கோதையின் கீதை (பகுதி - 6)


ஸ்வாமி இராமாநுஜர் திருவரங்கத்தில் அன்றாடம் மாலை நேரத்தில் திருவாய்மொழி விரிவுரை நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் “ஒழிவில் காலமெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பதிகத்தின் ஆழ்பொருளை விவரித்து வரும்போது, “சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் வண்ணனே” என்ற பாசுரப் பகுதியில் மிக உள்ளம் ஈடுபட்டுப் பரவசராயிருந்தார்.

அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவேங்கடமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததை அறிந்த ராமானுஜர், தம்முடைய திரு முன்னர் அமர்ந்து பாசுர விரிவுரை கேட்ட சிஷ்யர்களை நோக்கித் திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி, திருநந்தவனம் உண்டாக்கித் திருவேங்கடமுடைய பெருமானுக்குப் பிரீதியாக மலர்மாலைகளைக் கட்டி அணிவித்து என்று திருவேங்கடமலை கைங்கர்யத்தினை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, அனந்தார்யா என்னும் சிஷ்யர், தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார்.
அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு புஷ்பவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார். அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, அனந்தாழ்வான் என்ற திருநாமமும் பெற்றார்.

[இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர். இதற்காக தன் மனையாளின் உதவியோடு இவர் ஏற்படுத்திய திருக்குளம் "இராமானுச தீர்த்தம்" என்றும், அவரின் நந்தவனம் "அனந்தாழ்வார் நந்தவனம்" என்றும் இன்றும் திருமலை மாடவீதியில் காணப்பெறுகிறது.]

இவரின் நந்தவனத்தில், ஸ்ரீஅலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது, ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் ஜோடிகள் தன் நந்தவனத்தில் புகுந்து, பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க, பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே பிணையாக சிறைப்படுத்தினார். பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சியவருக்கு, முன்னிரவில் தானே தன் மனையாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் 'மாமனார்" என அன்றிலிருந்து கூறப்பட்டார்.

ஒரு நாள் அனந்தாழ்வாருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார்.
அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
“ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.
“இல்லை. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.
ஆண்டாள் வாழ்ந்த காலம் என்ன?, அனந்தாழ்வார் வாழ்ந்த காலம் என்ன? பக்திக்கு பிரேமம்தான் முக்கியம். காலம் கடந்த பக்தி!
அனந்தாழ்வார் நம் அன்னை கோதை ஸ்ரீஆண்டாள் மீது "கோதா சதுஸ்லோகி"
இயற்றியுள்ளார்.



திருப்பாவை மூன்றாவது பாசுரத்தில், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று ஆண்டாள் பாடி இருக்கிறாள். பயிர்களுக்கும் உயிர்களுக்கும் எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல், மழை பெய்யவேண்டும் என்றும் வேண்டுகிறாள். அந்த மழை வளத்தைத் தந்தருளுமாறு கிருஷ்ணரை வேண்டுகிறாள். மார்கழி நீராட நீர்நிலைகளில் நீர் இருந்தால்தான் முடியும். அந்த நீர் வளத்தைத் தருவது மழைவளம்.  அந்த மழைவளத்தைத் தருபவன் வருணதேவன். அந்த வருணன் மழைவளம் தரவேண்டும் என்று  கிருஷ்ணரிடம் ஆண்டாள்  பிரார்த்திக்கிறாள்.
"கிருஷ்ணா, எங்களை வஞ்சித்துவிடாமல் மழைவளம் தந்தருள்வாய்"  என்று வேண்டும் ஆண்டாள், அந்த மழை எப்படி பொழியவேண்டும் என்பதையும் அழகாக விவரிக்கிறாள். காணும் இடம் எங்கும் அவளுக்குக் கண்ணனே என்பதால், அவள் விவரிப்பதும் கண்ணனும் கண்ணனைச் சார்ந்த பொருட்களாகவுமே இருக்கின்றன.
மழைக்கு அதிபதியாக நாம் வருணதேவனைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், அந்த வருணனும் கண்ணனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்தான்.  எனவே, ஆண்டாள் கண்ணனையே மழை வளம் தரக்கூடியவனாக அழைக்கிறாள்.


