கோதையின் கீதை (பகுதி - 8)


கவிச்சக்கரவர்த்தி கம்பரின்  (கி.பி. 1180-1250) கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. இவர் எழுதிய கம்ப இராமாயணமே தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசம் எனவும் கருதப்படுகிறது. கம்பராமாயணத்தினை (சமய,மதம் கடந்து) படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள்.

கம்பர் ராமாயண காவியத்தை திருவரங்கம் பெரிய கோயிலிலேயே அரங்கேற்றி 'கம்ப நாட்டாழ்வார்’ என்றும் பெயர் பெற்றார்.
 இவர் ராமர் காவியம் (கம்ப ராமாயணத்தை ) இயற்றுவதற்கு முன் "நம் ஆழ்வானைப் பாடிடுக" என ஸ்ரீரங்கநாதர் இட்ட கட்டளையிட்ட படி  'சடகோபர் அந்தாதி' பாடிய பிறகே ராமாயணத்தை வைஷ்ணவ ஆச்சார்யர்  ஸ்ரீமந்நாதமுனிகள் தலைமையில் தொடங்கினாராம்.

 கம்ப நாட்டாழ்வார் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். [ நம் அன்னை கோதை ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது, உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.] ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த. ஆபரணத்தை "கம்பர் கொச்சு" என்றே வழங்கினர்.


 ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயில் இராஜகோபுரத்தைக் கண்டு வியந்த கம்பநாட்டாழ்வார் வானளாவிய இத்திருக்கோபுரத்திற்கு இணையாக "மேருமலைச் சிகரமேயன்றி  வேறு உவமானம்" கூற முடியாது என்று பொருள்படியாக ஒரு பாடலைப் பாடினார்.

"இருக்கோதும் அந்தணர் சூழ் புதுவாபுரி யெங்கள் பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்
திருக்கோபுரத்துக் கிணை அம்பொன் மேருச் சிகரம் என்றே
பருக் கோதலா மன்றி வேறுவ மானப் பணிப்பில்லையே" 
என்கிற இப்பாடல் பற்றிய பின்ணனிக்கதை திருக்கோயில் பழைய தலவரலாற்றுப் புத்தகத்தில்  உள்ளது.




ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, ஐந்து நிலைகளைச் சொல்லி பாடினாள். அதிலும் முதல் பாசுரத்தில் ப்ராப்ய, ப்ராபக சம்பந்தத்தையும், இரண்டாம் பாசுரத்தில் க்ருத்யா-அக்ருத்ய விவேகத்தையும், மூன்றாம் பாசுரத்தில் திருநாமசங்கீர்த்தனத்தையும், நான்காம் பாசுரத்தில் பாகவத ப்ரபாவத்தையும், ஐந்தாம் பாசுரத்தில் கர்ம கட்டிலிருந்து விடுபடும் மார்க்கத்தையும், (வித்யா ப்ரபாவம்) சொல்லி ஐந்து பாசுரங்களை முடித்தாள்.

அடுத்த படியாக அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். அடுத்த பத்து பாசுரங்களில் பத்து தோழிகளின் வீடுகளுக்கு சென்று கோபிகைகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

*** இன்றைய பாசுரத்தில், தனது கோஷ்டியில் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, பிள்ளாய்! என்று அழைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து செல்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் இந்த பாசுரத்தை வீட்டினுள்ளே தூங்குகின்ற பெண்ணுக்கும், ஆண்டாள் மற்றும் அவர்கள் குழுவான கோபிகைகளுக்கும் இடையே ஒரு கேள்வி, பதிலாக, ஓர் உரையாடல் வடிவில் சித்திரித்துக் கூறுவர்.



திருப்பாவை  6-வது பாசுரம்.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

[அன்புத் தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.]


           *   முதல் ஐந்து பாட்டுக்களாலே கிருஷ்ணானுபவமாகிற ப்ராப்யத்திற்கு, உபகரணங்களைச் சொல்லி, மேல் பத்துப் பாட்டுக்களாலே பகவதனுபவத்திற்கு ஸஹகாரிகளை எழுப்புகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பகவதனுபவத்திற்கு முக்கிய ஸாதனமான பக்தியும், மற்ற உபகரணங்களும், அனுபவிக்கப்படுபவனுமான கிருஷ்ணனும்,  அனுபவிக்கத்தகுந்த காலமும், ஊராருடைய இசைவும் உண்டாகியிருக்கும் போது, தனித்தனியே அனுபவிக்காமல் ஒருவரையொருவர் எழுப்பக் காரணம் என்னவெனில், பெருக்கெடுத்து வரும் ஆற்றில் நீராடப் புகுமவர்கள் துணை தேடுமாப்போலே, கிருஷ்ணனாகிற தடாகத்தில் நீராடும் இவர்களும் ஸஹகாரிகளைத் தேடுகிறார்கள்.

"அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ"  என்று நித்யஸூரிகளுக்கும் ஸ்ரீவைகுண்டநாதனை அனுபவிக்கும் போது துணை வேண்டியிருந்தது. அந்த நித்யஸூரிகளுக்கும் அளவிடவொண்ணாத படியான நீர்மையையும், ,மேன்மையையும், அழகையும் உடையவனாக கிருஷ்ணனை அநுபவிக்கும் போது, இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சிகளுக்குத் துணை வேண்டுமென்பதை  சொல்லவும் வேண்டுமோ? மேலும் "ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத" [நல்ல வஸ்துவைத் தனியே புசிக்கலாகாது.] என்று சொல்லப் பட்டிருக்கையாலும், கிருஷ்ணனை அனுபவிக்கவேணும் என்னும் ருசியுடையவர்கள் இழக்கவொண்ணாது என்னும் க்ருபையாலும், பகவானை அனுபவிக்கும் போது அடியார்களை முன்னிட வேண்டியதே முறையாகையாலும், இவர்களையும் எழுப்புகிறார்கள்.  "செய்யாதன செய்யோம்" என்று இரண்டாம் பாட்டிலே சொன்னதை மேல் பத்துப்பாட்டுகளாலும் அநுஷ்டித்துக் காட்டுகிறார்கள்.

 எல்லோருக்கும் கிருஷ்ணனிடத்தில் ப்ரீதி ஸமானமாக இருக்கும் போது, சிலர் எழுப்புவதும், சிலர் உறங்குவதுமாகயிருப்பது எப்படி? என்னில் கண்ணனுடைய குணங்கள் சிலரை மயங்கப் பண்ணுகையாலும், சிலரை இருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே துடிக்கப் பண்ணுகையாலும், சிலரை சிலர் எழுப்பத் தட்டில்லை . இப்பாட்டில் புதிதாக பகவத்ஸம்பந்தம் பெற்ற ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

(புள்ளும் சிலம்பின காண்) முந்துற உணர்ந்ந பெண்பிள்ளைகள் "விடியற்காலை எழுந்திருப்பதாகச் சொன்ன நீ  இன்னும் உறங்கலாமோ என்றார்கள். "இன்னும் விடியவில்லையே" என்றாள் இவள். "விடிந்து விட்டதே" என்றார்கள் அவர்கள்.  "விடிந்ததற்கு அடையாளம் வேண்டாமோ? நீங்கள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொள்ள முடியுமோ?" என்று கேட்டாள் இவள்.  "நாங்கள் உணர்ந்து வந்ததே போதாதோ?" என்றார்கள்.  "உங்களுக்கு உறக்கமே கிடையாதே. நீங்கள் உணர்ந்திருப்பது விடிந்ததற்கான அடையாளமன்று"  என்றாள். "புள்ளும் சிலம்பின காண்"  என்றும் பதில்  சொல்லுகிறார்கள். "அறிவற்றவையான பக்ஷி (பறவை)களும் கிளம்பி  இரை தேடிச் செல்கின்றன.  இந்த அடையாளம் போதாதோ?" என்று கேட்கின்றார்கள். பக்ஷிகளும் உங்கள் பேரொலியினால் விழித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்றன. நீங்கள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்கு உறக்கமுண்டோ?  'காலையெழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்மை கொலோ' என்பதல்லவோ உங்கள் வார்த்தை. வேறு அடையாளமுண்டாகில் சொல்லுங்கள் என்று கிடந்தாள். 


(புள்ளரையன் கோயிலில்...) "அது கிடக்கட்டும்! திருப்பள்ளியெழுச்சிக்கு சங்கூதுவதும் உன் காதில் கேட்கவில்லையோ?" என்கிறார்கள். "புள்" என்றால் கருடாழ்வானைச் சொல்லுவதாகக் கொண்டு  புள்ளரையன் என்று கருடனின் ஸ்வாமியான நாராயணனைச் சொல்லுகிறது. புள்  என்றால் பக்ஷிகளைச் சொல்லுவதாகக் கொண்டு, அவைகளுக்கு அரசனான கருடனுக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை  "புள்ளரையன் கோ" என்று குறிப்பிடுவதாகக் கொண்டு, அவனுடைய இருப்பிடத்தில் என்றும் பொருள் கொள்ளலாம். ஸர்வேச்வரனே கிருஷ்ணனாக அவதரிக்கும் போது அங்கு நாராயணனுக்கு என்று தனியே ஒரு கோயிலுண்டோ? என்னில் ஸ்ரீராமபிரான் அவதரித்த போதும் ரங்கநாதன் அங்கு எழுந்தருளியிருந்ததை ப்போல் இங்கும் ஒரு கோயிலுண்டாகக் குறையில்லை. புள்ளரையன் கோயில் என்று கிருஷ்ணனுடைய க்ருஹத்தை குறிப்பதாகவும் கொள்ளலாம்.


