கோதையின் கீதை (பகுதி - 7)



       ஸ்ரீவைஷ்ணவத்தில் இரு பிரிவுகளில் ஒன்றான தென்கலைப் பிரிவின் புகழ் பெற்ற ஆச்சார்யராக விளங்குபவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆவார். ஸ்ரீமந் நாராயணனின் படுக்கையாக விளங்கும் ஆதிசேஷன் திரேதாயுகத்தில் லட்சுமணனாகவும், துவாபரயுகத்தில் பலராமனாகவும், பின்னர் கலியுகத்தில்  ராமானுஜராகவும் பின்னர் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார் என்பது வைஷ்ணவர்களின்  நம்பிக்கை ஆகும். மணவாள மாமுனிகள் நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் கிபி.1370-ம் வருடம் (ஐப்பசி - மூலம்) அவதரித்தார் எனக் கூறப்படுகிறது. வைஷ்ணவத்தில் உள்ள ரஹஸ்யார்த்தங்கள், வேத வேதாந்தங்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் ஆகியவற்றின் பொருளை தம் திருத்தகப்பனாரிடம் கற்று, பிறகு தம் ஆச்சார்யரான ஸ்ரீசைலேசரின் [திருவாய்மொழிப் பிள்ளை] ஆணைப்படி திருவரங்கம் சென்று ஸ்ரீஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபாடு கொண்டு அங்கேயே தம் வாழ்நாளைக் கழித்தார்.

 ஓராண்டு காலம் தொடர்ந்து திருவரங்கத்தில் "அழகிய மணவாளன்" (நம்பெருமாள்) திருமுன்பே திருவாய்மொழி பேருரை நிகழ்த்தினார். அரங்கனின் மனமகிழ்ச்சியினால் ஆச்சார்ய பிரபத்தியாக  "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" எனும் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டு இன்றளவும் எல்லா தென்கலை திவ்ய தேசங்களில் திவ்ய பிரபந்த சேவை தொடக்க ஸ்லோகமாக "அழகியமணவாளன்" நியமனப்படி நடக்கும்படியான பெருமைக்குரியவர்.

  ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதரிக்காவிடில் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஆற்றில் கரைத்த புளியாக மறைந்திருக்கும் என்று ஓர் கருத்துண்டு. இவர் அருளிய பிரபந்தங்கள் உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆர்த்திப்ரபந்தம், ஞானசாரம், பிரமேய சாரம், ஸப்த காதை முதலியனவாகும்.

ஒரு சமயம் ஆண்டாளின் மார்கழி நீராட்ட உற்சவத்தைச் சேவிக்க வேண்டி மாமுனிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளியிருந்தார். அவர் வருவதற்குள் ஆண்டாளின் நீராட்ட உற்சவம் பூர்த்தி அடைந்து விட்டது. "ஆண்டாளின் சௌரித் திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியம் நமக்கு இல்லையே" என்று மிகவும் மனம் வருத்தமுற்றார் மணவாளமாமுனிகள். ஆண்டாளும் அவருடைய மனவருத்தத்தைப் போக்க எண்ணியவளாய்,  அவருக்காகத் தனியாக தை மாதப் பிறப்பன்று  எண்ணெய் காப்பு,  நீராட்ட உற்சவம் நடத்தும்படி கோயில் கைங்கர்யபராளுக்கு உத்தரவிட்டாள். அவர்களும் மாமுனிகளுக்காகவே எட்டாம் நாளாக நீராட்ட உற்சவத்தை நடத்தினார்கள். மாமுனிகளும் ஆண்டாளின் கருணையை எண்ணி, மிகவும் மகிழ்ந்தவராய், ஆண்டாள் நீராட்ட உற்சவத்தைக் கண்குளிரச் சேவித்தார்.

ஸ்வாமி மணவாளமாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில் ஆண்டாளைப் பற்றி மூன்று பாடல்களில் புகழ்பாடியுள்ளார்.



• திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

[மாயங்கள் பல செய்பவன். மதுராபுரியில் பிறந்தவன். யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்த வன். ஆயர் குலவிளக் காகத் தோன்றியவன். தன்னைப் பெற்றத் தாயாரின் வயிற்றைப் பெருமைபடச் செய்தவன். அவனே நம் தலைவன் கண்ணன். நாம் தூய்மையாக நீராடியும், மலர் கொண்டு அவன் புகழ் பாடவும், வணங்கவும் புறப்படுவோம். அவனை மனதில் நிறுத்தி வாயாராப் புகழ்ந்து பாடினால் முன்பு செய்த பாவங்களும், இன்னாளில் நம்மை அறியாமல் செய்கின்ற பாவங்கள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சு போல் காணாமல் போய்விடும். அத்தகைய பெருமை வாய்ந்த நம் இறைவனை வணங்கி மேன்மையடைய வாருங்கள் நீராடப் போகலாம்.] 

  பெண்பிள்ளைகளிலே ஒருத்தி "நாம் இப்படி மநோரதித்துக் கொண்டு நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். இக்காரியம் இடையூறில்லாமல் நிறைவேற வேணுமே.
"ச்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி" [ நற்காரியங்கள் பெரியோர்களுக்கும் கூட பல இடையூறுகளை உடையனவாக ஆகின்றன.] என்றல்லவோ சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமபிரானுக்கு முடிசூட்டவேண்டுமென்று தசரத சக்கரவர்த்தி மநோரதித்தான். ராஜரிஷியான விச்வாமித்ரனை பிரம்மரிஷியாக்கின வசிஷ்டர் முகூர்த்தம் வைத்தார். முடிசூடப்போகிற தர்மஸ்வரூபியான ராமனுக்கு அயோத்திவாஸிகளெல்லாம் மங்களாசாசனம் செய்தார்கள். அப்படியிருந்தும் இதற்கும் விக்னம் வந்துவிட்டதன்றோ? நாமோ அநாதிகாலமாக பாவமே செய்து வந்தவர்கள்.  நமக்கும் இடையூறு வந்துவிட்டால் என் செய்வது? என்று கேட்க, அவர்களிலே  வேதாந்த ஜ்ஞானம் உடைய ஒருத்தி "நாம் பாபங்ளைப் போக்கிக் கொண்டு ஆரம்பிக்கவேணுமென்று நிர்பந்தமில்லை. பாலைப் பருகுமவனுக்குப் பித்தமும் தன்னடையே விட்டுப்போமாப்போலே, பரமபோக்யமான பகவதனுபவத்தைப் பண்ணினால் பாபங்கள் பறந்தோடிப் போகும். ஆகையால் அயோக்யதையைக் கண்டு விலக வேண்டியதில்லை என்று சமாதானம் சொல்லுகிறாள் இப்பாட்டில். ஸர்வேச்வரன் தன் சங்கல்பம் பொய்யானாலும், தன்னடியாரின் வார்த்தை பொய்யாகாமல் ரக்ஷிப்பவன். ஸுக்ரீவனுக்கும், விபீஷணனுக்கும் முடிசூட்டுவதற்காக முடிதவிர்ந்தான் ஸ்ரீராமபிரான்.  அர்ஜுனன் "ஜயத்ரதனை (சூர்ய) அஸ்தமிக்கும் முன்பே கொல்வேன்" என்று சபதம் செய்ததை நிறைவேற்றுவதற்காக, "ஆயுதமெடேன்" என்ற கண்ணன் ஆயுதமெடுத்தும், பொய் சொல்லியும், பகலை இரவாக்கியும் அர்ஜுனனுடைய சங்கல்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தான். பீஷ்மருடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக ஆயுதமெடுத்துத் தன் வாக்கைப் பொய் ஆக்கிக் கொண்டதும் பிரஸித்தம்.

