கோதையின் கீதை (பகுதி - 22)


🔸🔷🔶  நாச்சியார் திருமாளிகை:- 🔶🔷🔸

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.
                ஸ்ரீஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "கனக சமர பூபாலனம்" (முத்துப்பந்தல்) எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. திருப்பாவை 30 பாசுரங்களையும், நினைவுறுத்தும்படி 30 தங்க மாவிலைகள் இம்மஞ்சத்திலே கட்டப்பட்டுள்ளன. ஒரு இலைக்கும் மற்றொரு இலைக்கும் இடையே ஒரு பூச்செண்டு உள்ளது.

பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். (இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.)  ரெங்கமன்னாரை விரைவில் ஆண்டாளிடம் சேர்த்து வைத்தவர் கருடாழ்வார் ஆவார். ஓம் எனும் ப்ரணவ ரூபமாக மூவரும் இத்தலத்தில்  உள்ளதாக ( அ - ஸ்ரீரெங்க மன்னார்; உ - ஸ்ரீகோதை; ம- ஸ்ரீகருடாழ்வார்) ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்தனர்.
ஸ்ரீகோதை ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரியாழ்வார் ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்பாலிக்கின்றனர். ரெங்கமன்னார் "அ'காரம், ஆண்டாள் "ம'காரம், கருடாழ்வார் அம்சமான பெரியாழ்வார்  "உ'காரம் என இம்மூவரும் " ௐ " எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது.
                     ஸ்ரீஆண்டாளின் திருக்கோயிலான "நாச்சியார் திருமாளிகை" முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அவ்விமானத்திற்கு "திருப்பாவை விமானம்" என்று பெயர்.
                    உட்பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது "மாதவிப் பந்தல்" உள்ளது.  மணி மண்டபத்தில்
ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். ஆண்டாள் திருப்பாவை(20)யில், ‘உக்கமும்  தட்டொளியும்' என்று குறிப்பிட்டிருக்கிறாள்.
தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில், தனது வாலை தலைக்குமேல் சுருட்டி வைத்துள்ள ஆஞ்சநேயர் சிற்பம் மிக வித்தியாசமான முறையில், சிறப்பான சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு தமது வாலை உடல் முழுவதும் வட்டமாகச் சுற்றியவாறு அமைந்திருக்கும் சிற்பம் இது.
நாச்சியார் திருமாளிகையில் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘இலக்குமி நாராயணர்’ திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. சுதை சிற்பமாக அமைந்திருக்கும் இத்திருமேனியின் இடது மடியில் இலக்குமி தேவி அமர்ந்திருக்கிறாள். பல வர்ணங்களால் அழகு மிளிரும் இச்சிற்பம் ‘வர்ணகலாபேரர்’ என்றழைக்கப்படுகிறது.
மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது.[இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.] அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீகருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கனக சப்ர மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் "ரங்கமன்னார், ராஜ மன்னார்" ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாளின் திருக்காட்சி. ‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை = மாலை) அணிந்து கொள்வதால் அழகு என்பர்.
தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.



 தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஏகாதசி மண்டபம், கல்யாண மண்டபம் போன்ற இடங்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்புற அமைந்துள்ளன. ஒரே கல்லாலான பெரிய தூணின் இருபுறங்களிலும் வேணுகோபாலன், இராமர், விசுவகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் இலக்குவன், சரசுவதி, அகோர வீரபத்திரர், சலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளம் கவருவதாக அமைந்துள்ளன. இராச கோபுரத்தின் வடபுறம் அமைந்துள்ள, ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன.
இராச கோபுரத்தின் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்தின் இடப் பக்கம் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்களும் கலை நயம் வாய்ந்தவை ஆகும்.

ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ,தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது.

ஆண்டாள் கோயிலின் திருமுக்குளம், வாழைக்குளத் தெரு எனும் இடத்தில் சில தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது. இதன் மேற்குக் கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் அமைந்துள்ளன. ஆண்டாளின் மடியில் சிறீரங்க மன்னார் சயனித்திருக்கும் ‘சயன உற்சவம்’ திருக்காட்சி அருகில் உள்ள ஸ்ரீகிருட்டிணர் கோவிலில் நடைபெறும்.


🔹இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.
(கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்)



🔹திருப்பாவை இருபதாம் பாடல் 🔹


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலேழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் ;
செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பா வாய்.

[🔹"(கண்ணனை எழுப்புதல்) தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்து மூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!
🔹 (நப்பின்னையை எழுப்புதல் )கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!" ]

** ** *




                 🔹 பாசுரக் குறிப்பு 🔹

🔹 திருப்பாவையில், இதுவே நப்பின்னை பிராட்டியை (பாசுரங்கள் - 18,19,20) துயிலெழுப்பும் கடைசிப் பாசுரம். ஆனால், கண்ணன் தெளிவாக துயில் விலக இன்னும் 2 பாசுரங்கள் ஆகும்

🔹  5 X 5 + 5 இல் இது நான்காம் ஐந்தின் இறுதிப் பாசுரமாகும். இப்பாசுரத்திலும் புருஷகார தத்துவத்தின் அடிப்படையில் , நப்பினையையும், கண்ணனையும் சேர்த்துத் துயில் எழுப்புவதாக வருகிறது. சென்ற பாசுரத்தில் உனக்குத் தத்துவமன்று, தகாது என்றெல்லாம் கடிந்து கொண்டார்கள் அல்லவா?  இங்கே நைச்சியமாகப் பேசி, அவள் அழகிய சொரூபத்தைப் போற்றிப் பணிந்து, புருஷகாரம் செய்யச் சொல்லி விண்ணப்பிக்கிறாள் நம் கோதை ஆண்டாள் !