• திருப்பாவை பாசுரம் - 4

"ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்"

[மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னலடித்து, சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.]    


•• உபயவிபூதிக்கும் நாயகனான நாராணன் கிருஷ்ணனாய்ப் பிறந்து இவர்களுக்கு கையாளாய் கிடக்கிறபடியைக் கண்டான் வருணதேவன். "இவர்களுக்குக் கைங்கர்யம் செய்து  நாமும் நம் ஸ்வரூபத்தைப் பெறுவோம்" என்று நினைத்து "நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன?  என்று கேட்டான். அவன் செய்யவேண்டிய காரியத்தை இந்த பாட்டில் ஆண்டாள் கோஷ்டியினர் கூறுகிறார்கள். பகவத் ஸம்பந்தமுள்ளவர்களிடம் தேவதாந்தரங்களெல்லாம் கௌரவபுத்தியுடன் அன்றோ நடந்துகொள்கின்றன. 

"ஸர்வேsஸ்மை  தேவா பலிமாவஹந்தி" [இந்த ப்ரஹ்மஞானிக்கு எல்லா தேவர்களும் காணிக்கை செலுத்துகிறது.]  என்றும்
"யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வசே"  [ப்ரஹ்ம ஞானியான ஒருவன் இம்மாதிரி உன்னையறிந்தானாகில் அவனுக்கு எல்லா தேவர்களும் வசத்திலிருக்கிறார்கள்.] என்றும் வேதம் கோஷிக்கிறதல்லவா?
ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வானை ஒருவர் "மற்ற தெய்வங்களைக் கண்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்" என்று கேட்க "சாஸ்திர வ்ருத்தமாக கேளாதே காண்! உங்களைக் கண்டால் மற்ற தெய்வங்கள் எப்படி நடந்து கொள்ளும், என்றல்லவோ நீ கேட்கவேண்டுவது என்று  பதிலுரைத்தாராம். 

 (ஆழிமழைக்கண்ணா)  ஆழி என்பது ஸமுத்ரம் ஆகும். ஸமுத்ரம் போல் கம்பீர ஸ்வாபத்தை உடையவனும், மழைக்கு நிர்வாஹகனும் ஆனவனே என்று பொருள். "ஸமுத்ர இவகாம்பீர்யே" என்று காம்பீர்யத்துக்கு த்ருஷ்டாந்தமாகச் சொல்லப்பட்டதன்றோ ஸமுத்ரம். கம்பீரத்திலும், பெரிதாய் இருக்கும் தன்மையினாலும் கடலை ஒத்திருப்பதால் ஆழிமழை எனப்படுகிறான் வருணதேவன்.  'ஆழி' என்று வட்டமாய், சிற்சிலவிடங்கலன்றியே மண்டலாகாரமாகச் சுழன்று எல்லாவிடங்களிலும் மழை பொழிபவன் என்றும் பொருள் கொள்ளலாம். மழைக்கு கண்ணாயிருந்து நிர்வஹிக்குமவனாகையாலே "மழைக்கண்ணன்" என்று இவன் செய்யும் காரியத்தையிட்டுச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். கிருஷ்ணனுடன் பழகிய வாஸனையாலே யாரை அழைத்தாலும் 'கண்ணா' என்றல்லது அழைக்க அறியார்கள் போலும்! சிறு பெண்களாகையாலே இவன் பெயர் தெரியாது. ஆகையால் அவன் செய்யும் காரியத்தையிட்டு அழைக்கிறார்கள்.
 ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை ப்ரம்ஹ, ருத்ரர்கள் தலையிலே போட்டுத்தான் தன் ஸ்வரூபத்திற்குத் தகுந்த ரக்ஷணத்தைச் செய்கிறாப் போலே. ஆத்மாக்களைத் தண்டிப்பது முதலிய காரியங்களை யமாதிகள் வைத்து உலகுக்கெல்லாம் உதவும் காரியத்திலே  ஸர்வேச்வரன் உன்னை நியமித்திருக்கிறானன்றோ?  இவ்வூராரின் சிறுமையைப் பாராதே உன் பெருமைக்குத் தகுந்தபடி நீ மழை பொழிய வேண்டும் என்கிறார்கள்.

