கோதையின் கீதை (பகுதி - 27)




• ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயன சேவை

 ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ஸ்ரீரங்கமன்னார் சுவாமி, ஸ்ரீஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இதனால்  தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது என்பது ஐதீகம்.

ஏழாம் நாள் காலையில் ஸ்ரீஆண்டாள் அரங்கமன்னார் தங்கத் தோளுக்கினியானில் வழக்கமாக வருகிற வீதி உலாக்களையும் சேர்த்து, சில புதிய தெருக்களில் எழுந்தருளி, இரவில் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.



• (ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் போகும் பாதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், இரண்டு பிராகாரங்கள் இருக்கின்றன. கர்ப்பகிருகத்தில் ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிறார். இக்கோயிலின் முழுமையடையாத  ராஜகோபுரமானது 'ஸ்ரீகிருஷ்ணதேவராயர்' காலத்து திருப்பணியென்பர்.) •

 அங்கே சயனத் திருக்கோலம் நடைபெறுகிறது. ஸ்ரீ ஆண்டாள் தொடையில் இராஜகோலத்திலுள்ள ஸ்ரீரங்கமன்னாரின் "சயனத்திருக்கோலம்" கண்டவர்கள் கண் படைத்த பயனை அறிவர்.




• 5 X 5 + 5 இல் ஐந்தாம் ஐந்தின் நிறைவு. இப்பாசுரத்தில் பிறப்பிறப்பற்ற இறைவனின் கிருஷ்ணாவதார இரகசியம் போற்றப்படுகின்றது. அடியவர்களைக் காக்கும் பொருட்டு தானும் ஒரு ஜீவாத்மாவைப் போன்றே கருவிலடைந்து பிறந்த பரமாத்மாவின் கருணை பேசப்படுகின்றது. இறைவனையே பெரிதெனக் கருதி, அவனைப் பணிந்து தொழும் அடியவருக்குத் (ஆயர்பாடி மக்கள்) தனது கருணையினைக் காட்டி அறவருள் செய்யும் இறைவன், உலகத்தின் சிற்றின்பங்கள் என்னும் பிடியில் சிக்கிய அரக்க இயல்புகளோடு மயங்கும் சீவர்களை(கம்சன் ) மறவருள் செய்து காக்கின்றான். இறைவனின் நற்குணங்களை நன்குணர்ந்த அடியார்கள்,இறைவனைப் போற்றிப் பாடித் துதித்து, என்றும் திருமகளைப் போலவே அவன் பணி செய்யும் பேற்றையே, அடியவர்கள் விரும்ப வேண்டும் அதுவே பிறவியென்கிற வருத்தத்தைத் தீர்த்து, மகிழ்ச்சியைத் தரும் என்பது கருத்து. இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனுக்கு உளமாரச் செய்யும் ஆராதனை (மானஸீக ஆராதனம்), இறைவனது குணங்களின் பெருமையினைப் போற்றிப் பாடுதல் (அருத்தித்து வந்தோம்) என்பதைக் குறிக்கும் பாசுரம்.



• திருப்பாவை 25 வது பாசுரம்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


[தேவகி பிராட்டியின் மைந்தனாய் அவதரித்து, பிறந்த அந்த கரிய இரவிலேயே, வசுதேவரால் ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே யசோதையின் மகனாக, (உனக்குத் தீங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்!) நீ ஒளித்து வளர்க்கப்பட்ட காலத்தில், அதைப் பொறுக்காது, உன்னை அழித்து விட வேண்டும் என்ற கம்சனின் தீய நோக்கத்தை பயனற்றதாக்கி, (அவ்வரக்கன் அழியும் காலம் வரை!) அவனது வயிற்றில் (அச்சம் என்கிற) ஓர் அணையா நெருப்பு போல் கனன்று நின்ற சர்வ லோக சரண்யனான கண்ணபிரானே !
 நாங்கள் பணிவுடனும், பக்தியுடனும் நோன்புக்கான பறை வேண்டி உனை விரும்பி வந்துள்ளோம் ! எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் எனில், இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வ அழகையும், உன் ஒப்பிலாப் பெருமைகளையும் பாடி, உன் பிரிவினால் வந்த துயர் நீங்கி, பாவை நோன்பிருந்து உன்னை வணங்கி வழிபட்டு, நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்போம். ]


