கோதையின் கீதை (பகுதி - 11)




     ஸ்ரீகிருஷ்ணதேவராயர்  (கி.பி. 1509 - 1529)  விஜயநகர- துளுவ வம்சத்தை சேர்ந்த பேரரசர் ஆவார்.விஜயநகரப் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவர் மட்டுமல்லாது இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவருமாவார். இவர், ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டவர்.

இன்றைய ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி ஒட்டரம் அல்லது கலிங்கம் எனப்படும்  ஒரிய தேசத்தில் (இன்றைய ஒடிசா) பல பகுதிகளையும் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்த மாமன்னர் கிருஷ்ண தேவராயர் எனில் அது மிகையில்லை.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்கு வித்திட்டவரும் அவரே. நாகம நாயக்கர், விசுவநாத நாயக்கர் என இம்மரபு தோன்றியது மட்டுமல்ல, புகழ் பெற்ற தளவாய் அரியநாத முதலியார் பெற்ற பெருமைகளுக்கெல்லாம் காரணமானவர் இவரே.

சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய கிருஷ்ணதேவராயன் பிறப்பால் துளுவன். (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்).
ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னட தேசத்தில் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழ் வேதம் பாடிய கோதை ஆண்டாள்.ஆம்! தென்னிந்திய பேரரசரான கிருஷ்ணதேவராயருக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம் இருந்தது. அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான இவர் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை நன்கு அறிந்திருந்தார்.

சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் புலமை பெற்ற ராயர் தனது தாய்மொழியான தெலுங்கின் மீது தனி பற்று வைத்திருந்தார். பேரரசராகத் திகழ்ந்தது போன்றே, கவி இயற்றும் ஆற்றல் கொண்ட பெரும்புலவராகத் திகழ்ந்தார்.

தெலுங்கு மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘ஆமுக்த மால்யதா‘ - (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி)
 என்னும் அருமையான  காப்பியத்தை ராயரே எழுதியுள்ளார். தெலுங்குக் காப்பியம் என்றாலும், இதன் பாடு பொருள் தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடையது. திருப்பாவைப் பாடல்களைப் பாடிய நம் கோதை நாச்சியாரான ஆண்டாளின் திவ்ய சரித்திரத்தையே கிருஷ்ண தேவராயர், ‘ஆமுக்த மால்யதா’ எனும் காவியமாக வடித்தெடுத்திருக்கிறார்.
விஷ்ணு சித்தீயம் என்ற ஆமுக்த மால்யதா 800 விருத்தப்பாக்களைக் கொண்டது.
அந்நூலின் முன்னுரையில் தாம் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த காலகட்டத்தில் விசயவாடியில் (விஜயவாடா) இருந்து ஸ்ரீகாகுளம் சென்று 'ஆந்திர மதுசூதனா' என்ற பெயருடைய இறைவனை வழிபட்ட அன்று இரவில் மகாவிஷ்ணு தன் கனவில் வந்து ஆண்டாள் பற்றி ஒரு காவியம் எழுதுமாறு கட்டளை இட்டதாக குறிப்பிட்டுள்ளார். .நான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை.

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..

‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக” என்று கட்டளையிட்டார்.

ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள் தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம் தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

இதில் விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் வாழ்வும், அவர் துளசி வனத்தில் கண்டெடுத்து வளர்த்த கோதை ஆண்டாளின் வரலாறும், அவள் அரங்கன் மீது கொண்ட அளவற்ற தெய்வீகக் காதலும், வைணவத்தின் உயரிய தத்துவங்களும் விரிவாகப் பேசப்படுகின்றன.

இந்த தெலுங்குக் காப்பியத்தை அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ், பாளி, பிராகிருதம், தெலுங்கு, சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளை அறிந்திருந்த
சிறந்த பன்மொழி அறிஞரும், மொழிபெயர்ப்பாளரும், மெய்யியலாளருமான
மு. கு. ஜகந்நாத ராஜா  (கி.பி.1933 - 2008 )
அவர்களுக்கு கி.பி.1989 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "ஆமுக்த மால்யதா" மொழிபெயர்ப்புப் படைப்புக்குக் கிடைத்தது.




எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால்  இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை "மாமான் மகளே" என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!


• திருப்பாவை ஒன்பதாம் பாடல்

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!


[மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ?
அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!]

