கோதையின் கீதை (பகுதி - 12)


             திருமலை நாயக்கர்( கி.பி 1623 -1659) மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் "திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு" என்பதாகும்.  திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

 மதுரையை திருவிழா நகரமாகவும், கலைநகரமாகவும் இன்றளவும் உள்ளதற்கு காரணம் இவரே ஆவார்.
 திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். வண்டியூர் தெப்பக்குளம், பெரிய தூண்களுடைய அரண்மணை(நாயக்கர் மஹால்), புதுமண்டபம்,
முற்றுப் பெறாமலேயே உள்ள இராய கோபுரம், ஆகிய கட்டிடப் பணி இவருடையதாகும். இவரால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களில் சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர் தன் இரு ராணிகளுடன் நிற்கக் காணலாம். நாயக்கரின் சிறப்பியல்பு சைவ வைணவ ஆலயங்களுக்கு சீராக திருப்பணி செய்ததாகும். ஒரு சைவக்கோயில் அருகே அதே அளவு வைணவக்கோயிலையும் கட்டுவது அவரது வழக்கம். கிறித்தவ மதபோதகர்களை ஆதரித்திருக்கிறார். இஸ்லாமிய தர்காக்களையும் ஆதரித்திருக்கிறார்.

இன்றைய மதுரை என்பது திருமலை மன்னரின் ஆக்கம் என்றால் மிகையல்ல. மதுரையின் தெருக்கள் ஆலயங்கள் மாபெரும் தெப்பக்குளங்கள் சுற்றியுள்ள மாபெரும் ஏரிகள் இன்றுள்ள பெரும் திருவிழாக்கள் எல்லாமே திருமலை மன்னரால் உருவாக்கப்பட்டவை.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயில், வடபத்ரசாயீ கோயில், மடவார் வளாகம் சிவன் கோயில், ஸ்ரீகிருஷ்ணன் கோயில் ஆகிய கோயில்களின் திருப்பணிகளுக்காக மன்னர் திருமலை நாயக்கர் அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக மதுரையிலுள்ள மஹால் போன்றே அழகான அரண்மனை ஒன்றை இவ்வூர் 'தெற்கு ரத வீதியில்' கட்டினார். திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல நகரா மண்டபங்களை அமைத்தார். மதுரை வரை 3 மைலுக்கு ஒரு மண்டபமுமாக 15 நகரா மண்டபங்களை அமைத்தார். கோயில் மணி ஓசை கேட்க ஒவ்வொரு நகரா மண்டபத்திலிருக்கும் நகரா எனும் தோல் இசைக் கருவி வாசிக்கப்படும். இவ்வாறு 15 மண்டபங்களாக மதுரை வரை இசை மூலம் தகவல் ஓசை எழுப்பி, நாயக்கருக்கு ஆண்டாள் கோயில் பூஜை நிறைவுற்றதை அறிவிப்பார்களாம். மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகளில் அம்மண்டபங்கள் சிலவற்றை (பாழடைந்த நிலையில் உள்ளது) இன்றும் காணலாம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இப்போதுள்ள பெரிய தேருக்கு முன்பு இதனினும் "பெரிய தேர்" இவ்வூரில் இருந்தது. அதனைச் செய்து கொடுத்தவர் மன்னர் திருமலை நாயக்கரே ஆவார். (அதோடு ரத வீதியையும் விரிவுபடுத்தியுள்ளார். ) சில நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்தத் தேர் பயன்படுத்த முடியாமல் போனதால், அதிலிருந்த இராமாயண, மகாபாரத மரச்சிற்பங்களைக் கொண்டு ஸ்ரீவடபத்ரசாயீ கோயிலின் பகல்பத்து மண்டபத்தில் (கோபால விலாசம்) மேற்கூரையாக வேயப்பட்டன.
ஆண்டாள் சந்நிதிக்கு முன்பாக முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட மண்டபம் ஒன்று இருக்கிறது. இது திருமலை மன்னரின் திருப்பணி என்பதற்கு அடையாளமாக, அம்மண்டபத் தூணில், மன்னர் திருமலை நாயக்கர் சிலையும், அவரது இரு மனைவியரின் சிலைகளும் சிறு வடிவில் உள்ளன.
 சித்ரா பௌர்ணமியன்று ஸ்ரீகள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பு ஆண்டாள் சூடிக்களைந்த மாலையினை  அணிந்து கொள்ளும் வழக்கத்தினை திருமலை மன்னரே ஏற்படுத்தினார்.



             இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் இடையர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!