(ஒன்றும் நீ கைகரவேல்)
உன்னுடைய வன்மை சிறிதும் குறையாமல் நீ தோற்றவேண்டும். சேதனர்களுடைய நன்மை தீமைகளைக் கணக்கிட்டுப் பலன் கொடுக்கும் படியான ஈச்வர கோஷ்டியைப் போலல்லாமல் "ந கச்சிநந்நாபராத் யதி" [ குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே.] என்னும் எங்கள் ஸ்வபாவத்தைப் பார்த்து  மழை பொழிய வேணும்.
"புண்யபாபானுகுணமாகப் பலனளிக்கும் ஸர்வேச்வரனுடைய நியமனத்தாலேயோ நீ மழை பொழிகிறாய்? பாபத்தையே பச்சையாகக் கொண்டு ரக்ஷிக்கும் எங்கள் நியமனத்தாலே மழை பொழியும் போது  புண்யபாபங்களைப் பார்க்கலாமோ?" என்கிறாள்.
உங்களுக்கு மழை பொழிவதற்கு நான் எங்கிருந்து ஜலம் கொண்டு வருவது? என்று கேட்டான்.

(ஆழியுள் புக்கு)  "ஏரி, குளம் முதலியவற்றிலுள்ள ஜலம் போராது; ஸகர புத்திரர்கள் வெட்டின ஸாகர ஜலமும் போராது; பெரிய ஸமுத்திரத்திலிருந்து கொண்டு வரவேணும்; அதிலும் மேலாக கொண்டு வரலாகாது; உள்ளே புக்கு அங்குள்ள நீர் முழுவதையும் கொண்டுவர வேணும்" என்கிறார்கள். (ஆர்த்து) இராமடம் ஊட்டுவாரைப் போலே மறைந்து நின்று ரக்ஷிக்கும் ஈச்வரனைப் போலல்லாமல் உன்னுடைய த்வனியாலே எங்களை வாழ்வித்துக் கொண்டு வர வேணும்.
சீதாப்பிராட்டியைத் தேடிச் சென்ற ஹனுமான் திரும்பி வராததைக் கண்டு ஜாம்பவான் முதலியவர்கள் பட்டினி கிடந்து உயிரை விட நிச்சயித்தார்கள். அவர்கள் ஹனுமான் ஆரவாரத்துடன் வருவதைக் கேட்டு தரித்தார்கள். அம்மாதிரியே எங்களை உயிர் தரிக்கச் செய்வதற்காக முழங்கிக் கொண்டு வரவேணும் என்கிறார்கள்.

(ஏறி) "விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல" என்றும் "மதயானை போலெழுந்த மாமுகில்காள்" என்றும் சொல்கிறபடியே ஆகாசம் முழுவதும் நிறையும்படி வரவேணும்.

(ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து) ஊழி என்று காலம். இங்கு காலத்தைச் சொன்னது உபலக்ஷணம். ஸகலபதார்த்தங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரனுடைய உருவம்  போல் வடிவு கருத்து வரவேணும். "ஸ்ருஷ்டித்த பின்பன்றோ அவன் புண்யபாபங்களைக் கணக்கிடுவது. சேதனர்களுடைய துர்த்தசையைக் கண்டு ஐயோ என்றிரங்கி அவைகளை சிருஷ்டிக்கும் போது அநுக்ரஹமேயன்றோ உள்ளது. நீயும் அம்மாதிரியே புண்ய பாபங்களைப் பார்க்காமல் பொழிய வேணும் என்று கருத்து.

