கோதையின் கீதை ( பகுதி - 21)



திருவரங்கம் பெரியகோயிலில் ஸ்வாமி கூரத்தாழ்வான் திருக்குமாரனாகிய  'பராசர பட்டர்' தர்சன ப்ரவர்த்தகராயிருந்த நாளில் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்த மதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது
 கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அப்படிச்செய்வது சரியன்று என்று
 பட்டர் தடுத்ததையும் கேளாமல், பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகையை இடித்துக் கட்டுவித்தான்.
இதனால் பட்டருக்கும், அவ்வரசனுக்கும் உண்டான மனஸ்தாபம் நாளடைவில் அதிகரிக்க, அவனுடைய உபத்திரவம் பொறுக்காமல், பட்டர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளினார்.  பெரியபெருமாளை பிரிந்ததினால் ஏற்ப்பட்ட துக்கத்தைத் தணிப்பதற்காக பட்டரை அவருடைய சிஷ்யரான "நஞ்ஜீயர்" கோதை ஆண்டாளை ஒரு ச்லோகத்தாலும், ஆழ்வார்களை ஒரு ச்லோகத்தாலும் துதிக்கவேணும் என்று வேண்டினார். பட்டரும் 'நீளா துங்க' என்ற இந்த ச்லோகத்தால் ஆண்டாளையும், 'பூதம் ஸரஸ்ய' என்ற ச்லோகத்தால் ஆழ்வார்களையும் துதித்தருளினார். நீளாதுங்க ஸ்லோகத்தில் திருப்பாவையின் தாத்பர்யத்தை சுருக்கமாக அருளிச்செய்து கொண்டு ஆண்டாளைச் சரணமடைகிறார். நீளாதேவீம் சரணமஹம் ப்ரபத்யே ( நீளாதேவியைச் சரணமடைகிறேன்) என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவர் அந்த நீளாதேவியையும், அவளது நாயகனான திருமாலையும் துயிலுணர்த்திய கோதையைச் சரணமடைகிறார்.



🔷 நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தம்' என்னும் முதல் வாக்யம் "மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்" என்னும்  23-வது பாடலின் கருத்தையும், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்னும் 19-வது பாடலின் கருத்தையும் பின்பற்றுகிறது. ஆச்ருதர்களுடைய, வளர்ந்து, பருத்து, உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் 'பக்தியே மலர் போன்ற முலையாக' இங்கே உத்ப்ரேக்ஷிக்கப் பெறுகிறது.  பகவான் ஒருவனே தனக்கு சேஷியென்றும், தன்னைச் சேஷனாகவும், நன்கறிந்து பக்தியிலீடுபட்டு வர்த்திக்கும் ஸாதுக்களான ஆச்ருதர்களைப் பெண்களாகவும், பெண்களின் அங்கங்களிலெல்லாம் 'உத்தம அங்கமாகிய ஸ்தனமே' இந்த ஆச்ருதர்களின் பக்திப்பெருக்கின் அதிசயம் ஆகும்.



🔷 நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் துயில் எழுப்புகிற பாசுரம். ஆண்டாளுடன் சேர்ந்த திருவாய்ப்பாடிப் பெண்கள் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் பகவானை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அடுத்த உந்து மத களிற்றன் பாசுரத்தில் பிராட்டியை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த பாசுரத்தில் மலர்மார்பா! என்று பகவானையும், மைத்தடங் கண்ணினாய்! என்று பிராட்டியையும் சேர்த்தே அனுசந்திக்கிறார்கள்.




🔷 திருப்பாவை பத்தொன்பதாம் பாடல்


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.



["நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, தந்தத்தினால் ஆன, மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து உறங்கும் (நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த) கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் நீ பேசுவாயாக! ]



** ** *



  🔷  பாசுரச் சிறப்பு 🔷

🔶 திருப்பாவையின் மூன்று பாசுரங்களில் நப்பின்னை பிராட்டி துயிலெழுப்பப்படுகிறாள். அதாவது 18,19 மற்றும் 20வது பாசுரங்களில். அவற்றில் இது இரண்டாவது ஆகும். சென்ற பாசுரத்தில் நப்பின்னையை "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்றழைத்த ஆண்டாள், இப்பாசுரத்தில், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை" என்றும், அடுத்த பாசுரத்தில் (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று) "செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்கல் நப்பின்னை நங்காய்" என்றும் இளைய பிராட்டியைப் போற்றுகிறார்.
(குத்து விளக்கெரிய) ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது. இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல) ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம். குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது, பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்), விபவ (அவதார நிலைகள்), அர்ச்சை (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும் அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.