 முதற்பாட்டில் "நாராயணனே" என்று ஸ்ரீவைகுண்டத்திலிருப்பைச் சொன்னார்கள். இரண்டாம் பாட்டில் "பாற்கடலில் பையத்துயின்ற பரமன்" என்று அவதாரம் செய்வதற்காகத் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபடியைப் பேசினார்கள். மூன்றாம் பாட்டில் த்ரிவிக்கிரமனாக அவதரித்து உலகையெல்லாம் திருவடிகளாலே தடவிக் கொடுத்ததை அனுபவித்தார்கள். நான்காம் பாட்டில் "சார்ங்கம் உதைத்த சரமழை" என்று ஸ்ரீராமனாய் அவதரித்து , எதிரிகள் அம்பு மார்பிலே தைக்கும்படி நின்று சண்டை செய்ததை உணர்த்தினார்கள். இந்த ஐந்தாம் பாட்டில், ஸ்ரீகிருஷ்ணனாய்  திருவவதரித்து  இடைச்சிகளுக்கு கட்டவும்,அடிக்கவுமாம்படி  தன்னைக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பாடுகிறார்கள்.  (மாயனை) பரமபதநாதனை அனுபவிக்கிறார்கள். அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய், ஸ்ரீயஃப்பதியாய் வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் இருப்பு. வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத படியன்றோ இருப்பது.  கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை அளவிடவொண்ணாதிருக்கிறபடியாலே, பரமபதத்திலே அனுபவிப்போமென்று பார்த்து, அதுவும் அளவிடவொண்ணாமையாலே மாயனை என்கிறார்கள். "ஓரூருக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நீர்மை இங்கு; ஒரு நாட்டுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நீர்மையாகையாலே அது இதைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். ஒருத்தி தாம்பாலே பந்தித்தபடியைச் சொல்ல நினையா 'ஸதாபச்யந்தி' என்று  ஒரு நாடாக த்ருஷ்டிகளாலே பந்திக்கும் படியைச் சொல்லுகிறது" என்கிறது ஆறாயிரப்படி. 
நித்ய ஸூரிகளுக்கு அதிபதியாயிருப்பவன் இடையர்களுக்கும், பசுக்களுக்கும் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கும் படியைக் கண்டு, இதுவொரு ஆச்சர்யமிருந்தபடியென்? என்பதாகவும் கொள்ளலாம். "இமையோர் தனக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெயூனென்னும் ஈனச்சொல்லே" என்று நம்மாழ்வார் அருளினாரன்றோ.

(மன்னு வடமதுரை ) எப்போதும் பகவத் ஸம்பந்தத்தால் பொலிகின்ற தேசம். முதலில் இவ்விடத்தில் வாமனாவதாரம் செய்த பெருமான் நெடுங்காலம்  தவம் செய்தான். சத்ருக்னன் லவணாசுரனைக் கொன்று இம்மதுராபுரியை ஆண்டு வந்தான். இவ்வளவுக்கும் மேலாக கிருஷ்ணனும் இங்கு அவதரித்தான். ஆகையால் மன்னு வடமதுரை எனப்படுகிறது.

(மன்னு வடமதுரை மைந்தனை) வடமதுரையில் பிறந்தபின்பே ஸ்ரீவைகுண்டநாதன் ஒளிபெற்று விளங்கினான் என்று தாத்பர்யம். "ஸ உ ச்ரேயாந் பவதி ஜாயமாந:" [அவன் பிறந்த பின்பே மேன்மையடைகிறான்.] என்று வேதம் உத்கோஷித்தது. "நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம்" என்றார் வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வார்.
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து  அடியார்களை ரக்ஷிப்பதற்காக இங்கே வந்த பின்பே தன் ஸத்தையைப் பெற்றான்.

(மைந்தனை) பலத்தையுடையவனை, தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ ... என்கிறபடி பிறக்கும்போதே தாய்தந்தையர்கள் காலிலுள்ள விலங்கை முறித்துக் கொண்டு வந்தபடி.
வடமதுரையிலுள்ளோர்க்கெல்லாம் பிள்ளையாய் இருந்தபடி.
 அரசன் என்றும் பொருள் கொள்ளலாம். தன் அழகினாலே எல்லோரையும் வசப்படுத்தியவன் என்று பாவம். "வடமதுரையார் மன்னன்" என்றவளன்றோ நம் அன்னை கோதை ஆண்டாள்.

