கோதையின் கீதை (பகுதி - 13)
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல்
[ப்ரபன்ன காயத்ரியான ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதியில் பூமிப்பிராட்டியான கோதை ஸ்ரீஆண்டாள் பற்றிய செய்தி]
ப்ரபன்ன காயத்ரி என்னும் இராமாநுச நூற்றந்தாதியை அருளிச் செய்த 'திருவரங்கத்து அமுதனார்' பூர்வத்தில் "பெரிய கோயில் நம்பி" என்ற திருநாமம் பூண்டிருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் காப்பாளராகவும், புரோகிதராயும் அவர் இருந்தார். (புரோகிதமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன.)
முதலில் இவர் ஸ்வாமி ராமாநுஜரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருள் வழிச் சென்றார்.
கூரத்தாழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி பெரிய கோயில் நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார் ஸ்வாமி ராமாநுஜர். ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபாரமான கவி ஞானத்தை அறிந்து, ஸ்வாமி தாமே அவர்க்கு "அமுதனார்" என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் கூரத்தாழ்வானிடமும், எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.
அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைத் தேடினர். அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு காலம் அவர் கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் "த்ருபதோஸ்மி" (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில் கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார். எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் புரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது.
இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக "இராமாநுச நூற்றந்தாதி" எனும் 108 பாசுரங்களை இயற்றினார். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து, அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமி ராமாநுஜரும், ஸ்ரீநம்மாழ்வார் விஷயமான 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார்,
இதுவே "ப்ரபந்ந காயத்ரி" என ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல் ஸமாச்ரயணம் ஆனோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும் என்பது வைணவ மரபு.
எப்படி மதுரகவி ஆழ்வார் 11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார்.
🔶[ *இராமாநுச நூற்றந்தாதி பாசுரம் 16 *]
"தாழ்வு ஒன்றும் இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் ராமானுசன் என்னும் மா முனியே "
[ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூமாலையை தனது திருக்குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்),
ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது, குத்ருஷ்டிகளாலே இழிவு பெற, பூமியெங்கும் கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே
இங்கே வந்தவதரித்து, அந்தவேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை ரக்ஷித்தருளினவர்.]
திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளின் உத்தமமான திருமேனிக்கு, அலங்கரிக்கத் தகுதி கொண்ட மலர் மாலையை, “இந்த மாலை அவனுக்கு உறுத்துமோ, மணம் சேர்க்குமோ”, என்று சோதிக்கும் விதமாகத் தனது தலையில் சூட்டி, அதனைக் களைந்து அவனுக்கு அளித்தாள் (ஆண்டாள்). இப்படிப்பட்ட ஆண்டாளின் கருணையாலேயே தனது வாழ்வு கொண்டவர் எம்பெருமானார் ஆவார். திருவரங்கத்தில் பங்குனி உத்திர நன்னாளில், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாயகியுடன் சேர்ந்து நின்றபோது அல்லவோ – பகவன் நாராயண – என்று சரணாகதி செய்தார்? இவ்விதமாக, தான் அழகிய மணவாளன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பெற்ற பலன்கள் அனைத்தையும் இந்த உலகம் முழுமைக்கும் அளித்த வள்ளல் ஆவார். அப்படிப்பட்ட மாமுனிவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இராமாநுஜர் செய்தது என்ன? வேதங்கள் அனைத்தும் எந்தவிதமான தாழ்வுகளும் இன்றி இருந்து வந்தன. அப்படிப்படட உயர்ந்த வேதங்கள் மதிக்கப்படாமல், வேதமார்க்கம் என்பது மூலையில் சென்றபடி இருந்து. எப்போது இவ்விதம் ஆனதென்றால் "இருள்தருமாஞாலம்" என்ற இந்தப் பூமியைக் கலியுகமானது ஆள்கின்ற காலத்தில் (கலியுகத்தில்) ஆகும். இந்தக் காலத்தில் வேதங்களை மீட்க, பரமபதத்தில் இருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, இந்த உலகங்களைக் காத்தவர் "எம்பெருமானார்" ஆவார் என்று நாம் உணர்வோம்.
அவரே நம் கோதை ஸ்ரீஆண்டாள் என்னும் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்.
இப்பாசுரத்தில் இறைவனை அடையும் மார்க்கங்களில் ஒன்றான பக்தி யோகம் பற்றிச் சொல்லப்படுகிறது. நல்ல ஆச்சார்யனை அடைந்து, பக்தியின் மூலம், ஞானமும், வைராக்கியமும் கைவரப் பெற்றவர்கள், இறைநாமத்தைப் பாடி அவனை சரணமடைந்து விட்டால் அவர்களை வேறெந்தப் பாவமும் சேராது, வீடாகிய பேறு கிட்டும் என்பது கருத்து. மிகவும் ஆழமான உட்பொருள் கொண்டிருக்கும் பாசுரம். பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையைஎழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். அவ்வளவு பசுக்கள். கற்றுக்கறவை என்ற பதத்தில் சிறிய கன்றாக இருக்கும்போதே கன்றை ஈன்று பால் சுரக்க ஆர்ம்பித்துவிட்ட பசுக்கள் என்றும் அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.