🔶 இன்னொரு விதத்தில் "குத்து விளக்கெரிய" என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு, அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!

🔶 'பஞ்ச சயனம்' என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை என்பது நேரடியான பொருள்.

🔶 இப்பாசுரத்தில் வரும் "பஞ்ச சயனம்" என்பது ஒரு வைணவன் அறிந்திருக்க வேண்டிய 5 பொருட்களை குறிப்பது என்பது உள்ளுரையாம். அவை:

🔶 பரமாத்ம தோற்றம் என்கிற "மிக்க இறைநிலை" ஜீவாத்ம தோற்றம் என்கிற "உயிர்நிலை" மோட்சம் கை கூடுவதற்கு உதவும் வழிவகையான "தக்க நெறிகள்"
பரமன் திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளாம் "ஊழ்வினைகள்"
பரமாத்ம அனுபவம் என்கிற "வாழ்வினை" (முக்தி அல்லது மோட்சம்)

🔶 இப்பாசுரத்தில் "மலர்மார்பா" என்றும் கண்ணனையும் "மைத்தடங் கண்ணினாய்" என்றும் பிராட்டியையும் சேர்த்தே திருப்பள்ளியெழுச்சி பாட முனைகிறார்கள்! அதாவது, வைணவ அடியவரின் மோட்ச ஸித்திக்கு பெருமாள், பிராட்டி என்று இருவரும் திருவுள்ளம் வைக்க வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம். பிராட்டியின் பரிந்துரை (வைணவத்தில் இதற்கு புருஷகாரம் என்று பெயர்) அடியவர் முக்திக்கு அவசியம் என்பது ஸ்ரீவைஷ்ணவ சமய நம்பிக்கை ஆகும்.

 🔵 இந்த பாசுரத்தில் விடிவதற்கு முன்னமே எழுந்திருந்த ஆண்டாளோடு சேர்ந்த ஆய்பாடி பெண்பிள்ளைகளான நாங்கள், “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான பகவான் மீது சயனித்து அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே! இது உனக்கு தத்துவமன்று! என்கிறார்கள்.

மாதாவாக பிராட்டி இவர்களுக்கு ப்ரியமானதையே செய்பவள். பிதாவாக பகவான் இவர்களுக்கு ஹிதமானதையே செய்கிறவன். ஒரு ஜீவன் எத்தனையோ பாவங்கள் செய்து பகவானிடம் சரணாகதி என்று வரும்போது, இவனுக்கேற்ற ஒரு பிறப்பைக் கொடுத்து, இவன் ஞானத்தைப் பெற செய்ய வேண்டும் என்று பகவான் நினைப்பனாம். பிராட்டியோ, இந்த ஜீவன் நமக்கு குழந்தை அல்லவா! அவன் அப்படி ஒன்று பெரிய பாவங்கள் செய்து விடவில்லை. இவனுக்கு ஞானத்தை நான் தருகிறேன். ப்ரம்ம வித்யையை நான் தருகிறேன். இவனை மறுபடி மறுபடி சம்சாரத்தில் சிக்க வைக்க வேண்டாம் என்று புருஷகாரம் செய்வாளாம். பகவானும் அதை ஏற்று அப்படி ஞானம் பெற்ற ஜீவனை அழைத்து முக்தி கொடுத்து தன் பாம்பணை மேல் தூக்கி இருத்துவனாம்.

இப்படி மாதா பிதாக்களான இவர்கள் பஞ்ச சயனத்தில் படுத்திருப்பதைப் பார்க்கிறார்கள். அதுவும் சாதாரண பஞ்சு படுக்கை அல்ல அது. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய பஞ்ச குணங்கள் உள்ள படுக்கையாம் அது.

