கோதையின் கீதை (பகுதி -15)



• வடேசுபுரம்

    மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சில ஆண்டுகள் கழித்து எண்ணற்ற
ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து தவஞ் செய்யலாயினர். அன்றைய காலத்தில்,
இப்பகுதி "சம்பகாரண்யம்" என்ற பெயரோடு விளங்கியது.
அச்சமயம்  காலநேமி என்னும் அரக்கன் இங்கு தவஞ்செய்த முனிவர்கட்குப் பெருந்துயர்
 விளைவித்து இந்திர லோகத்தையும் துன்புறுத்தினான்.
எல்லோரும் சென்று இவ்வரக்கனைக் கொல்ல வேண்டுமென்று ஸ்ரீமஹாவிஷ்ணுவை வேண்ட "காலம் வரும்போது அவனையழிப்போம்" என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின்
தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான்.
அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித்
தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர்.
சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை
இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு மிகவும் ரம்யமான வட வ்ருக்ஷம் (ஆலமரம்) உள்ள ஸ்தலம் இதுதானென்றும், இப்புரிக்கு வடேசுபுர மென்றும்,
இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்)
என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள்
மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச்
செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி தன்னுடைச் சோதியை அடைந்தார். [ இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு "திருமுக்குளம்" என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.]



இப்பாசுரத்தில் துயிலெழுப்பப்படும் பெண், கண்ணனின் திவ்ய தரிசனத்தை ஒரு தடவை பெற்ற புண்யமுடையவள்.  அது குறித்த திவ்ய சிந்தனையில் மூழ்கியிருப்பதால், உறங்குவது போல தோற்றமளிக்கிறாள்

முந்தைய பாசுரத்தில், ராமபிரானின் கீர்த்தி (சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை!) பாடப்பட்டது. இதனால், கல்யாண குணநலத்தில் சிறந்தவன் ராமனா? அல்லது கண்ணனா? என்று இரண்டு குழுக்களாகப் பிரிந்து கோபியர் வாக்குவாதம் செய்கின்றனர். ராமனும் கண்ணனும் ஸ்ரீமன் நாராயணனே என்று சமரசம் ஏற்படவே, கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் "(புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்)" என்று இருவரையுமே போற்றிப் பாடி, கபடத் துயிலில் உள்ளவளை எழுப்புகிறாள்.


• திருப்பாவை பதிமூன்றாம் பாடல்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.

[பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணன் மற்றும், பொல்லா அரக்கன் ராவணனின் பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய புகழைப் போற்றிப்பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க, குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். வெள்ளி (சுக்கிரன்) உச்சிக்கு வந்து, வியாழன் (குரு கிரகம்) மறைந்து விட்டது. இரையைத் தேடி செல்லும் காலைப்பறவைகளின் இறக்கைகள் உண்டாக்கும் சப்தம் உன் காதுகளில் விழவில்லையா?
வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ, அழகிய பெண்ணே! இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!]


**






• பாசுரக் சிறப்பு:-

இப்பாசுரத்தில் பகவத் கீதையில் பகவான் சொன்ன "ஞானயோகம்" பற்றிச் சொல்லப்படுகிறது. ஒருவர் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு, உண்மையென்ன என்று உணர்ந்து கொள்ளும் அறிவுத் தேடலே, ஞான யோகம். சரீரத்திற்கும் ஆன்மாவிற்குமான வேறுபாட்டை அறிவின் மூலமாக உணர்ந்து கொள்ளுபவர், உலகப்பற்றிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதைப் பற்றியும் அறிந்து கொள்வதே, ஞானயோகம். அத்வைத நெறியின் ஆதிசங்கரர் ஞானயோகத்திற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். ஆயினும் வைணவத்தின் 'விஸிஷ்டாத்வைத ' கோட்பாட்டினை முன்னிறுத்திய இராமானுஜரோ, ஞானத்தை, இறைபக்தியின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தியிருக்கிறார்.

• இந்த பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம். இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன். புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன்.
அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன், என்று முழுவதுமே ராமனைப் பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.

• அரக்கன் என்றாலே தீயவன் தானே – பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை சொல்லவே கஷ்டப்பட்டு பொல்லா அரக்கன் என்றார்கள்.

• வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள்.

• மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று கரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.

• "புள்ளும் சிலம்பின காண்" என்று கோதையார் ஆறாம் பாசுரத்தில் சொல்லியதை மறுபடியும் இங்கு பாட என்னக் காரணம்? அப்போது, பறவைகள் துயிலெழுந்து கூவுவதைப் பற்றிச் சொல்கிறார் ஆண்டாள். இப்போது, பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரை தேடும் இடங்களுக்கு பறந்து செல்லும்போது இறக்கைகள் படபடத்து ஏற்படும் சப்தத்தைப் பற்றிப் பாடி, இன்னும் அதிக சமயமாகி விட்டதை உணர்த்துகிறாள் !

• போதரிக் கண்ணினாய் என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற்போல அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள். வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அழிக்கக்கூடிய – பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

• 'புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடி' என்பது பத்து இந்திரியங்களையும், மனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆச்சார்யனைப் போற்றுகிறது.