(அவளுக்கு மட்டுமே ஆனந்தம் தரும்!) அவளது ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து தங்களது அகங்காரத்தையும், அஞ்ஞானத்தையும் விலக்கி, நல்வழி செலுத்தி,தங்களது உய்வுக்கு உதவுமாறு,  உறங்கும் (ஞானமிக்க) அடியவளை வேண்டுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

 இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.



• திருப்பாவை பத்தாம் பாசுரம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

[பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !
ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே ! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"]


எங்களுடன் நோன்பு நோற்பதாகச் சொல்லி வைத்து  நீ அழகியதாக நோற்கிறாய்!  என்று ஏசுகிறார்கள். "அன்றிக்கே நோற்க வேண்டியதெல்லாம் நோற்று விட்டு கிருஷ்ணானுபவமாகிய ஸ்வர்க்கத்தை அநுபவிப்பவளே!" என்று கொண்டாடுவதாகவும் கொள்ளலாம். ஸ்வர்க்கம் என்றால் பகவதனுபவத்தைச் சொல்லுமோவென்றால், "யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நரகோ யஸ் த்வயா விநா" [உன்னுடன் வாழ்வதே ஸ்வர்க்கம்; உன்னைப் பிரிந்திருப்பதே நரகம்.] என்று (சீதா) பிராட்டி சொல்லுகையாலே இவர்களுக்கு இதுவே ஸ்வர்க்கமாகும்.

(நோற்று) இவர்களுக்கு நோன்பாவது கிருஷ்ணனே நமக்கு உபாயமென்றறிந்து, மார்பிலே கைவைத்து உறங்குதல்.
"விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்  தத்வதோ யே  தேஷாம் ராஜந்  ஸர்வயக்ஞாஸ்  ஸமாப்தா:"[ அரசரே! ப்ரம்மஞானிகளான எவர்கள் கிருஷ்ணனை உண்மையாக அறிகிறார்களோ, அவர்களுக்கு எல்லா நோன்புகளும் முடிந்து விட்டன.] என்று பகவானைப் பற்றி சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.
எழுப்புகிறவர்களுக்கும் அதுவே ஸ்வரூபமாயிருக்க, அவர்கள் ஸ்வயத்த்திலே இறங்குவானென்? என்றால் கிருஷ்ணனை அடையவேண்டுமென்னும் ஆசையாலே பதறுகிறார்களித்தனையல்லது இதை சாதனமாக கனவிலும் கருதுமவர்களல்லர் இவர்கள். ஸித்தோபாயமாகிற பகவானைப் பற்றினவர்களுக்கும் கர்மஜ்ஞான பக்திகள் உண்டு. இவர்களுடைய கர்மம் பகவத் கைங்கர்யமாயிருக்கும். ஜ்ஞானம் ஸ்வரூபமாகிய சேஷத்துவத்தை அறிகை.  பகவானிடத்தில் ருசி இவர்களுடைய பக்தியாகும். 
(அம்மனாய்) "எங்களுக்கு ஸ்வாமிநியானவளே! நீ எங்களுக்கு தலைவியானபடி அழகாயிருக்கிறது.! "என்கிறார்கள். இவர்கள் இப்படிக் கூப்பிடச் செய்தேயும் அவள் பேசாதே கிடந்தாள். "ஸம்ச்ரவே மதுரம் வாக்யம்" [ கேட்பதற்கு இனிய சொல் என்றும் ] செவிக்கினிய செஞ்சொல் என்றும் சொல்கிறபடியே மிக இனிதாயிருக்கும் இவர்களுடைய சொல்லைக் கேட்டு கட்டுண்ட நாகம் போலே மயங்கிக் கிடந்தாள். (மாற்றமும் ....திறவாதார்) வாசலை மூடினால் வாயையும் மூடவேண்டுமா? எங்கள் கண்ணைப் பட்டினி போட்டாற் போலே செவியையும் பட்டினி போட வேணுமோ? நான் சுகானுபவம் பண்ணினால், பிறரைப் பற்றிக் கவலை கொள்ளலாகாதோ? படுகுலையடித்தால் தண்ணீர் வார்த்தலாகாதோ? போகத்தைத் தடுத்தால் எங்கள் ஸத்தையும் அழிக்கவேணுமோ? உன் உடம்பைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்தால், எங்களுக்குப் பேச்சாகிலும் தந்தாலாகாதோ? உன் சரக்கைத் தரப்பார்த்ததில்லையாகில், எங்கள் சரக்கைத் தந்தாலாகாதோ? உன்னுடைய கிருஷ்ணனைத் தரவிட்டால் எங்களுடைய உன்னைத் தரலாகாதா? என்னும் பாவங்களை வர்ஷதாரை போல் பொழிவர்கள் நம் ஆசார்யர்கள்.
(மாற்றம் தாராரோ) வாருங்கள் என்றே சொல்லவேண்டும் என்னும் நியதில்லை. செல்லுங்கள் என்று உபேக்ஷித்தாலும் அமையும்; கோபித்தாகிலும் எங்களுக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு சொன்னால் போதுமானது என்கிறார்கள். பாவி நீ என்று ஒன்று சொல்லாய்  பாவியேன் காணவந்தே" என்று பகவத் விஷயத்திலே பட்ட பாட்டை பாகவத விஷயத்தில் படுகிறார்கள்.
"சுவர்க்கம் புகுகின்ற" என்று கிருஷ்ணானுபவமாகிற சுகத்தை இவள் அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்று இவர்கள் சொல்லுகையாலே, "நீங்கள் பழி சொல்லுகிறதென்? அவன் இங்கு உண்டோ?  என்று சொன்னாள் உள்ளிருப்பவள்.
(நாற்றத்துழாய் முடி)  "நீயும் அவனும் சேர்ந்து மறைக்கப் பார்த்தாலும்  திருத்துழாய் மணத்தை மறைக்கப்போமோ? " என்றார்கள். உன்னைப்போலே புறப்படாத தத்வமோ அவன்  சூடின தத்வம்? என்று நாலாயிரப்படி. இவர்கள் அவன் உள்ளே இருக்கிறான் என்று இப்படி  அடையாளம்  சொன்னவுடன், "நீங்கள் சொல்லும் அடையாளம் சரியன்று. அவன் ஒருக்கால் அணைத்தால் ஒன்பது குளிக்கு நிற்குமே. ஆகையால் முன்பொருநாள் என்னை அணைத்த நறுநாற்றமே அது. அதைதக் கொண்டு அவன் இங்கிருக்கிறான் என்று சொல்லப்போகாது. மேலும் நீங்கள் தான் அஸ்தமன சமயத்திலிருந்தே வாசலில் காவலிட்டுக் கொண்டிருக்கிறீர்களே. அப்படியிருக்க அவன் எப்படி புகுர முடியும் என்று  கேட்டாள் அவள்.

