கோதையின் கீதை (பகுதி - 18)



தொன்மையான, புராணப் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலும் ஒன்று! 108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று!  கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமையுடைய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மல்லிநாடு, வராக க்ஷேத்திரம், புதுவை, தென்புதுவை, புத்தூர், வடேஸ்வரபுரம், வடமஹாதாமபுரம், செண்பகாரண்ய க்ஷேத்திரம்,ஸ்ரீதன்வி புரி, முப்புரியூட்டின தலம் என்ற பெயர்களும் வழங்கப்பட்டன.

ஸ்ரீவட பத்ரசயனப் பெருமாள் கோயில் .  மிகப்பெரிய கோபுரத்துடன் விளங்கும் அழகுமிகு பெருங்கோயில் ஆகும் பதினொரு நிலைகளுடன் கூடிய அக்கோபுரத்தின் உயரம் 196 அடி ஆகும். "ஸ்ரீவல்லபதேவ பாண்டியன்" (கி.பி.765 -815) இக்கோபுரத்தைக் கட்டியதாகக் செவிவழிக்கதை ஒன்றும் உண்டு. பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழி வென்று அதனைக் கொண்டே பெரியாழ்வார் இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர்.
பன்னெடுங்காலமாக "வடேசுவரபுரம்" எனப் பெயர் பெற்றிருந்த இதனைக் 'கீழக் கோவில்' என்றும் 'பெரிய யெருமாள் கோவில்' என்றும், 'பள்ளி கொண்ட பரமசுவாமி கோயில்' என்றும் கூறுவார்கள். இக்கோயிலில் இரண்டு தளங்கள் உள்ளன.
•  மேல்தளத்தில் உயர்ந்த மேடை மீது மூலஸ்தானம் உள்ளது. மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலி, சூரியன், தும்புரு,நாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர், வில்லி, கண்டன், கின்னர மிதுனம்,  ஆகியோரின் உருவங்கள் இருக்கின்றன. சித்திரவடிவில் சிவபெருமான் வடக்குப்பக்கச் சுவரில் உள்ளார். விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிராகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழி நீராட்டு திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் எல்லோரும் வந்து தரிசிக்க திறந்து வைக்கப்படுகின்றன.
இங்குள்ள பஞ்ச பேரர்களில் மூலவர் (வடபெருங்கோயிலுடையான்) மணிவண்ணனார் என்றும், உற்சவருக்கு (பெரியபெருமாள்) வீதியார வருவான் என்றும், கௌதுகருக்கு வில்லிபுத்தூருறைவான் என்றும், யாகபேரருக்கு இனிதமர்ந்தான் என்றும், நித்யோத்ஸவர்க்கு அல்லல் விளைத்த பெருமாள் என்றும் திருநாமங்கள் உண்டு.
இம்மேல்தளத்தில் காணப்பெறும் "கோபாலவிலாசம்" எனும் பகல்பத்து மண்டபம் உள்ளது.
• கீழ் தளத்தில் கிழக்கு முகமாக லட்சுமி நரசிங்கப்பெருமாள் சந்நிதி , தசாவதார மூர்த்தி சந்நிதி,பன்னிரு ஆழ்வார்கள், நாதமுனிகள் சந்நிதி  இருக்கிறது.
பெரியாழ்வாருக்கென்று தனிச்சந்நிதியாக கர்ப்பகிருஹம்,அர்த்தமண்டபம், மகாமண்டபம், பிராகாரம்,  கொடிமரத்துடன்,பலிபீடமும் ஆகியவற்றுடன் உள்ளது. பெரியாழ்வார் சந்நிதிக்கு எதிரே நம்மாழ்வார், உடையவர் சந்நிதிகள் உள்ளன.
சக்கரத்தாழ்வார் சந்நதி மிகப்புராதனமானது பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே  மூலவிக்ரகமாக விளங்குகிறது. வேறு எங்கும் இப்படி இல்லை. திருவனந்தபுரத்தில் இருந்து இந்த விக்ரஹம் கொண்டு வந்ததாக கூறுவர். திருவாடிப்பூர நந்தவனம் இந்த சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு தென்புறம் உள்ளது. நாச்சியார் திருமாளிகை எனப்படும் ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் வடபெருங்கோயிலை அடுத்து தென்மேற்கில் உள்ளது.
ஸ்ரீ வில்லிபுத்தூரே திருவாய்ப்பாடியாகவும்,வட பெருங்கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும், வடபெருங் கோயிலுடையானே ஸ்ரீகிருஷ்ணனாகவும், தன்னைப் பிராட்டியாகவும், தோழிமாராகவும் அநுகரித்துக் கொண்டு இடைப்பெண்கள் நோற்ற பாவை நோன்பை தான் நோற்கிறாள். ஆக "நந்தகோபர் திருமாளிகையாக வடபெருங்கோயில்" ஆண்டாளால் பாவிக்கப்பட்டதென்பது  குறிக்கத்தக்க ஒன்றாகும்



16 முதல் 20 வரையிலான ஐந்து பாசுரங்களால், நந்தகோபரின் வீட்டு நபர்களை எழுப்புவது முதல் கண்ணனையும் எழுப்புவது வரை அமைந்த வடிவில் வருகின்றன. இதில் கண்ணனின் தந்தையான அரசன் நந்தகோபனுடைய வீட்டுக் காவலர்களோடு உரையாடி, வாயில் கதவுகளைத் திறக்க வேண்டுகிறாள்.