கண்ணன் போர்களில் யானைகளோடு பொருதி அவற்றைக் கொன்று அவற்றின் தந்தங்களை எடுத்து வந்து (‘கோட்டுக்கால்’)  நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட தந்தக் கட்டிலில், மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள். உந்து மத களிற்றன் பாசுரத்தில், இவர்கள் நப்பின்னையை அழைக்க அவளும் எழுந்து வர, பகவானுக்கு தன் பதவி மேல் சிறிது பயம் வந்து விட்டதாம். நானல்லவோ காக்க வேண்டும். இவளே முதலில் போகிறாளே! நம் வேலையை செய்ய முடியாமல் போகிறதே என்று அவளை பிடித்து அவள் கொங்கைகள் இவனது அகன்ற திருமார்பில் சரிய இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறானாம். அவனாவது ஆண்பிள்ளையாக வன்முறை காட்ட வேண்டியிருந்தது. இவளோ, ‘வாய்திறவாய்!’ என்று வெளியே கேட்கப்பட்டபோது ‘மா சுச:’ என்று பதில் கொடுக்கவொண்ணாத படி தன் பார்வையாலேயே தடுத்து விட்டாளாம்! அதனால் மைத்தடங்கண்ணினாய்! என்றார்கள்.

இங்கே கொங்கைகள் என்று சொன்னது அவள் மாத்ருத்வத்தை சொல்கிறது. குழந்தைக்கு பசிக்க தாய் பொறுப்பளோ! எம்பெருமான் நான் முந்தி என்று அவளை தடுக்கிறான். அவள் நான் முந்தி என்று அவனை தடுக்கிறாள். இவர்களது ஆர்த த்வனிக்கு அவள் மாத்ருத்வம் அவளை காக்கச் சொல்லி தப்பிக்கப்பண்ணுகிறதாம். சென்ற பாசுரத்தில் இவர்கள் லீலாவிபூதிக்கு போட்டியிட்டுக் கொண்டதை சொன்னார்கள். இந்த பாசுரத்தில் லீலாவிபூதியிலிருந்து ஜீவாத்மாக்களை விடுவித்து நித்ய விபூதிக்கு அழைத்துச் செல்ல இந்த திவ்ய தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்களாம்!

இப்படி அவனது ரக்ஷகத்வத்தை அவளும், அவளது புருஷகாரத்தை அவனும் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள்.

 🔵 கோட்டுக்கால் கட்டில் - கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி) என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.

🔵 இன்னொரு விதத்தில், இவை "நான்" என்ற அகந்தையின் 4 நிலைகளை (நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம். பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! "நான்" என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!

🔵 மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி - பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை (அ) ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட) குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை "மேலேறி" என்பது உணர்த்துகிறது! 

             

                ⭐ ||திருப்பாவை ஜீயர்|| ⭐

அண்ணங்கராச்சார் சுவாமிகள் திருப்பாவை ஜீயர் எனும் நூலில்  கூறியது பின் வருமாறு:-

⭐ திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே
பகவத் ராமாநுஜர்  பதினெட்டு பர்யாயம் எழுந்தருளி ரஹஸ்யார்த்த விஷேசம் பெற்று அவ்விடத்திலேயே சிலர்க்கு உபதேசித்தருளின குருபரம்பரை இதிஹாசம் இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது.


🔸 "குத்து விளக்கு" 🔸
(பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாக உரை எழுதியிருக்கிறார்.


🔹தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.

⭐ (குத்து விளக்கெரிய)  நம்பி பக்கலிலே அர்த்த விஷேசம் கேட்டு ஜ்வலிக்க என்றபடி. (கோட்டுக்கால் கட்டில்) ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி என்கிற வடமொழி வ்யாகரணப்படி "கோட்டி"
என்றதாகக் கொள்க. கோஷ்டீ என்னும் வடசொல் கோட்டி யென்று தானே திரியும். திருக்கோட்டியூர் என்றாயிற்று.

⭐ (கால்கட்டு) ரஹஸ்யார்த்தம் உபதேசித்தருளா நின்ற நம்பிகள் தம் திருவடியைத் தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றோ? அஅந்தக் கால் கட்டு ஸூசிதமாகிறது.

⭐ (மேலேறி) ஏற்கனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு, உபதேசிக்க திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி. திருக்கோட்டியூர் ஸன்னதியின் மேல் தளத்தில் ஏறின படியைக் காட்டுகிறது.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்












Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)