•'பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்' என்பது (ஒருவனைத் தவிர) மற்ற சீடர்களெல்லாம் ஆச்சார்யனை அடைவதற்கு தயாராகி விட்டதை குறிக்கிறது.

• "வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று" என்பது ஞானம் புலரும் மற்றும் அஞ்ஞான இருள் விலகும் சுப வேளையை குறிப்பில் உணர்த்துவதாம்.

• "குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே" என்பது பகவத் அனுபவத்தில் திளைத்து மகிழ முன் வைக்கப்படும் அழைப்பை உள்ளர்த்தமாக கொண்டது.

• பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்" எனும்போது, கைவல்யமே போதும் என்று இருக்கும் அந்த ஒற்றைச் சீடனை, ஆச்சார்ய உபதேசத்திற்கு வந்து மோட்ச சித்தியின் உபாயத்தை அறிந்து கொள்ளுமாறு மற்ற சீடர்கள் அழைக்கிறார்கள் என்பது உள்ளுரையாம். ஆச்சார்ய சம்பந்தம் கிடைக்கும் நாள் என்பதால் "நன்னாள்" என்று கொண்டாடப்படுகிறது.

• ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்

        திருப்பாவையில் இந்த பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் மு. ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்து தமது ஆய்வு முடிவுகளை 'ஆழ்வார்கள் கால நிலை' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் வரும் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாழிகை) பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயம் வானில் கிழக்கு திசையில் விடிவெள்ளி என்னும் வெள்ளிக் கிரகம் தோன்றும் காலம். அதிகாலை சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் வெள்ளி எதிரில் செல்லக்கூடாது என்பது கிராமங்களில் நிலவும் சகுன நம்பிக்கை ஆகும். பளிச்சென்று கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளியை அடையாளம் காண்பது மிகவும் எளிது.  வியாழன் என்னும் குரு கிரகம் மேற்கு வானில் மறைவது சாதாரணமாக நம் கண்களுக்கு  சரியாகத் தெரியாது. வியாழன் தன் சுற்றுவட்டப் பாதையில் பூமியின் அருகில் வரும்போது மட்டும் நாம் இதைக் காணலாம்.

டாக்டர் இராசமாணிக்கானார் தம் ஆய்வில் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு நான்கு முறை நிகழ்ந்ததைக் கணக்கிட்டு கி.பி 600, கி.பி. 731, கி.பி. 885 மற்றும் கி.பி. 886 ஆகிய நான்கு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறார்.  கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.  பெரியாழ்வார் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் என்று ஐயத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.  பெரியாழ்வாரே பாண்டியன் கோ நெடுமாறன் தன் சமகாலத்தவர் என்று மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளார்:
பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குலபதி. (பெரியாழ்வார் திருமொழி 5-4-7)
கொன்னவில் சுடர் வெல் கோன் நெடுமாறன் (பெரியாழ்வார் திருமொழி 4-2-7 )
குறுகாத மன்னரை கூடு கலக்கி (பெரியாழ்வார் திருமொழி 4-2-8)
குருபரம்பரை நூலிலும் பாண்டியன் ஸ்ரீ வல்லபன் பெரியாழ்வாரின் சமகாலத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.



இந்த பாசுரத்தில் "போதரிக் கண்ணினாய்" என்பதன் மூலம் திருப்பாணாழ்வாரைத் துயில் எழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுச ஜீயர் அருளிச் செய்தார்.

                 ||திருப்பாவை ஜீயர்||

இப்பாடலில் "கள்ளம் தவிர்ந்து கலந்தென்றது" உயிரான சொற்றொடராக ஸ்வாமி ராமாநுஜரைக் குறிக்கிறது. இனிய கனியினை தனியருந்தான் என்கிறபடியே போக்ய பதார்த்தங்களை பலரோடு கூடி அனுபவித்தலன்றி, அசலார் அறியாதபடி அனுபவிக்கை "கள்ளம்" எனப்படுகிறது.




எம்பெருமானார்க்கு முற்பட்ட. ஆச்சார்யர்களிடத்து, இத்தகைய "கள்ளம்" இருந்தது. அதை தவிர்ந்தவர் ஸ்வாமி ஒருவரே ஆவார். கள்ளம் தவிர்ந்து எல்லோரோடும்  கலந்து அனுபவித்தவர்.

 "பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார்"  என்றதும் ஸ்வாமியின் பெருமையை நினைவூட்டும். பாவைக் களமென்பது "காலட்சேப மண்டபம்" ஆகும். அதில் எல்லோரும் புகழ் பெற்றது ஸ்வாமிக்கு முன்பு இல்லை. அதிகாரப் பரீட்சை  பண்ணி பலர் விலக்கப்பட்டார்களாம்.  ஆசைக்கு மேற்பட்ட அதிகார சம்பந்தியில்லையென்று, கொண்ட ஸ்வாமியின் காலத்தில்  தான், பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் (காலட்சேப மண்டபம்) புகுந்தனர்.



 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)