🔹 இந்த 20வது பாசுரம் உபநிடதம், கீதை சார்ந்த சில விஷயங்களை உள்ளடக்கியிருப்பதாக பெரியோர் கூறுவர்.
 'அம்பரமே' எனத் தொடங்கும் 17 ஆம் பாசுரத்தில் முதலெழுத்து 'அ 'காரம். 'உந்து மத' எனத் தொடங்கும் 18 ஆம் பாசுரத்தின் முதலெழுத்து 'உ'காரம். 'முப்பத்துமூவர்' எனத் தொடங்கும் 20 ஆம் பாசுரத்தில், இந்தப் பாசுரம், முதலெழுத்து 'ம'காரம். இந்த மூன்று எழுத்துகளும் , 'அ'காரம் +'உ'காரம் +'ம'காரம் ,சேர்ந்தால் வருவதே ப்ரணவம் . நடுவில் வரும் 19 ஆம் பாசுரம் 'குத்துவிளக்கெரிய' அதன் முதலெழுத்து 'கு' இது வினையையும் பெயரையும் இணைக்கும் வேற்றுமை உருபு. எனவே 17,18,20 ஆகிய பாசுரங்களை இணைக்கும் பாசுரம் 19. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் அமைந்து ப்ரணவத்தைக் குறித்தன. தமிழின் சிறப்பும், ஆண்டாளின் திறமையும் ஓங்கி விளங்கும் இடங்களில் இவையும் ஒன்று!
🔹 அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இந்த மூன்று பாசுரங்கள் 18,19,20, இவை ஜீவாத்ம நிலையானது , புருஷகாரத்தை முன்னிட்டுச் சரணடைதல் பற்றிச் சொல்கின்றன.
🔹 இப்பாசுரத்திலுள்ள ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும், கோதை நாச்சியார், பரமனை 2 தடவை துயிலெழ வேண்டுகிறாள் (⭐கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
⭐ வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்), அவனைச் சரணடைவதே பிரதானம் என்கிறாள் கோதை ஆண்டாள்.
🔹முப்பத்து மூவர் - தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், (8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்.)
🔹அடுத்து பிராட்டியை அவள் பெருமைகள் தோன்ற மங்காளாசாசனம் செய்கிறார்கள். செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் என்று நாயகனான பகவான் உகந்து பிராட்டியும் உகப்பிக்கும் அவயவ லக்ஷணங்களைச் சொல்லி அவர்களுக்குள் நெருக்கத்தைச் சொல்லி, திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.







 🔹உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு! – இங்கே பூர்வாசார்யர்கள் ‘உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லக்ஷம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரஹ்மமாயிற்றே!

எப்படி தசரதன் ராமனை ‘தந்தேன்!’ என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்கிறார்கள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அசேதனங்களை எடுத்துக்கொடுப்பது போல், பகவானையும் தூக்கி பக்தர்களிடம் சேர்ப்பிக்கக் கூடியவள் அவள். உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு. கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.
🔹இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்!
 "நீராட்ட" என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது (திருப்பாவையில் எல்லா இடங்களிலும்)

⭐ நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
⭐நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
⭐நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
⭐ மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
⭐குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
⭐ இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
⭐மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

ஆகிய பாசுரங்களில் நீராடல் பற்றி கூறுகிறான்.


 ⭐  ||திருப்பாவை ஜீயர்||   ⭐

 🔹 இப்பாட்டில் "செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! " என்னும் விளிகள் ஸ்வாமி ராமாநுஜருக்கு  மிகவும் ஏற்றவை ஆகும். வடமொழியில் ஆர்ஜவம் எனப்படும் குணம் தமிழில் செப்பம் எனப்படும்.
 மநோ வாக் காயங்களின்  ஒற்றுமையாகிற கரண த்ரய சாரூப்யமே ஆர்ஜவம். அது தான் செப்பம். ஸ்வாமியினுடைய திவ்யஸ்ரீஸூக்திகளைச் சேவிக்கும் போது ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவத்தையன்றோ தெரிவிக்கின்றது.

 🔹 (திறலுடையாய்) திறல் என்பது பராபிபவன சாமர்த்தியம். நீறு பூத்த நெருப்புப்போலயிருந்து இதரவாதிகளின் துர்வாதங்கள் தலையெடுக்கவொட்டாதபடி செய்தருளும் ஆற்றலும் ஸ்வாமிக்கு அஸாதாரணம். 



🔹 (செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்)
செற்றாராகிறவர்கள் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே "குணிநமபி குணைஸ் தம் தரித்ராணாம் ஆஹூ: " என்ற பட்டர் ஸூக்திப்படியே அப்பெருமானை ஸர்வ தரித்திரனாகப் பேசி வைத்தவர்கள். அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி ராமாநுஜர். வெப்பம் -ஜ்வரம் - பீதி ஜ்வரம்.
"தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூ தராணாம் அந்தர் ஜுவரமசி சமத்"  என்று ஸ்வாமி ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்திரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று. செற்றாருடைய உள்ளத்திலே அதைப் போக விட்டார். ஹனுமன் இலங்கையை கொளுத்தினாரே எந்த நெருப்பை வைத்து கொளுத்தினார் என்று கேட்க, வாலில் அரக்கர்கள் கொளுத்தின நெருப்பில் என்றார்களாம். அதுவன்று.
"சோக வஹ்நிகம் ஜனகாத்மஜாயா ஆதாய தேநைவ ததாஹா லங்காம்" -என்று
பிராட்டி திரு வயிற்றில் இருந்த சோக அக்னியை கிளப்பி இலங்கையை கொளுத்தின திருவடி போலே என்றார் மர்மஜ்ஞர்.
அதுபோலவே இங்கும் ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜுரங்களை எடுத்து செற்றார் வயிற்றில் எறிந்த படி.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)