கோதையின் கீதை (பகுதி - 19)



ஸ்ரீபெரியாழ்வார் வைபவம்:-

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசம் செய்யும் "மூங்கில் குடி" என்னும் வேயர் வம்சத்திலிருக்கும்
"முகுந்தர்" என்பவருக்கு 4வது புத்திரனாக "விஷ்ணுசித்தர்" என்ற பெயரில்   ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக, அவதரித்து, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலத்தில், மதுரையை ஆண்ட "ஸ்ரீவல்லபன்" என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வந்தான்.
எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும் பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையும் அழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல
புரிந்து வந்து தோற்றனர்.  இத்தருவாயில் விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
"பரதத்துவம்" என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே
என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து "பட்டர்பிரான்" என்னும் பட்டத்தையுமளித்தான்.

    இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்த தருணத்தில் "எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில்" இவருக்கு காட்சி தந்தருளினார். அதனைக் கண்ட விஷ்ணு சித்தர்
இப்பூவுலகில் எம்பெருமானுக்குத் தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று
நினைந்து திருப்பல்லாண்டு, பாடினார்.

  இதன்பின் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்து விஷ்ணு சித்தர் தொடர்ந்து
எம்பெருமானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து
எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார்.

     ஒருநாள் ஸ்ரீவில்லிபுத்தூர், வடபத்ரசாயி பெருமாள் ஆலயத்தின் துளசி மாடத்தினருகே, விஷ்ணு சித்தர்  ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுக்கிறார். ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்க்கிறார். பக்திக்குப் பாத்திரமான விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு,  பாமாலையோடு தொடுத்த பூமாலையைக், கோதை தான் சூடி பின் பெருமாளுக்குச் சூட்டுகிறாள்! ஒருநாள் இதைக் கண்ணுற்ற விஷ்ணு சித்தர், கோதையைக் கடிந்துகொள்ள, பெருமாள் ‘தனக்கு கோதை சூடிய பூமாலையே உகந்தது’ என விஷ்ணுசித்தரின் கனாவில் உரைக்க, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆகிறாள் கோதை! கண்ணனையே, காதலனாக வரித்த, நாச்சியாரை,  மணக்க  திருவரங்கத்துக்கு  வரவழைக்கும்படி, கனாவில்  விஷ்ணு சித்தரிடம் அரங்கன் சொல்ல, திருவரங்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டாள், அரங்கனுடன் கலந்துவிடுகிறாள்! அரங்கன் பெரியபெருமாளின் மாமனாரான பின் விஷ்ணுசித்தர் "பெரியாழ்வார்" என்றழைக்கப்பட்டு தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினார்.
 "ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்" என்று தாம் பாடியது உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டு,  ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்பு போலவே செண்பகம், மல்லிகையோடு,  செங்கழுநீர், இருவாட்சி, முதலிய பல மலர்களுடன்,  ஆர்வமென்பதோர் பூவையும் இட்டுக்கொண்டு, 85 ஆண்டுகள் வாழ்ந்திருந்து கடைசியில் "திருமாலிருஞ்சோலை" சென்று அழகர் பொன்னடி பூண்டு, சிலகாலம் கைங்கர்யம் செய்து வாழ்ந்து பின்னர் "பேரின்ப பெருவீடு" எனும் பரமபதமடைந்தார்.

• பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின்
அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்”
என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
• உற்சவகாலங்களில் ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.
• மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார்
துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது ஸ்ரீபெரியாழ்வாரின்
வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி
பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும்
காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம்
காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை
பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு உபசரிக்கிறார்கள்.



சென்ற பாசுரத்தில் காவலர்களிடம் மன்றாடி, அனுமதி பெற்று நந்தகோபனுடைய இல்லத்தில் நுழைந்துவிட்டார்கள். இப்பாசுரத்தில், வீட்டிலுள்ள அனைவரையும் எழச்சொல்லிப் பாடுவதாக வருகிறது.

இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே ப்ரவேசித்த நம் அன்னை ஆண்டாள் , நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், கிருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ 'திருப்பள்ளி எழுச்சி' பாடுகிறாள். இங்கே ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள்.


• திருப்பாவையின் 17வது பாசுரம்


அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

[எமக்கு ஆடையும், நீரும், பல்வகை உணவுப்பண்டங்களையும் தானமாக வாரி வழங்கும் எங்கள் தலைவரான நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய உறுதியான இடையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! த்ரிவிக்ரம அவதார காலத்தில், வானளாவி ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த தேவர் தலைவனே! விழித்தெழுவாய்! செம்பொன்னால் செய்த வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வத் திருமகனாய், பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்!]

** ** *




    பாசுரச் சிறப்பு:-

• இப்பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் வரிசைக் கிரமமாக எழுப்பப்படுவதை முறையே ஆச்சார்யன், திருமந்திரம், திருமந்திரத்தின் பொருள், திருமந்திரத்தின் சாரம் (அஷ்டாட்சரம், மூலமந்திரம்) ஆகியவற்றின் சின்னங்களாகக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம்.