     •  பாசுர சிறப்பு:-

தேவகிக்கு மைந்தனாய் பிறந்து, பிறந்த அன்றே கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாக வளர்ந்த மாயக்கண்ணனின் அவதாரப்பெருமையை சூடிக் கொடுத்த நாச்சியார் இப்பாசுரத்தில் அழகாகப் பாடியுள்ளார்! ஆதியும் அந்தமும் இல்லா அப்பரந்தாமன் 'பிறப்பு அற்றவன்' என்பது வேறு விஷயம்!

  மனிதரின் பிறப்பு அவரை பரமனிடமிருந்து பிரித்து வைக்கிறது. ஆனால், பரமனின் பிறப்போ, அவனை மனிதருக்கு அருகில் கொண்டு வருகிறது!

(ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர)  வசுதேவர், சிறையில் தேவகிக்கு பிறந்த குழந்தையான ஸ்ரீகண்ணனை ஒரு கூடையிலிட்டு, இருளும், பெருமழையும், பேய்க்காற்றும் அவரை அலைக்கழிக்க, பெருக்கெடுத்து ஓடிய யமுனை ஆற்று வெள்ளத்தைக் கடந்து பரமனை ஆய்ப்பாடியில் யசோதை பிராட்டியிடம் கொண்டு சேர்த்த புண்ணிய இரவல்லவா அது!

கண்ணனின் அவதார ரகசியம் இப்பாசுரத்தில் பொதிந்துள்ளதாக பெரியோர் கூறுவர். உபநிடதத்தில் பரமனின் அவதாரங்கள் குறித்துச் சொல்லப்பட்ட "அஜாயமானோ பஹுதா விஜாயதே" என்பதன் பொருள் "பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுக்கிறான்" என்பதாகும்!  • கண்ணன் அவளை பாடாய் படுத்தியபோதும், யசோதையைப் போல் வளர்ப்புப் பிள்ளையை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்ட தாய் அவனியில் கிடையாது. பெரியாழ்வார், கண்ணன் அடித்த சேஷ்டைகளால் யசோதா தெம்பிழந்த கதையை ஒரு பாசுரத்தில் "கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கையிறுத்திடும் ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்"(பெரியாழ்வார்திருமொழி .21)  என்றுஅழகாகச் சொல்கிறார்.
அப்பேர்ப்பட்ட யசோதையையும் ஆண்டாள் "ஒருத்தி" என்று தானே அழைக்க வேண்டும்!

• பரமன் ஏன் மறைந்து வளர வேண்டும்? அது அவன் சித்தம், அவ்வளவு தான்! கம்சனை அழிக்க வேண்டிய காலம் வரும்வரை ஆய்ப்பாடி மக்களோடு கோகுலகிருஷ்ணனாக வாழ பரமனே முடிவெடுத்தான்!




• (தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்) கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்! கண்ணன் பிறந்து கோகுலம் செல்லும் வரை, கம்சன் தனது எட்டாவது குழந்தையையும் கொன்று விடுவானோ என்ற பேரச்சம் என்ற தீயானது, தேவகி மற்றும் வசுதேவர் வயிற்றில் நிறைந்திருந்தது. பரமன் அவள் வயிற்றில் உதித்த மாத்திரத்தில், அவர்களுக்கு அபயம் கிடைத்து, அதுவரை நிர்பயமாக இருந்த கம்சனின் வயிற்றில் (அவன் அழியும் காலம் வரை) கண்ணனே ஒரு பய நெருப்பாக கனன்று கொண்டிருந்தான். மரணத்தை விட, கம்சனை வாட்டியது இது தான். அவன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் அவனுக்குக் கிட்டிய கர்மபலன் அது.