"முந்நீர் ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே!" என்று நம்மாழ்வார் ஜகத்காரணபூதன் முகில்வண்ணனாயிருப்பான் என்றாரன்றோ.
"நீலதோய மத்யஸ்தா வித்யுல்லேகேவ" என்று வேதமும் மின்னலுடன் கூடிய மேகத்தைப் போன்றது எம்பிரானின் திருவுருவம் என்றதன்றோ.

(மெய்கருத்து) உருவத்தில் அவனைப் போலாகலாம். குணத்தில் அவனைப் போலாகமுடியுமோ? இதுவும் தன்னுள் குளிர்ந்த நீரைக் கொண்டிருந்தாலும், அவனுடைய நீர்மைக்கு ஒப்பிட்டால் இது நெருப்பாகும். "நாய்ச்சியார் விழிவிழிக்கவொண்ணாதாப் போலே அவனுடைய அகவாயில் நீர்மையை உங்களால் உண்டாக்க போகாதிறே" என்று நம் ஆச்சார்யர்கள் இவ்விடத்தில் அருளியிருக்கிறார்கள். அதாவது திரு அத்யயனோத்ஸவத்தில்  ஸ்ரீரங்கநாதன் "நாய்ச்சியார் திருக்கோலம்" பூண்டு ஸேவை ஸாதித்தருள, ஸ்ரீபராசரபட்டர் "நாய்ச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்ட போதிலும், பிராட்டியைப் போலே விழிவிழிக்க உன்னாலாகாதே" என்று அருளினார் என்னும் ஐதிஹ்யத்தை  இவ்விடத்தில் அநுஸந்திக்க வேணும் என்று கருத்து.

(ஊழிமுதல்வன்) எம்பெருமானைக் காண பாக்யம் பெறாவிடினும் அவனைப் போன்ற உருவையுடைய மேகத்தையாவது காணவேண்டுமேன்று ஆசைப்படுகிறார்கள். "காட்டேல்மின் நும் உரு" என்றும் " காணும் தோறும் தொலைவன் நான்" என்று மேகங்களைக் கண்டு பயப்படும் தசை போய் அவற்றைக் காணவேண்டுமென்று ஆசைப்படும் தசையாயிருக்கிறது இப்போது.



(பாழி அம்தோள்) பெருத்தும் அழகு பொருந்தியும் இருக்கும் தோள். "சுந்தரத்தோளுடையான்" என்று இத்தோள் அழகிலேயன்றோ இவள் ஈடுபட்டது. பாழியம் தோளானது ரக்ஷகமாகவும், போக்யமாகவும் இருக்கிறது.

(பற்பநாபன்) "கொப்பூழில் எழுகமலப் பூ அழகர்" என்று இவள் ஈடுபட்ட துறை.

(பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி) எம்பெருமானுடைய திருநாபீக்கமலத்திலே பிரமன் பிறந்ததைக் கண்ட ஸந்தோஷத்தாலே ஜ்வலிக்கும் திருவாழியாழ்வானைப் போலே மின்னி.  "உனக்குப்பிள்ளை பிறந்தான்" என்றால் பிதாவானவன் ஸந்தோஷத்தை வெளிக்காட்டாமல் இருப்பான். அவனைச் சேர்ந்தவர்களிடமே குதுகலத்தைக் காணலாம். அதுமாதிரியே பற்பநாபனுக்கு பிரமன் பிறந்தவுடன் திருவாழியாழ்வான் புகர் பெற்றபடி.

(பற்பநாபன்) "பிள்ளைகளைத் தொட்டிலிலே வளர்த்திப் புற்பாயிட்டுப் பூரித்து, ஆயுதங்கொண்டு நோக்கியிருப்பாரைப்போலே திருநாபீக்கமலத்திலே பிரம்மாவைப் பெற்று  வைத்து திருத்தோள்களாலே காத்துக் கொண்டிருக்கிறவன்" என்றார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

(பற்பநாபன் கையில் ஆழி) "அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்" என்கிறபடி வெறும்புத்திலே ஆலத்தி வலிக்க வேண்டும்படியான அழகிய கையில் ஆழியும் சேர்ந்தால் சொல்லவேண்டுமோ?
ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னாரென்றறியேன்" என்றல்லவோ திருமங்கையாழ்வார் ஈடுபட்டார்.

