கோதையின் கீதை (பகுதி - 16)



• ஸ்ரீவில்லிபுத்தூர்

                       கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் 'சரப முனிவர்' என்பவர் தமது பிராப்த கர்மத்தினால் வேடனாய்
வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை
விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா ஞானியென்று உணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ ஷேத்திரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு  'மல்லி' என்கிற வனராணிக்கு பிறந்து வில்லி,கண்டன்
என்றும் பெயர் பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக்
கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய, மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த 'வில்லி' பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன் இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரை உண்டாக்க, அதுவும் நின்
பெயரால் 'வில்லிபுத்தூர்' என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான். புராண ஸ்தலமாக உருவான ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் வைணவர்கள் கொண்டாடும் திவ்ய தேசமாக "ஆழ்வாரும், ஆண்டாளும்" அவதரித்ததால் மாறியது.



இப்பாசுரத்தால் எழுப்பப்படும் அடியார் மிகவும் சாமர்த்தியமாகப் பேசுபவர். கண்ணனிடம் தங்கள் ஆசையை எடுத்துச் சொல்லி எப்படியேனும் நிறைவேற்றித் தருவார் என்று அவரையும் எழுப்பிக் கூட்டிச் செல்லுமாறு அமைந்துள்ளது. வெட்கத்துக்குரிய தவறுகளை இழைத்தவர் கூட, கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முறையிட்டு, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தின் ஒரு செய்தி. 'நாக்கு' என்பது உண்பதற்கும், வீண் பேச்சு பேசுவதற்கும் அல்ல, இறைவனுடைய பெயர்களை சொல்லிப் பெருமை பாடுதலும், தாமறிந்த உயர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதலுமே நாக்கு பெற்றதன் (வாய்ப்பேசும் திறமை ) காரணம், என்பது இப்பாசுரக் கருத்து.



• திருப்பாவை பதினான்காம் பாடல்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.

[உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறுகுளத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து, கருநெய்தல் மலர்கள் இதழ் குவிந்து (அழகாக) இருப்பதை காண்பாயாக! செங்கல் நிறத்தில் உடை (காவியுடை) தரித்த, வெண்மையான பற்களையுடைய தவசிகள், சங்கை முழங்கி அறிவித்தவாறு, தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்லுகின்றனர். அழகிய பெண்ணே! எங்களை முன்னரே எழுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களித்து விட்டு,அவ்வண்ணம் செய்யாமலிருந்தும், செய்யவில்லையே என்ற வெட்கம் துளியும் இல்லாதவளே! இனிமையான துடுக்கான பேச்சுடையவளே! துயிலெழுவாயாக! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப் பாடி நோன்பிருக்க வருவாயாக!]





** **
      • பாசுரக் குறிப்பு:-

• அவதார பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரத்தில், "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்பதன் மூலம் "பரவாசுதேவ நிலை" (பரம்) குறிக்கப்பட்டுள்ளது.


• இறைநெறியில் ஈடுபட்டு சரணம் புக என்னும் ஜீவாத்மாக்களுக்கு, நல்லாசான் ஆனவர், இறைஞானத்தை அனுமானம், ப்ரத்யக்ஷம், சப்தமாகிய வேதம் (மறைகளனைத்தும் ஒலியின் வடிவிலேயே அருளப்பட்டவை) இவற்றின் வழியில், ஊட்டுகிறார். ஆசானைப் பணிந்து அணுகினால், இறைவனை அடைகின்ற சரணாகதி மார்கத்தை நமக்கு அவர் போதிப்பார் என்பது கருத்து.

* ப்ரமாதா ஆகிய ஜீவாத்மா, (அறிவைப் பெறுவது) இந்தப் ப்ரமாணங்களால், (அறிவைப் பெறும் வழிமுறைகளால்), அடையும் ப்ரமேயமே (அறிந்துகொள்ளும் பொருள் ),இறைவன். அவனே வீடு பேறை வழங்கவல்ல நாராயணன் என்பது இங்கு கருத்து.

மேலும், பிரத்யட்சம், அனுமானம், சப்தம்(சாத்திரம்) என்ற மூன்று பிரமாணங்களும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

* "உங்கள் புழைக்கடை" என்பது அனுமான பிரமாணம்

* "தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்" என்பது பிரத்யட்ச பிரமாணம்

* "எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!" என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணமாம்.

(உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து)  உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்

(ஆம்பல்வாய் கூம்பினகாண்) காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின

(செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்)  மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.

(எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்! எழுந்திராய்!)  நாங்கள் சம்சார பந்தம் என்ற நித்திரையிலிருந்து வெளிவர உத்தம அதிகாரியான நீயே அருள வேண்டும்!

(நாணாதாய்)  நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம். அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், "நாணாதாய்" என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!

(நாவுடையாய்) சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற) சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக கூறுவார்.

(சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்)  சங்கும் சக்கரமும் பரமனது பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.



• இந்த பாசுரத்தில் "எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்" என்பதன் மூலம் நம்மாழ்வாரைத் துயில் எழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுச ஜீயர் அருளிச் செய்தார்.

  ||திருப்பாவை ஜீயர்||

இப்பாட்டில் "செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின" என்பதில் ஸ்வாமி இராமாநுஜரின் திவ்ய ப்ரபாவமொன்று நினைவுக்கு வரும். ஸ்வாமி யாதவ ப்ரகாசரிடத்திலே பூர்வ பக்ஷ வேதாந்தம் கற்றபோது, "சர்வம் கல்விதம் ப்ரஹ்ம", "தத்வமஸி" இத்யாதி வேத வாக்யங்களுக்கு
ஸ்வாமியின்  அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர் போல்வார் மூடிக் கொண்டது போலே.


"செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்" என்றதும் ஸ்வாமிக்கு மிகப்பொருத்தம்.

(செங்கல் பொடிக் கூறை) -"காஷா யேண க்ருஹீத பீத வசநா"-யதிராஜ சப்ததி யில் போற்றப்பட்ட திவ்யமூர்த்தி.
(வெண் பல்) - "அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ்
ததிராணி த்ருணாய மேன"-என்னும்படி
மகா விரக்த சார்வ பௌமராகையாலே.

(தவத்தவர்) -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்.



(தங்கள் திருக் கோயில்) -அமுதனார் ஆதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக்கோயில் என்னும்படி தம்மதீனமாய் பெற்றவர்.

(சங்கிடுவான்)
[சங்கு = திறவுகோல்]
திருவரங்கம்_ திறவு கோல்.
கூரத்தாழ்வான் மூலமாக திருக்கோயிலைப் பெற்ற இதிகாசம் இச்சொற்றொடரில் அநுஸந்திக்கத்தக்கது.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)