 (தூயப்பெருநீர் யமுனைத்துறைவனை)  அவதரித்த விடத்திலே ஸ்ரீவைகுண்டத்து வ்ரஜையைப் போலே ஓர் ஆறு உண்டாகியிருந்தது. க்ருஷ்ணனை ஸ்ரீவஸுதேவர் கொண்டு போகும் போது பாங்காக வற்றிக் கொடுத்ததாகையால் "தூயபெருநீர் யமுனை" எனப்படுகிறது.  கணவனான ஸமுத்ரராஜன் ஸ்ரீராமபிரானுக்கு வழிவிட மறுத்தான். மனைவியான இந்த யமுனை  க்ருஷ்ணனுக்கு வழிவிட்டாள். இதை நினைத்தே  "தூயபெருநீர் யமுனை" என்கிறார்கள். க்ருஷ்ணனும், பெண்களும் நீராடுகைலும் மாறி மாறிக் கொப்பளிக்கையாலும் வந்த தூய்மையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். "தூய" என்று நீர்த்தெளிவைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். பிராட்டி சரணம் புகுந்த போது ராவணனுக்கு அஞ்சியிருந்த கோதாவரியைப் போலில்லாமல், கம்ஸனுக்கு அருகிலிருந்தும், எம்பெருமான் எழுந்தருளுவதற்குப் பாங்காக வற்றிக்கொடுத்ததன்றோ. 

(பெருநீர்) "யமுனாம் ச அதிகம்பீராம்" என்று விஷ்ணுபுராணத்தில் சொல்லியபடியேயிருக்கை. மநோரம்யமாகவும், பரிசுத்தப்படுத்துவதாகவும் இருக்கும் மேன்மையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். 




(யமுனைத்துறைவனை) கவிபாடுவார்க்கு ஊரும், பேரும், ஆறும் வேண்டுமன்றோ. அம்மூன்றும் இவன் விஷயத்தில் ஸம்ருத்தமாயிருக்கிறபடி. "முத்துப் படும் துறை" என்னுமாப்போலே பெண்கள் படும் துறையை உடையவனை.

"கம்ஸ பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாப்போலே சொன்னபடி பாரீர்" என்று ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்வாராம். அதாவது கம்ஸன் கண்ணனுக்கு ஏதாவது தீங்கு செய்துவிடுவானோ என்ற பயத்தால் "க்ருஷ்ணன்" என்று பெயரையிட்டுச் சொல்லாதே 'யமுனைத்துறைவன்' என்கிறார்கள்.


(ஆயர்குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை)  ஆயர் குலத்தில் பிறந்தவுடன் இருட்டிலே விளக்குப்போலே விளங்கி நின்றான் என்கிறார்கள்.
பிறக்கும் என்னாது தோன்றும் என்கையாலே இவனுக்கு கர்மத்தினாலேற்படும் பிறப்பில்லை. பிறப்பு இவன் இச்சையினால் ஏற்படும்.

மஹரிஷியும், "ததோSகில ஜகத் பத்ம போதாயாSச்யுத பாநுநா |
தேவகீ பூர்வ ஸந்த்யாயாமாவிர்பூதம் மஹாத்மநா||" [ பிறகு, உலகங்களாகிற தாமரைகளை மலரச் செய்வதற்காக அச்யுதனாகிற பெரிய ஸூர்யன் தேவகியாகிய விடியற்காலைவேளையில் ஆவிர்பவித்தான்.] என்று அருளினாரன்றோ.
 கம்பநாட்டாழ்வாரும் " நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்" என்றார்.
(ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை) திருவாய்ப்பாடிக்கே மங்களதீபம் போல் விளங்குபவன்.


