கோதையின் கீதை (பகுதி - 9)



ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன் வடகலை வைஷ்ணவ சமயப் பெரியவர்களுள் முதன்மையானவர். இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுநேரப்பணியாக கருதிய இவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு (124) நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார். இவருடைய பாடல்கள் தினமும் பெரும்பாலான வடகலை வைணவர்களால் ஓதப்பட்டு வருகிறது. வடகலை வைணவத்தை பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சன்னதியோடு முதல் வழிபாடும் நடத்தப்படுகிறது.
திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருகிறது.

ஒருமுறை நம் அன்னை கோதை ஆண்டாளைச் சேவிக்கும் பொருட்டு  அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து தங்கியிருந்தார். அன்று கோதை ஆண்டாளின் புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. ஸ்வாமி தேசிகர் தங்கியிருந்த வீதியில் அன்று புறப்பாடு இல்லை. ஸ்வாமி தேசிகரும் மௌனவிரதத்தைச் சங்கல்பித்துக் கொண்டு அமர்ந்திருந்த நேரம்.
 ஆண்டாள் எழுந்தருளிய வேண்டிய வீதியில் ஏதோ இடையூறு வந்ததன் காரணமாக, புறப்பாடு ஸ்வாமி தேசிகர் தங்கியிருந்த வீதி வழியாக தொடர்ந்தது. [ஸ்வாமி தேசிகருக்காக ஆண்டாள் ஏற்படுத்திய காருண்ய லீலையே அது]
திடீரென ஸ்வாமி தேசிகர் தங்கியிருந்த வீதியில் ஆண்டாள் புறப்பாடு கண்டருளிய நிலையில், தேசிகப்பெருமானும், வெளியே வந்து கோதை நாய்ச்சியாரை நெஞ்சில் ஆனந்தம் பொங்கத் தரிசித்தார். முழுவதும் தம்மை மறந்த நிலையில் அக்கணமே வாய்திறந்து லோகமாதா கோதா தேவியை போற்றிப்பாட ஆரம்பித்தார். ["கோதா ஸ்துதி" என்னும் 29  சமஸ்கிருத பாடல்களைக் கொண்ட நூல் அதுவாகும்.] கோதை ஆண்டாள் திருமுன்பே ஸ்வாமி தேசிகரால் பாடப்பட்ட 'கோதா ஸ்துதி' என்னும் இந்நூலால் கோதையின் பெயரும் புகழும்,  கோதையின் கீதையும், தமிழகம் கடந்து
வடஇந்தியாவிலும் பரவியது.

"மேதினி யெலாம் புகழும் வேதாந்த தேசிகன் சொல்
மாதர் செயுங் கோதா மான்மியத்தை  -- ஆதரவாய்ப்
போற்றினோர் பட்டர்பிரான் போலப் புகழ்மருவி வீற்றிருப்பர் வைகுந்த மேல்"
என்ற ஒரு பாடலும் ஒன்றுண்டு.


ஆறாம் பாட்டில் பகவத் விஷயத்தில் புதியவளொருத்தியை  எழுப்பினர். இந்த ஏழாம் பாசுரத்தில் பழையாளாயிருந்து புதுமை பாவிக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.

இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.
1. ஆனைச்சாத்தன் குருவிகள் கூவும் ஓசை
2. ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி
3. அவர்கள் தயிர் கடையும் சப்தம்
4. நாராயண சங்கீர்த்தனம்

இவ்வளவு ஓசைகளுக்கும் நடுவில் எழுப்பப்படும் பெண்தோழி உறங்குவதால், அவளை "பேய்பெண்ணே" என்று நம் அன்னை கோதை ஆண்டாள் சொல்வது நியாயம் தானே!

குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை அழித்ததால் "கேசவன்" என்ற திருநாமம் கொண்ட மார்கழிக்கான மூர்த்தியைப் பாடியும், "நாயகப் பெண்பிள்ளாய், தேசமுடையாய்" என்று நயமாக பாராட்டி அழைத்தும் அந்த தோழியை எப்பாடு பட்டாவது எழுப்பி, பரமனடி பற்ற தங்களுடன் கூட்டிச் செல்ல அவளது தோழியர் விழைவது, கூட்டுச் சரணாகதி(ததீயரோடு சரண் புகுதல்)என்ற வைணவத்தின் உயரிய கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.



• திருப்பாவை ஏழாம் பாசுரம்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.


["கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா, பேதைப்பெண்ணே!
வாசனை வீசும் கூந்தலையுடைய ஆய்ச்சிமார்கள், தங்கள் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கல கலவென்று என்று ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடையும் சப்தத்தை நீ கேட்டிலையோ? கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! ஸ்ரீமந் நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள வருவாயாக!]

       • இப்பாட்டில் பகவத் விஷயத்தின் ரஸமிருந்தும், மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். சிலரை எழுப்பி விட்டோம் என்று திருப்தியடைபவர்களல்லர் இவர்கள். பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள பெண்களில் ஒருத்தி குறைந்தாலும் கிருஷ்ணனிடம் போகார்கள். தன் வயிற்றில் பிறந்த குழந்தையின் ஸம்ருத்திக்கு ஸந்தோஷிக்குமாப்போலே, எல்லா பாகவதர்களுடைய ஸம்ருத்திக்கும் ஸந்தோஷிக்குமன்றே பாகவதத்துவ பூர்த்தி உண்டாவது. இவ்விடத்தில் பின்வரும் ஐதிஹ்யங்கள் அநுஸந்திக்கதக்கவை:-  எம்பெருமானாருடைய சிஷ்யரான ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளும் போது நஞ்ஜீயர் அவரைச் சேவித்து நிற்க, "பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யாகப் பிறந்ததில்லை காணும்" என்று ஆட்கொண்டவில்லி ஜீயர் அருளிச்செய்ய "உம்மைப் போலே ஆச்சார்யவான்கள் உண்டோ? இங்ஙனே அருளிச்செய்வானென்? " என்று நஞ்ஜீயர் கேட்க பகவத் விஷயத்திலே மெய்யே ருஷியென்று இருக்கையாவது. பாகவதர்களைக் கண்டால் உகக்குமன்று காணும்." என்று அருளிச்செய்தார். ஸ்ரீதேவிமங்கலம் என்னும் ஊரிலே நஞ்ஜீயருடைய சிஷ்யர்கள் சிலர் அவ்வூரிலுள்ளோர்க்கெல்லாம், அமுது செய்விப்பித்து இருப்பதைக் கண்டு உகந்த பட்டர் "நம்முடைய கையிலே சில மெய்யுண்டாயன்று. அடியிலே மெய்யருண்டாய் அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப்பேசுகிறது" என்று அருளிச்செய்தாராம். நமக்கு ஸ்ரீவைஷ்ணவத்வ பூர்த்தியில்லாவிடினும், நம் சிஷ்யரான நஞ்ஜீயரின் சிஷ்யர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவத்வ பூர்த்தி இருக்கையாலே, அவர்களுடைய ப்ரபாவம் நம்மளவிலும் வெள்ளமிடும் என்று தாத்பர்யம்.  (கீசு கீசென்று ஆனைசாத்தன்) "பொழுது விடிந்தது எழுந்திராய்!"என்றார்கள். விடிந்ததற்கு அடையாளம் என்ன என்று கேட்டாள்; ஆனைசாத்தன் கீசு கீசு என்றதன்றோ? என்றார்கள். ஓர் ஆனைசாத்தன் கூவினதினால் பொழுது விடிந்ததாக ஆகிவிடுமா?  என்றாள். "கீசு கீசென்றெங்கும் ஆனைசாத்தன் பேசின" என்றார்கள். "உங்களுடைய த்வனியாலே அவை உணர்ந்திருக்கலாகாதா?" என்றாள்.


(கலந்து பேச்சின பேச்சரவம் கேட்டிலையோ?) "பகலெல்லாம் பிரியப்போகிறோம் என்னும் ஏக்கத்தாலே,  என்று பக்ஷிகள் ஒன்றுடனொன்று கலந்து பேசும் ஒலியன்றோ?" என்றார்கள். "முனிவர்களும் யோகிகளும் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் த்வனியைப் போலே, ஆனைசாத்தன்களின் கீச்சொலியும்,  இவர்களுக்கு உத்யேச்யமாயிருக்கிறது. பக்ஷிகளுக்குக் கூட தங்கள் நாயகர்களின் பிரிவாற்றாமையால் கூவுவதைக் கேட்கும் நீ கிருஷ்ண வ்ரஹத்தை ஸஹித்திருப்பாயே" என்கிறார்கள்.

(பேய்ப்பெண்ணே) இவர்களுக்கு இதுதான் வேலை" என்று பேசாமலிருந்தாள். "பாகவதஸம்ச்லேஷத்தின் ரஸத்தை அறிந்திருந்தும் உபேஷித்திருக்கும் மதிகேடீ" என்கிறார்கள்.