• திருப்பாவையின் 16-வது பாசுரம்.

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே!. மணிக் கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

["ஆயர்பாடியில் இடையர்குல மக்களுக்குத் தலைவனாய், அரணாய், அரசனாய் இருக்கும் நந்தகோபன் எழுந்தருளியுள்ள மாளிகைக்குக் காவலானாய் நிற்பவரே ! மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரண வாயிலைக் காத்து நிற்பவரே ! ஆயர்பாடியில் வாழும் கோபியருக்கு வேண்டி, மாணிக்க மணிகள் பதிக்கப்பட்ட வாயிற்கதவைத் திறந்திடுக ! உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துகின்ற மாயனும், நீலத் திருமேனி கொண்ட மணிவண்ணனும் ஆன கண்ணன் , நாங்கள் நோற்கும் பாவை நோன்பிற்கான பறையை அருளுவதாக எங்களுக்கு நேற்றே வாக்களித்துள்ளான் ! அக்கண்ணபிரானை துயிலெழுப்ப நாங்கள் தூய உடலோடும் உள்ளத்தோடும் வந்திருக்கிறோம். ஆகவே, மறுப்பு தெரிவிக்காமல், காவலனான நீங்கள் எமது அன்னையைப் போன்று கருணை வைத்து, பிரம்மாண்டமான வாயிற்கதவைத் திறந்து, நாங்கள் நோன்பிருந்து கண்ணனை வணங்கி வழிபட அனுமதி தர வேண்டும்."]

** ** *




பாசுரச் சிறப்பு:-

• வைணவ நெறியின் மிக உயர்ந்த தத்துவங்களாகிய இரஹஸ்யத் த்ரயம் (மூல மந்திரம், த்வய மந்திரம், சர்ம ஸ்லோகம்) பற்றி குறிக்கின்ற பாசுரம்.

• இதுவரை பத்து இடைச்சிகளாக உருவகப்படுத்தப்பட்டவை, 10 இந்திரியங்கள், புலன்கள். (செய்புலன்-கர்மேந்திரியம் 5, உணர்புலன்-ஞானேந்திரியம் 5) ஆகும். இந்தப் பாசுரத்தில் குறிக்கப்படுவது இவை பத்தையும் பின்னிருந்து இயக்குவது மனம்.
 "மனஸ் - மனம்" இறைவனை அடையத் தடையாயிருக்கும் கதவு. குரு தொடர்பினால் அந்த இருளை நீக்கித் தாளைத் திறந்திட்டால், நமது "இதய கமலத்தில் கோயில்" கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.
• குரு மூன்று மந்திரங்களை இரகசிய உபதேசமாக உபதேசிப்பார். பெரிய திருமந்திரம், என்று அழைக்கப்படும் எட்டெழுத்து மந்திரந்தை 'மந்த்ர இரஹஸ்யம்' என்றும், சர்மஸ்லோகத்தை 'விதி இரஹஸ்யம்' என்றும் த்வய மந்த்ரத்தை 'அநுஸந்தான அநுஷ்டான இரஹஸ்யம்' என்றும் கூறுவார்கள்.

   •  'மந்த்ர இரஹஸ்யம்'
* 'கோ' என்பவன் அரசன். அரசர்களெல்லாம் விஷ்ணுவாகிய நாராயணனின் அம்சம். இங்கே 'கோ' என்பதே அரசர்க்கரசனாம் ஆண்டவனைக் குறிக்கிறது எனவேதான் கோ உறையும் இல் 'கோயில்' ஆவது தாரக மந்திரமான திருமந்திரம்.

    • 'விதி இரஹஸ்யம்'
* கொடி என்று சொல்வது பெண்மையைக் குறிப்பது,கொடியிடையார் இல்லையா? பெண்டிருள் மேன்மையான தாயார் திருமகளைக் குறிக்கும் 'ஸ்ரீ' ஸப்தம் த்வய மந்திரத்தில் தானே தோன்றுகின்றது ? ஆகவே தான் 'கொடி தோன்றும் வாயில்' தாயாய் இறை ஞான அமுதூட்டி சீவர்களைக் காத்து நிற்கும் போஷக மந்திரமாம் த்வயத்தைக் குறிக்கிறது.

• 'அநுஸந்தான அநுஷ்டான இரஹஸ்யம்'
* இறைவன் தன் வாய்மொழியாக அளித்த வாக்கு, சரணம் செய்தவர்களைக் காப்பேன் என்னும் உறுதிமொழி. ஆகவே 'வாய் நேர்நதது' சீவாத்மாக்களுக்குப் பலனைத் தருவதாக, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதான, அனுபவித்து சுகமடையச் செய்வதாக விளங்கும் போக்ய மந்திரமாம் சரமஸ்லோகத்தைக் குறிக்கின்றது.

• அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரமும் (16), அடுத்தப் பாசுரமும்(17) ஜீவாத்ம நிலை , நித்யஸூரிகளை அணுகி, குருவைப் பணிந்து சரணடைதல் பற்றிச் சொல்கின்றன . மேலும் குறிப்பாக, அவதார பஞ்சகத்தின் வ்யூஹத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனைத் தொழும் போது , அவனுடடைய பரிவாரங்களையும் சேர்த்துத் தொழுவது.

• கால பஞ்சகத்தின் கீழ் 'இஜ்யை' எனும் இறைவனைத் தொழுதலாகிய ஆராதனை காலத்தைக் குறிக்கும் பாசுரம். ஐந்து உணர் புலன் (ஞானேந்திரியம்) ஐந்து செய் புலன்களோடு (கர்மேந்திரியம்) பதினொன்றாம் புலன் மனம். அதுவே சீவாத்மாக்கள் இகவுலகின் பிடியில் கிடந்துழல கட்டுக்களை விதிக்கும் புலன். அந்தக் கட்டிலிருந்து விடைபெற, மனத்தைச் சூழ்ந்துள்ள இரஜோ,தமோகுணங்கள் நீங்கி இறையனுபவம் பெற, இதய கமலத்தில் உறைகின்ற இறைவனைத் துதித்தே (ஆராதனை செய்தே ) வீடுபேறடைய வேண்டும்.

• பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுவதாகப் பெரியோர் கூறுவர்.

• பிரமாணம்: வேதம், ஸ்மிருதி, புராண இதிகாசங்கள், திவ்யபிரபந்தம், பிரம்ம சூத்ரம் ஆகியவை
பிரமேயம்: பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
பிரமாதா: ஆச்சார்யர்கள்
சுருங்கச் சொன்னால், பிரமாணம் மூன்று மந்திரங்களையும், பிரமேயம் எம்பெருமானையும், பிரமாதா, மந்திரங்களை உபதேசிக்கும் ஆச்சார்யனையும் குறிக்கின்றன. எம்பெருமானைப் பற்ற மந்திரம், பரதேவதா, ஆச்சார்யன் ஆகிய மூன்றின் பேரிலும் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
• இப்பாசுரத்தில் கோயில் காப்பான் - திரு மந்திரம் என்றும் கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம் என்றும்,
நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம் என்றும் பூர்வர்கள் கருதினர்.
• 'மணிக்கதவம் தாள் திறவாய்' என்பது மேற்கூறிய மூன்று மந்திரங்களை உபதேசிக்குமாறு ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டுவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
•  இப்பாசுரத்தில் கோபியர்கள் 'தூயோமாய் வந்தோம்' என்று சொல்லும்போது, முக்காரண சுத்தியுடன் (வாக்கு, மனம், உடம்பு) பகவானிடம் வந்துள்ள அடியார்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றனர்.
• துயிலெழப் பாடுவான்' என்பது, எம்பெருமானை போற்றிப் பாடித் தொழுது, அதன் வாயிலாக உலக பந்தங்களிலிருந்து விடுபடும் மார்க்கத்தை உட்பொருளாக வலியுறுத்துகிறது !
• சிஷ்யனானவன், ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் கணத்திலேயே, எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை ' மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்' என்பது குறிக்கிறது.
• 'நேய நிலைக் கதவம்', தடங்கலின்றி வளரும் (பகவான் மேல் வைத்திருக்கும்) அன்பையும், பக்தியையும் குறிக்கிறது.  

     

               ||திருப்பாவை ஜீயர்||

(நாயகனாய் நின்ற) யதிராஜ ஸப்ததியில் "அமுநா தபநாதி சாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகஸ்ரீ:  மஹதி குருபங்க்தி ஹாரயஷ்டி:" என்று பணித்த படியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில், நாயகமணியாய் விளங்குபவர் ஸ்வாமி ராமாநுஜர்.

(நந்தகோபன்) தனக்கு ஔரஸ புத்திரனில்லாமல் "ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்" என்னப்பட்டவொரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே ஸ்வாமியும், யதிராஜ சம்பத் குமாரா! என்னும்படி  செல்வப் பிள்ளையை தம் புத்திரராகப் பெற்றவர்.
(உடைய) உடையவரென்கிற திருநாமம் ஸூசிதமாகிறதென்று  கொள்ளக்குறையில்லை.






(கோயில் காப்பான்ன்) எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
"ஸ்ரீமந்; ஸ்ரீரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய" என்கிற படி ஸ்ரீரங்கஸ்ரீயை காத்தருளியவர் ஸ்வாமி.

(கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான்) " உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா! " என்பது ஸ்வாமிக்கு கட்டியம்.

"கோயில் காப்பானே" என்பதனால் லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று.

"கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்" என்றும்,"நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே" என்றும், சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல் இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே. இது நித்ய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று. அதையும் பிறர் புகாதபடி காத்தருள்வார் ஸ்வாமி.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                 அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்












Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)