• யசோதையே, ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும், மனம் கலங்குபவள். கோபியரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறம் படைத்தவள். அதனாலேயே, அவளை கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றும், குல விளக்கு என்றும், அது போலவே ஆயர் குலத்தைக் காத்து, ஆயர் குலத்தவருக்கு வேண்டியதை தந்து அருளும் நந்தகோபர் எம்பெருமான் என்றும், (அதாவது, அவ்விருவருவரையும் பரமனுக்கும், பெரிய பிராட்டிக்கும் இணையான) மிக உயர்ந்த இடத்தில் வைத்து ஆண்டாள் கொண்டாடிப் பாடியுள்ளார்!

• நந்தகோபருக்கு (அவரது தானம், பராக்கிரமம் மற்றும் செல்வத்தை முன்னிட்டு) திருப்பாவையில் ஐந்து  தடவை மங்களாசாசனம் செய்யப்படுள்ளது.

1)கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* (தி.பா.01)
2)நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே.*(தி.பா.16)
3)எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்*(தி.பா.17  )
4)நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்* (தி.பா.18  )
5)ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்!* (தி.பா.21  )

 • அம்பரம் என்பது பரமபதத்தையும், தண்ணீர் என்பது வைகுண்டத்தில் பாயும் விரஜா நதியையும், சோறு என்பது உபநிடத ஞானத்தையும் குறிப்பில் உணர்த்துவதால் நந்தகோபர் ஆச்சார்யர் ஆகிறார்.

• இறைவனை அடைய விரும்புகிறவர்கள் நல்லாச்சார்யன் மூலமாக எட்டெழுத்து மந்திரமும், விளக்கமும் உபதேசம் பெற்று அவனது அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அடைய வேண்டும் என்பது வைணவ இறைநெறி. அதுவே இப்பாசுரத்தின் உட்பொருள். எல்லோருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி எளிதாகக் கிட்டக்கூடிய (சௌலப்யம் ) இறைவனின் கருணை குணமும் இப்பாசுரத்தின் உட்பொருள்

• யாகங்களில் 3 முறை திரிவிக்கிரமனுக்கு அவிர்பாகம் கொடுப்பது போன்றே முதல் பத்து (3 ஆம் பாசுரம்), இரண்டாம் பத்து (17 ஆம் பாசுரம்), மூன்றாம் பத்து (24 ஆம் பாசுரம்) என்று திருப்பாவையில் மூன்று முறை திரிவிக்கிரம அவதாரத்தைப் போற்றுகிறாள் ஆண்டாள் !  இந்த இரண்டாம் பத்தில் 17வது பாசுரமான இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்கிறாள்.

• இப்பாசுரம் எம்பெருமானாரை (எந்தை ராமனுச முனியை) துயிலெழுப்புவதாகச் சொல்வதும் ஒரு ஐதீகம்! ஆண்டாளுக்கு "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!" என்று வாழ்த்து பாடுவது வழக்கம். அடியவர் வாழ்வை உய்விக்க அவதரித்ததால், அடிவர்க்கு "அம்பரமே தண்ணீரே சோறே" என்று கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் அவரை போற்றுவதாகக் கொள்ளலாம்! எம்பெருமானாரே, வைணவ அடியார்க்கு திருமந்திரம், த்வயம், சரம சுலோகம் என்ற மூன்றாகவும் இருப்பார். அது போலவே, இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் பலராமரும், எம்பெருமானாரும் ஆதிசேஷ அவதாரங்கள் ஆவார்கள்.


|| திருப்பாவை  ஜீயர் ||

அம்பரத்தையும், தண்ணீரையும், சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி ராமாநுஜர். "அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ" என்று நிகண்டு கூறியபடி  அம்பரமாவது ஆகாசம்; பரமாகாசம் எனப்படுகிற பரமபதம். அதையும் வ்ரஜையாகிற தண்ணீரையும், "அந்நம் ப்ரஹ்மேதி வ்யாஜாநாத்" என்று உபநிஷத்தில் அன்னமாய்ச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறம் செய்யும் எம்பெருமான். க்ருபாமாத்ர ப்ரஸன்னாச்சார்யராய்  உபகரித்தருளினவர் எம்பெருமானார்.



"அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமான்' என்றதும் எம்பெருமானாரை நினைப்பூட்டும். ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி சேவிக்கப்பெற்ற போது, " ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டியிருப்பேனே! "  என்று ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி.
ஆளவந்தாரோடே சேர்ந்து வாழப்பெறாமல் போனாலும், "யத்ஹதாம்போருஹத்யான" ஸ்லோகம் படியும், "ஏகலவ்யனன்றோ நான்" என்ற ஸூக்திபடியும், அவருடைய விலக்ஷணாநுக்ரஹ பாத்திரமாயிருக்கப்பெற்ற பெருமையினால் நித்யவிபூதிக்கும், லீலாவிபூதிக்கும் இடைச்சுவர் தள்ளி உபயவிபூதிக்கும் ஒரு போகியாக்கினவர் நம் ஸ்வாமி.

"மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!" என்றவிடத்து வியாக்யானத்தில் உபயவிபூதிக்கும் இடைச்சுவர் தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச்செய்யப்பட்டிருந்ததாலும், அப்பெருமை ஸ்வாமிக்கு கிம்புநர்ந்யாய ஸித்தமே. அம்பரத்தை - பரமாகாசத்தை ஊடறுத்தவர் என்றாயிற்று.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)