 இங்கு அறிவாவது:- பகவானை அனுபவிப்பதைக் காட்டிலும், பாகவதர்களை அனுபவிப்பது நன்றென்று அறிகை. "பொழுது விடியாமலிருக்கும் போது  'விடிந்தது' என்று சொல்லுகிற நீங்களன்றோ பேய்ப்பெண்கள். விடிந்ததற்கு வேறு அடையாளமுண்டாகில் சொல்லுங்கள்" என்றாள்.

(காசும் பிறப்பும்) இவ்வூரில் பெண்கள் தயிர் கடைவது கூட, உன் காதில் விழவில்லையோ? என்கிறார்கள். (காசும் பிறப்பும்) அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும்.



(கலகலப்ப) கடைகிற வ்யாபாரத்தாலே, "அரவூறு சுலாய் மலை தேய்க்கு மொலி" என்னுமாப்போலே த்வனிக்கை. ஆபரணத்வனியும் இவர்களுக்கு உத்யேச்யமாயிருக்கிறது. [திருமந்திரமும், த்வய சரமச்லோகங்களும் ஒன்றோடொன்று சேர்ந்து த்வநிக்க, ஸ்வரூபோபாய புருஷார்த்த ஜ்ஞானம் தலையெடுத்து என்பர்]

(கைபேர்த்து) தயிரின் பெருமையாலும், இவர்களின் ஸௌகுமார்யத்தாலும் மலை பேர்த்தாற் போலே கை பேர்க்கப் போகாதபடி. கிருஷ்ணனைப் பிரிந்ததினால் ஏற்ப்பட்ட சோர்வைக் காட்டுவதாகவும் கொள்ளலாம். அன்றிக்கே அவன் அருகிலிருந்து தயிரை மோராக்கவொட்டேன் என்று கையைப் பற்றி நாலுகையாலே யென்றுமாம். "மோரார் குடமுருட்டி" என்னக்கடவதிறே என்பது வ்யாக்யானம்.


(வாசநறுங்குழல் ஆய்ச்சியர்) மயிர்முடி அவிழ்ந்து அதிலுள்ள பரிமளம் எங்கும் வெள்ளமிடுகிறதை உணர்த்துகிறார்கள். "தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை" என்னுமாப்போலே, ஊரை உறங்கவொட்டாதபடி வாஸனை வெள்ளமிடுகையில் நீ எப்படித்தான் உறங்குகிறாய்? என்று பாவம். 
(ஆய்ச்சியர்) ஒருத்தியன்றோ என்று சொல்லமுடியாதபடி திருவாய்ப்பாடியிலுள்ள இடைச்சிகளெல்லாம் ஈடுபட்டார்கள்.
(மத்தினால்....கேட்டிலையோ) மந்திரமலையாலே திருப்பாற்கடலைக் கலக்கினாற்போலே முழங்கும் இந்த சப்தமும் உன் செவியில் புகவில்லையோ?
உத்காயதீ நாமரவிந்த லோசநம்
வ்ரஜாங்க நாநாம் த்வமஸ்ப்ருசத் த்வநி: |
தத்நச்ச நிர்மந்த நசப்தமிச்ரிதோ
நிரஸ்யதே யேந திசாமமங்களம் ||
[தாமரைக்கண்ணனை நினைத்துப் பாடுகிற கோபஸ்த்ரீகளின் ஒலியானது, தயிர்  கடையும் ஓசையுடன் கூடிக்கொண்டும், திசைகளின் அமங்களங்களைப் போக்கிக் கொண்டும் ஸ்ரீவைகுண்டத்தையும் எட்டியது.] என்று சொல்லப்பட்ட ஒலியின் ஓசை உன் செவியில் விழாமல் இருப்பதே,
"த்வமஸ்ப்ருசத் த்வநி: " என்றவிடத்திற்குப் பொருளாக 'கிருஷ்ணகுணங்கள் பூமியிலே நடையாடா நிற்க மலையிலே இருப்பாரைப் போலே உயர இருப்பதே' என்று அவர்களை வசைபாடினாற் போலே இருந்தது" என்று ஆறாயிரப்படியில் அருளிச்செய்யப்பட்டது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