 வடமதுரையில் பிறந்திருந்திலும் திருவாய்ப்பாடி வரை அச்யுதபானுவினுடைய ஒளி சென்றது என்று  பாவம்.  வடமதுரையில் பிறந்த கண்ணனை ஆயர்குலத்தில் தோன்றியவனாகக் கூறுவதற்குக் காரணம் "பிறவாத பரமபதத்தோபாதி ஸ்ரீமதுரையில் பிறப்பும்; முலைப்பால் குடித்து அமுதவிடமிறே பிறந்தவிடமாவது" என்கிறது ஆறாயிரப்படி.
ஸ்ரீவைகுண்டத்திலும், திருவடமதுரையிலும் பிரகாசியாமலிருந்தவன்  ஆயர்பாடிக்கு வந்தவுடன் பிரகாசித்தபடி.  "ஆயர்பாடிக்கு அணிவிளக்கே"[பெரியாழ்வார் திருமொழி-2-5] என்றல்லவோ பெரியாழ்வாரும் அருளுகிறார். தோன்றும் மணிவிளக்கை  என்றும் பாடங்கொள்ளலாம். மணி விளக்கு  என்றபோது, "இங்கே புகுந்த பிறகு பரமபதத்தில் அழுக்கு அற்றபடி" என்று ஆறாயிரப்படி. 

         "ஸ்வாதந்த்ர்யமாகிற அழுக்கு இங்கே கழிந்திருக்கிறது" என்று தாத்பர்யம். புகையும் எண்ணெயும் திரியுமில்லாத ஒரு விளக்கு உண்டாவதே!   (தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை) தனது வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டியை விளங்கச் செய்தவனை "கௌசல்யா ஸுஸுபே தேந புத்ரேணாமித தேஜஸா" [அளவற்ற ஒளியையுடைய அந்த புத்திரனாலே கௌசல்யை சோபித்தாள்.] என்றும், "என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவரைப் பெற்ற வயிறுடையாள்" என்றும் சொல்கிறபடியே உலகத்தார் கொண்டாடுகையாலே பெற்ற வயிற்றிற்கு பட்டம் கட்டினவனை.


(தாமோதரனை) கண்ணிநுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணியவனை. அவன் நம்மைக் கட்டும் கட்டு நம்மால் அவிழ்க்க முடியாதது போலே, அவனடியார் அவனைக் கட்டின கட்டை அவனாலும் அவிழ்க்க முடியாது. அவன் கட்டுண்டதை நினைத்தால் நம்முடைய கட்டு கழன்று விடும். "சேஷியினுடைய திருவிலச்சனை" என்று பட்டர் அருளிச்செய்தாராம். "நாம் அவனுடைய அடியார் என்பதைக் காட்ட சங்க சக்கரங்களைத் தரிப்பது போல,அவனும் நமக்கு பரதந்திரன்  என்பதைக் காட்டுவதற்காக யசோதைப்பிராட்டி கயிற்றினால் கட்டிய அடையாளத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறான்." என்று பொருள்.

(தூயோமாய் வந்து நாம்)  இடைச்சிகள் தூய்மையன்றோ. தலையிருக்க உடல் கழுவியும், உடம்பிருக்க தலை கழுவியும் போருவார்களன்றோ. பகவத்ஸம்பந்தத்துக்கு மேற்ப்பட்ட ஒரு சுத்தி ஸம்பாதிக்க இழிவது அசுத்தனாய் விடுகைக்கு ஸமானம். விபீஷணன் சரணமடைய வந்த போது ஒரு முழுக்கிட்டு வரவில்லை. அர்ஜுனன் யுத்தத்தின் நடுவில் ஒரு முழுக்கிட்டுச் சரமச்லோகம் கேட்கவில்லை. த்ரௌபதியும் முழுகின பிறகா சரணாகதி செய்தாள்.  ஆகையால் ப்ரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா. ஒரு அசுத்தியும் தேட வேண்டா. இருந்தபடியே வர அதிகாரமுண்டு. அநந்யப்ரயோஜனைகளாய் வந்து என்றும் பொருள் கொள்ளலாம்.  "உபாய ஸ்வீகாரத்திலும், உபேய ஸ்வீகாரத்திலும் குற்றமற்று வந்து" என்றும் பொருள் கொள்ளலாம்.

(வந்து நாம்) அவன் வரத் தக்க நாம் வந்து. தான் இருக்குமிடத்திற்கு வருவதையே பெரிதாக நினைப்பவனன்றோ அவன்.