•• உடைமையைக் கொண்டு போவது  உடையவனுக்கே பரம் என்று கிடக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள். என்னை ராமபிரான் அழைத்துச் செல்வானாகில், அது அவன் ஸ்வரூபத்திற்கே தகுந்தது என்றிருக்கும் சீதைப்பிராட்டியைப் போன்றவள் இவள். வெளியிலிருந்து எழுப்புமவர்கள் இலட்சுமணனைப் போலே கைங்கர்யத்தில் ஊன்றியிருப்பவர்கள்.
உள்ளே கிடக்கிறவன் பரதாழ்வானைப் போலே  பகவானுக்கு அத்யந்த பரதந்த்ரையாய் இருப்பவன். வெளியிலுள்ளோர் உபேயத்தின் பெருமையறிந்தவர்கள். உள்ளே உள்ளவள் உபாயத்தின் சீர்மையை சிந்திப்பவள். வெளியிலுள்ளோர் முமுட்சுக்களைப் போலே, "எஞ்ஞான்று தலைப் பெய்வனே", "உடன் கூடுவது என்று கொலோ" என்று துடிப்பவர்கள். உள்ளே உறங்குபவள் ப்ராப்யம் கை வந்த நித்ய ஸித்தரைப் போல் நிர்ப்பரையாயிருப்பவள்.
"துயிலணை மேல் கண் வளரும்" என்கையாலும்,
"ஊமையோ அன்றிச் செவிடோ?" என்று பலப்பல சொல்லியும் எழுந்திருக்காமையாலும்,  இவள் உபாயாத்யவஸாய நிஷ்டை என்று தோற்றுகிறது. 'கடந்த பாட்டில் முக்தர் போலே இருப்பாளொருத்தியை எழுப்பிற்று. இப்பாட்டில் நித்யர்படியும், மைத்துனமுறைமையையும் உடையாளொருத்தியை எழுப்புகிறது" என்கிறது நாலாயிரப்படி. 

• (தூ மணி மாடத்து) –
துவளில் மா மணி மாடம் என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத நன்மையை உடைய மணியாலே செய்த மாடம். ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருமாளிகையே தங்களுக்கு மிகவும் உத்யேச்யமாகவிருப்பதால், முதலில் அதை வர்ணிக்கிறார்கள். "ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹயாத்திரையை அநுஸந்திக்க அமையும்." என்று ஆழ்வான் அருளிச்செய்வர் என்கிறது ஆறாயிரப்படி.
நம்மாழ்வார் எம்பெருமானுடைய மாளிகையை "துவளில் மாமணி மாடமோங்கும் துலைவில்லிமங்கலம்" என்றருளிச் செய்தார். இவர்கள் அவன் அடியார்களது திருமாளிகையை தூமணி மாடம் என்றனர்.
அவனுடைய மாளிகையை "துவளில் மாமணி மாடம்" என்பதில் ஒருகாலத்தில் அவன் மாளிகை அழுக்கு அடைந்திருந்தது தெரிகிறது. இவளுடைய மாளிகையை தூமணி மாடம் என்கையாலே எக்காலத்திலும், மலம் சிறிதுமற்ற மணிகளாலே கட்டப்பட்டதென்று விளங்கும். அம்மாளிகையின் பரிசுத்தி ஜீவாத்மாவின் தோஷமின்மையைப் போன்றது. இம்மாளிகையின் பரிசுத்தி பரமாத்மாவின் தோஷமின்மையைப் போன்றது. இவ்வூரில் கழிந்த ரத்னங்கள் கொண்டே திருத்துலைவில்லிமங்கலத்தில் மாளிகைகள் செய்தது. "ராஜாக்கள் அந்தப்புரத்தில் கழிந்தவை கொண்டே  தங்களுக்கு மாளிகைகள் செய்வது." என்பர் பூர்வாச்சார்யர்கள். திருவாய்ப்பாடியிலும் ஆண்டாளுக்கு ஓர் மாளிகையுண்டு போலே காணும். "மாடமாளிகை சூழ் மதுரைப்பதி, நாடி நம் தெருவின் வழி வந்திட்டு"என்றருளிச் செய்தவளன்றோ!