ஆய்ச்சியர் தயிர் கடையும் போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோவெண்ணில், ஓர் ஆய்ப்பெண், கண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன் பக்கம் கருத்தையூன்ற வைத்து, வேறு சிந்தையன்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் 'இவளை இதனின்றும் மீட்கும் விரகு ஏதோ' என்று பார்த்து , பாலையும், தயிரையும்,நெய்யையும் தந்து இவற்றை விற்று வா என்றனுப்ப, அவளும் அங்ஙனமே விற்கச்செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலே ஆகையாலே, 'கோவிந்தன் வாங்கவில்லையோ கோவிந்தன்', 'க்ருஷ்ணன் வாங்கவில்லையோ க்ருஷ்ணன்', 'மாதவன் வாங்கவில்லையோ மாதவன்' என்று கிருஷ்ணநாமங்களைக் கூறிக் கொண்டு திரிந்தாள். அப்படிப்பட்ட அவள் தயிர் கடையும் போது கண்ணபிரானைப் பாடாமலிருப்பாளா?

(கேட்டிலையோ) இதைக் கேட்கவொட்டாதபடி உள்ளேயும் ஒரு தயிருண்டோ? என்கிறார்கள். ப்ரணய கலஹம் நடக்கின்றதோ என்று பாவம். முன்போலேயோ? கிருஷ்ணன் பிறந்த பின்பு வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாயன்றோ  இருப்பது. "முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்" என்கிறபடியே இரவும் பகலும் இடைவிடாதே தயிர்கடைகையே பொழுது போக்காகவன்றோ இருப்பது. ஆகையால் இது விடிவிற்கு அடையாளமன்று" என்று பேசாமல் கிடந்தாள். "நாயகப்பெண் பிள்ளாய்"  என்கிறார்கள். பெண்களுக்கெல்லாம் தலைவியாய் இருப்பதற்கு இதுவா அடையாளம்? என்று தாத்பர்யம்.

 நீ எங்களுக்கெல்லாம் தலைவியாய் இருக்கும் செருக்கினாலேயன்றோ  இப்படி சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய்? என்கிறார்கள். "தலைவியான நீ எங்களை உணர்த்த வேண்டியிருக்க நாங்கள் உன்னை உணர்த்த வேண்டும்படியாயிருக்கிறதே! "என்கிறார்கள்.
உள்ளத்தில்  அன்புடையவர்களாகையாலே "பேய்ப்பெண்ணே" என்றதும் "நாயகப்பெண் பிள்ளாய்" என்றதும் ஒன்றியிருக்கிறது.

"ஒரு மிதுனமாய் பறிமாறா நின்றால் தாழச்சொன்ன போதும், உயரச்சொன்ன போதுமாயிறே யிருப்பது" ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார். "பேய்ப்பெண்ணே" என்றத்தோடு  "நாயகப்பெண்பிள்ளாய்"
என்றத்தோடு வாசி இல்லையிறே அகவாயில் பாவம் ஒன்றாகையாலே" என்பர் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை.

 (நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாட நீ கேட்டுக் கிடத்தியோ)இவள் சடக்கெனப் புறப்படுகைக்கான கண்ணன் கேசி என்னும் அரக்கனைக் கொன்ற விருத்தாந்தத்தைக் கூறுகிறார்கள். முகம் தோற்றாமே அந்தர்யாமியாய் நின்று வாத்ஸல்யத்தாலே ரக்ஷிக்கும் ஸர்வேச்வரனுடைய. "நாரா: அயநம் யஸ்ய ஸ:" என்கிறபடியே தோஷங்களுக்கு ஓர் இருப்பிடமான வஸ்துக்களில்  வியாபித்து நிற்கையாலே வாத்ஸல்ய குணத்திற்கு வாசகமாகிறது இத்திருநாமம். 'நாராயணன்' என்று அவனுடைய வாத்ஸல்யத்தையும், 'மூர்த்தி' என்று அவனுடைய சௌசீல்யத்தையும், 'கேசவன்' என்று அடியார்களின் விரோதியைப் போக்கும்  தன்மையையும் பாடிய போதிலும் நீ கேட்டுக் கொண்டே கிடக்கலாமோ? ஜனகராஜன் திருமகள் சீதையைப் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்கப் புறப்படுவாய் என்று கேசி விஜயத்தைச் சொன்னோம். அதுவும் உனக்கு கிருஷ்ணவிரோதி பயம் தீர்ந்து மார்பிலே கை வைத்து உறங்குவதற்கு ஹேதுவாகிவிட்டதே!  என்கிறார்கள்.