(தூமலர்)ஒரு ப்ரயோஜனத்தைக் கருதாமல் இடப்பட்ட மலர்கள். "மிக்கசீர் தொண்டரிட்ட பூந்துளவம்" என்றும், "சூட்டு நன்மாலைகள்" என்று சொல்லும்படியேயிருக்கை.  இன்ன பூ என்று விசேஷியாமையாலே, இவனுக்கு ஆகாத பூவில்லை. பக்தியுடன் இட்ட எந்த பூவையும் ஏற்றுக் கொள்வான் என்று தோற்றுகிறது. "பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி | ததஹம் ...அச்நாமி" [இலையையாவது, பூவையாவது, பழத்தையாவது, நீரையாவது எனக்கு பக்தியோடு இடுவானாகில், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.] என்றான் கீதாச்சாரியன்.
"கள்ளார் துழாயும் கணவலரும், கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும்..... புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னடிக்கு" என்று திருமங்கையாழ்வாரும் எம்பெருமானுக்கு ஆகாத பூவில்லை என்று அருளிச்செய்தார். நம்மாழ்வாரும் "புரிவதும் புகை பூவே" என்றார். "கூளத்தையிட்டு புகைத்தாலும் போதும். கண்டகாலிப்பூவை இட்டாலும் ஏற்றுக்கொள்ளுவான்" என்று பட்டர் அருளிச்செய்தார். இதைக்கேட்ட நஞ்ஜீயர் " 'ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்' [ கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்கு இடலாகாது.] என்று சாஸ்திரம் சொல்லிற்றே என்றார். "எம்பெருமானுக்கு ஆகாதது என்ற நினைவாலே கண்டகாலிப்பூவை ஆகாது என்று கூறவில்லை. பறிக்கிற ஆச்ரிதன் கையிலே முள் பாயும் என்பதற்காக தவிர்த்தது காணும்" என்று அதற்கு பட்டர் அருளினார்.

 (தூமலர் தூவி) காதலி  காதலனுக்குப் பூவிடும் போது நியமம் வேணுமோ? 


(தொழுது) அவனுக்குப் பொறுக்கவொண்ணாத படி அஞ்சலியைப்  பண்ணி, வெகுதூரத்திலிருந்து கோவிந்தா என்றழைத்த த்ரௌபதிக்கு இரங்கியவனன்றோ.

(தொழுது) கைபடைத்த ப்ரயோஜனம் பெறுவோம் என்கிறார்கள்.

(வாயினால் பாடி) வாய் படைத்த பயனைப் பெறுவோம் என்றார்கள்.

(மனத்தினால் சிந்திக்க) மனம் படைத்த பயன் பெறுவோம் என்கிறார்கள். "மநப்பூர்வோ வாகுத்தர" [மனம் முதலில் ப்ரவர்த்திக்கிறது. வாக்கு அடுத்ததாக ப்ரவர்த்திக்கிறது.] என்று சொல்லியிருக்க, இங்கு "தொழுது", "வாயினால் பாடி", "மனத்தினால் சிந்திக்க" என்று க்ரமம் தப்பிச் சொல்லுவானென் என்னில் பகவத் விஷயத்தில் உள்ள அளவு கடந்த அன்பாலே ஒவ்வொரு இந்திரீயமும் தனித்தனியே மேல் விழுந்தபடியைச் சொல்லுகிறது. முடியானே என்ற ஆழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திப்பது.

(போயபிழையும் --தூசாகும்) இதற்கு முன் செய்த பாபங்களும், இனி அபுத்தி பூர்வகமாகச் செய்யும் பாபங்களும் நெருப்பிலிட்ட பஞ்சு போலேயாகும். சர்க்கரை கலந்த பாலைக் குடித்தால் பித்தம் தானாகவே போவது போல, பகவதனுபவம் செய்தால் பாபங்கள் தானே போகும்.