( புள்ளரையன் ) கருடாழ்வானைக் கொண்டே ஸர்வேச்வரனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. லட்சுமணனை 'ராமாநுஜன்'[ராமனுக்குத் தம்பி]  என்று சொல்லுவதைப் போல் ராமனையும் 'லட்சுமணபூர்வஜன்' [லட்சுமணனுக்கு தமையன்]
என்று சொல்லவேண்டியிருக்கிறதன்றோ. வேதம் வல்லார்களைக் கொண்டு 'விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து'  என்று சொல்லப்பட்டதாகையாலே,  வேதாத்மாவான கருடனை முன்னிட்டுக் கொண்டு  பகவத் விஷயத்திலிழிகிறார்கள்.

(வெள்ளை விழி சங்கின்)
சங்கு வெளுத்திருப்பது விடிந்தமைக்கு அடையாளமாகி விடுமோ?  என்றாள்.

(விளிசங்கின்) "பொழுது விடிந்து விட்டது எழுந்திருங்கள் என்று அழைக்கும் சங்காயிற்றே" என்றார்கள். சாமங்கள் தோறும் கோயிலில் முறையுடையாரை அழைக்கும் சங்கொலியாயிருக்கலாமே. அதைக் கொண்டு பொழுது விடிந்ததென்று எப்படி நிச்சயிப்பது? என்றாள்.

(பேரரவம்) "விடிந்தபின் ஒலிக்கும் பேரொலியன்றோ இப்போது ஒலிப்பது. பாஞ்சஜன்ய த்வனியிலும் அதிகமாகவன்றோ இப்பெரு முழக்கமிருப்பது. உன்னுடைய தூக்கத்தையும் தவிர்க்கக் கூடியதாகவன்றோ  முழங்குகிறது" என்கிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்ல பதில் சொல்லாமல் கிடந்தாள்.


(பிள்ளாய்)  "பகவத் விஷயத்திலே புதியவளாகையாலே பகவதனுபவத்தின் எல்லை நிலமான பாகவத ஸம்ச்லேஷத்தின் இனிமையை  அறியாமல் கிடக்கிறாய். நாங்கள் உன்னைக் காண ஆசைப்படுவது போல நீயும் எங்களைக் காண ஆசைப்பட வேண்டாமோ?" என்கிறார்கள். "கிருஷ்ண ஸம்ச்லேஷத்தளவிலேயோ நான் நிற்கிறேன். உங்களுடைய பேச்சே தாரகமாகக் கிடக்கிற என்னை 'பிள்ளாய்' என்ற நீங்களன்றோ பிள்ளைகள்" என்றாள்.

"உணர்ந்திருக்கிற உங்களை யார் எழுப்பினார்கள்" என்று கேட்டாள்.

(பேய்முலை) "எங்களை ஒருவரும் எழுப்பவில்லை. விடியற்காலையில் பகவத் பக்தர்களுடைய ஹரிநாமஸங்கீர்த்தன த்வனியைக் கேட்டு எழுந்திருந்தோம்" என்கிறார்கள்.


(பேய்முலை நஞ்சுண்டு) எம்பெருமானுக்கு வந்த பேராபத்தைக்  கேட்டிலையோ?பெரியாழ்வாரோடு சம்பந்தமுடையவளாய் இருந்தும் இன்னும் உறங்கலாமோ? என்கிறார்கள். இவள் சடக்கென எழுந்திருக்கைக்காக அவ்வாறு கூறுகிறார்கள்.  "காடம் கராப்யாம் பகவாந் ப்ரபீட்ய தத்ப்ராணைஸ்  ஸமம் ரோஷ ஸமந்விதோபிபத்"  [ பகவான கிருஷ்ணன் அந்த பூதனையின் ஸ்தனத்தை இறுகப் பிடித்துக் கொண்டு கோபத்துடன் கூடியவனாய், உயிருடன் சேர்த்துக் குடித்தான்.] என்று ஸ்ரீபாகவதத்தில் சொல்லியபடியே பெற்ற தாயும் உதவாத தசையிலே நலிய வந்த பூதனையைக் கொன்றது. பேய்முலை நஞ்சுண்டு என்று இவள் பயப்படுகைக்காகச் சொன்னார்கள். அது "விரோதி போகப் பெற்றதே!"என்று இவள் பயம் கெடுகைக்குக் காரணமாயிற்று.