(நாராயணன்) அவனுக்கு எங்களைப்போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ? ஸர்வவ்யாபியான அவன் வேண்டியவிடத்திலே, உடனே தோன்றவல்லவன் அல்லவோ?  உகவாதாரையுள்ளிட்ட ஸகலநாரங்களையும், இருப்பிடமாகக் கொண்டிருப்பவன்  உகந்த உன்னை விடுவனோ?  என்று பதில்சொல்கிறார்கள்.

(நாற்றத்துழாய் முடி நாராயணன்) ஆசைப்பட்டோரை அணைக்கைக்கு தோள்மாலையிட்டு இருப்பவனன்றோ? தன்னை அடைந்தாரை தலையாலே தாங்குமவனன்றோ?
பேசாதே கிடந்தால் மாற்றமும் தாராரோ என்கிறார்கள்.  "பதிலுரைத்தால் நாம் சொல்லுவதற்கெல்லாம் பதிலுரைத்துக் கொண்டிருக்கிறாளே என்று வருந்துகிறார்கள்" என்று  பதில் சொல்லாமல் உறங்குவாரைப் போலே  கிடந்தாள்.
(நம்மால் தந்தானோ) கும்பகர்ணன் இறந்தபின்பு தன் தூக்கத்தை உனக்கு கொடுத்துவிட்டானோ என்று ஏசுகிறார்கள்.

(நம்மால் போற்றப்பறை தரும் புண்ணியன்)  கைம்முதலான நமக்கும்  மேலான சுகத்தை அளிக்கும் பரமதார்மீகன்.
நம் ஆழ்வார்கள் நாராயண சப்தத்திற்கு முன்னும் பின்னும் அதன் பொருளை அநுஸந்திப்பதொரு நியதியுண்டு. ஆழ்வார்களை அடியொற்றி ஆண்டாளும் நாராயண ஸப்தத்திற்கு முன்னும் பின்னும் அருளிச்செய்கிறாள். "நாற்றத்துழாய் முடி நாராயணன் " என்று நித்யவிபூதி நிர்வாஹகத்வத்தை நாராயண சப்தத்திற்கு பொருளாக உணர்த்தி நாராயணன் நம்மால் போற்றப்பறை தரும் புண்ணியன் என்று லீலாவிபூதிக்கும் ஸ்வாமியாகவும், உபாயமாகவும், உபேயமாகவும் இருப்பவன் என்னும் நாராயண சப்தார்த்தத்தை அறிவிக்கிறான்.