(தேசமுடையாய் திற) உன்னுடைய தேஜஸ் காட்டிலெரிந்த நிலவாகாமல், உன்னைக் காணாமல் இருட்டடைந்து கிடக்கிற எங்களுடைய அந்தகாரத்தைப் போக்கிக் கொண்டு திறப்பாயாக! இவள் இவ்வளவுக்கும் பேசாமல் கிடக்கையாலே ஜாலக (ஜன்னல்) த்வாரத்தாலே பார்த்தார்கள். கிருஷ்ணன் கேசியைக் கொன்றதை அநுஸந்தித்ததனால்,  இவளுக்கு திருமேனியில் ஏற்பட்ட புகரைக் கண்டு "தேஜப்ரவாகத்தை அணை செய்யாதே வெட்டி விடாய்" என்கிறார்கள்.


             பாசுர சிறப்புகள்:-

 🔷 காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.

🔷 "தேசமுடையாய்" என்பது தூங்கும் பெண்ணின் ஒளி வீசும் முகத்தை (தேஜஸ்) முன்னிறுத்திச் சொன்னது. அத்தகைய தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே வாய்க்கும்! (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்த தாஸ்ய பாவம்)


🔷 ஆனைசாத்தன் பறவை

கரிய குருவி,வலியன் கரிச்சான் குருவி, கஞ்சரீகிகா பஷி,
ஆனைச்சாதம் எனவும் கூறுவர்.  'செம்போத்து' என்றும் கூறுவாருண்டு. இதற்கு கண் அழகாக இருக்கும் என்பர். வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.
சர்வமும் "கிருஷ்ணா கிருஷ்ணா"  என்றே ஆய்ப்பாடியிலே உள்ளதுஆனைசாத்தன் பக்ஷிகள் கலந்து பேசும் அரவமும், மற்றும் ஆய்ச்சியர் தயிர் அரவமும் கீசு கீசு … …[கிருஷ்ணா கிருஷ்ணா] என்று அன்றோ இங்கே உள்ளது.

🔷 "கேசவன்" என்பதற்கு கேசி என்னும் கம்சனால் அனுப்பப்பட்ட குதிரை வடிவ அரக்கனைக் கொன்றவன். சிறந்த மயிர்முடியை உடையவன். பிரம்மா, சிவன் ஆகியோர்க்கு தலைவன்  என்று மூவகைப் பொருளுண்டு என்பார் காஞ்சீபுரம் வித்வான் ஸ்வாமி.

🔷 இந்த "கீசு கீசென்று" ஏழாம் பாசுரத்தில் பேய்ப்பெண் என்கிறது பேயாழ்வாரையே என்கிறார் ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள்.





              ||திருப்பாவை ஜீயர்||

 🔷 (கலந்து பேசின பேச்சரவம்) பூர்வாச்சார்யர்கள் ஸூக்திகளோடே கலந்திருக்கும்படி [அவற்றிற்கு முரண்படாதபடி] ஸ்ரீஸூக்தி அருளிச்செய்தவர் ஸ்ரீராமாநுஜர் என்பது இவருடைய திவ்யஸூக்திகளாலே ஸித்தம். ஸ்ரீபாஷ்யம் தொடங்கும் போதே  "பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸூத்ர விருத்திம்  பூர்வாச் சார்யாஸ் ஸஞ்திக்ஷி  :|  தந்மதாநு  ஸாரேண ஸூத்ராக்ஷ ராணி வ்யாக்க்யாஸ்யந்தே" எஎன்றருளிச் செய்தவர் ஸ்வாமி ராமாநுஜர் ஒருவரேயன்றோ?


 அன்றியும் கலந்து பேசுவதாவது வடமொழி தென்மொழிகளைக் கலந்து மணிப்ரவாளமாகப் பேசுவது இத்தகைய க்ரந்தம் முதன்முதலாக திருவாறாயிரப்படியே தோன்றியது. அது பிள்ளான் அருளியதாயினும் "எதிராசன் பேரருளால்" என்று மணவாள மாமுனிகள் அருளிச்செய்தபடியே ஸ்வாமி ராமாநுஜர் கற்பித்த நடையேயாம்  அது. ஆகவே இருமொழிகளை கலந்து பேசின பேச்சுக்கு  "நிதான பூயர்" ஸ்வாமி ராமாநுஜர் குறிப்பிடப்படுகிறார். "தமிழும் அவ்வடமொழியும்" கலந்து பேசின உபய வேதாந்த பிரவர்தகர் நம் கோதையின் கீதை [கோதோபநிஷத்] கொண்டாடிய (ராமாநுஜர்) திருப்பாவை ஜீயர் என அறியப்படுகிறார் என்பர் காஞ்சீபுரம் வித்வான் ஸ்வாமி.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

🔷 தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

    அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)