(கள்ளச்சகடம்) பேயாவாது ஆராய்ந்து கொல்லலாம். தாயே ரக்ஷையாக வைத்த சகடமல்லவோ நலியவந்தது என்கிறார்கள். அஸுராவேசம் பெற்ற வண்டியாகையாலே "கள்ளச்சகடம்" எனப்பட்டது.

(கலக்கழியக் காலோச்சி) வண்டியானது கட்டழியும் படியாக திருவடிகள் உதைத்தது. முலை வரவு தாழ்ந்ததென்று மூரி நிமிர்ந்த திருவடிகள் பட்டு முறிந்தது. இதுவும் அவள் பயம் கெடுகைக்கு காரணமாயிற்று.


(வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை) "இவ்வபாயங்கள் ஒன்றுமில்லாத இடத்தில் , பரிவனான திருவனந்தாழ்வான் மேலே கண்வளரப் பெற்றதே"  என்று சந்தோஷிக்கிறார்கள்.
(வெள்ளம்) திருமேனியின்மென்மைக்குத் தக்கபடி குளிர்ச்சியை உடைத்தாயிருக்கை. (அரவில்) அந்த நீர் உறுத்தாமைக்காக மென்மை குளிர்த்தி வாஸனை முதலியவற்றை  இயற்கையாக உடைய திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிறபடி.

(துயில் அமர்ந்த) ஜகத்ரக்ஷண சிந்தை செய்து கொண்டு கிடக்கை. "ஒரு ஆச்ரிதனுடைய ஹ்ருதயத்தைக் கிடைக்கப் பெறுவோமா? " என்று மநோரதித்து கிடக்கிறபடி.

 (அமர்ந்த) பிராட்டிமார் திரு முலைத் தடத்தால் நெருக்கினாலும் உணராமை 

 (வித்தினை)  அவதாரங்களுக்கெல்லாம் விதையாயிருப்பவன். வேதமும் "அநந்தம்" என்று பகவானுடைய கணக்கற்ற அவதாரங்களை அனுபவித்து, "ஸமுத்ரேந்தம்" என்று அவதாரங்களுக்கு மூல பூதனான க்ஷீராப்தி நாதனிடம் ஈடுபட்டது. இவர்களும் "பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி" என்று அவதாரத்தை அனுபவித்து "வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை"  என்று அவதாரங்களுக்கு அடியான க்ஷிராப்தி நாதனைப் பற்றி பேசுகிறார்கள். "வித்தை விரைக்கைக்கு நீரிலே சேர்த்தாப்போலே இருக்கை" என்கிறது நாலாயிரப்படி வ்யாக்யானம். வித்தினை என்பதை ஜகத் காரணபூதன் என்றும் பொருள் கொள்ளலாம்.

(உள்ளத்துக் கொண்டு) "அரவத்தமளியினோடும், அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து" என்கிறபடியே திருப்பாற்கடலோடும், திருவனந்தாழ்வானோடும், பிராட்டியோடும் தங்கள் நெஞ்சிலே கொண்டு.  "மது கைடபாதிகள் இல்லாத இடம்; பனிக்கடலிலே நீராடி உண்டான விடாய் தீர மனக்கடலிலே கொண்டு" என்கிறது ஈராயிரப்படி வ்யாக்யானம்.
(முனிவர்களும் யோகிகளும்)  பகவானுடைய குணங்களை மனனம் செய்து கொண்டிருப்பவர்கள் முனிவர்கள். எப்போதும் எம்பெருமானுடன் கூடவிருந்து  அவனுக்கு அடிமை செய்பவர்கள் யோகிகள். இங்கு உறங்குகிறவர்கள் முனிவர்களைப் போலே இருப்பவர்கள். எழுப்புகிறவர்கள் யோகிகளைப் போன்றவர்கள். வைகுந்தத்தமரரும் முனிவரும் என்கிறபடியே பரமபதத்திலுள்ளாரும் இரண்டு விதமாயன்றோ இருப்பது.  எம்பெருமான் திருவாய்ப்பாடியால் அவதரித்தவுடன் வைகுந்தத்து அமரரும் முனிவரும் இங்கு வந்து அவதரிக்கின்றனர் போலும்.