(செப்பு) விரோதியான பாபம் போகைக்கு மநோவாக்காயங்கள் மூன்றாலும் அனுபவிக்க வேணுமென்று நிர்பந்தமில்லை. வாயாலே சொன்னாலே போதும் என்பது தாத்பர்யம்

 பாசுரச்சிறப்பு:-
• திருமாலின்  ஐந்து  நிலைகளினை, முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணன்), இரண்டாவது பாடலில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), மூன்றாவது பாடலில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), நான்காவது பாடலில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் கொண்டாடிய நம் அன்னை கோதை ஆண்டாள் இப்பாசுரத்தில் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் அர்ச்சாவதாரத் திருக்கோலத்தை (வடமதுரை மைந்தன் ) பாடுகிறாள்!


 ஆக, நம் அன்னை கோதை ஆண்டாள் பரந்தாமனின் பரத்வாதி பஞ்சக நிலையை வரிசைக் கிரமமாக ( பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்ற 5 நிலைகள்) தன் திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்களில் பாடியிருக்கிறாள். 

• அவதார பஞ்சகத்தின் மூன்று நிலைகள் இப்பாசுரத்தில் வருகின்றன. தூயப்பெருநீர்-வைகுண்ட நிலை, தாமோதரன் - கிருஷ்ணாவதார விபவ நிலை, தூமலர் தூவித் தொழுது -கோவிலுறையும் சிலையாக அர்ச்சாவதார நிலை இங்கேக் குறிப்பிடப்பட்டுள்ளது.

• தாமோதரன்- உரலோடு யசோதை கட்டியதனால் வந்த பெயர் ஆகும். தாமம்- கயிறு, உதரம்- வயிறு. கண்ணன் செய்த குறும்பைக் கண்டித்து யசோதை அவனை உரலோடு பிணைத்துக் கயிற்றால் கட்ட, அப்படியே இழுத்துச் சென்று அங்கிருந்த மரங்களிரண்டை சாய்த்து, நலகுபேரன் , மணிகிரீவன் என்ற யட்சர்களுக்கு சாப விமோசனம் அளித்தான்.
யசோதா பிராட்டி கண்ணனின் குறும்பை சமாளிக்க அவன் இடுப்பை கயிற்றால் உரலோடு சேர்த்து கட்டியதால், கண்ணபிரான் வயிற்றில் நிரந்தர தழும்பு நிலவியது!. திருவரங்கம் பெரிய பெருமாளின் இடுப்பில் யசோதையால் கட்டுண்ட அத்தழும்பு உள்ளதாக  பூர்வர்கள் கருத்து ஒன்றுமுள்ளது.

• இப்பாசுரத்தில் உபாயம் (அடையும் வழி), உபேயம் (அடைய வேண்டும் பொருள்), புருஷார்த்தம் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டுள்ளன.
1.உபாயம்: தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்
2.உபேயம்: மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்
3.புருஷார்த்தம்: போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

• தூமலர் தூவித் தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும் எட்டுவகை குணநலன்களை
[1. அகிம்சை,
2. புலனடக்கம்,
3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம்
4. சகிப்புத்தன்மை, பொறுமை, சமத்துவம்,
5. ஞானம்,
6. தியானம்,
7. ஆன்மீக தவம்,
8. சத்தியம் ]
குறிப்பில் உணர்த்துகிறதாம்


 ||திருப்பாவை ஜீயர்||

(ஆயர்குலத்தினில் தோன்றிய அணிவிளக்கு - எம்பெருமானார் ) இடக்கை வலக்கையறியாத இடையர்கள் வாழ்ந்தவிடம் திருவாய்ப்பாடி. அதில்  தோன்றிய அணிவிளக்கு அச்யுத பானுவான கண்ணபிரான். 


"ந்ருபசு:" என்று ஆளவந்தாரும், "வ்ருத்த்யா பசுர் நரவபு:" என்று மணவாளமாமுனிகளும் அருளிச்செய்தபடி, பசுப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர்குலமாதலால் இருள்தருமா ஞாலமாகிற இவ்வாயர் குலத்திலே தோன்றிய அணிவிளக்கு - ராமாநுஜ திவாகரர் .

"புண்யாம்போஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாய ச;
ஸ்ரீமான் ஆவிரபூத்பூமௌ ராமாநுஜ திவாகர:"





ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

               அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்








Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)