( பெருந்துயில்) கும்பகர்ணனுடையது துயில். உன்னுடையது பெருத்துயில். அவனுக்கு ஆறுமாஸம் உறங்குவதும், பிறகு விழிப்பது என்னுமோர் வியவஸ்தையுண்டு. அதுவுமில்லையோ உனக்கு? இவன் அரைக்ஷணம் புறப்படாதொழிய, நெடுங்காலமாய்த் தோற்றுகிறது இவர்களுக்கு. அவற் ஒருத்தியைப் பிரிக்கத் துணை செய்தான். "நீ ஊர் முழுவதையும் பிரித்து உறங்கா நின்றாய்" என்கிறார்கள். அஸஹ்யாபசாரம் செய்த அசுரப்பையலை நமக்கு ஒப்பாகச் சொல்வதே என்று துணுக்குற்றுத் தான் உணர்ந்தமை தோற்ற "கிருஷ்ண கிருஷ்ண" என்று சொல்லி சோம்பல் முறித்தாள்.

(ஆற்ற அனந்தலுடையாய்) இதுவொரு உணர்த்தி இருந்தபடியென்! நாங்கள் பகவானைப் போய் துயிலெழப் பாடவும்  வேண்டியதில்லை. நீ விழிப்பதைக் காண்பதே போதும் எற்கிறார்கள். ஜன்னலாலே  இவள் உணரும் போது இருந்த அழகைக் கண்டு அருங்கலமே என்கிறார்கள்.
(அருங்கலமே) கிருஷ்ணனால் தலையிலே தரித்துக்கொள்ளும் படியான கிருஷ்ணவல்லபை ஆவாள்.
(தேற்றமாய் வந்து திற) "கிருஷ்ணனுடன் கூடிய ஸம்போஹ சின்னங்களைத் சீர்திருத்திக் கொண்டு வந்து திற" என்கிறார்கள்.





***




   பாசுரச்சிறப்பு:-

• திருப்பாவை 30 பாசுரங்கள் பெரும்பாலும் பரமனின் கிருஷ்ணாவதாரத்தின் பெருமை சொன்னாலும், நான்கு பாசுரங்கள் ஸ்ரீராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன. அவற்றில் இது முதலாவது ஆகும்.(மற்றவை,12ஆவது,13ஆவது,24 ஆவது பாசுரங்கள்.)

• பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).

• இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.

• இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.
மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்
அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?

• அருங்கலமே என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்
அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

• பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.



• இந்த பத்தாம் பாட்டில் அம்மனாய் என்று குலசேகரப் பெருமாளை துயிலெழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுச ஜீயர் அருளிச்செய்தார்.


   ||திருப்பாவை ஜீயர்||

"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்", "அருங்கலமே" என்ற இரண்டு விளிகளிலும், ஸ்வாமி ஸ்ரீராமாநுசரின் பிரத்யபிஜ்ஞை நன்கு விளங்கும். நோற்று என்றது மகா பாக்ய வசத்தாலே என்றபடி.


(ஸுவர்க்கம் புகுகின்ற)  வர்க்கம் என்று ஸமூகத்திற்குப் பெயர். வகுப்பு என்றபடி. ஸு என்றதனால் மிகச்சிறந்த வகுப்பு என்றதாகும். யாதவப்ரகாசரிடத்திலே வேதபாடம் கற்றுக்வொண்டு அவர் சாயையிலேயே ஒதுங்கியிருந்த ஸ்வாமி ஸ்ரீராமாநுஜர் அவரின் கருத்தின்படியே ஆபத்துக்களை யடைந்து போகாமல் நம் போலியர்களின் பாக்யவசத்தாலே, பெருந்தேவி மணாளனான பேரருளாளனது பரமக்ருபைக்கு இலக்காகி, ஸ்ரீவைஷ்ணவ வகுப்பில் புகுந்து அனைவர்க்கும் தாயாக இருந்தவர். சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கம் என்றே பொருளானாலும், "யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா" என்ற ஸ்ரீராமாயணத்தின்படி எம்பெருமானோடு கூடப்பெற்றவர் என்றதாகும். ஸித்தாச்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று  சொல்லிக் கொண்டு வந்த வேடனும், வேடுவச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப்பெற்றமை கூறினபடி.

(அருங்கலமே) என்றது அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே! என்றும் உத்தம ஸத்பாத்ரமே என்றும், பொருள்படும். நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையிலே மஹா பூஷணமாக விளங்குபவர் நம் ஸ்வாமி ஸ்ரீராமாநுஜர் ஆவார். தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதிச பதம்  பாதி நாந்யத்ர" என்னும் படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத் பாத்ரமாயும் விளங்குமவர்.




ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                 அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)