(வலம்புரி போல்) "சுடராழியும் பல்லாண்டு என்றவுடன் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு" என்றவர் மகளன்றோ.  பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில் நாணொலியும், தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?" என்று ஆசைப்பட்டவளாயிற்றே.

(வலம்புரிபோல் நின்றதிர்ந்து)  பாரதயுத்தத்தில் ஸ்ரீபாஞ்ச ஜந்யத்வனி போலே முழங்க வேணும்.
எதிரிகள் நடுங்கும்படியும், அநுகூலர் ஆனந்திக்கும் படியும் முழங்கும் சங்கம் போலே சப்திக்கவேணும்.  பாரதயுத்தத்தில் பாஞ்ச ஜன்யம் போலே ஒருதடவை முழங்கினால் போதாது. விடாமல் முழங்கவேணும்.

(ஆழிபோல்.....வலம்புரி போல்) இவளுடைய ஸ்த்ரீத்வத்திற்கு ஸ்தனங்கள் போலே, அவனுடைய புருஷோத்தமத்வத்திற்கு  சங்கசக்ரங்கள்.


(தாழாதே) நோன்பினால் வாடியிருக்கும் எங்கள் வடிவைக் கண்ட பின்பும் காலதாமதம் செய்யலாமோ? என்கிறாள்.
"தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே" என்கிறபடியே கஜேந்திராழ்வானை ரக்ஷிக்க அரைகுலையத் தலை குலைய அவன் ஓடி வந்தாற் போலே வரவேணும். அவன் வர்ணத்தைப் பெற்றிருக்கும் நீங்கள், அவனுடைய வண்ணத்தையும் (ஸ்வபாவத்தையும்)அடையவேணும்.  ( சார்ங்கமுதைத்த சரமழை) இரை பெறாத பாம்பு போலே, முன்பு விஷயமில்லாமல் அடங்கியிருந்த ஸ்ரீசார்ங்கம். அகம்படியர் கிளர்ந்தால் அரசனானாலும் அடக்கமுடியாதது போலே , எம்பெருமான் கடாக்ஷித்த பின்பு  அவனாலும் விலக்கமுடியாத படி, சரமழை பொழிந்து கொண்டிருக்கை. "சார்ங்கமென்னும் வில்லாண்டான்"  ஆகிய ஸர்வேச்வரனல்லாது அடக்கவொண்ணாதிருக்கை.
சரமழை போல் அழிக்கக் கூடாது. அநுகூலரும், ப்ரதி கூலரும் வாழும்படியாக பெய்யவேணும்.



"மழை பெய்வதென்பது எனக்கு இயற்கையான செயலன்றோ; அது உங்களுக்கு கைங்கர்யம் செய்வதாக கூறுவதேன்? " என்றான் வருணன்.

(நாங்களும்  மார்கழி நீராட) "நாங்கள் மார்கழி நீராட எங்களுக்கு கைங்கர்யம் செய்து உன் ஸ்வரூபம் பெறலாம்"  என்றார்கள். நாங்கள் உன் வடிவைக் கண்டு உன் த்வனியைக் கேட்டு மகிழ்ந்து நீராடி க்ருஷ்ண வ்ரஹதத்தாலே ஏற்ப்பட்ட தாபத்தைப் போக்கிக் கொள்ளுகிறோம்.


 (மகிழ்ந்து) பகவானும் பிராட்டியுமான சேர்த்தியிலே கைங்கர்யம் செய்து அவர்களை மகிழ்விக்கையன்றோ சேதனனுக்கு ஸ்வரூபம்.