5 X 5 +5 இல் மூன்றாம் ஐந்தின் தொடக்கம் . மூன்றாம் பகுதி (11-15)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன-இப்பாசுரத்தில், கண்ணனைப் போன்றேக் குழந்தைத்தனமும் குறும்பும் கொண்ட, மிகவும் அழகு வாய்ந்த, பெயர் பெற்றக் குடியில் பிறந்த அடியவரை எழுப்புகிறார்கள்.
• திருப்பாவை பதினொன்றாம் பாடல்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
[கன்றுகளுடன் இருக்கும் நிறைந்த எண்ணிக்கையிலுள்ள பசுக்களைக் கறந்து பால் சேர்க்கின்றவர்களும் ,(பசுச்செல்வம் நிறைந்த கோவலர்கள்) தம்முடைய பகைவர்களின் ஆற்றல் அழியுமாறு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களுமான, செல்வத்திற்கும் ஆற்றலுக்கும் ஒரு குறையுமில்லாத, இடையர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடி போன்ற அழகிய பெண்ணே! புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான அல்குல் உடையவளும், தோகை விரித்தாடும் அழகிய மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! நிறைந்த செல்வத்தை ஆளுகின்ற பெண்ணே , நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவது எதற்காக என்று நாங்கள் அறியோம் ! (உறக்கம் கலைந்து எழுந்து வா ) "]
**
பாசுரச் சிறப்பு:-
• இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.
• புற்றரவல்குல் புனமயிலே" என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரம எதிரியான மயிலையும் துணைக்கு அழைத்ததில் ஆண்டாளின் கவிநயம் தெரிகிறது.
• ஆண்டாள் "பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி" என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.
பொற்கொடி - பக்தி; அல்குல் - பரபக்தி;
ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!
"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவதி பயங்கரம் அன்னங்கார்ச்சார்யார், 'நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக' அற்புதமாக அருளியிருக்கிறார்!
அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!
• 'முற்றம்' என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.
(முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட) வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!
• இந்த பாசுரத்தில் கோவலர் தம் பொற்கொடியே என்பதன் மூலம் பெரியாழ்வாரைத் துயில் எழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுச ஜீயர் அருளிச் செய்தார்.
||திருப்பாவை ஜீயர்||
இப்பாசுரத்தில் கற்றுக்கறவை தொடங்கி
கோவலர் தம் பொற்கொடியே என்னுமளவுள்ள விளி பூர்த்தியாக எம்பெருமானார் தன்மையையே தெரிவிப்பதாயிருக்கும்.
கற்று - "சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன்" என்ற நூற்றந்தாதிப் பாசுரப்படியே, எல்லா கல்விகளையும் கற்று, (கறவை கணங்கள் பல கறந்து) "பஞ்சாச்சார்ய பதாச்ரித:" என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி,
"கவா மங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச" என்கிறபடியே கோமாதாக்கள் தங்களுக்குள்ளே பதினாங்கு லோகங்களையும், தம்முள் வஹிக்குமாப்போலே சதுர்தச வித்யைகளையும் தம்முள் கொண்டு நன்றாக கறக்கும் ஆச்சார்யார்களிடத்தில், பலரிடத்திலும் ஸத் ஸம்பிரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி ஸ்ரீ ராமாநுஜர். பெரியநம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று, மந்த்ரார்த்தங்கள் கேட்டும், பெரியதிருமலை நம்பி பக்கலிலே, ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும், திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப்பொருள் கேட்டும், ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச்செயல் கற்றும், நல்வார்த்தைகள் கேட்டும், போந்தவராகையாலே, கறவைக் கணங்கள் பலகறந்தென்றது ஸ்வாமி ஸ்ரீராமாநுஜர்க்கு மிகப்பொருத்தம் ஆகும்.
அதற்கு மேல் (செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்) எம்பெருமானை நிர்குணனென்றும், நிர்விபூதிகனென்றும், நிர்லட்சுமிகனென்றும், திவ்யமங்கள விக்கிரஹ சூந்யன் என்றும் சொல்லுமவர்கள் செற்றார்.
அவர்களுடைய திறலழிய - அவர்களுடைய வாக்கு மிடுக்கு தொலையும் படியாக, திசைதொறும் எழுந்தருளி வாதப்போர் நிகழ்த்தியவர் நம் ஸ்வாமி.
விப்ரம் நிர்ஜித்ய வாதத: என்கிறபடி இது குற்றமாகையன்றிக்கே, சித்தாந்த ரக்ஷணார்த்தமாக செய்ததாகையாலே, நற்றமேயாயிற்று என்று காட்ட, குற்றமொன்றில்லாத என்றது. கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே, ஸ்ரீஸூக்தியையும் சொல்லக்கடவது. யத்கோஸஹஸ்ர மப ஹந்தி தமாம்ஸி பும்ஸாம் என்றவிடத்திலும் இது காணலாம்.
கோ வல்லவர் - மஹாவித்வான்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!
தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
Comments
Post a Comment