(சுற்றும் விளக்கெரிய) மாணிக்கங்களின் ஒளியாலே மாளிகை முழுவதும் பிரகாசிக்கச் செய்தேயும், மங்களார்த்தமாக எங்கும் விளக்கெரியச்செய்த படி. "வெளியிலே எங்கள் ஹ்ருதயங்களான விளக்குகள் இருண்டு கிடக்க, உள்ளே கண்டவிடமெல்லாம், விளக்கெரிவதே!" என்கிறார்கள். க்ருஷ்ணன் நம்மைத்தேடி வருவான் என்று காத்துக் கிடக்கையாலே, அவனுடன் உலாவுமிடமெங்கும் படுக்கையும்,  விளக்குமாக்கி வைத்திருக்கிறார்கள். மணிக்கதவம் தாள் திறவாய் என்கிறபடியே தாள் திறக்க வழியறியாதவர்கள். உள்ளுள்ள விளக்குககளையும் மற்றவைகளையும், அறிந்தபடி  எவ்வாறு எனில், தூமணிமாடமாகையால்  உள்ளுள்ளவை வெளியே தோற்றக்குறையில்லை.

( விளக்கெரிய ) எங்களகங்கள் இருண்டு கிடக்க, இங்கு கண்டவிடமெங்கும் விளக்கெரிவதே என்கிறார்கள்.

(தூபம் கமழ) புகை காணவொண்ணாதே பரிமளம் வெள்ளமிட விரகதாபத்தால் வாடும் எங்களுக்கு அகிற்புகை அஸஹ்யமாயிருக்க, நீ அதுவே தாரகமாக கண்வளருவதேன்.

(துயிலணை மேல் கண்வளரும்) பரிமளம் சிறிது குறையில் கண்வளராதோ? "நம்முடைய நெருப்பு சிலர்க்கு படுக்கையாவதே" என்கிறார்கள். இருவர்க்கான படுக்கையில் நீ ஒருத்தியே கண்ணுறங்குவது  எங்ஙனே? என்கிறார்கள்.
இளையபெருமாளான லட்சுமணனைப் போல் உறங்காமைக்கு நாங்கள் உண்டானாப் போலே, உறங்குகைக்கு நீயொருத்தியும் உண்டாவதே!
பாகவதர்களாகையாலே தூங்கும் என்னாது 'கண்வளரும்' என்று கௌரவமாக வார்த்தை  சொல்லுகிறார்கள்.

"நீராடப்போதுவீர்", "பொற்றாமரைக்கயம் நீராடப் போனாள்", "மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே" என்றன்றோ இவர்கள் பரிமாற்றமிருக்கும்படி.

பட்டரிடம் சிலர் "தொண்டனூர் நம்பி திருவடி சார்ந்தார்" என்று சொல்ல, "ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்குத் திருநாட்டுக்கு நடந்தார் என்று சொல்ல வேண்டாவோ?" என்று பட்டர் அருளிச் செய்தாராம்.

"படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டான்" என்று  இவள் தகப்பனார் (பெரியாழ்வார்) பகவான் பள்ளி கொண்ட அழகை அனுபவித்தாற் போலே, இவள் "துயிலணை மேல் கண்வளரும்" என்று பாகவதர்கள் பள்ளி கொண்ட அழகை அனுபவிக்கிறாள். 

• (கண்வளரும்) அபிமத லாபம் அவனாலே ஆனபின்பு  நாம் செல்லுகையாவதென்? என்று நினைத்து மார்பிலே  கை வைத்து உறங்குகிறாள். உள்ளிருப்பவள். "எல்லா உலகையும் ஈடுபடுத்தும் கிருஷ்ணனைப் பெறவிருக்கும் இவள் கவலையற்று உறங்குவதே" என்கிறார்கள் அவர்கள். த்வயத்தின் பூர்வ கண்டத்தின் பொருளை நினைத்திருப்பவள் இவள். உத்தர கண்டத்தின் பொருளை உணர்ந்திருப்பவர்கள் அவர்கள். 