"ருசம் ப்ராம்ஹம் ஜநயந்த: தேவா அக்ரே ததப்ருவந்"  [பரப்ரம்மத்தின்  ப்ரீதியை உண்டு பண்ணுவதற்காக நித்யஸூரிகள் முதலில் நம: என்னும் அச்சொல்லைச் சொன்னார்கள்.] என்று நித்யஸுரிகளும் அவனுடைய உகப்புக்காகவன்றோ கைங்கர்யம் செய்வது .
"அஹமந்நம் அந்நமதந்தமத்மி" [நான் பகவானுக்குப் போக்யமாயிருப்பவன்; என்னை புஜிக்கும் எம்பெருமானை நான் அனுபவிக்கிறேன்.] என்றல்லவோ வேதம் உத்கோஷித்தது.
"கதாSஹமைகாந்திக நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித:"
[எம்பெருமானுக்கே எப்போதும் அடிமை செய்து ஜன்ம ஸாபல்யம் அடைந்தவனாய் அவனை நான் எப்போதும் உகப்பிக்கப் போகிறேன்.] என்றல்லவோ ஆளவந்தாரும் ஆசைப்பட்டார். 

**பாசுரச் சிறப்பு**

• "ஆழி மழைக்கண்ணா!" என்று பர்ஜன்ய தேவனான வருணபகவானை அழைக்கிறாள். இந்த இடத்தில் அவனை அழைத்துப் பாடியதற்கு, ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்கள், பர்ஜன்யனான வருண தேவனைப் பாடுவது போல், அவனுக்குள்ளே உள்ள 'அந்தர்யாமி'யான கண்ணனைத்தான் கோதை ஆண்டாள் குறிப்பிடுகிறாள் என்பர். இதன் மூலம் இப்பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளில் ஒன்றான "அந்தர்யாமித்வம்" சொல்லப்பட்டுள்ளது என அறியலாம்.


• ஸ்ரீகோதை ஆண்டாள் இந்தத் திருப்பாவை நான்காம் பாசுரத்தில் 11 முறை 'ழ'கரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று 'ழ'கரம் பதினோரு முறை வருவதைக் காணலாம்.
ஆண்டாளின் தந்தையார் பெரியாழ்வார் தனது ஒரே பாசுரத்தில் 10 முறை தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்த எழுத்தான , 'ழ'கரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
[பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில்
"ழ"கரம் பத்து முறை வருகிறது.]
• "ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,
"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் உள்ளதால் உவமையணிக்கான தமிழ் இலக்கணம் இப்பாசுரத்தில்
வெளிப்படுவதைக் காணலாம்.
• "ஆர்த்தேறி" என்பதற்கு பூர்வாசார்யர்கள் ‘இராமடம் ஊட்டுவார்போலே!’ என்கிறார்கள். அதாவது அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டில் கோபித்துக்கொண்டு ஊர்க்கோடியில் சத்திரங்களில் போய் படுத்துக் கொள்ளுமாம். இரவில் வீட்டிலிருப்போர் பிள்ளைகள் பசி பொறுக்காதே என்று இரங்கி அன்னத்தை கையில் எடுத்துக்கொண்டு முக்காடிட்டு சத்திரங்களுக்கு சென்று குரலை மாற்றிக்கொண்டு ‘அன்னம் கொணர்ந்துள்ளோம்’ என்று ஆர்த்து கூவி அழைத்து அந்த பிள்ளைக்கு அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஊட்டுவர்களாம்.  அதே போல் பர்ஜன்ய தேவனும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் எல்லோருக்கும் உணவளிக்கிறான்! என்பர்.
• "நீரின்றி அமையாது உலகு" என்று திருவள்ளுவர் சொல்லிய படி மழை இல்லையேல் உலகம் இல்லவே இல்லை. இந்த பூமிதோன்றிய ஐந்து பில்லியன் வருடத்தில் முதல் ஒரு பில்லியன் வருடத்தில் பாதி நாள் மழைதான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிர்வித்து தோன்றியிருக்கிறது. இம்மழை இல்லையேல் உலகில் உயிரே தோன்றியிருக்காது.