• கம்சன் கண்ணனுக்கு தீங்கே நினைத்து இருந்திருந்தாலும், சதாசர்வ காலமும் பரமன் எண்ணமாக இருந்தான், தனது பயம் காரணமாக கண்ணனை எங்கும் பார்த்தான், அதனால், கம்சனுக்கும் மோட்ச சித்தியை அருளினான் நீலமேக வண்ணன்!

• (நெருப்பென்ன நின்ற நெடுமாலே)
"நெடுமாலே" என்பது ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட அபரிமிதமான காதலின் வெளிப்பாடே!

• (உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்)

• கோபியர் கண்ணனிடம் 'உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம்! நிலையான செல்வமாகிய பிராட்டியை மார்பில் தரித்தவன் நீ! சதாசர்வ காலமும் உனக்குச் சேவை செய்யும் பெருஞ்செல்வத்தை நீ எங்களுக்கு அருளும் பட்சத்தில், நாங்களும் திருத்தக்க செல்வம் பெற்றாராகி, உனக்கும் பிராட்டிக்கும் ஊழியஞ்செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, உன்னை என்றும் பிரியாத பேரானந்த நிலையை அடைந்து மகிழ்வோம்' என்று சொல்கிறார்கள்.


• கண்ணன் பிறந்த அந்த கரிய இரவில், வசுதேவர் அந்த தெய்வக் குழந்தையை ஒரு கூடையிலிட்டு கோகுலத்திற்கு எடுத்துச் சென்றபோது, யமுனை நதியாள் விலகி வழி விட்டு கண்ணனின் அருளுக்கு உகந்தவள் ஆனாள் ! கோதை நாச்சியார், 5-வது பாசுரத்தில், "தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை" என்று மாயனை விளிப்பது இதனால் தானோ !

• இப்பாசுரத்தில், ஆண்டாள் தேவகியையும், யசோதையையும், பெயரிட்டுக் கூறாமல், 'ஒருத்தி' என்றே குறிப்பிட்டுள்ளார். 'ஒருத்தி' என்பது இங்கே மரியாதைக்குரியதே. 'ஓரிரவில்' என்பது சம்சார பந்தமான இருட்டை உள்ளர்த்தமாக குறிக்கிறது !

• (திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி ) கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !

• வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - உலகப்பற்றை உதறி, பரிபூர்ண ஆனந்த நிலையை அடைவதை உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.

• (ஒருத்தி மகனாய்) கண்ணனைத் தன் கருவில் சுமந்து ஈன்று தந்த பெருமை தேவகிக்கு கிடைத்தது. இராமாவதாரத்திலும் கோசலையின் மணிவயிற்றில் உதித்தாலும், அவ்விடம் தந்தை தயரதன், வசிட்டர் உதவியோடு, புத்திர காமேஷ்டி யாகம் செய்து மூன்று ராணிகள் வயிற்றிலும் ஒவ்வோர் அம்சமாகத் தோன்றினார். ஆனால் கிருஷ்ணாவதாரத்திலே தேவகியும், வஸுதேவரும் பெரிதாய் ஏதும் தவம் செய்யாமலே, கருவிலே திருவாய் அமர்ந்து பிறந்தான். அப்படிப்பட்டப் புண்ணியமுடையவள் தேவகி தேவி !

• இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவகி செய்ததை ஒட்டித்தான் அவள் 'ஒருத்தி' என்று குறிக்கப்படுகின்றாள். அவளைப் போன்றே போற்றுதலுக்கு உரியவள் கண்ணனை நெஞ்சிலே சுமந்து வளர்த்தெடுத்த யசோதை!  "திருவிலேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே " என்ற குலசேகர ஆழ்வாரின் தேவகி புலம்பலால், அவளைக் காட்டிலும் உயர்ச்சியுடையவள் யசோதை என்பது புலனாகிறது. ஆகவே தான் அவளையும்' ஒருத்தி' என்று புகழ்கிறாள் ஆண்டாள். ஒருத்தி, என்ற குறிப்பால் இருவரின் பெருமையையும் ஆண்டாள் உரைக்கிறாள்.


• (ஓர் இரவில்) அப்படிப்பட்ட இரவு அதற்கு முன்பும் நிகழவில்லை, பின்னரும் இருக்கவில்லை ! ஆதலால் எப்படி 'ஒருத்தி' என்ற பதம் போலவே 'ஓர் இரவு' என்ற பதமும் குறிக்கப்படுகிறது.  கண்ணன் பிறப்பிடம் வடமதுராவில் சிறைச்சாலை என்றாலும், தன்னை வெறுத்த மாமன் கம்சனின் இடத்தில் அவன் ஒரு இரவு கூட தங்கவில்லை. பெற்றோரைப் பிணைத்திருந்த விலங்குகள் உடைபட, பூட்டியிருந்த சிறைக்கதவுகள் திறக்க, காவலிருந்த வீரர்கள் மயங்க, ஒரு கூடையை தனது ஆசனமாக்கி, யமுனை வழிவிட, ஆதிசேஷன் குடையாக, தன்னை மிகவும் நேசிக்கவிருக்கும் அன்புள்ளம் கொண்ட சாதாரணமாய் மாடு மேய்க்கும் காடு வாழ் சாதியனர் வாழும் ஆயர்பாடியான ஸ்ரீகோகுலத்திற்குச் சென்று விட்டான் அல்லவா?

• தன்னை வெறுக்கின்றவரிடம் இறைவனும் ஒதுங்கியே இருப்பான். சமயம் வரும்போது தானே அவர்களை அழிக்க வேண்டும். தன்னை நேசிக்கிறவர்களோடு தானும் ஒருவனாய் என்றும் கலந்து மகிழ்ந்திருப்பான். அடியவரைக் காப்பதும், தீயவர்களை அழிப்பதும் தானே இறைவன் கருத்து.

• (ஒளித்து வளர) பிறந்த போதே இவன் இறைவன் என்று அறியும் வகையால் தன் விஸ்வரூபத்தைப் பெற்றோருக்குக் கட்டியருளிய கண்ணன், தன்னுடைய அடியவர்களின் மீது தனக்கிருக்கும் அன்பின் காரணத்தால், தான் யாரென்பதை மறைத்துக் கொண்டு சாதாரணச் சிறுவனாக ஆயர்பாடியில் வளர்ந்தான். அரக்கன் கம்சனுக்கு அஞ்சி ஒளியவில்லை. அவனைக் கொல்வதற்கான சமயம் வரும் வரை காத்திருந்தான். எங்கே கம்ஸனால் கண்ணனுக்குத் தீங்கு வந்து விடுமோ என்று அஞ்சிய தேவகியின் மனம் சமாதானம் ஆவதற்காகவே, கண்ணன் மதுராவை நீங்கி ஆயர்பாடியில் யசோதையிடம் வளரத் தலைப்பட்டான். ஒருபோதும் கம்ஸனுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லை.

• எப்படி சீவாத்மாக்களின் உள்ளே அந்தர்யாமியாக இறைவன் மறைந்திருக்கிறானோ, அப்படித்தான் கண்ணன் மண்ணுலகில் மறைந்திருந்தான். அவனைத் தெரிந்தவர்களுக்குத் தெரிவான், மறுப்பவர்களுக்குப் புலப்படான்.