(மெள்ள எழுந்து)  கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு நோவு வாராமல், எழுந்திருக்குமாப் போலே, இவர்களும் அந்தர்யாமி பகவானுக்கு ஒரு தீங்கும்  வாராதபடி மெல்ல எழுந்திருக்கிறார்கள். (ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானைப் பெரிய கற்களோடே கட்டி மலையில் நின்றும் கீழே தள்ளினார்கள். அவனும் ஹரியை நெஞ்சிலே தரித்துக் கொண்டே கீழே விழுந்தான்.)

(அரியென்ற) ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாமத்தை அநுஸந்திக்கை.
"ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரைபி ஸம்ருத: |
அநிச்சயாsபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக:||"
[கெட்ட மனமுடையவர்களால் நினைக்கப்பட்டாலும் ஹரியானவன் அவர்களது பாபத்தைப் போக்கடிக்கிறான். விருப்பமில்லாமல் தொடப்பட்ட அக்னியும் கொளுத்துகிறதன்றோ?]
என்றல்லவோ சொல்லப்பட்டது.
இவர்களுக்குப் பாபமாவது:- கிருஷ்ணனுக்கு அஸுரர்களாலே வரும் தீங்கு. அவ்வாபத்துக்களை  அவனே போக்கியருள வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார்கள். "ஹரிர் ஹரி:" என்னும் அநுஸந்தானத்தாலே

(பேரரவம்) ஆய்பாடி முழுவதும் இந்த ஒலியேயாயிருக்கை.

(உள்ளம் புகுந்து குளிர்ந்து)  படுக்கையின் கீழே வெள்ளம் புகுந்தாற் போலே, திருநாமம் செவி வழியே புகுந்து நெஞ்சைக் குளிரச் செய்தது. அவன் அவர்கள் நெஞ்சிலே புகுந்து அவர்களை ஆனந்திப்பித்தாற் போலே, கிருஷ்ணனைப் பிரிந்து புண்பட்டுக் கிடக்கிற எங்களுடைய நெஞ்சை அவனுடைய திருநாமஸங்கீர்த்தன த்வனி ஆனந்திப்பித்தது.  ஆகையாலே நாங்களும் எழுந்திருந்தோம்; நீயும் எழுந்திருப்பாயாக! என்கிறார்கள்.

              பாசுரச் சிறப்பு:-
• இப்பாசுரம் தொடங்கி அடுத்த பத்து பாசுரங்கள் (மொத்தம் 10), முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை. இவை பத்து ஆழ்வார்களைக் (ஆண்டாள், மதுரகவியார் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு !
இந்த ஆறாம் பாசுரத்தில் 'பிள்ளாய் எழுந்திராய்' என்பதன் மூலம் பொய்கையாழ்வாரை எழுப்புவதாக ஒன்னான வானமாமலை ராமாநுஜ ஜீயர் அருளிச்செய்த "ஸ்வாபதேச வ்யாக்யானம்" கூறுகிறது.


• இந்த ஆறாம் பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளும் பாடப்பட்டுள்ளன.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான (1.பரம்) வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது (2.வ்யூஹம்) பாற்கடல்  வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது (3.விபவம்) விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது (4.அர்ச்சை) அர்ச்சாவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும், "உள்ளத்துக் கொண்டு" எனும்போது (5.அந்தர்யாமித்வம்) அந்தர்யாமியான பரமனையும்
நம் அன்னை கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக நம் வைணவப் பெரியோர்களௌ உள்ளுரையாக கூறுவர்.

||திருப்பாவை ஜீயர்||

• ( புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கு )

எம்பெருமானார்க்கு மிகச்சிறந்த பிரத்யபிஜ்ஞாபகம். பாலன்னவண்ணத்துன் பாஞ்சஜன்யமே என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி எம்பெருமானாரும் "துக்தோதத்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைகரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராம யம பணீந்த்ராவதாரம்" என்றபடி பால் போன்ற திருநிறத்தவர். இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில்.


 (புள்ளரையன் கோயில்) "பூமருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே" என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற திவ்யாயுதங்களில் சக்கரமானது கருதுமிடம் பொருது என்ற அருளிச் செயலின் படியே. காதீவிப்லோஷாதி நாநா கார்ய ஷடகஷங்களுக்காக,  பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டேயிருக்கும்.  சங்கு அப்படியன்றியே "உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்  கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே" என்னும்படியிருக்கும். ஸ்வாமி ராமாநுஜர் தாமும் "யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுவ மாஸ்வ" (சரணாகதி கத்யம்) என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர். ஆகவே "கோயில் சங்கு" என்றது  ஸ்வாமி ராமாநுஜருக்கு மிகப்பொருத்தமாகும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

               அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)