(மாமான் மகளே) "ஸ்வாமிநியாகவும், தோழியாகவும் அனுபவித்ததற்கும் மேலாக விடவொண்ணாத உறவைச் சொல்லியும் அனுபவிக்கிறாள். "திருவாய்ப்பாடியிலே ஒரு ப்ராக்ருத ஸம்பந்தம் தனக்கு உஜ்ஜீவனமென்றிருக்கிறாள் என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.
விடத்தக்கவராகச் சொல்லப்படும் தேஹபந்துக்களே வைஷ்ணவர்களாயிருக்கில் விரும்பத்தக்கவர்களாகின்றனரென்று உணர்த்துகிறாள். பெரியாழ்வாரும் அவர் திருமகளாரும் "நன்மக்களைப் பெற்று மகிழ்வரே" என்று அருளினார்களன்றோ.
'மாமான்" என்பது ஸ்ரீமாலாகாரரைக் குறிப்பதாக நம் ஆச்சார்யர்கள் நிர்வஹிப்பர். "அங்குத்தை உறவு மாலாகாரர். தானும் ஒரு மாலாகாரர் மகளிரே" என்று நாலாயிரப்படியில் ஆய் அருளிச் செய்வர்.


பெரியாழ்வாரைப் போலே இம்மாலாகாரரும் கிருஷ்ணரிடம் பேரன்புடையவர் ஆகையாலும் இவரை 'மாமான்' என்று ஆண்டாள்  அழைக்கத்தட்டில்லையே.

இவர்கள் இம்மாதிரி அழைத்தவுடன், வெளியிலிருந்தும் திறக்கக்கூடிய இத்தாளை "நீங்களே திறந்து கொண்டு புகுங்கோள்" என்னும் கருத்துத் தோன்ற இவள் கிடக்க, (மணிக்கதவம் தாள் திறவாய்) "அது மாணிக்கக் கதவாகையாலே அப்யாஸமில்லாத எங்களுக்குக் கதவுக்கும், சுவருக்கும்,தாளுக்கும் வாசி தெரியாது. ஆகவே நீயே வந்து திறந்து விட வேணும்" என்று கருத்து. கதவு திறந்திருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொண்டல்லது இவர்கள் உட்புகார்களன்றோ. "செய்யாதன செய்யோம்" என்றார்களன்றோ தொடக்கத்திலே. வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிபவர்கள்  அன்றோ இவர்கள்.
இப்படி வாசலிலே இவர்கள் துவளுவதைக் கண்டும் நெஞ்சிலே இரக்கமில்லாமலிருக்கை  உன் ஸ்வாபத்திற்குச் சேராது காண்!  என்றும் கருத்துத் தோன்ற இருந்தாள் இவள் தாய்.
அதனைக் கண்ட தோழிமார் (மாமீர் அவளை எழுப்பீரோ!) என்கிறார்கள். •  அவள் மேலுள்ள அன்பு அவள் தாய் வரையிலும் வெள்ளமிடுகிறபடி. மகளுடைய புருவ நெறிப்பிற்கு வசப்பட்டிருப்பவளாகையால் அவளும் எழுப்பாமல் கிடந்தாள். அதனால் கோபம் கொண்ட இவர்கள் "உன்மகள்" என்கின்றனர். பிராட்டிக்கும் ப்ரணய கோபம் ஏற்பட்டு சக்கரவர்த்தியளவும் மேலிட்டு பிது: என்றாப் போலே" என்பது ஆறாயிரப்படி.

(ஊமையோ) வாசலிலே வருந்துமவர்களைக் கண்டுவைத்தும் இவள் 'ஐயோ' என்றென்னாமையாலே
ஊமையாய் விட்டனளா?

(அன்றிச்செவிடோ) ஊமையாய் இருந்தாலும் கேட்டுவந்து திறக்கலாமே! செவிடாய் விட்டனளோ?

(அனந்தலோ) இரவெல்லாம் கிருஷ்ணனுக்கு உடல் கொடுத்து, இப்போது தான் இப்பெருந்தூக்கத்திலே அமிழ்ந்தனளோ?

(ஊமையோ...அனந்தலோ) வாகிந்திரியங்களும், ச்ரவணேந்திரியமும், மநஸ்ஸும் பகவானிடத்திலே ஈடுபட்டு எங்களை மறந்தனளோ?

(ஏமப்பட்டாளோ) ஊரார் காவலிடப்படாத இன்றும் இவள் மட்டும் காவலிடப்பட்டாளோ?

