்யாயுதங்களுக்கு மங்களாசாசனம் பாடிய ஸ்ரீவிஷ்ணுசித்தரின் மகளாயிற்றே நம் அன்னை  ஸ்ரீகோதை ஆண்டாள்.

• (என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்)  "இனி எப்போதும் உனக்கு சேவை செய்வதே நாங்கள் வேண்டுவது, வேறு எதுவுமே எங்களுக்குத் தேவையில்லை, கண்ணா! எங்களிடம் மனம் இரங்கலாகாதா?" என்று இடைச்சியர் இறைஞ்சுவதாக ஸ்ரீஆண்டாள் பாடும்போது, கருணை வடிவான அப்பரந்தாமன் அருள் வழங்காமல் இனிமேலும் இருக்கத் தான் முடியுமா?

• கோபியர்கள் மாயக் கண்ணனை, "அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி" என்று
இப்பாசுரத்தில் பரந்தாமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம்  செய்யப்படுகிறது. அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) திருக்கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.

• "என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !

• "வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது !

 • "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல, பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !

• "பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி" என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை, பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.

• 'சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி' என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும், ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !

• முந்தைய பாசுரத்தில் ஸ்ரீநரசிம்ம அவதாரம் மட்டும் குறிப்பிடப்பட்டது. இப்பாசுரத்தில் விபவ அவதாரங்களான வாமன,இராம,கிருஷ்ணாவதாரங்கள் குறிக்கப்படுகின்றன.

• இறைவனது திருவடி மற்றும் திருக்கரங்களின் பெருமையைப் பாடும் இப்பாசுரத்தை அதன் உயர்ச்சியைக் கொண்டு இருமுறை பாராயணம் செய்கிறார்கள்.

• சென்ற பாசுரத்தில் ஆண்டாள் கேட்டுக் கொண்ட படியே இந்தப் பாசுரத்தில் கண்ணன் நடந்து வருகிறான், அருள் செய்வதற்கு. ஆயினும் அவனை நடக்க வைத்து விட்டோமென்று ஆண்டாளுக்குத் துன்பம் வந்துவிடுகின்றது. ஆகையால் அவனது திருவடிகளுக்கு போற்றி பாடி இப்பாசுரத்தைத் துவங்குகிறாள். கலியுகத்தில் இருப்பதையே மறந்துவிட்ட ஆண்டாள், திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் நடந்த செய்திகளைப் பாடி அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் அடக்கி விட்டாள்.



• (குன்று குடையாய் எடுத்தாய் குணம்)  இதுவரை இறைவன் திருவடிப் பெருமை பேசப்பட்டதல்லவா? இந்தக் காட்சியில் அவனது திருக்கரங்களின் மேன்மை கூறப்படுகின்றது. பல முறை பரந்தாமன் இந்திராதி தேவர்களுக்குக் கருணையோடு அருள் புரிந்திருக்கிறான். ஆனால் அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இந்திரன் பெரும் சுயநலக்காரன். அவனது பதவியைக் காத்துக் கொள்வதில் எப்போதும் முனைப்போடு இருப்பவன், ஆயர்குலத்தினர் வழக்கமாக ஆண்டுதோறும் மழை பொழிந்து வளம் செய்வதற்காக இந்திரனைச் சிறப்பித்து விழா எடுப்பதைத் தடுத்துக் குட்டிக் கண்ணன், உண்மையிலேயே கோகுலத்திற்கு உதவி செய்யும் கோவர்தன மலைக்கு விழாயெடுக்கச் செய்ததால் கோபங்கொண்டு 7 தினங்கள் அழிவைத்தரும் பெருமழையைப் பொழியச் செய்து துன்புறுத்தினான் இந்திரன். கண்ணன் எண்ணியிருந்தால் இந்திரனை தண்டித்திருக்க முடியும். ஆயினும் அவனைப் பொறுத்துக் கொண்டான். கோவர்த்தன மலையை தாங்கிக் குடை பிடித்துப் பெருமழையிலிருந்து ஆயர்பாடியைக் காத்தான் கண்ணன். இந்திரன் மீது கோபம் கொள்ளாமல், அவனது அறியாமையைப் பொறுத்த பெருந்தன்மையுடனான கருணையை, "குணம் போற்றி" என்றாள் ஆண்டாள்.

• (பகைகெடுக்கும் நின்கையில் வேல்) முல்லைத் திணையில் ஆவினிங் கவர்தல் ஒரு தொழில். அதைச் செய்யும் பகைவரைப் போரில் வெல்ல கண்ணன் அவனது திருக்கரத்தில் வேல் கொண்டிருந்தான். கூர்வேல் தொழிலனாம் நந்தகோபன் மகனல்லவா?

• வாமன அவதாரத்திலும், இராமாவதாரத்திலும், இறைவனுக்கு ஒரு பகைவர் தாம். ஆகையினால் ஓரோர் அடியில் அவர்களைப் போற்றிவிட்டாள். ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பல திசைகளிலிருந்தும் இறைவனுக்குப் பகை. எனவே தான் கண்ணனுக்குப் பற்பல போற்றிகளைச் சொல்லிக் காவல் படுத்தும் விதத்தில் மங்களாசாஸனம் செய்கிறாள் ஸ்ரீ கோதை ஆண்டாள்.


           • || திருப்பாவை  ஜீயர் ||

          • இதில் என்பதில்  கொல்வது கோல் எனில் வெல்வது வேல் என்க! கண்ணபிரான் கைகளில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான். பகவத் ராமாநுஜர் கையில் வேல் எனப்படுவது முக்கோலாகிய த்ரிதண்டம் ஆகும்.





• யதிராஜ சப்ததியில் "விஷ்வக் சேனோ எதிபதிர் ஆபூத் வேத்ரசாரஸ் த்ரிதண்ட: " என்று சேனைமுதலிகள் ஸ்வாமியாய் திருவவதரிக்க, உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கைகளில் உள்ள  திருப்பிரம்பே த்ரிதண்டம்
ஆயிற்று எனப்பட்டது. கையில் வேலாகிய
முககோலுக்கு மங்களா சாசனம் செய்தது முக்கோல் பிடித்த முனிக்கே மங்களா சாசனம் செய்தது ஆகும்.




ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                 அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.




Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)