• (தரிக்கிலான்)  ஒரே இரவில் தான் பிறந்த இடத்தை நீங்கி, மாயாதேவியை அவ்விடத்தில் சேர்த்து அவளைக் கொல்ல கம்சன் முயன்றபோதில், அவள் மூலமே தான் பாதுகாப்பாய் நந்தகோபருடைய ஆயர்பாடியில் வளரும் செய்தியைக் கொடிய கம்சனுக்கு அறிவித்தக் கண்ணனைப் பொறுக்க முடியாத, கம்சனால் ஓரிடத்தில் உடலைத் தரிக்க முடியவில்லையாம். வெறுப்பும், அச்சமும் அவனை அலைக்கழித்தனவாம். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றஞ்சிய கம்சன், கண் காணாத இடத்தில் கண்ணன் வளர்வதையும் பொறுக்காமல் அவனைக் கொன்றுவிட தன் அரக்கர் படையை ஏவியவண்ணம் இருந்தான்.

• தனது இறைத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தெய்வம் விரும்புவதில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் அதற்கு இல்லை. நிர்குணப் பரப்பிரம்மமாகவே இறைவன் இருக்கிறான். பாவச்சுமையை அதிகப்படுத்திக் கொள்ளும் சீவாத்மாக்கள் தாமே தான் தம்முடைய அழிவுக்குக் காரணமாகிறார்கள்.

• தன்னை அண்டிய இந்திரனுக்காக அல்ல வாமனாவதாரம், தனது பக்தன் மஹாபலிச் சக்ரவர்த்தியின் பெருமையை உலகில் நிலைநாட்டவே! ஸ்ரீநரசிம்ம அவதாரமோ தனது பக்தன் பிரஹலாதனின் வாக்கை மெய்ப்பிக்க வந்தது. இராமாவதாரத்தில் நல்லவர்களுக்குத்,தவசிகளுக்குத் தனது அரக்கப் பிரதிநிதிகளின் மூலம் இடையூறு விளைவித்து அச்சமூட்டியதோடல்லாமல் தன் மனைவியையும் கவர்ந்து என்று பிழையிழைத்தமைக்காகவே இராவண வதம்.

• கிருஷ்ணாவதாரத்தில் சிசுபாலன் கண்ணனை வெறுத்தே மாண்டான். கம்ஸன் கண்ணன் மீது பொறாமை கொண்டு அவன் வாழ்வதை சகிக்க முடியாமல், என் எதிரி சுகமாக வாழ நான் எப்படி நிம்மதியாக வாழ்வேன் என்று உயிரை உடம்பில் தரிக்க முடியாமல், எப்போதும் கண்ணனுக்குத் தீங்கு நினைத்தே, தானே தன் நிம்மதியை இழந்து, கடைசியில் அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான்.

• (தீங்கு நினைத்தக் கருத்தைப் பிழைப்பித்து) கம்சனின் எண்ணத்தைப் பொய்யாக்கி, குழந்தையாக இருந்த போதிலிருந்தே கண்ணனைக் கொன்று விடவேண்டி பூதனை, கேசியசுரன்,தேனுகாசுரன், சகடாசுரன், கபித்தாசுரன், வத்ஸாசுரனென்று பற்பலரை ஏவியபடியே இருந்தகனல்லவா கம்சன்? ஆயினும் கண்ணனைக் கொல்லும் அவனது தீய எண்ணம் நிறைவேறவில்லையே ! அவற்றையெல்லாம் கண்ணன் பொய்த்துப் போகும்படிச் செய்திட்டானே!

• (வயிற்றில் நெருப்பென்ன நின்ற)  கம்சனுக்கு உயிரச்சம் ஏற்படுத்தும் நெருப்பாக, அவன் வயிற்றெரிச்சலாக இருந்து கடைசியில் கொன்றும் போட்ட கண்ணன். தன்னுடைய அன்பர்களின் மத்தியில் சாதாரனச் சிறுவனாக வளர்ந்த கண்ணன், அசுரர் குணங்கள் நிறைந்த கம்சனுக்கு வயிற்றில்ட்ட நெருப்பாக தகித்தான். கண்ணன் பிறக்கும் வரை தேவகியின் வயிற்றில் கம்சன் அச்சத்தை நெருப்பாக வைத்தான். கண்ணன் பிறந்த பின்னே அதே நெருப்பை கம்சனின் வயிற்றுக்கு மாற்றி விட்டான்.