(பெருந்துயில் மந்திரப்பட்டாளோ) பெருந்துயிலே ஆழும் படி மந்திரவாதம்  பண்ணிணாருண்டோ? இப்படி இவர்கள் கோபித்து வார்த்தை சொன்னவுடன் நாம் வாளாவிருப்பது தவறு என்று உணர்ந்த அவளின் தாயார், "நீங்கள் இவளுடைய ஸ்வாபத்தை அறியவில்லை போலும். மோஹித்துக் கிடப்பாரை தண்ணீர் தெளித்து, விசிறித் தெளிவிப்பார் போலே இவளுக்குத் தென்றலும் சிறு துளியும் போன்ற திருநாமங்களைச் சொல்லுங்கோள்" என்றாள். 'மாமாயன் மாதவன் ....நவின்று' என்று நாங்கள் சொன்ன திருநாமங்களுக்கு ஒரு கணக்கில்லை என்கிறார்கள். 

(மாமாயன்) ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான எங்களை எழுதிக் கொண்டவன். (மாமாயன்...வைகுந்தன்)நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாயிருந்தும் இடைச்சிகளான எங்களுக்குக் கட்டவும் அடிக்கவுமாயிருக்கும் மாயாவி.

(என்றென்று) இப்படி மேன்மைக்கும், நீர்மைக்கும் இரண்டுக்கும் ஹேதுவான ஸ்ரீய:பதித்துவத்துக்கும் வாசகமான திருநாமங்கள் எல்லாவற்றையும் சொன்னோம்.
(நாமம் பலவும் நவின்று) "பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான்" எனப்பட்ட  நாமங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். உன்மகள் எழுந்திராத குறையேயொழிய நாங்கள் சொல்லாத குறையில்லையென்கிறார்கள்.



**
பாசுரச் சிறப்புகள்:-

• தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?

• ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.
"ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்", "உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி", "மிக்கானை மறையை விரிந்த விளக்கை"
என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

•  தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் - "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் கூறுவார்.
"உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது.
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!

• நாயகிபாவம் இங்கு அழகாக வெளிப்படுகிறது! உறங்கும் பாகவதையின் தாயாரை, துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), மோட்ச புருஷார்த்தத்தை அடைய புருஷகாரத்துடன் (பாகவதையின் தொடர்பு) ஆச்சார்ய அனுக்ரகமும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!

• மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !



• இந்த பாசுரத்தில் திருமழிசையாழ்வாரை துயில் எழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் அருளிச்செய்கிறார்.
 இங்கு "மாமான் மகளே" என்ற சொல்லாடல் ஒருவித இரத்த சம்பந்தத்தைக் குறிப்பதாம்! அதெப்படி ஆண்டாளுக்கும் திருமழிசைபிரானுக்கும் ரத்த சம்பந்தமான உறவு இருக்க முடியும்?
கோதாஸ்துதி ஆண்டாளை திருமகள் அவதாரமாகத் தானே சொல்கிறது. புராணங்கள் மகாலஷ்மி (திருமகள்) பிருகு குலத்தில் அவதரித்ததாகக் கூறுகிறது! ஆண்டாள் ஒரு அந்தணரால் (விஷ்ணுசித்தர்) கண்டெடுக்கப்பட்டு தன்னை ஒரு கோபியர் குலப்பெண்ணாக வரிந்து கொண்டவர். அது போல, திருமழிசையார் ஒரு ரிஷியின் மகனாக பிருகு குலத்தில் அவதரித்து, பின்னர் ஒரு வேடனால் (பிரம்பன் குலம்) வளர்க்கப்பட்டவர். அதனால், இரத்த சம்பந்தம் உண்டு என்று கொள்வது பொருத்தமானதே.



  ||திருப்பாவை ஜீயர்||

(மணிக்கதவம் தாள்திறவாய்) மணியென்பது ரத்தினத்திற்குப் பெயர். நவரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்யை ஸூசிதமாகிறது. கதவு என்பது பதார்த்தங்களைச் சேமித்து வைப்பது. ஸ்வாமி ராமாநுஜரின் திவ்ய க்ரந்தங்களே கதவு ஆகும். ஸ்வாமி அருளீச் செய்தவை ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதாந்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்யம் என்று ஒன்பது திவ்ய க்ரந்தங்களாகையாலே  அவையே இங்கு மணிக்கதவு எனப்படுகிறது. அவற்றைத் திறக்க வேண்டும் என்றது, அவறௌறிலுள்ள அர்த்த விஷேசங்கள் எங்களுக்கும் நிலமாம்படி  விளக்கியருள வேண்டுதல்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

  1. 🙏 🙏 மிக்க அருமை. I need permission to
    Share thiruppavai விளக்கம் in my fB page.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)