• வருணன் என்பவன் தமிழர் வகுத்த திணைக் கடவுள்களில் நெய்தல் நிலத் தெய்வமாவான். வருணன் மேயும் நிலமாக "பெருமணல் உலகத்தை" தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
[தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)
"வருணன் மேய பெருமணல் உலகமும்"
 என்கிறது.]
• சங்க இலக்கியங்களில் அதிகளவில் வருணன் பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் சிலப்பதிகாரம் வருணதேவனைக் "கடல் தெய்வம்" எனக் கூறுகிறது.
• பழையர் பரதவர் எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் இந்தக் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர்.
• இலங்கை செல்வதற்கு கடல் வழிவிட வேண்டும் என்று கடற்கரையில் நின்று கொண்டு ராமன் வேண்டுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கடல் தெய்வமான வருணன் வரவில்லை. ராமனுக்கு கோபம் வந்து விடுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஏவுவதற்கு ராமன் தயாராகிறான். உடனே வருணன் பயந்து கொண்டு ஓடி வந்து அவன் முன் தோன்றுகிறான் என்கிற செய்தியினை
கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ‘வருணனை வழிவேண்டு படல’த்தில் அறியலாம்.
• வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த "ஆதித்தர்கள்" எனப்படும் பன்னிருவரில் ஒருவன்.
• வருணன் ஆகாயத்தைக் குறிப்பவனாகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர் சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
• ஆரம்பகாலத்தில் இப் பிரபஞ்சம் முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் வேதகாலத்தின் பிற்பகுதிகளில் இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.
• அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணதேவனை ஆயிரம் கண்கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.
• ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். 
• வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.
• பகவத் கீதை [அத் 10 ஸ்லோ 29] யில் நானே வருணன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥
அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||
(நாகங்களில் நான் அனந்தன்; நீரைக் கட்டுப்படுத்தும் தேவனாக நான் வருணன்; முன்னோர்களில் நான் அர்யமா; நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான யமன்.)
• பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.


               ||திருப்பாவை ஜீயர்||

இப்பாட்டில் பகவானுடைய சக்கரமாகிய சதர்சனமாகிய ஆழியும், பாஞ்சஜன்யமாகிய வலம்புரிச்சங்கமும், சார்ங்கமாகிய வில்லும் குறிக்கப்படுகிறது.

"அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் " என்கிற [இராமா. நூற்ற. 33] பாசுரப்படியும், "வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:" என்ற [யதிராச ஸப்ததி - 12]  ஸ்லோகம் கூறியபடியும் பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமாக இராமாநுஜர் நினைப்பூட்டப்படுகிறார்.

(ஒன்றும் நீ கை கரவேல்)
அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த யதிராச மேகம்."இராமாநுசனென்னுஞ் சீர்முகிலே" - [இராமா.நூற்ற.82] என்கிறபடி "உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்" என்கிற ஸ்ரீபாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப்பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.


**(இராமாநுச நூற்றந்தாதி - 33)

 அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன்
 கை ஆழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டும்   ஒண் சார்ங்கவில்லும்
புடை ஆர் புரிசங்கமும் இந்தப் பூதலப் காப்பதற்கு என்று
இடையே   இராமானுச முனி ஆயின இந்நிலத்தே
[பாடல் கருத்து: திருமாலின் திவ்ய ஆயுதங்கள் அனைத்தும், இந்த “இருள் தருமாஞாலத்தை” காப்பாற்றுவதற்காக, இந்த உலகிற்கு வந்த எம்பெருமானாருக்குத் துணையாக நிற்கின்றன. அல்லது, இவையே எம்பெருமானாராக அவதரித்துள்ளன என்றும் கூறலாம்.]

** யதிராச ஸப்ததி -12

பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம் பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே
[திவ்ய பஞ்சாயுதங்களே இராமானுஜராக திருவவதரித்து வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை எதிர்த்து நம்மை ரஷிக்கிறார்.]


** ஸ்ரீ பாஷ்யம்

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம் |
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம் ||
உபநிஷத்துளாகிற பாற்கடலைக் கடைந்து திரட்டிய அமுதம் ஸாரீரக ஸுத்ரம் என்று ஸ்ரீபாஷ்யம் ஆரம்பத்திலேயே இராமாநுசர் அருளிச் செய்தார்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

    அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

 


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)