• தன்னுடைய குழந்தைகளையெல்லாம் இந்தப் பொல்லாத கம்ஸன் கொல்லுகிறானே என்ற அச்சம் தேவகியின் வயிற்றில் நெருப்பாய் தகித்தது. கண்ணன் பிறந்த நொடியே, அந்த அச்சம் அவளை நீங்கிக் கம்ஸனது வயிற்றில் குடிகொண்டு விட்டது. கம்ஸனுக்குக் கண்ணன் மீதில் இருந்த பொறாமையால், அவன் மனதில் எப்போதும் அச்சம் நிலவிக் கொண்டிருந்தது. அது அவன் வயிற்றில் நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. மரணத்தை விடவும் மரணபயம் நெருப்பு போன்றது.

• ஒருமுறை தான் இறப்பு ஆனாலும் அதற்குள் எத்தனை முறை இறந்து போகின்றோம் பலர்? கம்சன் அப்படிப்பட்டவர்களின் உருவகம் தான். கண்ணனைத் தனது பரம எதிரியாய் நினைத்தாலும், எப்போதும் இறைவனால் அவனைப் பற்றியே சிந்தித்து வந்ததால் (எப்படிக் கொல்லலாமென்ற நினைப்பு) இறைவனை எதிர்ப்பவர்கள் தான் அடியார்களை விடவும் அவனை சதா சர்வகாலமும் எண்ணியபடி இருப்பார்கள்.

• (நெடுமாலே) கண்ணா,எங்கும் நீக்கமற நிறைந்த இறைவா. நீண்டு நெடிதெங்கும் நிறைந்தவன், அடியவர் மீதில் அளவற்ற அன்பு கொண்டவன்,தன் அடியவருக்கு அபயமளித்துக் காப்பவன், இறைவன், என்பதே நெடுமால் என்பதன் பொருள்.

• (அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்)  உன்னைப் போற்றி பணிகின்ற எமக்கு நோன்பிற்குரிய பறைக்கருவியை அளித்தால் ." கண்ணா , எங்கள் நோன்பிற்குண்டான பறையை நீ எப்படிக் கொடுப்பதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாயோ, அதைப் போலவே நாங்களும் அந்தப் பறையைப் பெறுவதற்குத் தகுதியோடு, உன்னைப் பணிந்து,அருத்தித்துப் போற்றிப் பாடி வந்தோம். நீ அன்று மஹாபலியிடம் மூன்றடி மண்ணுக்கு யாசகம் செய்யவில்லையா ? அதைப் போலவே இன்று நாங்கள் உன்னிடம் பறையை யாசித்து வந்துள்ளோம். அன்று உனக்குக் கிடைத்தது மூன்றடி நிலம். இன்று நாங்கள் வேண்டுவதோ ஒன்றே ஒன்று, பறை. அதை எங்களுக்கு நீ கொடு கண்ணா ! " என்கிறாள் ஆண்டாள்.

• (திருத்தக்க செல்வமும் சேவகமும்) அந்தப் பறையை எங்களுக்குக் கொடுத்தால்,ஸ்ரீலக்ஷ்மி பிராட்டி விரும்பத்தக்க உனது நற்குணங்களையும் வீரத்தையும் நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே, உன்னை அடைவதற்குத் தடையானவற்றைக் கடந்து வந்த வருத்தங்கள் மறைந்து, இன்பம் பொங்குமாறு இருப்போம்.

"பாற்கடலிலிருந்து வெளிப்பட்டப் பெண்ணமுதாகிய திருமகள் கூட உன்னைத் தானே விரும்பி மார்பில் உறைகின்றாள். அவளைத் தாங்குகின்ற நீ, அவளுக்குரிய கருணை குணத்தோடு இருக்கிறாயா என்று அறிய விரும்புகிறோம் கண்ணா ! அதை மெய்ப்பிக்கும்படி, எங்களுக்கு நாங்கள் விரும்பும் பறையைக் கொடு !"

• (ஒருத்தி மகனாய்ப் பிறந்து) பிறப்பிறப்பிலாத இறைவன் மந்திரங்களுக்கெல்லாம் தாயென விளங்கும் காயத்ரி மந்திரத்தில் பிறக்கிறான் எனக் கொள்வது இறைநெறி. அம்மந்திரத்தின் விளக்கமாயுள்ளான் என்பது பொருள் ஆகும். "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்ற 5வது பாசுரக் குறிப்பு "காயத்ரி" மந்திரத்தைக் குறிக்கிறது. 

• (ஓரிரவில்)  துன்பங்கள் என்னும் இருள் நிறைந்த இம்மண்ணுலகில், இறைவன் அவதாரம் செய்து லீலைகள் புரிகின்ற இம்மண்ணுலகில். சம்ஸாரமென்னும் இருள் தான் இரவு. மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பாவ புண்ணியங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சீவாத்மாக்கள் தான் இந்த இரவில் வாடும் உயிர்கள். அவர்கள் மீதில் கருணை கொண்டே இறைவன் தன்னுடைய நிலையினின்று கீழிறங்கி, நமக்கு இரங்கி , தன்னுடைய தெய்வத்தன்மைகளை ஒளித்துக் கொண்டு அருள் செய்கிறான். இதை கோயில்களிலுள்ள சிலை வடிவங்கள் சொல்லும்.

• (ஒருத்தி மகனாய் வளர)
காயத்ரி மந்திரத்தின் உட்பொருளாய் விளங்கும் அவனை அடைய , அவனது மூலமந்திரமாகிய எட்டெழுத்து மந்திரமே உதவும். (பிரணவம் + நமோ+நாராயணாய). அனைவராலும் புரிந்து கொள்ள முடியாத இரஹஸ்யமான ,உயர்ந்த மந்திரமாகிய காயத்ரியின் பொருளாக இருக்கும் இறைவன், எல்லோரும் எளிதில் கூறிப் பயனுறும் வகையில் எட்டெழுத்து மந்திர வடிவில் அருள் பாலிக்கிறான்.

• (ஒளித்து வளர) மண்ணுலகின் சிற்றின்பங்களில் சிந்தை பதிக்காமல், பேரின்பமாகிய இறைவனைப் பற்றியே எண்ணும் புண்ணிய ஆத்மாக்கள், (ஞானியர், யோகியர்,பக்தர், தொண்டர் ) ஆயர்பாடியில் உள்ள கோப,கோபியர்கள் இறைவன் மீது அன்பு கொண்ட அடியவர்களின் குறியீடே .அவர்களுக்கு இறைவன் லீலைகள் மூலம் அன்பால் அருள் (அறவருள் )செய்கிறான்.

• (தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த) இறைவனைப் பணிந்த அடியார்கள், தாம் முன்னர் செய்த பாவங்களையும், அறியாமல் இன்னும் செய்கின்ற பாவங்களையும் எண்ணிப் பொறுக்க முடியாதவர்களாகி கருணை மிகுந்த இறைவன் தன்னருளால் தீர்த்து வைப்பதைப் பற்றியே எண்ணுவார்.


• (வயிற்றில் நெருப்பென்ன நின்ற) தாபத்ரயத்தில் உழன்று துன்பப்படும் உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டு, அவர்களின் தீவினைகளை அழிக்கும் நெருப்பாக இறைவன் இருக்கிறான். கம்ச சாணுர,முஷ்டிகர்கள் இறைவனை விடுத்து உலகவின்பங்களில் மூழ்கி தீச்செயல்கள் புரிகின்ற இறை அறிவற்ற சீவர்களின் குறியீடு. இறைவன் அவர்களின் தீயகுணங்களை அழித்து அருள் (மறவருள்) செய்கிறான்.

• (உன்னை அருத்தித்து வந்தோம்) இறைவனின் இந்த இயல்பினை நன்கு அறிந்த அடியவர்கள், அவனைப் போற்றிப் பணிந்து சரணாகதி செய்து வீடுபேற்றினை வேண்டுவர். அவன் ஸ்தோத்திரப் ப்ரியன்.

• (பறை தருதியாகில்) வீடுபேறாவது,[மோக்ஷம்] பரந்தாமனுக்குச் செய்யும் தொண்டாகிய கைங்கர்யமே ஆகும்.  அதையும் பரந்தாமனே நமக்கு அருள வேண்டும்.

• (திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி) செல்வங்களின் அதிபதியாகிய திருமாமகளும் விரும்புகின்ற, நற்குணச் செல்வங்கள் நிறைந்த பரந்தாமனின் பெருமையினை அடியவர்கள் பாட. திருமாமகளுக்கு எவையெல்லாம் திருவைக் கொடுத்தனவோ, அதையெல்லாம் பரந்தாமா! எங்களுக்குக் கொடு. இவற்றை அடையும் தகுதியோடு நாங்கள் வந்திருக்கிறோம், ஆகவே இதையெல்லாம் எங்களுக்குக் கொடு என்கிறாள் ஆண்டாள்.

• (வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே) கர்மவினைகளால் மீண்டும் மீண்டும் அடைகின்ற பிறவிப்பிணியின் துன்பங்கள் தீர்ந்து இறைப்பணியில் [பகவத் கைங்கர்யம்] மகிழ்ச்சியோடு ஈடுபடுவர்.  நீ எங்களுக்கு இறைப்பணியென்னும் [பகவத் கைங்கர்யம்] செல்வத்தைக் கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுவரை பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள். அப்படிச் செய்தால், "கைங்கர்யமாகிய பேற்றை அளித்தால்" திருமகள் எப்படித் திருமாலுக்கு சேவகம் செய்து மகிழ்கிறாளோ, அப்படியே அடியார்களும், பரந்தாமனுக்கு இடைவிடாது பணி செய்து தங்களது மற்றப் பிறவிப் பிணிகள் என்னும் வருத்தங்கள் நீங்கி, நிலைத்த ஆனந்தமாம் பரந்தாமனோடே எப்போதும் இருந்து மகிழ்வடைவோம் என்பதே கருத்து.


               • ||திருப்பாவை ஜீயர்|| •

"தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்றவர் ஸ்வாமி ராமாநுஜர். கம்ஸன் ஸ்ரீகண்ணனிடத்திலே அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தது போலே, நம் ஸ்வாமிக்கு அனர்த்தம் விளைக்க நினைத்தவர் ஒருவர் உண்டு.



அவருடைய கருத்தைப் பிழைப்பித்து  (பிழைபடச்செய்து ) ஓரிரரவில்  ஒளித்து வளர்ந்தவர் நம் ஸ்வாமி. விந்த்யாடவி எங்கே? ஸத்யவ்ரத க்ஷேத்ரமெங்கே? ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ரபாவங்களையெல்லாம் ஒளித்து வைத்திருந்தாரத்தையுமன்றோ? அவர் ஆஸூர ப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார். "பாஷாண்ட த்ருமஷண்ட தாவதஹந: " ,  "பாஷண்ட ஸாகர மஹாபடபாமுகாக்னி" என்று நெருப்பாகவே பேசப்பட்டாரேயன்றோ நம் ஸ்வாமி. (நெடுமால்) வ்யாமோஹங் கொண்டவர். "அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம ஸ்யாமோஹத:" என்பர்.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                 அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.


  

Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)